கவுரவ ஊதியம் கோரி ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், டெல்லியில் உள்ள 884 அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. பல ஒற்றைத் தாய்மார்களைக் கொண்ட தொழிலாளர்கள் 39 நாள் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மார்ச் 14 அன்று பணிநீக்க செய்யப்பட்டனர்.
கொரோனா முழு ஊரடங்கு காலத்தின்போது இடைவிடாமல் பொதுமக்களுக்கு சேவை செய்த போதிலும், ஜனவரி முதல் தங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றும் கடன் வாங்கி தான் தங்கள் குடும்பங்களை நடத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் 16 அன்று பணிநீக்கம் நோட்டீஸைப் பெற்ற அனிதா ஒரு தாய். தன் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வேறு வேலை தேடி ஓடி வருகிறார்.
“உறவினர்களிடம் கடன் வாங்கி, பகுதி நேரமாக பல்வேறு வீடுகளின் வீட்டுவேலைகள் செய்து, என் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை எப்படியாவது கட்டி சமாளித்து வருகிறேன். 2007-ல் அங்கன்வாடி பணியில் சேர்ந்தபோது எனது சம்பளம் ரூ.750. கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் அதிகமாக வேலை செய்தேன், வீடு வீடாக ரேஷன் வழங்கினேன், தடுப்பூசி பிரச்சாரம் செய்தேன், ஆனால் 2022 ஜனவரியில் இருந்து எங்களது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் புகார் செய்ய முயற்சித்தோம். ஆனால் எங்கள் மேற்பார்வையாளர் எங்களை பணிநீக்கம் செய்வதாக மிரட்டினார்” என்று அனிதா கூறினார்.
படிக்க : அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !
டெல்லி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களின் சம்பளம் கூட ஜனவரி முதல் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அனிதாவைப் போலவே சவிதாவும் ஒரு ஒற்றைத் தாயாவார். அதே நாளில் தனது பணிநீக்க அறிவிப்பைப் பெற்றார். “நான் ஒரு ஒற்றைத் தாய்; குடும்பத்தின் ஒரே சம்பாதிப்பவன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவள் பட்டப்படிப்பு படிக்கிறாள். டியூஷன் வகுப்புகள் எடுத்து எனக்கு உதவ முயன்று வருகிறார். நான் வாடகை வீட்டில் வசித்தேன். ஆனால் எனது பணிநீக்கத்திற்குப் பிறகு மலிவான இடத்திற்கு மாற வேண்டியிருந்தது. நான் என் சகோதரனிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறேன். நிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பலர் தங்கள் சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் குறுஞ்செய்திகளைப் பெறுகிறார்கள், ஆனால் அது அவர்களின் வங்கிக் கணக்குகளில் பிரதிபலிக்கவில்லை,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, அவர் மாதம் ரூ.9,741 சம்பாதித்துள்ளார்.
“அங்கன்வாடி பணியாளர்கள் குறுஞ்செய்தி மூலம் ஏமாற்றப்படுகிறார்கள், அதேசமயம், எங்கள் வங்கிக் கணக்குகள் காலியாக உள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளர்களைக் கொண்ட குழு மகளிர் மற்றும் குழந்தைகள் துறைக்குச் செல்ல முயன்றது, ஆனால் செயலாளர் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். எங்கள் புகார்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? எங்களில் பலர் இதை உறுதிப்படுத்த வங்கிக் கிளைகளுக்குச் சென்றோம், ஆனால் வங்கி மேலாளர்கள் கூட எங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று கூறினார்” என்று அங்கன்வாடி பணியாளர் பூனம் கூறினார்.
பிரதிநிதிகள் குழு, லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் ஜூலை 16-ம் தேதி அன்று இது தொடர்பான ஒரு குறிப்பாணையை சமர்பித்தனர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், விரைவில் இந்த விஷயத்தில் தலையிடுவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோர் ஜூலை 21 அன்று காஷ்மீர் கேட் நகரில் உள்ள நகர அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகத்திற்கு வெளியே கூடி, டெல்லி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக 884 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிநீக்கம் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், 11,942 பேருக்கு டெல்லி அரசால் ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் DSAWHU கூறியுள்ளது.
படிக்க : அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் மோசமான பணி நிலைமைகள் மற்றும் நிலுவைத் தொகையை வழங்காது, அரசாங்கத்தின் அக்கறையின்மை ஆகியவற்றை எதிர்த்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் மாதாந்திர கவுரவ ஊதியம் தொழிலாளர்களுக்கு ரூ.9,678-லிருந்து ரூ.25,000 ஆகவும், உதவியாளர்களுக்கு ரூ.4,839-ல் இருந்து ரூ.20,000 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு. ஏழைமையில் வாடும் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஆதரவுகரம் நீட்டவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சந்துரு