நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

இறுதியாக அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான்.

1993 முதல் நெல்லை மாவட்டத்தின் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளரும், மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்ட பின் அதன் சிவகிரி வட்ட அமைப்பாளராகவும் இருந்தார் தோழர் சம்மனசு. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 27/04/2022 அன்று மாலை 5 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று, எழுத, படிக்கத் தெரியாத தோழர் சம்மனசு சிறு விவசாயி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இளம் வயது முதல் தவறுகளை தட்டிக் கேட்பது, நியாயத்தின் பக்கம் நிற்பது என தனது ஊரான தேவிப்பட்டனத்திலும் சுற்று பட்டிலும் செயல்பட்டுள்ளார்.
தோழர் துவக்கம் முதலே கைது, வழக்கு, சிறை என எதற்கும் அஞ்சாமல் தன் போராட்டங்களைத் தொடர்ந்துள்ளார். ஒரு பிரச்சினையில் போலீசும் தி.மு.க.வும் சமரசம் செய்து கொண்டதை தோழரால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பிரச்சினையில் தோழரை ஆதரித்த சி.பி.ஐ.(எம்)-ல் தன்னை இணைத்துக் கொண்டார்.
சி.பி.எம்-ல் செயல்படும் போதே தோழருக்கு நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. நடுவில் தன் காதல் மனைவி முத்துலெட்சுமியின் உதவியுடன் படிக்கக் கற்றுக்கொண்டார். மார்க்சிய – லெனினிய நூல்களை படித்து விவாதிப்பார். இந்திரா காந்தியின் அவசர நிலை பேயாட்சியில் தோழரும் கைது செய்யப்பட்டார். சிறை மீண்டதும் மீண்டும் நியாயத்திற்கான போராட்டங்கள். இப்போது நக்சல்பாரி கட்சியில் இருந்து செயல்படுகிறார். ‘அழித்தொழிப்புகள் நம்மை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும். மக்களை புரட்சிக்கு திரட்ட இந்தத் திட்டம் உதவாது!’ என கட்சியில் போராடுகிறார் தோழர் சம்மனஸ்.

படிக்க :

♦ இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

♦ ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

தியாகிகள் மச்சக்காளை, இராயப்பன் போன்றோரோடு இணைந்து செயல்பட்டவர். பின்னர் ‘மக்கள் முன்னணி’ என்ற மக்கள் திரள் அமைப்பைத் துவங்கி, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து வலது சந்தர்ப்பவாத சகதியில் வீழ்ந்த வினோத் மிஸ்ரா குழுவை (சி.பி.ஐ.(எம்-எல்) விடுதலை) விட்டு விலகி முற்போக்கு இளைஞர் அணி (RYL) என்ற அமைப்பில் இணைந்து போராடத் துவங்கினார்.
அந்த அமைப்போ, இடது சந்தர்ப்பவாத சகதியில் சிக்கித் தவித்தது. மக்களின் எளிய கோரிக்கைகளுக்குக் கூட பேருந்தை எரிக்கப் போனது. தோழர் சம்மனஸ் மக்களைத் திரட்டுவதை முன் வைத்து போராடினார். அவரது குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை. பேருந்து எரிக்கப்பட்டது.
தோழர் சம்மனசின் குடும்பமே போலீசு அடக்குமுறைக்கு ஆளானது. அதிகம் படிக்கத் தெரியாது. மார்க்சிய மூல நூல்கள் அனைத்தையும் படித்ததில்லை. அடிப்படையான நூல்களை மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் தன் வர்க்க உணர்வின் மூலம் வலது சந்தர்ப்பவாதமும், இடது சந்தர்ப்பவாதமும் தன் வர்க்கத்தின் விடுதலைக்கு உதவாது என்பதை தன் எளிய அறிவால் தன் தோழர்களுக்கு விளக்கினார்.
‘மக்கள் திரள் வழி’ (Mass Line) ஒன்றே இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்கவல்ல ஒரே பாதை என முடிவெடுத்து, தன் உயிர்த் தோழர்கள் கணபதி (இராசபாளையம்), செல்வம் (தேவிப்பட்டனம்) மற்றும் சிலருடன் 1993-ல் விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.
போராட்டங்கள் தொடர்ந்தன. கைதுகளும் வழக்குகளும் கூடவே தொடர்ந்தன. குடும்பமே (மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்) சிறையில் கழித்த மாதங்கள் பல. நாட்டில் ஏதோ போராட்டம் என்றால் முன்னெச்சரிக்கை என சம்மனசு கைது செய்யப்படுவார். மனைவியும் மக்களும் முன் திட்டமிட்டபடி பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாவார்கள். போலீசின் அடக்குமுறைகளை கண்டு ஒருபோதும் தோழர் சம்மனசும் அவர் குடும்பமும் துவண்டதில்லை.
‘போலீஸ் அடக்குமுறை’ என பொதுவாக கூறினால், அதன் உண்மையான பொருளை புரிந்து கொள்ள முடியாது. நள்ளிரவுக் கைதுகள்! நக்சலைட்! தீவிரவாதி! பயங்கரவாதி! என்ற பீதியூட்டும் பிரச்சாரங்கள். தோழர்கள் பற்றியும், அமைப்பு பற்றியும் தகவல் கூறினால், வசதியான வாழ்க்கை கிடைக்கும் என கொடுக்கப்பட்ட உத்திரவாதங்கள்! சாம, தான, பேத, தண்டங்கள் என எதிரிகள் விரித்த வலைகள் ஏராளம். எதிலும் சிக்காத உண்மைப் புரட்சியாளர் தோழர் சம்மனசு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கடும் இதய நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த தோழரை, தரகு முதலாளி ராம்கோ-வுக்கு எதிரான தோழரின் போராட்டங்களை முன்னிட்டு, வழக்கம் போல் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தது போலீசு.
“விலகிவிடு! இலட்சங்கள் கிடைக்கும்!” என்ற உபசித்திரவதைகள் தனிக் கதை.
அமைப்பு முன்னெடுத்த எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு தமது கிராம மக்களையும் அதில் பங்கேற்க வைத்தார். தன் வட்டாரத்தில் இயங்கிய முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சம்மனசு.
இறுதியாக, அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போதும் அங்கு சென்று விவசாயிகளை ஒருங்கிணைத்தார். இந்தப் போர்க் குணம்தான் தோழரிடம் இருந்து நாம் வரித்துக் கொள்ள வேண்டியது.
மக்கள் விரோதிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றோரை ஒருபோதும் மதித்ததே இல்லை தோழர் சம்மனசு. அவர்களைப் பற்றி பேசும் போது கூட மிக இயல்பாக அவரது புரட்சிகர வர்க்கக் கோபம் வெளிப்படும். அதே நேரம், மக்கள் மற்றும் தோழர்களை அணுகும்போது அவரது வர்க்க பாசம் வெளிப்படும்.
“ஆஸ்பத்திரியில் அது சரி இல்ல, இது சரியில்ல! ஏகப்பட்ட பிரச்சினை! போராட்டம் செய்யணும் தோழர்!” இதய நோய்க்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உடன் தோழர் சம்மனசு பேசிய வார்த்தைகள் இவை. ஒரு வாரம் முன்னர் கூட மருத்துவமனையில் தனக்கு உதவி செய்ய வந்த இளம் தோழர்களை அன்புடன் வரவேற்று, செய்ய வேண்டிய புரட்சிகர பணிகள் பற்றி பேசி, உற்சாகமூட்டி உள்ளார்.
என்ன சொல்ல? எந்த இடத்திலும் மக்கள் நலனை, மக்கள் விடுதலையை, புரட்சியை உயர்த்திப் பிடித்தார். எந்த இடத்திலும் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் நமது நாட்டை சூறையாடுவதை எதிர்த்து நின்ற தோழர் சம்மனசின் புரட்சிகர வர்க்க உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிறுத்தி தோழர் பேசியதே இல்லை. அமைப்பும், இலட்சியமும், நியாயமும் மட்டுமே தோழரால் எப்போதும் முன்னிறுத்தப் பட்டவை.

படிக்க :

♦ NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

♦ தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

“வீட்டில் செய்த உணவை வந்த தோழர்களுக்கு பரிமாறிவிட்டு, எங்களை, ‘பள்ளிக்கூடத்தில் (சத்துணவு) சாப்பிடுங்க’ என கூறிவிட்டு ஒரு பீடியில் தன் வயிற்றை நிரப்பிக் கொண்ட நாட்கள் பல” என தன் தந்தையைப் பற்றி பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார் தோழர் சம்மனசின் மகன்.
“கொள்கையை வித்தவுகள பத்தி பேசாதீங்க தோழர்?, புரட்சிக்கு என்ன தேவையோ அத ஆக வேண்டியதப் பாப்போம்!” என தன் இயல்பான வர்க்க மொழியில் வழிகாட்டியதை என்னவென்று விளக்க இயலும்? “அரசியலைப் பாருங்க தோழர்! எவம் யோக்கியம்னு தெரிஞ்சி போவும்!” என ‘அரசியலை ஆணையில் வைத்தவர்’ தோழர் சம்மனசு.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேவிப்பட்டனம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்திற்கு மட்டுமே உரியவர் அல்ல அவர். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் உலக உழைக்கும் மக்களுக்கு உரியவர் தோழர் சம்மனசு. உழைக்கும் மக்களின் கலங்கரை விளக்கம் தோழர் சம்மனசு.
தன் வாழ் நாள் எல்லாம் மக்கள் விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும் உழைத்த ஒரு உண்மை நக்சல்பாரி புரட்சியாளன் மறைந்து விட்டான். அதோ! அந்தப் பெருவெளியில் நகைத்தபடி நமக்கு வழிகாட்டுகின்றான்!
சிவப்பு அஞ்சலிகள்! தோழர் சம்மனசு!
உங்கள் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
உங்கள் கனவை, உங்கள் வழி நின்று முடித்து வைப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ராஜபாளையம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க