விஞ்ஞான அறிவியலை குடுமிக்குள் சொருகிக்கொண்டு,
புராண குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

புதிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் அமல்படுத்துவதற்காக அம்மாநில அரசு அமைத்த குழு கொடுத்த அறிக்கையில், “பித்தாகரஸ் தோற்றம் நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது எல்லாம் போலி செய்திகள். இவை குறித்து வேத காலத்து கணிதத்தில் உள்ளது. கூகுளில் இவற்றை பற்றிய தரவுகள் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பிறகு, அங்கு நாட்டிலேயே முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக அங்குள்ள கல்வியிலும் பாட புத்தகங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமுக அறிவியல் பாடபுத்தகங்களிலும், 1 முதல் 10-ம் வரையிலான கன்னட மொழி பாடப் புத்தகங்களிலும் திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தத்தில் அம்பேத்கர், பகத்சிங், திப்புசுல்தான்,  பசவண்ணா, பெரியார், நாராயண குரு போன்ற புரட்சியாளர்கள், காலனியாதிக்க எதிர்ப்பு வீரர்கள், சீர்திருத்தவாதிகளின் பாடங்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் எட்கேவாரின் உரை 10-ம் வகுப்பு கன்னட பாடப் புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றது. பலர் தாங்கள் வகித்த முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


படிக்க : புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !


இந்நிலையில் தேசிய கல்வி கொள்கையை அமைப்பதற்காக கர்நாடக அரசு அமைத்த குழுவின் அறிக்கையில், புராண குப்பைகளை பாடப்புத்தகத்தில் சேர்க்கும்படி முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்ததும், பித்தாகரஸ் தியரமும் போலி செய்திகள் என்றும் இவையெல்லாம் வேத காலத்து கணிதத்திலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாவது மொழியாக சமஸ்கிரதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக பாடப்புத்தகம் மட்டுமல்ல, பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலை. மத்தியப்பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி பொறியியல் படிப்புகளில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடந்தாண்டு மத்தியப்பிரதேசத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் யாதவ் பேசுகையில், பொறியியல் மாணவர்கள் இனி ராமர் பாலம் பற்றி படிப்பார்கள் என்றார். இது மட்டுமின்றி ராமர் பாலம் ராமன் கட்டியது என்று நாசா நிரூபித்துள்ளதாகவும் தன் வாய்க்கு வந்த கதையை எல்லாம் கட்டிவிட்டார். இந்த நிலை உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இவ்வாறு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர்களின் பாடங்களை மாற்றம் செய்வது மட்டுமின்றி, கிடைக்கும் மேடைகள் தோறும் தனது முட்டாள்தனமான கதைகளை எல்லாம் ஜோடிக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்நாட்டின் ‘பெருமைக்குரிய’ பிரதமரான மோடி இந்து புராணங்களைப் பற்றி குறிப்பிடுகையில், “பிளாஸ்டிக் சர்ஜரியின் முதல் உதாரணம் விநாயகருக்கு யானை தலையை வைத்தது” என்று தான் நம்புவதாகக் கூறியிருந்தார். இதே கருத்தை அவர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் மருத்துவ நிபுணர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோது மீண்டும் குறிப்பிட்டார்.

மேலும் 2006-ம் ஆண்டு ஆயுஸ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் யோகா பயிற்சியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களை குணப்படுத்த முடியும் என்று கூறினார். பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சம்ஸ்தானா [s-vyasa] இன்ஸ்டிடியூட், புற்றுநோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் யோகா நுட்பத்தை கண்டறிந்துள்ளது என்று நாயக் கூறினார்.

இவ்வளவு ஏன் தற்போது நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறியவில்லை என்று கார்நாடகாவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைத்த குழு சொல்வதற்கு முன்பு, இவர்களின் மூதாதையர்களான ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிவிட்டார்கள். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானின் கல்வித்துறை அமைச்சர் தேவ்னணி புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது இரண்டாம் பிரம்மகுப்தா தான் என்றும் நியூட்டன் இல்லை என்றும்  கூறினார்.


படிக்க : குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !


இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றின் போது அவர்கள் மாட்டு கோமியத்தையும் மாட்டு சானத்தையும் சாப்பிட்டால் கொரோனா சரியாகிவிடும் என்று கூறினார்கள். இன்னும் விட்டால் சலி, இருமல், தலைவலி போன்ற பிரச்சினைக்கு கூட இதையெல்லாம் சாப்பிட சொல்லுவார்கள்.

காலம் நெடுக மூடநம்பிக்கை கட்டுகதைகளை வைத்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த பார்ப்பன கும்பல், தற்போது தனது இந்துராஷ்டிர கனவை நிறுவி கொள்வதற்காக அதே ஆயுதத்தை கையாண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மாணவர்களின் பாடபுத்தங்களை தொடர்ச்சியாக மாற்றி வருவதில் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பெரும் நோக்கம் உள்ளது. தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

இதன்மூலம் தனக்கான அடியாள் கூட்டத்தையும், தாங்கள் சொல்வதையே வேதவாக்கு என நம்பும் அடிமை கூட்டத்தையும் உருவாக்குவதற்காக முனைப்பாக வேலை செய்து வருகிறது பாசிஸ்ட் கூட்டம்.

இதுபோன்ற குப்பைகளை மக்கள் மீது திணித்து மக்களை யோசிக்கவிடாமல் அவர்களை ஆர்.எஸ்.எஸ் அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இதற்கு எதிராக புரட்சிகர சக்திகள் தெருவில் இறங்கி மக்களிடம் புரட்சிகர பிரச்சாரம்  செய்வதே உடனடி தீர்வாகவும் ஒரே தீர்வகாவும் இருக்க முடியும்.


ஆதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க