வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த டெய்சாங் ஹாங்காங் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.170 கோடி மதிப்பில் 39 ஆயிரம் சக்கரங்களை அந்த நிறுவனம் தயாரித்து இந்திய ரயில்வேயிடம் கொடுப்பது உறுதியாகிவிட்டது.
இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை சார்பாக ஒப்பந்த புள்ளி கோரபட்டபோது இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் ஒப்பந்தம் வாங்குவதற்கு விண்ணப்பித்தன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த உரிமை கொடுக்காமல் சீன நிறுவனத்திற்கு கொடுத்து, தான் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அடிமை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது இந்த ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்துடன் கடந்த காங்கிரஸ் அரசு ரஃபேல் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதில், இந்தியாவில் ரஃபேல் விமானம் தயாரிக்க, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு தயாரிக்கும் உரிமையை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி, டசால்ட் நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்த போட்டு ரஃபேல் விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதில், ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு பதிலாக தனது எஜமான் அனில் அம்பானியின் ரிலையன் டிபன்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கி தனது விஸ்வாசத்தை நிரூபித்துக் கொண்டார் மோடி. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அம்பானிக்கே, தனது அம்பானி டிபன்ஸ் நிறுவனம் எங்கு இருக்கிறது என்று தெரியாது. அதிலும், மோடியின் ரஃபேல் ஊழல் என்பது தனிக்கதை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ராஷ்டிரீய இஸ்பத் நிகாம் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமும் வந்தே பாரத் ரயில் சக்கரம் தயாரிப்பதற்கு விண்ணப்பித்து இருந்தது. மிகச் சிறந்த கட்டமைப்பும், நிர்வாக திறனும் உள்ள இந்த நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் ரயில் சக்கரம் தயாரிக்கம் திறனுடையது. அப்பேர்பட்ட இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்காமல் சீனா நிறுவனத்திற்கு மோடி அரசு ஒப்பந்தம் வழங்கி இருக்கிறது என்பது மோசடியின் உச்சம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வரும் மோடி அரசு, அனைத்து காப்பீடு ஒப்பந்தங்களையும் பொதுத்துறை நிறுவனத்திற்கு கொடுக்காமல் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தான் வழங்கி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் இந்தியாவில் ஒட்டுமொத்த தேச பற்றை குத்தகைக்கு எடுத்து கொண்டு அதுகுறித்து தொடர்ச்சியாக பொய் பேசி வருகின்றனர். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா தற்சார்ப்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்கு வேண்டும் என்றும், அதுதான் இந்து ராஷ்டிரத்திற்கு பொருத்தமான பொருளாதார கொள்ளைகை என்றும் கூறி வருகிறார். அதுபோல் மோடி தொலைக்காட்சியில் பேசும்போது பெரும்பாலும் இந்தியா, தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டு இருக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் அனைவரும் அந்நியப் பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பாடம் எடுக்கிறார் கார்ப்பரேட் அடிமை மோடி.
தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கப்போவதாக கூறிக்கொண்ட ஒன்றிய பாஜக அரசு ”மேக் இன் இந்தியா” என்ற ஒரு கவர்ச்சிகர, வாய்ச்சவடாலான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தவே பல கோடி மக்கள் வரி பணத்தை வாரி இறைத்தது. இந்த திட்டத்தின் மூலம் ‘இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்’ என்று நாடு நாடாக சென்று பல்வேறு நாட்டு அரசுகளின் ஆதரவையும், கார்ப்பரேட் கம்பெனிகளை அழைத்தும் கூட பெரிய அளவிலான முதலீடுகள் வரவில்லை.
சீன நிறுவனத்திற்கு ரயில் சக்கரம் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கியது என்பது வெறும் தனியார்மய கொள்கையினால் மட்டும் அல்ல. பொதுமக்களுக்கு தேசவெறியுட்ட சீனாவை எதிரியாக காட்டவும், தனக்கு தேவையென்றால் அந்த நாட்டுடன் இணைந்து போவதும்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் அஜண்டா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியபோது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியாவை போர் மேகம் சூழ்ந்துள்ளதாகவும் சீனாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார போரை நடத்தபோவதாகவும் கூறியது. ஆனால் சீனவை சேர்ந்த சுமார் 20 செயலிகளுக்கு மட்டும் தடை விதித்து தனது வீரத்தை காட்டிக்கொண்டது. மேலும், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தடையும் விதித்து தேசபற்று என்றால் இதுதான் என்று பொது மக்களுக்கு பாடம் எடுத்தது பா.ஜ.க அரசு.
நிலைமை இப்படி இருக்க, 20 இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்த அதே சீனாவிடம் தற்போது 170 கோடி முதலீடு செய்து ரயில் சக்கரம் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஒன்றிய அரசு போட்டுள்ளது. இதுதான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற சங்கிகளின் தேசப்பற்று என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராடும்போதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதை திசை திருப்புவதற்காகவும் மூடி மறைப்பதற்காகவும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்றும் தீவிரவாத செயல் என்றும் மக்களை மடைமாற்றும் ஒரு தந்திரமாக செய்து வருகிறது மோடி அரசு. இந்தியாவில் தனக்கு பிரச்சினை என்றால் சீனாவை எதிரியாக காட்டுவதும் இல்லை என்றால் தனது அடிமை சேவகத்தை செய்வதும்தான் மோடி அரசின் நிலைப்பாடு. தான் செய்யும் அடிமை சேவகம் அமெரிக்காவிற்கு அடுத்து சீனாதான் என்று அவ்வபோது நிரூபித்து வருகிறது பாசிச மோடி அரசு. ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமை சேவகனாக மாறும் உத்தியை கையாளுகிறது இந்திய அரசு.