2022 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலின பாகுபாட்டுக்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் புத்தகங்கள் மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு போன்றவற்றை பற்றியதாக இருப்பதாக பலரும் பெருமைபட கூறி வருகின்றனர். “எழுத்து என்பது ஓர் அரசியல், சமூக சமத்துவமின்மை பற்றிய ஒரு விழிப்புணர்வை அளிக்கிறது” என்று ஆனி எர்னாக்ஸ் கூறுகிறார்.

ஆனி எர்னாக்ஸ்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான குறிப்புகளை படிக்கும் போதோ அல்லது ஆனி எர்னாக்ஸ் எழுத்து பற்றி கூறுவதை கேட்கும் போதோ பலருக்கும் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருக்கப்போதில்லை. ஆனால் சமூக சமத்துவமின்மைக்கு அடிப்படை காரணங்களான சுரண்டல், செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுதல், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி, ஏகாதிபத்தியங்களுக்கான பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி ஆனி எழுதுவாரா அல்லது அவ்வாறு எழுதினால் நோபல் பரிசு கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது என்பதற்கான பதிலாகவே பொருளாதரத்துக்கான நோபல் பரிசு யாருக்கு, எதற்கு வழங்கினார்கள் என்பதில் இருக்கிறது.

***

அமெரிக்காவைச் சேர்ந்த பென்.எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக  இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!


இவர்களின் ஆராய்ச்சி என்பது நவீன வங்கிகள், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் தொடர்பானதாகும். 1980-களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோரால் இந்த ஆராய்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

2020-இல் தொற்றுநோய் தாக்கியபோது, உலகளாவிய நிதி நெருக்கடியைத் தவிர்க்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த பிந்தைய நெருக்கடிகள் சமூகத்திற்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் புதிய மந்தநிலைகளாக உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ததில் இவர்களின் நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்தன என்கின்றன ஊடகங்கள். அதென்ன நுண்ணறிவு?

பென்.எஸ்.பெர்னான்கே அளித்துள்ள செய்திக் குறிப்பில், “இங்கே ஒரு முரண்பாடு உள்ளது எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால், சேமிப்பாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அணுக விரும்புகிறார்கள். இது ஒரு அடிப்படை சிக்கலை முன்வைக்கிறது, இது வங்கிகளையும் பணத்தையும் நிலையற்றதாக ஆக்குகிறது மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சிக்கு ஆளாகிறது” என்கிறார்.

மக்கள் தங்களுடைய சேமிப்பை திடீரென எடுப்பது என்பது ஏன் நடைபெறுகின்றது.  கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பல லட்சம் கோடிகளை வாரியிறைப்பதால் வங்கிகள் சரிகின்றன. அதனால் மக்கள் பீதியடைந்து தங்களின் முதலீடுகளை திரும்பப்பெறுகின்றனர். ஆனால் இந்த எளிய உண்மையை மறுத்து மக்கள் பணம் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற மக்களின் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதல்லவா இவர்களின் நுண்ணறிவு.

வங்கிகளின் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணமான வங்கிகளை சந்தைப்படுத்துவதை எதிர்க்காமல், வங்கிகள் சந்தைப்படுத்துவதை ஒழுங்கமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

டயமண்ட் மற்றும் பிலிப் இருவரும் இணைந்து ஏன் வங்கிகள் வெளியேறுகின்றன? வரவிருக்கும் சரிவு பற்றிய வதந்திகளின் பாதிப்பு, இந்தப் பாதிப்பை சமூகம் எப்படி குறைக்க முடியும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்களாம். இவர்களின் ஆராய்ச்சிகள் நவீன வங்கி ஒழுங்குமுறையின் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறதாம்.

வங்கிகள் மக்கள் பணத்தை சூறையாடி கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றுவதும் வங்கி முதலாளிகளைக் காப்பாற்ற அரசு பெயில் அவுட் என்று அரசின் கஜானாவை காலி செய்வதும் வதந்தியாம். இந்த வதந்தியை நம்பக் கூடாது என்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற ஆய்வறிஞர்கள். ஆக 1% பேருக்காக 99% பேர் வறுமையில் உழல்வதும் கூட வதந்தியா?

***

அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதுமான பொருளாதார நெருக்கடிகடிக்கு மூலக்காரணமே சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய கொள்கைகளால் மூன்றாம் உலக நாடுகளும் ஏன் வளர்ந்த நாடுகளும் கூட திக்கித் திணறி மூச்சுவிட முடியாமல் இன்றைக்கோ நாளைக்கோ என்று சாகும் தருவாயில் இருக்கின்றன.


படிக்க : கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ


முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளேயே முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகள் மேலும் மக்களை புதைக்குழிக்குள்ளேயே தள்ளும். எத்தனை ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை சில ஆண்டுகளில் இன்னோர் பொருளாதார புதை குழிக்குள்ளே தள்ளும். ஏனெனில் முதலாளித்துவ – ஏகாதிபத்திய பொருளாதாரம் இயல்பிலேயே ஒருபுறம் முதலாளிகளுக்கு செல்வத்தையும் மறுபுறம் உழைக்கும் வறுமையையும் குவிக்கும்.

இப்படி ஒருபுறம் மென்மேலும் குவிக்கப்படும் செல்வமும் இன்னொருபுறம் தாங்கவொண்ணா வறுமையும் சுரண்டலும்தான் சமத்துவமின்மைக்கு அடிப்படை.. பெரும்பான்மை மக்களின் உழைப்பை உறிஞ்சுவதால் அல்லவா பணக்கார அட்டைகள் கொழுத்துப்போயிருக்கின்றன. இதை மாற்றியமைக்க வேண்டுமென்றால் சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை அல்லவா ஒழித்துக்கட்ட வேண்டும்.

மொழி, பாலினம் மற்றும் தரம் பிரிப்பு, சமத்துவமின்மை, பாகுபாடு போன்றவற்றை பற்றி எழுதும் ஆனி எர்னாக்ஸ்க்கு ஒரு நோபல் பரிசு, சமத்துவமில்லா உலகை தக்க வைக்க ஆய்வு செய்த அறிஞர்களுக்கும் நோபல் பரிசு. நோபல் பரிசுக்குழுவினரின் சமத்துவம்’ பல் இளிக்கிறது.


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க