புளு ஃகிராப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், வெளியிட்டு இருந்த மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கு இளையராஜா தான் எழுதியதாக கூறும் அணிந்துரையில் மோடியோடு அம்பேத்கரையும் ஒப்பீட்டு மோடியை பாராட்டி எழுதி இருப்பது கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது அணைவரும் அறிந்ததே.
இளையராஜா என்பவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, இசையில் ஆற்றலுள்ளவர். இசை ஞானியும் கூட. எனவே இவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், மேற்கண்ட நூலுக்கு அணிந்துரை எழுதியது நான் தான் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது என்பதை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.
ஏனெனில், ஒரு நூலுக்கு அணிந்துரையோ, முன்னுரையோ எழுதுவதற்கு முன்பு குறிப்பிட்ட நூலை முழுமையாக ஒரு முறைக்கு பலமுறை படித்துவிட்டு, அதிலிருந்து அந்த நூலைப் பற்றி ஒரு மதிப்பீட்டிற்கு வந்து, அதனடிப்படையில் தனது சொந்த கருத்தை, சொந்த எழுத்து பாணியில் எழுதுவதுதான் அணிந்துரை. ஆனால், இளையராஜாவின் அணிந்துரை அந்த அடிப்படையில் இல்லை.
நூலை எழுதியவரின் கருத்துகள் அடிப்படையிலேயே எழுத்து பாணியிலேயே அணிந்துரை அமைந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். இளையராஜாவின் பெயரில் அணிந்துரை இல்லாமல் (இசையமைப்பாளர் என்ற பிரபலத்தின் அடிப்படையில் இல்லாமல்) வெளியிடப்பட்டிருந்தால் இந்த நூல் பற்றிய விவாதம் பொது வெளியில் வந்திருப்பதற்கே வாய்ப்பு இல்லை என்ற சமூக ஆர்வலர்களின் அரசியல் பிரமுகர்களின் கருத்துகள் ஏற்புடையதே.
படிக்க :
எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளர்கள் இருக்க தமிழக இசையமைப்பாளர் இளையராஜாவை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கான காரணம் என்னவெனில், தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க மீதான எதிர்ப்பு என்பது வலுவாக உள்ளது. இவற்றை உடைக்க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டத்தின், நோக்கத்தின் அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் இருந்து தனக்கான சில கோடாரிக் கொம்புகளை உருவாக்கி களமிறக்கி வருவதுபோல, ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்ற சினிமா பேர்வழிகளை தெரிவு செய்து களமிறக்குகின்றன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
இதனடிப்படையில் தான் முதலில் ரஜினியை எப்படியாவது வளைத்துப் போட பாசிஸ்டுகளுக்கே உரிய பாணியிலான சாம, பேத, தான, தண்டம் என்ற முறையை கையாண்டுள்ளதை, அதாவது குறிப்பாக அரசின் அடியாள் படையான அமலாக்கத் துறையை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு பணிய வைத்ததை, சங்க பரிவாரங்களின் மூலம் மிரட்டி பணிய வைத்ததை பல்வேறு ஊடகங்கள் அமல்படுத்தி விட்டன.
இவை ரஜினியிடம் நிறைவேறாமல் போகவே, மேற்கண்ட பணியை இளையராஜாவிடம் நடைமுறைப்படுத்தி மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கான அணிந்துரை மூலம் சாதிக்க முயன்றது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விளைவை எட்ட இயலவில்லை. இருப்பினும் இவற்றை பேசும் பொருளாக, விவாதப் பொருளாக இன்று மாற்றிவிட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.
முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம், குழந்தைகள் காப்போம், கற்பிப்போம் போன்ற திட்டம், இலவச கேஸ் இணைப்பு, வங்கியில் பணம் போன்ற திட்டங்கள் குறித்து, இவற்றில் பாசிச மோடியின் நோக்கம் குறித்து எவ்வித புரிதலும், அறிதலும், பரிசீலனையும் இல்லாமல், இதன் உண்மை நிலவரத்தை உணராமல் அணிந்துரை மூலம் பாராட்டுவது என்பது மோடியின் பாசிச நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமம்.
ஏனெனில், பாராட்டு என்பது ஒருவரின் (பாராட்டப்படக் கூடியவரின்) உண்மை முகத்தை, உண்மை குணத்தை, உண்மையான நோக்கத்தை சொல்லும். மோடியின் திட்டங்களாலும், சட்டங்களாலும் அதன் உண்மையான முகமும், குணமும், நோக்கமும் அன்றாடம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு நாறி வரும் நிலையை புரிந்துக்கொள்ள துப்பில்லாத – விரும்பாத – இளையராஜாவின் பாராட்டு என்பது பாசிஸ்டுகளுக்கு போடப்படும் புகழ் மாலையே.
இளையராஜா இசையில் ஞானியாக இருக்கலாம். ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நோக்கம் குறித்தும், அவர்களின் நம்பகமான, விசுவாசமான பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக, மோடி போன்ற கைக்கூலிகள் போடும் திட்டங்கள் குறித்தும் ஞானம் இருந்தால் தான் இவற்றைப் பற்றி கருத்தையோ, அணிந்துரையோ, முன்னுரையோ வழங்க முடியும் என்பதை இளையராஜா எழுதியதாகக் கூறும் அணிந்துரையே அம்பலப்படுத்தி விட்டது.
தமிழகத்தில் நிரந்தரமாக காலூன்ற சினிமா பேர்வழிகளான ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதுபோல, இன்னும் பல்வேறு துறையினரையும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது சதி வலையில் சிக்க வைக்க நெருக்கடி கொடுப்பது, கோடாரிக் கொம்புகளாக உருவாக்குவது, மிரட்டி பணிய வைப்பது போன்ற அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மலைப்பாம்பைப் போல தமிழகத்தை வளைத்து இறுக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை ஓயாது.
படிக்க :
வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
மோடியின் பொய் உரைகள் : கூட்டாட்சி தத்துவம், பெட்ரோல் டீசல் வரிகுறைப்பு, மாநில அரசு மீதான குற்றசாட்டு !
இப்பாசிச கும்பலை தமிழகத்தில் வேறூன்றாமல், போராடி மண்ணோடு பிய்த்து எறிவது பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்ற சட்டத்தையும், தேர்தலை மட்டும் நம்பியிராமல் களத்தில் இறங்கி போராடுவது காலத்தின் கட்டாயம்.
ஏனெனில், பாசிஸ்டுகள் களமிறங்கி விட்டனர். சான்றாக, கடந்த ஏப்ரல் 14 அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுகிறோம் என்ற பெயரில் வி.சி.க.வுடன் மோதலில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கினர். இந்த கலவரத்தை சென்னை சேத்துப்பட்டில் உருவாக்க முயன்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை மக்கள் அதிகாரமும், இதர கட்சிகளுடன், பகுதி மக்களுடன் இணைந்து விரட்டியடித்தனர்.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பாசிச கும்பலின் எடுபிடியாக, ஊதுகுழலாக செயல்படும் பேர்வழிகளை விரட்டியடிப்பதோடு, இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கும் படியான நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்களின் ஆதரவால் பிரபலமடைந்து, பின்பு பாசிஸ்டுகளுக்கு துணைபோகும், துதிபாடும் பேர்வழிகளின் புகழை – பெருமையை – செல்லா காசாக்க வேண்டும்.
இவர்களுக்கான சமூகப் பரப்பை பிடுங்கி எறிய, இவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதை தொடர்ச்சியாக இடைவிடாமல் மேற்கொள்வது அவசியம். இவை மூலமே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் காலூன்றாமல் தடுக்க முடியும்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க