“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !

ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

0

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு உடனடியாக மருத்துவ ஜாமீன் வழங்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள பல சிவில் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் கூட்டாக கடிதம் மூலம் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை வலியுறுத்தின.

மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பேராசிரியரின் விடுதலைக்கான கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து “கடுமையான கவலையை” வெளிபடுத்துகின்றனர்.​​முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் 90 சதவித உடல் ஊனமுற்றவர் என்றும் இரண்டுமுறை கொரோனா தொற்று சோதனை செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர். தற்போது நாக்பூரில் உள்ள ‘ஆண்டா செல்லில்’ தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை படிப்படியாக இழந்து வருகிறார். தற்போது “அவரது ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாறியுள்ளது” என்று தெரிவித்தனர்.

படிக்க :

♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !

♦ சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

கடந்த ஜூலை 2021-ல் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 84 வயதில் இறந்த தந்தை ஸ்டான் சுவாமியை அவர்கள் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் எல்கர் பரிஷத் – மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் மருத்துவத்திற்காக காத்திருந்தபோது கொரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

“நீங்கள் உடனடியாக பதிலளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, அதனால் நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த கதி பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஏற்படாது. அவரது பரோல் கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ ஜாமீன் விண்ணப்பம் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தலையிட்டு, பேராசிரியர் ஜி.என்.சாய்பாவுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார். உடனடியாக, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரை தனிமை சிறையில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தக்கூடிய அறைக்கு மாற்ற வேண்டும். பின்னர் அவரை மருத்துவ ஜாமீனில் விடுவித்து, சிகிச்சைக்காக பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று கையொப்பமிட்டவர்கள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர்.

Scholars At Risk (USA), PEN America (USA), Freedom Now (USA), The Free Saibaba Coalition-US, Stitching the London Story (The Netherlands), India Solidarity Germany (Germany) போன்ற சர்வதேச குழுக்கள் கையொப்பமிட்டவர்களில் அடங்கும். மேலும், இந்திய நீதித் திட்டம் (ஜெர்மனி), அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (அமெரிக்கா), இந்திய பட்டியலிடப்பட்ட சாதிகள் நலச் சங்கம் (யுகே), இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா), ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி (யுகே), அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள் (கலிபோர்னியா, அமெரிக்கா), பாஸ்டன் தெற்காசிய கூட்டணி (அமெரிக்கா), இந்தியா சிவில் வாட்ச் இன்டர்நேஷனல் (அமெரிக்கா), மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (அமெரிக்கா) ஆகிய சர்வதேசக் குழுக்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

பேராசிரியர் சாய்பாபாவை, கழிவறை-குளியல் அறைகளில் சிசிடிவி கேமராக்களை வைப்பதுபோன்ற பல்வேறு முறைகளில் சிறைக்குள் சித்திரவதை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பேராசிரியரை போன்ற அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் பாசிச கொடுங்கரங்களில் இருந்து மீட்க, நாம் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது அவசியம்.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க