காதிபத்திய போர் 1914-ம் ஆண்டில் தொடங்கிவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் மார்க்ஸின் கட்டளைகளைப் புறக்கணிக்து, தொழிலாளிவர்க்க நலன்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலின் இயக்கு சக்தியான ஜெர்மன் சோஷல்-டெமாக்ரடிக் கட்சி தனது சந்தர்ப்பவாத உள்ளியல்பை வெளிப்படுத்திவிட்டது. தனது நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கத்துடன் அது ஒத்துழைத்தது. வர்க்கங்களுக்கிடையே சமாதானம் நிலவ வேண்டும் என்ற போக்கை முழுமையாக மேற்கொண்டுவிட்டது.
புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை ஜெர்மன் சோஷல் – டெமாக்ரடிக் கட்சி வெட்கக்கேடான முறையில் கைவிட்ட நாளை நான் நேர்முகமாகக் கண்டு அனுபவித்தேன். 1914 ஆகஸ்டு 4ந் தேதி நான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இருந்தேன். ஜெர்மன் சோஷல்டெமாக்ரடிக் கட்சித் தலைவர்களின் வீழ்ச்சி என்னும் அருவருக்கத்தக்க காட்சி யுத்த, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக அவர்களது வாக்களிப்பு பெத்மன் – ஹோல்வெக் சர்க்காரை ஆதரிப்பதாக அவர்கள் உறுதிமொழி கொடுத்தது எல்லாம் என் முன்னர் நிகழ்ந்தன.
படிக்க :
♦ புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
ஏகாதிபத்திய யுத்தத்தின் கரும் புகை பலரது மூளைகளை மங்கச் செய்துவிட்டது. நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் சமரசப் போக்கு, சந்தர்ப்பவாதம் என்னும் உள மயக்கம் அரசியல் காரணங்களுக்காகத் தாய்நாட்டுக்கு வெளியே இருந்த சில ரஷ்யர்களையும் ஆட்கொண்டுவிட்டது. தங்களது அரசியல் பாவங்களுக்காக கழிவிரக்கம் கொண்டு, இரண்டாம் நிக்கொலாய், அவனது கொத்தடிமைகள் ஆகியோரின் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஜாராட்சித் தாய்நாட்டுக்குத் தொண்டு செய்யும் நோக்கத்துடன் அவர்கள் ரஷ்யாவுக்கு விரைந்தார்கள்.
நான் அச்சமும் மனச்சோர்வும் கொண்டு உழன்றேன். எல்லாம் பாழாகிவிட்டன என்று எனக்குத் தோன்றியது. சூழ்நிலை மூச்சு முட்டச் செய்வதாகவும் நம்பிக்கைக்கு இடமாற்றதாகவும் இருந்தது. என் எதிரே ஒரு சுவர் எழும்பிவிட்டது போலவும் மேலே செல்ல வழிஇல்லை போலவும் பிரமை உண்டாயிற்று. லீப்க்னெஹ்ட்டின் உதவியால் தான் ஜெர்மனியிலிருந்து வெளியேறி ஸ்டாக்ஹோம் சேர்ந்தேன். உலக இரத்தக் களறியை எதிர்ப்பதற்கு இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலைத் தூண்டி ஊக்க முடியும் என்று நான் இன்னும் நம்பினேன். ஆனால் எங்கள் கொள்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் எதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பது எனக்கோ மற்றவர்களுக்கோ தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் போல நாங்கள் வழிகெட்டு அலைந்தோம்.
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
ஒரே குழப்பம் இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் வீழ்ச்சியும் நிகழ்ந்த அந்தச் சமயத்தில் வர்க்க ஒற்றுமைக்கு புகழ்பாடிய முதலாளித்துவக் கட்சிகளின் எக்களிப்பு ஆரவாரத்துக்கு இடையே ஒலித்தது லெனினின் இடிக்குரல். உலகு அனைத்தும் எதிராகத் தன்னந்தனியே நின்று அவர் ஏகாதிபத்திய யுத்தத்தை நிர்தாட்சண்யமாகப் பகுத்தாய்ந்து அதன் உள்ளியல்பை உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் துலக்கமாக அம்பலப்படுத்தினார். இதைவிட முக்கியமாக, இந்த யுத்தத்தை உள்நாட்டுப் போராகவும் புரட்சியாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை அவர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டினார். அமைதியை விரும்புபவர்கள் சந்தர்ப்பவாதத்தின்மீது போர் தொடுக்க வேண்டும். சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை நிராகாரிக்க வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் மைய வெளியீடான “ஸொத்ஸியால் – டெமாக்ராத்தின்” பல இதழ்கள் சுவிட்ஸர்லாந்திலிருந்து ஸ்டாக்ஹோம் வந்து சேர்ந்தன. யுத்தத்தைப் பற்றியும் எங்கள் கடமைகளைப் பற்றியும் லெனினது கொள்கைகள் அவற்றில் அடங்கியிருந்தன. எனது வாழ்க்கையின் மிக முக்கியமான கணங்களில் ஒன்றாக அது விளங்கிற்று. எந்தச் சுவற்றில் நான் தலையை மோதிக் கொண்டிருந்தேனோ அதை லெனினது கட்டுரைகள் சுக்கு நூறாகத் தகர்த்து விட்டன. இருள் அடர்ந்த ஆழ் கிணற்றுக்கு உள்ளிருந்து மறுபடி வெயிலொளிக்கு வந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. மேலே செல்வதற்கான பாதையை நான் கண்டேன். அது தெளிவாக துலக்கமாக இருந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம் புரட்சிகரத் தொழிலாளி வர்க்க அணிகளில் சேர்ந்து விளாதீமிர் இல்யீச் லெனினைப் பின்பற்றுவது மட்டுமே. ரஷ்யாவில் இருந்த மத்தியக் கமிட்டி பீரோ லெனினின் கருத்துக்களை ஏற்கனவே செயல்படுத்திவந்தது என்பது எங்களுக்கு வெகு காலத்துக்குப் பின்னரே தெரியவந்தது.
லெனின் மனிதகுலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத திறன் காரணமாகவே அவரால் காணமுடிகிறது என்று எனக்குத் தென்பட்டது. அவரது கங்கு கரையற்ற மன, ஆன்மிக அஞ்சாமையை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன். சந்தர்ப்பவாதிகளான காவுத்ஸ்க்கியும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் எவ்வளவு இழி நிலையில் வீழ்ந்தார்களோ, இந்த ரத்தக் களறி குழப்பமனைத்திலும் திட்டவட்டமாக வழிகாட்டிய மனிதரின் அச்சமற்ற, வளையா உறுதி வாய்ந்த உருவம் அவ்வளவு மேல் நிலைக்கு உயர்ந்தது.
தோழர் லெனின்
1914, அக்டோபரில் நான் லெனினுக்கு எனது முதல் கடிதத்தை எழுதினேன். அவருடைய பதில் ஒரு ரஷ்யத் தோழர் மூலம் எனக்குக் கிடைத்தது. உடனே வேலை தொடங்கும் படியும், தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த போராட்டம் பற்றிய தமது கொள்கையைச் செயல்படுத்த உதவக்கூடிய ஸ்காண்டினேவிய சோஷலிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளும் படியும் அதில் லெனின் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். அந்தச் சமயம் முதல் நான் லெனினின் நேரான தலைமையில் வேலை செய்யலானேன்.
அதேசமயம், லெனினுக்கும் ரஷ்யாவிலிருந்த மத்தியக் கமிட்டி பீரோவுக்கும் ஸ்காண்டினேவியா வழியே நிலையான தொடர்பு ஏற்படுத்தும் பொறுப்பு எனக்கும் வேறொரு தோழருக்கும் கொடுக்கப்பட்டது. இந்தத் தொடர்பு உரிய முறையில் ஏற்படுத்தப்பட்டது, ஹாமர்ஷேல்டின் கன்சர்வேடிவ் சர்க்கார் “போல்ஷ்விக் மைய நிலையத்தை” மூடிவிடத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து இயங்கியது. நான் கைது செய்யப்பட்டு குங்ஸ்ஹோல்மன் என்னும் இடத்தில் சிறைவைக்கப்பட்டேன்.
பினனர், ஸ்வீடனிலிருந்து வெளியேற்றப்பட்டேன். சில நண்பர்களின் உதவியால் நார்வேயில் ஓஸ்லோ நகரின் புறத்தே ஹோமென் கோலென் என்னும் வட்டாரத்தில் தங்கி வசிக்க எனக்கு வாய்த்தது. குறுங்குடாவுக்கு மேலே மலைமீதிருந்து எனது சிறு சிவப்பு வீட்டிலிருந்து எனது கேள்விகளும் உத்தரவுப்படி எழுதப்பட்ட பிரசுரங்களும் கட்டுரைகளும் லெனினுக்கு அனுப்பப்பட்டது. லெனினது கடிதங்களை இந்த வீட்டில்தான் நான் திறந்து பார்த்தேன். இதே சிறு சிவப்பு வீட்டில்தான் நார்வே இடதுசாரியினரின் தீர்மானம் உருவாக்கப்பட்டது. இடதுசாரி ஸிம்மெர்வால்டை ஆதரிக்கும் இந்தத் தீர்மானம் லெனினால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த ஆண்டுகளில் நான் லெனினைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் எனக்கு வெறும் மனிதராக அல்ல, மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார். சமூக உறவுகளில் யாவற்றிலும் பெரிய புரட்சிக்கு, புதிய கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு உரிய திட்டம் முழுமையடைந்து வரையறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
ஏகாதிபத்தியப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, லெனினது முயற்சியாலும் சமூகத்தின் சமுதாய அமைப்பில் பிளவுகள் ஏற்படத்தொடங்கிவிட்டன. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் துணுக்குகளாகச் சிதறிவிட்டது. எனினும்  லெனின் மையமாகக் கொண்டு புதிய, பசிய முளைகள் கிளம்பலாயின. இந்த காரணத்தால் தான், பழிகேடு அடைந்த இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலிலிருந்து புரட்சி மனப்பான்மை கொண்ட சோஷலிஸ்ட் இளைஞர்களைத் தேடிப் பொறுக்கி இடதுசாரி ஸிம்மெர்வால்டைச் சுற்றி அணிதிரட்டுமாறு 1915-லும் 1916-லும் லெனின் எனக்கு உத்தரவிட்டபோது, இந்த வேலை எதிர்பார்த்ததைக் காட்டிலும் எவ்வளவோ எளிதாக எனக்குப்பட்டது.
ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இடதுசாரி ஸிம்மெர்வால்டின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் போஸ்டனிலிருந்து ஸீட்டல் வரையிலும் சக்திகளைத் திரட்டும் பொருட்டு நான் அட்லான்டிக் மாகடலை இரண்டு தடவை கடக்க நேர்ந்தது.
(இவர் தான் லெனின் நூலிலிருந்து…)
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
புத்தகம் : இவர்தான் லெனின்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ.140
தொடர்புக்கு : 9445123164

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க