டந்த 2014-ம் ஆண்டு, தில்லைக் கோயில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது உச்சிக்குடுமி மன்றம். அதனையடுத்து 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயில் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அதன் பிறகு தில்லைக் கோயிலில் கேட்பாரற்று கொட்டமடித்து வந்தது தீட்சிதக் கும்பல்.

இதற்கிடையில் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை தடுத்து நிறுத்திய தீட்சிதக் கும்பல், கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை ஒன்றுகூடி தீர்மானம் போட்டு தடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி  மாதம் பட்டியல் சமூகத்தைs சேர்ந்த ஜெயசீலா என்ற பெண், தீட்சிதக் கும்பலை புறந்தள்ளிவிட்டு கனகசபை மீது ஏறி வழிபட சென்றபோது, தீட்சிதக் கும்பல் அவரை சூழ்ந்துக்கொண்டது. ‘பறைச்சி’ என்று சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி, அவரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகள் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். தீட்சிதக் கும்பலை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாகதான் உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. கனசபை மீதேறி வழிபடும் உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது.


படிக்க : தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !


தீட்சிதர்கள் வசம் உள்ள கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக  தொடர்ந்து புகார்கள் வரவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு நடத்த வருவதாக தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதில் அளித்த தீட்சிதக் கும்பல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என வாதிட்டு ஆய்வுக்கு உடன்பட மறுத்தது.

இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959, சட்டப்பிரிவு 23 மற்றும் 28-இன் படி ஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அரசின் வாதம். ஆனால் எந்த சட்டமும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்பது பார்ப்பனர்கள் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட சட்டம். இந்த சட்டத்தை மாற்ற எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என்பது அவாளின் எழுதப்படாத விதி!

தில்லை கோயில் தீட்சிதர்கள் ஆய்வுக்கு உடன்பட மறுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியதால், அதிகாரிகள் ஆய்வு செய்ய செல்வதற்கு முதல் நாளே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தில்லைக் கோயிலுக்குச் சென்றார். ஆனால், அவர் சட்டப்படி நடக்க வேண்டும் என தீட்சிதர்களை எச்சரிக்கை செய்ய செல்லவில்லை, மாறாக, பவ்யமாக கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரசாதம் வாங்கிக் கொண்டு, அடக்க ஒடுக்கமாக தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசிவிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தில்லைக் கோயிலுக்கு ஆய்வுக்காக சென்றனர். தீட்சிதக் கும்பலோ அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது. இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள், தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதைப் போல, கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டனர்.

இதுவே சாதாரண உழைக்கும் மக்கள் பிரிவினர் யாராவது தீட்சிதர்களைப் போல அதிகாரிகளைத் தடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று போலீசு என்ற ஏவல் நாய் அவர்கள்மீது பாய்ந்து குதறியிருக்கும். ‘சட்டத்தின் ஆட்சி’ நிலைநாட்டப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் கோயிலைக் கைப்பற்றுவதல்ல என்றும் ஆய்வு மட்டும் செய்து கொள்கிறோம் என்றும் கெஞ்சினார். அதற்கு ஒத்துழைப்பு தருவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம் என்று பார்ப்பான் காலில் படுத்தேவிட்டார்.

எந்த மனுநீதியை எதிர்த்து ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் போராடிக் கொண்டு இருக்கிறதோ, அந்த மனு நீதியின் படி நடந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார் சேகர்பாபு. ஆனால், இந்தக் கெஞ்சலை எல்லாம் மயிரளவும் மதிக்கவில்லை தீட்சிதக் கும்பல்.

இதனை சேகர்பாபுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையேயுள்ள பிரச்சினை என்றோ; அல்லது, இந்து சமய அறநிலையத்துறைக்கும் பார்ப்பனர்களுக்குமான பிரச்சினை என்றோ சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இது பார்ப்பனியத்திற்கும் நீண்ட நெடிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழக மக்களுக்கும் இடையேயான போராட்டம். இதில் தமிழக மக்களின் உரிமையை பார்ப்பனியத்திடம் அடகு வைக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

தில்லை கோயில் விவகாரத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னால் நடந்த தருமபுர ஆதினப் பல்லக்கு தூக்கும் பிரச்சினை உள்ளிட்ட பார்ப்பனர்களுக்கு எதிரான எல்லா பிரச்சினைகளிலும் தி.மு.க. அரசானது அவர்களிடம் மண்டியிட்டுதான் கிடக்கிறது.

***

தில்லைக் கோயில்மீது பொதுமக்கள் இதற்கு முன்பு கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு துப்பில்லை. அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது தீட்சிதக் கும்பல். ஆனால், தற்போது மீண்டும் புகார் மனுக்களை கொடுக்க சொல்கிறார்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். தீட்சிதக் கும்பலின்மீது சட்டத்தை நிலைநாட்டும் தி.மு.க. அரசின் யோக்கியதை இதுதான். இதுவே சாதாரண மக்கள் என்றால் தி.மு.க. அரசு சட்டத்தை எப்படி நிலைநாட்டிருக்கும்?

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஐந்து தலைமுறைகளாக பூ கட்டி வியாபாரம் செய்யும் பெண்கள் மீண்டும் தங்களுக்கு பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறும், அங்கே நின்று கொண்டே கூட தாங்கள் வியாபாரம் செய்து கொள்கிறோம் என்றும் கோரிக்கை வைத்தபோது, “நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கிற ஆள் நான் கிடையாது. இப்போது இப்படி சொல்வீர்கள், பிறகு பெட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்து விடுவீர்கள்” என்று அவர்களிடம் திமிர்த்தனமாக பேசினார் சேகர்பாபு.

உழைக்கும் மக்கள் சிறிய பெட்டி வைத்து வியாபாரம் செய்வதைக்கூட ஆக்கிரமிப்பு என்று சீறும் சேகர்பாபு, பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு சொந்தமான கோயிலையும், கோயில் சொத்துக்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தீட்சிதக் பார்ப்பனக் கும்பலிடம் கெஞ்சுகிறார்.


படிக்க : பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !


ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் வாழ்ந்த வீடுகளை பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளியது தி.மு.க. அரசு. அதனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினோம் என்று நியாயப்படுத்தியது. இப்படி வீடுகளை இடிப்பதை தமிழக அரசானது சட்டத்தை நிலைநாட்டுகிறது என்று யாராவது கருதினால், நம்முடைய கேள்வி இதுதான். அதே சட்டம் தில்லைக் கோயிலின் உள்ளே பாய மறுப்பதேன்?

தில்லை கோயிலுக்குள் நுழைந்து முறைகேடுகள் ஏதாவது நடந்துள்ளதா என்று ஆய்வு நடத்தக்கூட வக்கற்று, தீட்சிதக் கும்பலுக்கு அடிப்பணிந்துப் போயுள்ள தி.மு.க.வைதான், பா.ஜ.க.வை வீழ்த்தும் ஆயுதம் என தி.மு.க. அடிவருடிகள் உயர்த்திப் பிடிக்கின்றனர். முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, அதையும் மீறிவிட்டார்கள் நம்முடைய தி.மு.க. அடிவருடிகள்.

தி.மு.க. என்பது தி.க. அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்கிறார் மதிமாறன். அனைத்து மதநம்பிக்கையுள்ள மக்களையும் அனுசரித்துப் போவது தான் தி.மு.க. என்கிறார். யாருடன் அனுசரித்துப் போவது.

இந்த அரசு ‘திராவிட ஆன்மிக அரசு’ என்கிறார் சேகர்பாபு. திராவிடத்தோடு ஆன்மிகமாம். அரவணைப்பு அதிகமாகிவிட்டது போல. சந்தர்ப்பவாதிகளிடம் இதைத் தவிர நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தீட்சிதப் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் சமரசமற்ற களப்போராட்டத்தால் மட்டுமே முடியும்.


சங்கர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க