மோடி அரசு கொண்டுவந்த கார்ப்பரேட் நல – மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தோ, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்தோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்குபெற்று இருக்கிறீர்களா அல்லது சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளீர்களா? அதற்காக போலீசு விசாரணை, வழக்குகளை எதிர்கொண்டிருப்பீர்கள். முன்பு அதையெல்லாம் சிறிய நிகழ்வாக கடந்துசென்றிருப்பீர்கள். எச்சரிக்கை! இனி மோடி அரசின் டிஜிட்டல் பாசிச கொடுங்கரங்களிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
ஆம், இதுதான் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) திருத்த மசோதா 2022-இன் (Code of Criminal Procedure (Identification) bill 2022) பின்னணியில் ஒளிந்திருக்கும் பேரபாயம். நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி பா.ஜ.க. இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அமித்ஷா, “நாட்டில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 100 பேரில் 66 பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 100 பேரில் 70 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றத்தண்டனை விகிதம் குறைந்துவருவதைப் பற்றியோ, அதனை அதிகரிக்கச் செய்வது பற்றியோ எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை” என்று குற்றஞ்சாட்டினார். மேலும் தற்போது கொண்டுவந்திருக்கும் இச்சட்டமானது போலீசுத்துறைக்கு அதிக அதிகாரமளித்து பெருகிவரும் குற்றங்களைத் தடுக்கும் என்று கூறினார்.
அமித்ஷா பேசும் புள்ளிவிவரங்களையும் வைக்கும் வாதங்களையும் கேட்கும்போது, பொதுவில், சமூகத்தில் பெருகிவரும் குற்றங்களைக் குறைப்பதைப் பற்றி அக்கறைகொள்வது போல் தோன்றலாம். அப்படியானால் குற்றங்களைக் குறைக்க எண்ணும் அமித்ஷா, தன்னுடைய கட்சியினரைத்தான் முதலில் கூண்டோடு சிறைவைக்க வேண்டும். குண்டு வைக்கும் பயங்கரவாதிகள், கொலைக்குற்றவாளிகள், கிரிமினல்கள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரே எம்.எல்.ஏ.க்களாகவும் எம்.பி.களாகவும் நிரம்பி வழியும் கட்சி அல்லவா பா.ஜ.க.
படிக்க :
♦ குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!
♦ குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !
“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்ற கூற்றே இவ்விசயத்திற்கு பொருந்தும். நம்மை ஆள்பவர்களைப் பொறுத்துதான் சட்டங்களின் அமலாக்கமும். பாசிச மோடி அரசின்கீழ் யார் யாரெல்லாம் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள். மோடி அரசை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை விமர்சிக்கும் அறிவுத்துறையினர், இந்த பாசிச அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள், சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ஆகியோரே என்.ஐ.ஏ, தேசவிரோத வழக்கு, ஊ.ஃபா என்று ஒடுக்கப்படுகிறார்கள்.
சுருக்கமாக, பாசிச எதிர்ப்பாளர்களும் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்களுமே காவிகளின் அகராதியில் ‘குற்றவாளிகள்’. அக்’குற்றவாளிகளை’ ஒடுக்குவதற்கான புதிய ஆயுதமாகப் புறப்பட்டிருப்பதே குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம்.
உயிரணுக்களிலும் ஊடுருவும் கண்காணிப்பு பரவல் :
குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் என்பது குற்றவாளியிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகளைப் பற்றியும் அதைக் கையாளும் முறைகள் பற்றியும் வரையறுக்கும் சட்டமாகும்.
ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மட்டுமே புகைப்படம், கை மற்றும் பாத ரேகைகள் ஆகியவை மாதிரிகளாக சேகரித்து வைக்கப்பட்டன. தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆனால் தற்போது திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தலைமுடி, உள்ளங்கை ரேகைகள், பாத ரேகைகள், கண் விழித்திரை, கருவிழிப் படலம், விந்தணு, சளி-எச்சில், மரபணு (டி.என்.ஏ.) ஆகிய உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட இருக்கின்றன. மேலும் கையெழுத்து மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவைகூட தரவுகளாக சேகரிக்கப்பட இருக்கின்றன.
000
டி.என்.ஏ.வானது நபருக்கு நபர் வேறுபடுவது. உயிரியல் மாதிரிகளில் இது ஒன்றை வைத்தே அவரது குடும்ப பின்னணி, அவர் உடலில் இருக்கும் குறைபாடுகள் – நோய்கள் உள்ளிட்டு அனைத்தையும் எளிதாகக் கண்டறிய முடியும். ஒருவரது கைக்குட்டையோ அல்லது அவர் உபயோகித்த பொருளோ குற்றம் நடந்த இடத்தில் இருந்தால்கூட டி.என்.ஐ.வை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், அவரைக் குற்றம் புரிந்தவர் என முத்திரைக் குத்தப் போதுமானதாக இருக்கும்.
குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தில் சேகரிக்கப்பட இருக்கும் உயிரியல் மாதிரிகளில் முக்கியமானது கண்விழித்திரை, கருவிழி படலம். இது முக அடையாளத்தை விடவும் நபர்களை எளிதாக அடையாளப்படுத்தக்கூடிய ஒரு முன்னேறிய வடிவம்.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், இன்று பல்வேறு நாடுகளில் மக்களை டிஜிட்டல் கண்காணிப்பின்கீழ் கொண்டுவர உதவுகின்றன. சமீபத்திய சான்று ஒன்றைக் குறிப்பிடுவதெனில், இரசியாவில் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யக் கூடியவர்களையும் உக்ரைனில் உளவாளிகளையும் அடையாளம் காண்பதற்காக இத்தொழில்நுட்பம், கண்காணிப்பு கேமராக்களோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகின்றன.
‘குற்றச்சம்பவங்களைக் குறைப்பது’ என்ற பெயரில், ஒருநபரது உணர்ச்சி வெளிப்பாடுகளைக்கூட நுட்பமாகக் கண்காணித்து உணரும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கேமராக்களை சென்னையில் 7,500 இடங்களில் பொருத்துவதற்குத் தீர்மானித்துள்ளது போலீசு. இது மக்கள் மீது தொடுக்கப்படும் பெருந்திரள் கண்காணிப்பாகும் (Mass Surveillance). இவற்றை மோடி அரசின் சட்டத்தோடு இணைத்துப் பார்த்தால் ஆபத்து விளங்கும்.
மோடி அரசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படும் நபர்களிடமிருந்து சேகரிக்கப்படும் இத்தகைய மாதிரிகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உள்ளிட்ட பல கண்காணிப்பு கருவிகளுடன் இணைக்கப்படும்.
பழக்கவழக்கங்களைச் சேகரிப்பது என்ற அம்சத்தை வைத்துக்கொண்டு, மோடி அரசு சட்டவிரோத உண்மை கண்டறியும் சோதனைகளான நார்கோ பகுப்பாய்வு (Narco Analysis), மூளை வரைபட சோதனை (Brain mapping), பாலிகிராப் சோதனை (Polygraph test) போன்றவற்றை விசாரணையில் பயன்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இவை மிக ஆபத்தான சோதனை முறைகளாகும்.
சான்றாக, நார்கோ பகுப்பாய்வு என்பது ஒருவரை அரைமயக்க நிலைக்கு கொண்டுசென்று விசாரிக்கும் முறையாகும். இதற்காக அந்நபருக்கு கொடுக்கப்படும் சோடியம் அமிடால் (Sodium amytal) என்ற மயக்க மருந்து இதயத்துடிப்பை நிறுத்தலாம், இரத்த நாளங்களைச் செயலிழக்கச் செய்யலாம்; சில நேரங்களில் மரணத்தைக்கூட விளைவிக்கும் ஆபத்து நிறைந்தது.
இவற்றின் ஆபத்தை உணர்ந்து பல உலக நாடுகள் இந்த சோதனை முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன. நம் நாட்டிலும் ஒருவரைக் கட்டாயப்படுத்தி இச்சோதனைக்கு உட்படுத்துவது தனியுரிமை மீறலாகும். ஆனால் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தியும் ஒருவரது சம்மதத்தின் பேரிலும் இச்சோதனை முறைகளை மேற்கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது திருத்தப்பட்டிருக்கும் சட்டத்தின்மூலம், இச்சோதனை முறைகள் எதுவும் பயன்படுத்தப்படாது என்று கூறுகிறார் அமித்ஷா. இன்னும் நுணுக்கமாக ‘குற்றங்களைக் கண்டறிய’ இச்சோதனை முறைகள் தேவை என நாளைக்கே இச்சட்டத்தின் ஒரு அம்சமாக சேர்க்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கிரிமினல் குற்றவாளிகளாக்கப்பட இருக்கும் அரசியல் கைதிகள் :
முந்தைய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றம் உத்தரவிடும் விசாரணைக் கைதிகளிடமிருந்து மட்டுமே அடையாள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, ஓராண்டுக்கும் குறைவான தண்டனைக்குட்பட்ட சாதாரண குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாகவே இருந்தாலும் அவர்களது மாதிரிகளும் சேகரிக்கப்படும்.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, மொத்தமுள்ள சிறைவாசிகளில் 69.05 சதவிகிதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். 2018-இல் இது 69.41 சதவிகிதமாகவும் 2017-இல் 68.49 சதவிகிதமாகவும் இருந்தது. இதுதான் நம்நாட்டு குற்றவிசாரணையின் யோக்கியதை. பாதிரியார் ஸ்டேன் சுவாமியைப் போல குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறைக்கொடுமையால் வாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டவர்கள் ஏராளம்.
இவ்வாறிருக்க, அற்ப விசாரணைக்காக போலீசு நிலையம் அழைத்துச் செல்லப்படுபவர்களின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளும் இச்சட்டத்தின்படி சேகரிக்கப்படும். அந்நபர்களிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் கட்டுப்பாட்டில் 75 ஆண்டுகளுக்கு அழியாமல் பாதுகாத்து வைப்போம் என்று கூறுகிறார்கள்.
குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளுக்கு மட்டுமல்லாது, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டோரின் உயிரியல் தரவுகளும் தேவைப்படுமானால் (நீதிபதி உத்தரவின் பேரில்) அழிக்காமல் பாதுகாத்து வைக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது தீய உள்நோக்கம் கொண்டவை.
இனி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை எதிர்ப்பவர்களுக்கு நாடே திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும். பாசிஸ்டுகள் தருணம் குறிக்கும்போது ஏதேனும் சித்திரிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளால் – ‘மோடியைக் கொல்ல சதி’ என்று பீமாகோரேகான் வழக்கில் அறிவுத்துறையினர் பலர் கைதுசெய்யப்பட்டதைப் போல – அவர்கள் கைதுசெய்யப்படலாம்.
நாடாளுமன்றத்தில், இச்சட்ட மசோதா அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். அப்போது இச்சட்ட மசோதாவின் பிரிவு 3-இன் கீழ் புதிய விதிகளை உருவாக்கலாம் என்று தெரிவித்த அமித்ஷா, புதிய விதிகளைச் சேர்க்க முடியும் என்ற அடிப்படையில், அரசியல் கைதிகளுக்கு மட்டும் உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பதிலிருந்து விலக்களிக்க உறுதிசெய்வோம் என்றார். அதனோடு கூடவே அரசியல் தலைவர் ஒருவர் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர் மற்ற குடிமக்களைப் போல்தான் நடத்தப்படுவார் (அவரது மாதிரிகள் சேகரிக்கப்படும்) என்றும் சொல்கிறார். எது கிரிமினல் குற்றம்? அதை பாசிஸ்டுகள்தான் முடிவு செய்வார்கள்.
சட்ட அங்கீகாரம் பெற்றது டிஜிட்டல் பாசிச ஒடுக்குமுறை :
குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவின் நோக்கம் பொதுவில் குற்றங்களைக் குறைப்பது, குற்றவாளிகளைப் பிடிப்பது அல்ல. அது சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்காக பாசிஸ்டுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள சட்ட ஆயுதம் என்று கற்பனையிலிருந்தும் ஒருதலைப்பட்சமான பார்வையிலிருந்தும் நாம் சொல்லவில்லை. அவர்களது நடைமுறையிலிருந்து சொல்கிறோம்.
2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், 2021-இல் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற செங்கோட்டை முற்றுகை ஆகியவற்றில் போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதற்காக முக அடையாளம் காணும் (facial recognition) தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தியுள்ளது போலீசுத்துறை.
2019-ஆம் ஆண்டே குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், அதை நாடு முழுவதும் உள்ள போலீசுத்துறையினர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்வதற்காகவும் தேசிய தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பை (AFRS – Automated Facial Recognition System) ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வருகைப் பதிவைக் கணக்கிட என அனைத்து வகைகளிலும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் புகுத்தி பெருந்திரள் கண்காணிப்பை ஏற்படுத்திவருகிறது.
000
முந்தைய சட்டப்படி அடையாள மாதிரிகளைச் சேகரிக்க ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பு வகிக்கக்கூடிய போலீசார் மட்டுமே கோரிக்கை வைக்க முடியும். ஆனால் திருத்தப்பட்டச் சட்டத்தின்படி, ஒரு தலைமைப் போலீசு (Head constable) நிலையில் உள்ளவரே மாதிரிகளைச் சேகரிப்பதற்கான கோரிக்கையை வைக்க முடியும் என்று மாற்றியிருக்கிறார்கள்.
கருவிழி முதல் டி.என்.ஏ. வரையிலான நுட்பமான உயிரியல் மாதிரிகளைச் சேகரிக்கும் மோடி அரசு, அம்மாதிரிகளைச் சேகரிக்கும் பொறுப்புக்குரியவர்கள் விசயத்தில் தாராளவாதம் செய்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் குறிவைக்கும் நபர்களின் மீது திட்டமிட்டு பொய்வழக்கு புனைந்து அவர்களிடமிருந்து சேகரிப்படும் தரவுகளை உள்ளூர் காவி பயங்கரவாத கும்பலுக்கு பரிமாற்றம் செய்துகொள்வதற்கு இந்தமுறை வசதியானதாக இருக்கலாம்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில், முஸ்லீம் மக்களின் மீது கொடூரமான இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்கு விஷ்வ இந்து பரிஷத்துக்கு வழிக்காட்டியாக உதவியது வாக்காளர் பெயர் பட்டியல். எவையெல்லாம் முசுலீம் வீடுகள், வீட்டில் எத்தனை பேர் என்று குறித்துவைத்துக் கொண்டு படுகொலைகளை அரங்கேற்றினார்கள். தற்போது சேகரிக்கப்படவிருப்பதோ உயிரியல் மாதிரிகள். அவை டிஜிட்டல் கருவிகளோடு இணைக்கப்பட இருக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு காவி பயங்கரவாதிகள் நம்மை நுணுக்கமாகக் கண்காணிப்பார்கள். அதிதுல்லியமாக தாங்கள் இலக்கு வைப்பவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள்.
படிக்க :
♦ தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
குற்றவியல் நடைமுறை (அடையாள) திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இலக்கில் ஒரு சிறுநகர்வே. பழைய காலனியக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒட்டுமொத்த குற்றவியல் சட்டங்களையும் (அடையாளச் சட்டம் என்பது இதன் ஒரு அங்கம் மட்டுமே) மொத்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்று மோடி-அமித்ஷா அரசு நீண்டகாலமாகக் கூறிவருகிறது. அதுதான் குற்றவியல் திருத்தச் சட்டம். அவர்களின் அடுத்த நிகழ்ச்சி நிரல்.
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் விசயத்தைப் பற்றிதான் அடையாள திருத்தச் சட்டம் பேசுகிறது. ஆனால் குற்றவியல் திருத்தச் சட்டமோ எவையெவை குற்றங்கள், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று வரையறுக்கும் தொகுப்பு.
ஈராயிரம் ஆண்டுகளாக நம்மை கொடூரமாக ஒடுக்கிவந்த பார்ப்பன மனுநீதி நவீன டிஜிட்டல் முறைக்கேற்ப மறுவார்ப்பு செய்யப்படலாம். அந்நாள் தற்போது நிலவுகிற போலி ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தைக்கூட ஒழித்துக்கட்டி இந்து ராஷ்டிர தண்டனைச் சட்டத் தொகுப்பை அறிமுகப்படுத்தும் நாளாக இருக்கும்.
போலியான சட்ட மாயைகளிலிருந்து விடுபட்டு, களத்தில் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சியை உருவாக்கத் தவறும் ஒவ்வொரு நொடியும் பாய்ச்சல் வேகத்தில் இந்துராஷ்டிரம் நம்மை நெருங்கிவருகிறது.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க