முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.

1

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசிவருபவர் ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங். அவர் இம்முறை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். கடந்த ஜூன் 4 அன்று, தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில், ‘இந்து’ப் பெண்கள் முஸ்லீம் பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்.

“நெற்றியில் திலகம் இட்டிருப்பவர் எனது சகோதரர்; ஒரு இந்து. திலகம் இட்டிருப்பவரிடம் மட்டுமே நான் நட்புக்கொள்வேன். இந்து பெண்கள் புர்கா அணிந்த பெண்களிடம் நட்புக் கொள்ளக்கூடாது. அஃப்தாப்கள் மூலம் மட்டும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தோம். ஆனால், தற்போது ஆயிஷாக்கள் மூலமும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது பெண்களை அஃப்தாப்கள்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஆயிஷாக்கள் இவர்கள்” என்று தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி திரைப்படத்தோடு பொருத்திப் பேசினார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ‘லவ்‌‌ ஜிகாத்’ எனும் முஸ்லீம் வெறுப்பு போலிப் பரப்புரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘இந்து’ப் பெண்களை மதம் மாற்றும் பொருட்டு முஸ்லீம் ஆண்கள் திட்டமிட்டே காதலிப்பதாக இழிவாக சித்தரிக்கும் திரைப்படம் அது. இந்த ஒரே காரணத்திற்காக அத்தத் திரைப்படம் சங்கப் பரிவார் கும்பலின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!


கடந்த ஆகஸ்ட் 2022-இல், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசியதாக ஹைதராபாத் போலீசால் கைது செய்யப்பட்ட ராஜாசிங், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக பா.ஜ.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 75 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்புப் பேச்சுகளையோ அவதூறு பேச்சுகளையோ பேசக்கூடாது என்றும், சமூக வலைதளங்களிலும் அவ்விதம் பதிவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

ஆனால், ராஜாசிங் நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மத வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகிறார். கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில், மகாராஷ்டிராவில் இந்து தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு பேரணிகளில் கலந்து கொண்டு முஸ்லீம்களைத் தாக்க வேண்டும் புறக்கணிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மங்கல்ஹாட் போலீசு மகாராஷ்டிராவில் அவர் பேசிய முஸ்லீம் வெறுப்பு பேச்சு குறித்து பலமுறை காரணம் கேட்கும் குறிப்பாணைகளை (show-cause notice) அனுப்பியுள்ளது. ஆனால், அவை எதுவும் அவருடைய வெறுப்பு பேச்சைத் தடுத்து நிறுத்தவில்லை.

முன்னதாக, ஹைதராபாத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற ராம நவமி ஷோபா யாத்திரையில் (Ram Navami Shoba Yatra) கலந்துகொண்ட அவர் முஸ்லீம்களை தாக்கிப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்து நாட்டை -அகண்ட பாரதத்தை- ஏற்படுத்துவதற்கான அரைகூவலையும் விடுத்தார்.


படிக்க : ‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!


“இன்று இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஏன் இந்தியாவை இந்து நாடு என்று பிரகடனம் செய்யக்கூடாது? இன்று 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன; 150-க்கும் மேற்பட்ட கிறித்துவ நாடுகள் உள்ளன. எனவே, அகண்ட இந்து ராஷ்டிரத்தை எதிர்க்கும் ஆண்மையற்ற தலைவர்களை பார்த்துக் கேட்கிறேன்: ஏன் இந்த ராஷ்டிரத்தை எதிர்க்கிறீர்கள்?” என்று அவர் பேசினார்.

மோடி அரசு குறித்தும் அதானி குறித்தும் கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. கேள்வி கேட்டால் உ.பா சட்டம் பாய்கிறது; எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. ஆனால், காவி பாசிஸ்டுகளுக்கோ கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனவே ‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.


பொம்மி

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க