“கருத்தியல் ரீதியாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போன்று கோவில் விழாக்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம். கோவில் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ். கொடிகளை நட்டு, மத உணர்வைத் தூண்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதச்சார்பற்ற முறையில் அனைத்து மதத்தினரும் கோவில், தர்கா, தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். அவர்களைப் பாதுகாப்பதும் நம் கடமை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இனி கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன் நின்று நடத்தவும் முயற்சி செய்வோம்” என்றும், இது தொடர்பாக மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் மார்ச் – 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
மாநில மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக, அவசர அவசரமாக வெளியிடப்பட்ட இக்கருத்து தீர்மானமாக இதுவரை அச்சில் வெளியிடப்படவில்லை. இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியினர் மவுனம் காத்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, திராவிடர் விடுதலைக்கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி சித்தாந்த தளத்தில் தவறு செய்யக்கூடாது என்றும் பொருள்முதல்வாதம் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
படிக்க :
♦ தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
“சி.பி.எம்.-இல் உள்ள இளைஞர்களைக் கூடத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுவதாகும். புரட்சிகர இளைஞர்களாக வார்த்து எடுப்பதற்குப் பதில் புராணச் சகதியில் அவர்களைத் தள்ளிவிடக் கூடாது” என்று கூறிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, “தேர்தலில் தோற்கலாம்; சித்தாந்தத்தில் தோற்கலாமா? என்று மார்க்சிஸ்ட் கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், தாங்கள் எடுத்த நிலைப்பாடு எவ்வளவு சரியானது என்பதை நிலைநாட்டும் வண்ணம், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் இதுகுறித்த வகுப்புகளை எடுத்து வருகின்றனர். கேரளாவைப் போலவே தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகத்திலும் மார்க்சிஸ்டுகள் பங்கேற்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று சி.பி.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
மதவாதிகளின் பிடியில் இருந்து கோவிலைக் காப்பதற்காகவே மார்க்சிஸ்ட் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் கூறுகிறார். கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு முடிவு செய்திருப்பதாகவும், இது சித்தாந்தச் சறுக்கல் அல்ல எனவும் கே.பாலகிருஷ்ணன் தன்னிடம் தெரிவித்ததாக வி.சி.க. வன்னியரசு ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறினார்.
இவையெல்லாம் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழ்நாடு மாநில மாநாட்டிலும், அனைத்திந்திய மாநாட்டிலும் இது குறித்து என்ன விவாதம் நடந்தது என்றோ, முடிவு என்னவென்பது குறித்தோ மூச்சுவிடாமல் இருக்கிறார்கள் சி.பி.எம் கட்சியினர். அதே நேரத்தில், மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைப் பெருவிழா எனப்படும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து, சி.பி.எம். கட்சியின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முகநூலில் பதிவிட்டார். மதுரையின் பல பகுதிகளிலும் சி.பி.எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் சித்திரை விழாவுக்கு வந்தவர்களுக்கு நீர்மோர் வழங்கி விழாவை ‘சிறப்பித்திருக்கிறார்கள்’.

வேறொரு மாவட்டத்தில் திருமலைநகர் என்ற பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மேடை போட்டு பேனர் வைத்து “மக்கள் விளையாட்டு விழாவை” நடத்தியிருக்கிறது அக்கட்சியின் வாலிபர் சங்கம்.
ஏற்கெனவே, ‘சுதந்திர தினம்’, ‘குடியரசு தினம்’ உள்ளிட்டவற்றைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி வருகின்றனர். நாடறிந்த ஏமாற்றான சபரிமலை ‘மகர ஜோதி’க்கு கேரள மார்க்சிஸ்டுகளே முன்னின்று விழா ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்ததை நாம் மறந்திருக்க முடியாது. மக்களோடு ஐக்கியப்படுவது என்ற பெயரில் மக்களை விடவும் தாழ்ந்த நிலைக்குச் செல்வதையே சாதனையாகக் கருதும் போக்கு தொடர்ந்து சி.பி.எம் கட்சியில் மேலோங்கி வருவதற்கு இவை சில சான்றுகள் மட்டுமே
000
கோயில் திருவிழாக்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதால் அங்கே பண்பாட்டுத்தளத்தில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது, நோக்கமும் வழிமுறையும் சரி என்பது போல தோன்றலாம். இந்த முடிவின் மூலம் கோவில் திருவிழாக்களில் அலகு குத்தப்போவதில்லை, காவடி தூக்கப்போவதில்லை; மாறாக, இதுவொரு சித்தாந்தப் பிரச்சினை என்று அவர்கள் நமக்கு விளக்கம் கொடுக்கலாம். நாடாளுமன்ற பங்கேற்பு, சிங்கூர் – நந்திகிராமில் விவசாயிகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல விசயங்களில் இதுபோன்ற ஏராளமான ‘சித்தாந்த’ விளக்கங்களை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் நாமறிந்ததே.
அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி சொல்வது போல, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். – சங்கப்பரிவாரங்கள் நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை மறிக்கிறார்கள்; நாஞ்சில் சம்பத் செல்லும் காரை மறித்து அடிக்கிறார்கள்; திடீரென ரேஷன் கடையில் மோடியின் போட்டோவைக் கொண்டு வந்து மாட்டச்சொல்லி தகராறு செய்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்சினை முதல் போலீசின் அடக்குமுறை வரை, நாம் எங்கெல்லாம் மக்களோடு நிற்கிறோமோ அங்கெல்லாம் அவர்கள் நமக்குத் தடையாகவும் போலீசுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
அதேபோல, உழைக்கும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று சேவை செய்வதுதானே ஒரு கம்யூனிஸ்டின் பணியாக இருக்க முடியும்? அதன்படி கோயில் திருவிழாக்களில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு சென்று நம்முடைய பணியை மேற்கொள்வது எப்படி தவறானதாக இருக்க முடியும் என்று கூட சி.பி.எம் தோழர்கள் கேட்கலாம்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் இருந்தது போலத்தான் இப்பொழுதும் போர்க்குணத்தோடு செயல்படுகின்றனவா? தொழிலாளிகள் ஆயுத பூஜை கொண்டாடுகிறார்களே ஏன் தோழரே? என்று கேட்டால், தொழிலாளர்களின் தன்மைக்கு ஏற்றபடிதானே செயல்பட முடியும் என்கிறார்கள் நிர்வாகிகள். இதன் விளைவு என்ன? தொழிற்சங்கம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் பலன் கட்சிக்குக் குறைந்தபட்சம் ஓட்டுகளாகக்கூட வருவதில்லை என்பதை எப்போதுதான் பரிசீலிப்பீர்கள் தோழர்களே?
மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்களின் அரசியல் மட்டத்திற்கேற்ப முழக்கம் வைக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவர்களின் அரசியல் உணர்வை வளர்த்தெடுப்பதற்கு திருவிழாக்களில் பங்கெடுப்பதா தீர்வு? மக்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் நிலவுகின்ற சமூக – பொருளாதார – அரசியல் அமைப்பு எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து அமைப்பாகத் திரட்டுவதும் தானே சரியாக இருக்க முடியும். அதற்கு மக்கள் தயாராக இல்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
இப்படித்தான் தொழிலாளிகளின் பொருளாதாரவாதத்துக்கு வால்பிடித்துப் போனதன் விளைவு தொழிற்சங்கங்கள் அவற்றுக்குரிய வரலாற்றுக் கடமையை கைவிட்டு வெற்றுக்கூடாக மாறியிருக்கின்றன. முதலாளிகளால் ஒவ்வொரு நொடியும் சுரண்டப்படும் தொழிலாளிகளின் அரசியல் உணர்வை வளர்க்காததால் தொழிற்சங்கங்களே பொருளாதாரவாதத்துக்குள் மூழ்கிவிட்ட இச்சூழலில், கோயில் திருவிழாக்களில் பங்கு கொள்வது எங்கே போய் முடியும்!
“துர்கா பூஜையை மக்களைச் சந்திப்பதற்கு ஒரு தளமாக நாங்கள் பயன்படுத்தப்போகிறோம்” என்று மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்து, கடந்த ஐந்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கு வங்காளத்தில் அக்கட்சியின் தற்போதைய நிலைமை என்ன? 1977 முதல் 2011 வரை எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து ஆட்சிச் செய்த அம்மாநில சட்டசபையில் சி.பி.எம்.முக்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அதே நேரத்தில் அக்கட்சியின் வாக்குவீதமும் கடுமையாகச் சரிந்திருக்கிறது. மக்கள் மட்டுமல்ல, கட்சி அணிகளே திரிணாமுல்லுக்கும், பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்கவும், கட்சி மாறவும் செய்திருக்கிறார்கள். துர்கா பூஜையைப் பயன்படுத்தி அங்கு சி.பி.எம். கட்சி சாதித்தது என்ன? ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும் நம்முடைய தத்துவத்தை சரியான முறையில் நடைமுறைக்குப் பொருத்திப் பிரயோகிக்கிறோமா என்று பரிசீலிக்காமல் எதிரியின் பாதையில் சென்று மக்களை மீட்டெடுப்பது என்று சென்றால் எங்கே போய் முடியும் என்பதற்கு மேற்குவங்கம் ஓர் எடுத்துக்காட்டு.
