அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!

அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.

டிசம்பர் 6, அம்பேத்கரின் சிலைக்கு மாலையிட வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை விரட்டியடித்ததன் மூலம் முன்னுதாரணமிக்க போராட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள். அதேநாளில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாலையிட வந்த அர்ஜுன் சம்பதுக்கு பலநூறு பேர் திரண்டு காட்டிய எதிர்ப்பு என்பது, அண்மைக்கால தமிழக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியதும், முன்னுதாரணமிக்க நடவடிக்கையுமாகும்.

0-0-0

டிசம்பர் 6, அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில், அனைத்து வழக்குரைஞர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவி பாசிச இருளை கிழிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிவுற்ற அரை மணிநேரத்தில், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கும்பல், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட வந்தது. அப்போது அங்கிருந்த வி.சி.க. சார்பு மற்றும் ஜனநாயக உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அம்பேத்கருக்கு மாலையிட முயன்ற அர்ஜுன் சம்பத்தை மாலையணிவிக்கவிடாமல் துரத்தியடித்தனர்.

இந்துமதவெறி பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, அம்பேத்கர் நினைவுநாளுக்கு கும்பகோணத்தில் ஒட்டிய சுவரொட்டியில், அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக, அவரது நெற்றியில் பட்டையும், காவி உடையும் அணிவித்து இழிவுபடுத்தியது. இந்து மக்கள் கட்சியின் இத்தகைய காலித்தனமான செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


இதற்காக, அர்ஜுன் சம்பத்தின் மீது போடப்பட்ட வழக்குகளின் விளைவாக, “அம்பேத்கர் சிலைக்கு பட்டை, காவித்துண்டு ஆகியவற்றை போடமாட்டேன்” என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்து இக்காவி கும்பல்.

0-0-0

கும்பகோணத்தில் காவி உடை அணிவிக்கப்பட்ட அம்பேத்கரின் சுவரொட்டி; உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் விரட்டியடிக்கப்பட்ட இந்நிகழ்வு; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை மீறி பா.ஜ.க.யினர் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டது போன்ற இந்துமதவெறி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு அர்ஜுன் சம்பத் கும்பல் வரப்போகிறது என்ற செய்தி ஜனநாயக சக்திகள் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்ற ஜனநாயக அமைப்பினர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மிகக்குறுகிய நேரத்தில் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், அர்ஜுன் சம்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு குவிந்திருந்த மக்கள், அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லும் போது இந்துமத அடையாளங்களுடன் செல்லக் கூடாது எனவும் மாலை 5.45-6.00 மணிக்குள் சென்று மாலை அணிவிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையை மீறி, இந்து மத அடையாளங்களுடன் மாலை 6 மணிக்குப் பின்னர்தான் மணிமண்டபத்திற்கு இந்த கும்பல் வந்தது.

அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போடப்பட்ட போராட்ட முழக்கங்கள் விண்ணைக் கிழித்தன. இதனைத் தொடர்ந்து, மக்களைத் தாக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டு வந்திருந்த போலீசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றியது.

பல போலீசார் தமது பெயர் பட்டைகளை எடுத்து வைத்துக் கொண்டு போராடியவர்களைத் தாக்கினர். “பறையனே” என்று சாதி சொல்லி இழிவுப்படுத்தியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிவது, அவர்களின் பிறப்புறுப்பை நசுக்கி உதைப்பது போன்ற கேடுகெட்ட வன்முறைச் செயலில் ஈடுபட்டது போலீசு. வி.சி.க.வின் மாநில நிர்வாகிகளான வன்னியரசு, ரஜினிகாந்த், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மோகன், த.பெ.தி.க.வின் மாவட்டச் செயலாளர் குமரன் உள்ளிட்ட பலரை போலீசு கடுமையாகத்தாக்கி கைது செய்தது. பலத்த தடியடி நடத்தியதை அடுத்து பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகே, போலீசின் பயங்கர பாதுகாப்புடன் அர்ஜுன் சம்பத் கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளது.

இதே காவி பாசிச கும்பல் சென்ற ஆண்டுகூட அம்பேத்கர் மணிமண்டப்பத்திற்கு வந்து மாலை அணிவித்துள்ளது. அப்போது எதிர்ப்புக் காட்டப்பட்டிருந்தாலும் இப்போது காட்டப்பட்ட எதிர்ப்பு என்பது முன்னுதாரணமிக்கதாகும். குறிப்பாக, அம்பேத்கரை காவியாக்கக்காட்டி தனது இந்துப் பரிவாரத்தில் அவரையும் ஒருவராகத் திரிக்கும் அயோக்கியத்தனத்தை செய்துவிட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதாக நாடகமாடுவதை தமிழகம் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

இந்த அர்ஜுன் சம்பத் கும்பல் ஒருபக்கம், அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து சுவரொட்டி ஒட்டிவிட்டுது, மற்றொருபக்கம், உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த  அனுமதியும் கோரி நாடகமாடுவது தெரிந்தாலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை என்று நீதிமன்றம் அனுமதி அளிப்பது, போலீசு பாதுகாப்புக் கொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்றவை எல்லாம் தமிழக போலீசும் காவிமயாகியிருப்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

0-0-0

ஆயிரத்திற்கும் அதிகமான போலீசு குவிக்கப்பட்டிருந்தும், போராடியவர்களை போலீசு தாக்கி கைது செய்த பின்னரும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை போலீசால் தடுக்க இயலவில்லை. இரவு பயங்கர போலீசு பாதுகாப்புடன் மணிமண்டபத்திற்கு வந்திருந்த அர்ஜுன் சம்பத் மீது செருப்பை வீசி எதிர்ப்பைக் காட்டினர் தமிழக மக்கள்.

அர்ஜுன் சம்பத் உண்மையில் ஒரு கோழை. அதிகார வர்க்கத்தின் ஆதரவு, போலீசு புடைசூழ பாதுகாப்புடன்தான் இந்த கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசை எதிர்த்து ஒற்றை பெண்ணாக ஒரு கல்லூரி மாணவி எதிர்ப்புக் காட்டியதும், கர்நாடாகாவில் ஹுஜாப் அணிவிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து காலிகள் சூழ்ந்து கொண்டு எதிர்ப்புக் காட்டிய போது அதனைக் கண்டு அஞ்சாமல், அல்லாஹு அக்பர் என்று மாணவி ஒருவர் தனித்து நின்று முழக்கமிட்டதும் வீரத்தின் அடையாளங்கள்!

அதைப் போன்று அம்பேத்கரை இழிவுப்படுத்திய அர்ஜுன் சம்பத்திற்கு காட்டிய இந்த எதிர்ப்பானது, தமிழகம் பார்ப்பனிய எதிர்ப்பை மரபுரிமையாகக் கொண்டிருப்பதை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.


படிக்க : திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!


அன்று, ஈழ மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்த சுப்ரமணிய சாமியை முட்டையால் அடித்து விரட்டிய தமிழக வழக்குரைஞர்கள் இன்று அர்ஜுன் சம்பத்தை ஓட ஒட விரட்டியடித்திருக்கின்றனர். வழக்கறிஞர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் முன்மாதிரியான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்பொழுது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்து முன்மாதிரியாக செயல்பட்டுள்ளனர்.

0-0-0

கடந்த செப்டம்ர் 5-ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் அன்று, அவரது மணிமண்டபத்துக்கு வந்த பா.ஜ.க.வினர் வ.உ.சி.யின் சிலைக்கு காவித்துண்டு அணிவித்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்டவீரராக இருந்த வ.உ.சி. பார்ப்பனிய எதிர்ப்பாளராகவும் செயல்பட்டவர். இதைப்போலவே, மருது மாண்டியர், வேலுநாச்சியார், ஒண்டி வீரன், இமானுவேல் சேகரன், திருப்பூர் குமரன், சிங்காரவேலர் என பல தலைவர்கள், போராளிகள் மீதும் காவியைப்பூசியும், அவர்களது வரலாற்றைத் திரித்தும் வருகிறது காவி பாசிச கும்பல். அம்பேத்கரை காவிமயமாக்கும் முயற்சிக்கு எதிர்வினையாற்றிய நாம் மேற்சொன்ன தலைவர்களை காவிமயமாக்கும் முயற்சியையும் முறியடித்தாக வேண்டும்.

அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க