கடந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்த தோழர் சம்புகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த மே 10-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் கதிரவன் தலைமை ஏற்று தோழர் சம்புகன் நினைவுகளை பகிர்ந்தார். 1983-ம் ஆண்டில் பகத்சிங் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் இணைந்து வேலை செய்ததை பகிர்ந்தார். கோவையில் தொழிலாளர் மத்தியில் தோழர் சம்புகனுடன் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்ததையும், லட்சுமி மில், கணபதி, PSG பகுதிகளில் ஆலை நுழைவாயில்கள் முன் நள்ளிரவு கூட்டங்கள், வெண்மணி நாடகம் நடத்தியதையும், தனது குடும்பத்தை அரசியல் படுத்தி கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் தோழர் சம்புகன் என்று நினைவுகூர்ந்தார்.
மக்கள் அதிகாரம் கோவை மண்டல செயலாளர் தோழர் சங்கர் பேசுகையில், சாதிய, மத பின்புல உள்ள பகுதியில் தோழர் சம்புகன் பணி முக்கியமானது, பகுதி வேலைகளாகட்டும், மைய வேலைகளாகட்டும் எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் அங்கு மக்கள் மத்தியில் ஐக்கியமாவது, பாடல் பாடுவது என உற்சாகத்துடன் வேலை செய்வார். அறுவை சிகிச்சை செய்த கால் வலியைக்கூட பொருட்படுத்தாமல் கடைசியாக மே தின நிகழ்ச்சிகள் வரை கலந்து கொண்டார். அமைப்பு பிளவின் போது உறுதியாக நின்று போராடியவர். அமைப்பு முறைகளை பின்பற்றியும், கற்றுக்கொடுத்தும் சென்றவர் தோழர் சம்புகன் என்று நினைவுகூர்ந்தார்.
மக்கள் அதிகாரம் கோவை கிளை செயலாளர் தோழர் ராஜன் பேசுகையில், மனித வாழ்வு பற்றியும், உழைக்கும் வர்க்கத்தை சிந்திக்க வைப்பது கம்யூனிஸ்டுகள் தான், கம்யூனிச கொள்கை தான். மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தில் ஈர்க்கபட்டு வாழ்நாள் முழுவதும் மக்களிடையே வர்க்க அரசியலை கொண்டு சென்றவர் தோழர் சம்புகன். முதலாளித்துவ சுரண்டலையும் அதற்கு சேவை செய்யும் அரசு பற்றியும் அம்பலப்படுத்த வேண்டும். மக்களுக்கு வர்க்க அரசியலை கற்று கொடுக்க வேண்டும். தீர்வை முன் வைப்பது நமது அரசியல் தான் என எப்போது முழங்குவார் தோழர் சம்புகன் என்று தனது நினைவுகளை பகிர்ந்தார்.
புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் வள்ளுவராசன் பேசுகையில், பகத்சிங் கூறியது போல “போராட்டம் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்ல எங்கள் வாழ்நாளோடு முடிவதுமில்லை” என்பதை போல அமைப்பை தனது வாழ்வில் உயர்த்தி பிடித்தவர் தோழர் சம்புகன். தனது மனைவியை பங்கேற்க வைத்தும், மகள், மருமகன் ஆகியோரை அமைப்பில் கொண்டுவந்தவர் தோழர் சம்புகன்.
தனது வறுமையான வாழ்க்கையிலும் அமைப்பு வேலையில் உள்ள தோழர்களுக்கு உணவை ஏற்பாடு செய்தவர். இளைஞர் போல சுறுசுறுப்பான அமைப்பு வேலைகளை செய்தவர். தோழர் சம்புகன் என்றவுடன் புதிய ஜனநாயகம், துண்டறிக்கைகள் தான் மக்களுக்கு நியாபகம் வரும். அமைப்பு வேலை என்றவுடன் சொந்த வேலைகளை விட்டுவிட்டு வந்துவிடுவார். 1980-களில் பிற்போக்கும், பழமையிலும் மக்கள் இருந்த சூழலில் மக்களுக்கு, நாட்டுக்கு எது முக்கியம் என புரிந்துகொண்டு இறக்கும் காலம் வரை ஊன்றி நின்றவர். அரசு நமக்கானதாக ஏன் இல்லை என பிரச்சாரம் செய்தும், GST, பணமதிப்பிழப்பு வரை அம்பலபடுத்தியும், ஒரு அமைப்பின் கீழ் கட்டுபாட்டுடன் இருந்து உறுதியாக போராடியவர். தோழர் சம்புகன் நினைவுகளை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
காவி – கார்ப்பரேட் பசிசத்தை முறியடிக்க வேண்டுமென்றால் தோழர் சம்புகன் ஏற்றுக் கொண்ட அரசியல் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம் !
♦ தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி
♦ தோழர் சம்புகனிடம் கற்போம் |ம.க.இ.க.