லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!

தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.

0

த்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் லக்னோ நகரின் முனிசிபல் கார்ப்பரேஷனில் (எல்.எம்.சி) வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான தெருவிளக்கு பழுது பார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல மாதங்களாக சம்பளம் வழங்காத நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக தெருவிளக்கு பழுது பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர கவுரவ ஊதியமும், மாதாந்திர ஊதியமும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் கோபமடைந்த ஊழியர்கள் நகராட்சி அலுவலகம் மண்டலம் 6-ன் பிரதான நுழைவாயிலில் டிசம்பர் 8-ஆம் தேதி ஒன்றுதிரண்டு, எல்.எம்.சி நிறுவாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தெருவிளக்கு ஊழியர்கள், “மாநிலத் தலைநகரில் மின்விளக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி மற்றும் ECL (Eastern Coalfields Limited) நிறுவனத்திடம் பல மாதங்களாக சம்பளம் கேட்டு வருகிறோம். ஆனால், அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அமைதிவழியில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறுகின்றனர்.

படிக்க : அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

லக்னோ முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையத்திடம், தொழிலாளர்களின் அவலநிலை குறித்து கவனம் செலுத்தி, அவர்களின் சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு கேட்டும் கடிதம் ஒன்றை போராடும் தொழிலாளர்கள் கொடுத்துள்ளார்கள்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மண்டலம் 6-ல் நியமிக்கப்பட்ட ஒரு உதவியாளர் சஞ்சய் சாஹு, “அவுட்சோர்சிங் ஊழியர்களாகிய நாங்கள் ஏற்கனவே குறைந்த சம்பளத்தால் பாதிக்கப்படுகிறோம். அச்சம்பளத்தில் ஒரு பகுதி எங்களை அனுப்பும் ஏஜென்சிகளுக்கு கமிஷனாக சென்று விடுகிறது. இதனால் ஒரு தனிப்பட்ட தொழிலாளி அதிக அளவு வேலை அழுத்தத்திற்கு ஆளாகிறார். ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு விடுமுறை கிடையாது. யாராவது லீவு கேட்டால் மறுநாள் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிடுவார்கள். எங்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, மேலும் 21 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் எந்தத் தொகையும் மாற்றப்படவில்லை” என்று சாஹு கூறினார்.

“பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி என எந்தவொரு வி.வி.ஐ.பி.யும் லக்னோ நகருக்குள் வரும்போதும், அவர்கள் நகரத்தைவிட்டு வெளியேறும் வரை 24 மணிநேரமும் நாங்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். ஆனால் இப்படி செய்யும் கூடுதல் வேலைக்கு எங்களுக்கு ஒருபோதும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கூடுதல் வேலைக்காக சம்பளம் வழங்கக் கோரி இன்றளவும் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்று மண்டலம் 2 இன் மற்றொரு தொழிலாளியான சந்தீப் துபே கூறினார்.

உத்தரப் பிரதேச ஸ்தானிய நிகே கர்மாச்சாரி மகாசங்கின் மாநிலத் தலைவர் சஷிக்குமார் மிஸ்ரா, “லக்னோவின் கீழ் எட்டு மண்டலங்கள் மற்றும் 110 வார்டுகள் உள்ளன. சுமார் நானூறு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர், அவர்களுக்கு மாதம் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கடைசியாக ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்பட்டது, அதன்பிறகு, அவர்கள் தங்கள் மாத சம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

படிக்க : பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!

கிட்டத்தட்ட 400 ஒப்பந்த ஊழியர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அவர் கூறினார். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான வேலைகளைச் செய்தாலும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் கிடைப்பதில்லை என்றும், அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமூகப் பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் மிஸ்ரா புகார் கூறினார்.

தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன். அரசு அதிகாரிகள் வரும் நாட்களில் 24 மணிநேரமும் வேலை வாங்கிக்கொண்டு அதற்கும் சம்பள தராமல் இருப்பதும், பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு போன்ற எந்த உரிமையும் கொடுக்காமல் இருப்பதென்பது, அவர்களை அரசு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

சந்துரு
நன்றி: நியூஸ்கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க