தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 02.11.2022 மற்றும் 03.11.2022 அன்று ராஜராஜ சோழனின் 1037-வது பிறந்த நாளை சதய விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை அரசு சார்பில் நடத்தப்பட்டது. விழாவை துவக்கி வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் கலந்து கொண்டார் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் “ராஜராஜ சோழன்” குறித்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார். மேலும் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு ஆன்மீக மற்றும் பண்பாட்டு எழுச்சி பெற்றதாக இருந்தது’ என்று 23-ஆம் புலிக்கேசி படத்தில் மன்னனை ஏற்றி போற்றி பாடி தங்க நாணயம் பெற்றுச்செல்லும் அடிவருடி கூட்டத்தின் மரபை உயர்த்திப் பிடித்துள்ளனர்.

இந்த விழாவின்போது அங்கிருந்த சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட  பொருட்களால் அபிஷேகம் செய்பட்டது. நவம்பர் 2 அன்று ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழாக்கள் போன்ற பல கூத்துகள் நடத்தப்பட்டது. நவம்பர் 3 அன்று ‘சோழர்’ கட்டிய பெரிய கோவிலுக்கு அருகே உள்ள அவனது சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு சாதிய அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கபட்டது.

மேலும் இரவு நேரத்தில் சோழனின் சிலைக்கும் மற்றும் உலோகமாதேவி என்ற சிலைக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடத்தினார்கள். இதுபோன்று சிறப்பாய் கொண்டாடுகின்ற சோழரை பற்றி. நாம் படிக்கும் பாட புத்தகங்களில் சோழரின் ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்று சொல்கிறார்கள். சோழனின் ஆட்சி எப்படிபட்டது என்று நாம் வரலாற்றை பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.


படிக்க : இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?


தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கைப்பற்றி வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தயே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்தது. அதனடிபடையில் கட்டியதுதான் பெரிய கோவில்.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டுவந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்த காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரத்து பன்னிரெண்டு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன், போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோவிலை கட்டினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைவென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற்கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த போன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ  வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக [நிவந்தம்] விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்து பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான்.

பெரிய கோவிலின் பொருளாதாரம்:

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியல் [பண்டாரம்] இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைக்கும் பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கொவில் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக [பணமாகவோ பொருளாகவோ] வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன் 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பு மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்களுக்கு ‘சாவா மூவாப்பேராடுகள் எனும் பெயரில் ஆடு, மாடு எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகல்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழைக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்ததுபோக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ [ஊதியம் இல்லா வேலையாட்கள்]களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


படிக்க : இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?


வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால் பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

வரிகளின் மூலம் மக்களை சூரையாடிய பார்ப்பனர்களும் ராஜராஜ சோழனும்!

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் “பாடி காவல் வரியை செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி [இறை]செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும் தட்டாரப்பாட்டத்தையும், தச்சர்,’தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து  புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டது.

விவசாயிகள், விளைச்சலின் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வெண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக [இறை]க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கோண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ல ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடம்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர். இதேபோல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில ஊரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ [’குடி நீக்கியா’], குத்தகையாளராக மாற்றியோ [’குடி நீக்காமலோ’] அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன. மேலும் சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி விதிப்பு இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தங்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பரிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

சாதி தீண்டாமையையும் தேவதாசி முறையையும் உருவக்கிய ராஜராஜன்:

ராஜராஜன், 400-க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு, தேவரடியார்களாக’ மற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகலென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப்பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929-இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களின் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.


படிக்க : பொன்னியின் செல்வன்: தமிழர்களின் அடையாளமா? அடிமைத்தனமா?


தழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழுவதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

ராஜராஜனின் பொற்காலம்:

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சியை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்துவந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீர்ப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றைதான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுபாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்திய சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே, குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய மங்கலங்களின் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு அப்பட்டமான பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்பட்டு. பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்கு தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளாரக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோல முறையின் யோக்கிதை. அதுமட்டுமல்ல, நிலவுடமையாளர்களான பிரமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக [பண்டாரி] இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை [துலாபாரம்] தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தங்கை குந்தவையும் தமது பிறவி இழிவு நீங்கி சொர்க்கம் செல்வதற்காக தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வைற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்களுக்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது”  என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்டான்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும் அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் [காராட்சி] கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் [மீயாட்சி] வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’ மீயாட்சிப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காத்தால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக்கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

இதுபோன்று மக்கள் விரோத ஒரு கேவலமான ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் பிறந்த நாளைதான் வருடம் வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தை தமிழகமே கொண்டாடியது இதுதான் தமிழர்களின் வரலாறு என்று. இப்படத்தை இந்த பாசிச சூழலின் போது வெளியிடுவதற்க்கு வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.


படிக்க : சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !


1950-காலகட்டத்தில் இருந்து 1954 காலகட்டத்தில் தெலுங்கான விவசாயிகள் போராட்டம் பெரியார் பார்ப்பனர் எதிர்ப்பு போரட்டம், நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி என வர்க்கப் போராட்டம் தீவிரமாக நடந்த காலகட்டமாகும். இந்த எழுச்சிகரமான நிலைமை மழுங்கடிப்பதற்காக தான் அக்காலகட்டத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் நாவலை அன்றைக்கு கல்கி எழுதினார்.

இன்றைய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிச சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான இந்திய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் என அனைத்து தரப்பட்டு வர்க்கங்களும் இந்த பாசிச பேய்யாட்சியை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த நேரத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி 1950-முதல் 1954 கால கட்டத்தில் கல்கி மக்களுக்கு துரோகம் செய்ததுபோல் இன்றைக்கு அம்பானியின் ஆசிப்பெற்ற மணிரத்தினமும் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து மக்களுக்கு துரோகம் செய்து இருகிறார். மேலும் மக்களின் சிந்தையை திசைத்திருப்பி இருக்கிறார். அதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே நம் சொல்லலாம்.

ஏனென்றால் இன்றைக்கு விலைவாசி உயர்வினால் மக்கள் ஒரு வேலை சாப்பாட்டை நிறுத்தி கொண்டு வருகிறார்கள், இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் போராடுகிறார்கள், ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், செவிலியர்கள் போராடி வருகிறர்கள், தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள், இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் வாழவழியின்றி போரடிவரும் நிலமையில் இதையெல்லாம் மறக்க செய்து மன்னர்களின் பெருமைகள்தான் நம்முடைய பெருமை என்று பேச வைத்து அதை கொண்டாடவும் வைத்துள்ளார்.

ஆனால், நம்மை அடிமைகளாக நடத்திய மன்னர்களையும் பார்ப்பனர்களையும் கொண்டாடுவதுதான் நம் பெருமையா? இல்லை, பார்ப்பன மரபை எதிர்ப்பதுதான் நம்முடைய பெருமை.

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும். தமிழகத்தில் பெரியார் மட்டுமல்ல சித்தர்கள், வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை கொண்டவர்கள். அம்மரபை உயர்த்தி பிடித்து பார்ப்பனியத்தின் கொடுமை கனவான இந்திராஷ்டத்தை முறியடிக்க ஆயுதங்களாக எழுதுவோம்.

செழியன்
தரவுகள்: 2010 புதிய கலாச்சாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க