’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!

காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளமல்ல; இந்திய விடுதலைப் போராட்ட துரோகத்தின் அடையாளம்; இந்து பயங்கரவாதத்தில் அடையாளம்; முஸ்லீம் வெறுப்பின் அடையாளம்; சாதிய – மதவெறியின் அடையாளம் என்பதே உண்மை.

1
ஆர்.எஸ்.எஸ் கொடி ஒரு நாள் தேசியக் கொடியாக மாறும் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கொடி என்றாவது ஒருநாள் தேசியக் கொடியாக மாறும் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவி நிறம் பின்பற்றப்பட்டு வருவதாகவும், கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.ஈஸ்வரப்பா மே 29 அன்று தெரிவித்தார்.
“காவிக்கு மரியாதை என்பது நேற்றோ இன்றோ தொடங்கவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளாக அது மதிக்கப்படுகிறது. காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ் கொடி என்றாவது ஒரு நாள் தேசியக் கொடியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஆர்.எஸ்.எஸ் காவி கொடியை முன் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் படி மூவர்ணக்கொடி தேசியக் கொடி, அதற்கு தகுதியான மரியாதையை நாங்கள் வழங்குகிறோம்” என்று ஈஸ்வரப்பா கூறினார்.
மே 30-ம் தேதி, காவிக்கொடி நாட்டின் தேசியக் கொடியாக மாறக்கூடும் என்று கூறிய ஈஸ்வரப்பா மீது புகார் அளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் அவரை உடனே கைது செய்யக் கோரினார்.
“காவிக்கொடி ஒரு நாள் இந்தியாவின் தேசியக் கொடியாக மாறும் என்று கூறி தேசியக் கொடியை அவமதித்ததற்காக ஈஸ்வரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. உண்மையில், பாஜக தேசியக் கொடியை எதிர்க்கிறது” என்று எம்பி சஞ்சய் சிங் கூறினார்.
படிக்க :
♦ பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
ஜூன் 1 அன்று சஞ்சய் சிங்கின் புகாரை எதிர்த்து பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஷ்வரப்பா, “நான் என்ன ஆடா? எருமையா? அப்படி கைது செய்யலாமா? அப்படி கைது செய்ய முடியாது. தேசியக் கொடியை அவமதித்தால் அவர்கள் தேச விரோதிகள் என்றும் கூறியுள்ளேன். இதை நான் சட்டசபையிலும் கூறியுள்ளேன். தேசியக் கொடியை அவமதிக்கும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம். அவர்கள் (ஆம் ஆத்மி) விளம்பரத்திற்காக இதைச் செய்தார்கள்” என்று கூறினார்.
காவி கொடி கருத்தை ஈஷ்வரப்பா கூறுவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே கடந்த பிப்ரவரி 9-ம் தேதி “எல்லா இடங்களிலும் காவிக் கொடி ஏற்றவோம் செங்கோட்டையில் கூட. இன்றோ நாளையோ இந்தியா இந்து நாடாக மாறும்” என்று கூறியிருந்தார்.
தற்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஈஷ்வரப்பா, காவி கொடி தேசியக் கொடியாக மாறும் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
காவி பாசிஸ்டுகள் பல ஆண்டுகளாக இந்தியாவில் முஸ்லீம், கிருத்துவ, தலித் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், தேவாலையங்கள் மீது தாக்குதல், ராம நவமி கலவரங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், முற்போக்காளர்கள் படுகொலைகள் என எண்ணிலடங்கா குற்றங்களை அரங்கேற்றி வருகிறது காவி பாசிசக் கும்பல். இந்தியாவில் இந்துக்களை தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் ஒடுக்கப்படுவார்கள், கொலை செய்யப்படுவார்கள் என்பதே இவர்களின் இந்து ராஷ்டிரத்தின் கொள்கை.
நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றத்துடிக்கும் காவிக் கும்பலின் கைக்கூலிதான் இந்த ஈஷ்வரப்பா. காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளமல்ல; இந்திய விடுதலைப் போராட்ட துரோகத்தின் அடையாளம்; இந்து பயங்கரவாதத்தில் அடையாளம்; முஸ்லீம் வெறுப்பின் அடையாளம்; சாதிய – மதவெறியின் அடையாளம் என்பதே உண்மை. நாடுமுழுவது செப்பனிடப்பட்டு வரும் இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்த்தெறிய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவதே நம் உடனடிக்கடமை.

காளி

1 மறுமொழி

  1. மந்திரியாக இருந்து தன் துறையின் மூலம் 40% கமிஷன் பெற்று அரசு ஒப்பந்தக்காரர்களை,{கட்சி உறுப்பினர்கள்}கடனாளியாக்கி தற்கொலைக்கி தூண்டியவன்.இது ஆதாரப்பூர்மாக இறந்தவர் மரணவாக்குமுலத்தால் நிரூப்பிக்கப்பட்டது.இந்த பி.ஜே.பி கழிசடையை கட்டுரையின் ஆரம்பத்திலேயே எடுப்பாக அம்பலப்படுத்தாதது ஏன்?
    கவனம்! போகிறப்போக்கில் ஒரு வாக்கியமாக அதைச்சொல்வது தவறு.

Leave a Reply to மதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க