மனிதனின் இன்றைய அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது கல்வி, மருத்துவம் சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகும். இவை அனைத்தும் காசு உள்ளவனுக்கே என்ற படுமோசமான நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக, சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை அக்டோபர் 18-ந்தேதி புதிய அரசாணை 115-இன் அடிப்படையில் 5 பேர் அடங்கிய மனிதவள சீர்த்திருத்தக்குழு அமைப்பதை எதிர்த்த பிறகு, அதன் வரம்பு ரத்து செய்து புதிய வரம்பு வெளியிடப்படும் என கூறினார் முதல்வர். ஆனால் அதன் தொடர்ச்சியாக அரசு அலுவகங்களில் ஆணையர்கள், பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டுமே தமிழக அரசிடம் இருக்கும். மீதமுள்ள பணியிடங்கள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில் அரசாணை எண் 152-ஐ கொண்டு வந்துள்ளது.
இதனை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை பார்த்து 115, 152 ஆகிய அரசாணைப்படி தான் நாங்கள் நடந்து கொள்வோம். கொரோனா காலங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை இருந்ததால் பணியில் சேர்த்தோம். தற்போது அவசியம் இல்லை என்பதால் வெளியேற்றுவோம் என மிரட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். தங்கள் நியாமான கோரிக்கைகாகப் போராடினால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு வரவில்லை என்றால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் எனவும் அச்சுறுத்தும் அயோக்கியத்தனங்கள் பல இடங்களில் அரங்கேறுகிறது.
படிக்க : BYJU’S செயலியும், பகற்கொள்ளையும் | தோழர் ரவி வீடியோ
இந்த அரசாணையின் மூலம் மாநகராட்சி பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பது, நிரந்தர பணியிடங்கள் குறைப்பு, காலி பணியிடங்கள் நிரப்பத்தடை, அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் ஆகியவற்றை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணையை கொண்டு வந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆகிய அனைவரையும் மேன் பவர் ஏஜென்சிகள் மூலம் தனியார் முதலாளிகளிடம் நவீனக் கொத்தடிமைகளாக்கும் வேலையை அரசே செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் 20 மாநாகராட்சிகளில் மறுசீரமைப்பு எனச்சொல்லி சுமார் 10 ஆண்டுகாலம் வேலை செய்த 32,500 பேரில் சுமார் 28 ஆயிரம் பேர் வேலையை விட்டு துரத்தி அடிக்கும் சதி வேலைகளை செய்கிறது திமுக அரசு.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையை ஒழித்துக்கட்டும் இந்த நடவடிக்கையை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் என அனைவரும் பலக் கோரிக்கைகளை வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போரட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் போடும் தமிழக அரசோ, இவர்களின் கோரிக்கைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வேலைசெய்து வந்தாலும் இவர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினை ஒன்றுதான். அதாவது உரிமை மறுப்பு, பணிப் பாதுகாப்பின்மை, வேலை உத்தரவாதம் இல்லாத நிலையாகும்.
கொரோனா காலத்தில் அவுட் சோர்சிங் முறையில் (அயல் பணி முறையில், வெளி முகமை முறையில்) இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கொரோனா, புயல் வெள்ளம் போன்ற நெருக்கடியான, பேரிடர் காலங்களில் இவர்களின் சேவை என்பது மிக மகத்தானது. குறிப்பாக செலிவியர்கள்தான் கொரோனா பெருந்தொற்று காலங்களில் இருந்து மனித உயிர்களை மீட்டெடுத்ததில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பணிபுரிந்தனர். அதில் பலர் இறந்துபோனார்கள்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்ட இவர்களை நிரந்தரமாக்குவோம் என நாடகமாடியது எடப்பாடி அரசு. அதை எதிர்த்து போராடிய தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதே நாடகத்தை அரங்கேறுகிறது.
இவர்கள் நோக்கம் என்னவெனில் அனைவரையும் தனியார் முதலாளிகளுக்கு அவுட் சோர்சிங் முறை மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கி கொத்தடிமையாக்குவதே. சேவைத் துறையில் வேலை செய்யும் இந்தத் தொழிலாளார்களுக்கு சீருடை, குடிநீர், கழிவறை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு சாப்பிடும் இடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்யாத அவல நிலையை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
செவிலியர், துப்புரவு தொழிலாளர்களைப் போற்றி மாலை அணிவித்து, பூ தூவி ஒருநாள் மரியாதை செய்தார்களே தவிர, இவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது. அன்றைய தேவைக்கு அவர்களை பயன்படுத்தினோம் தற்போது தேவையை கருதிதான் வேலை கொடுக்க முடியும். போதிய நிதியில்லை. அதனால் அனைவருக்கும் வேலை எல்லாம் கொடுக்க முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நிதியில்லை என்று கூறும் இவர்கள்தான் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை மேற்கொள்ளும் கிறிஸ்டல் ஸ்மித் குவாலிட்டி போன்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு மாதம் ரூ.3,200 கோடி கொடுத்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் புகுத்தப்படும் காண்டிட்ராக் மற்றும் அவுட் சோர்சிங் முறையால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஒட்டுமொத்த அரசு மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டி தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்கும் வகையிலான ஏற்பாட்டை செய்வதே இவர்களின் வேலை.
உலகம் முழுவதும் பொதுச் சுகாதாரத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கும் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இவ்வளவு கேடுகேட்ட நிலையில் வைத்துவிட்டு வல்லரசு வாய் சவடால் அடிப்பதை தவிர வேறு எதை செய்யவில்லை. சேவைத்துறைக்கு நிதி ஒதுக்குவது நிறுத்து என கட்டளை இடுகிறது உலக வங்கியும், உலக வர்த்தக கழகமும்; அதனை அமல்படுத்துகிறது திராவிட மாடல் தி.மு.க அரசு.
எனவே, தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து, அரசின் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிரானப் போராட்டமாக வளர்தெடுப்பது நமது கடமையாகும்.
புவன்
அவுட் சோர்ஸ்ங் முறை சமூகத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட சாதியினர் செய்யும் தொழிலுக்கே பயன்படுத்தப்படுகிறது. கல்வி அறிவற்ற எளிதில் பசப்பு வார்த்தைகளால் ஏமாந்து விடுகின்ற மக்களை இந்த ஆட்டோ சிங் முறை கொத்தடிமைகளாக மாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறது. பள்ளி, கல்லூரி மருத்துவம் வருவாய் போன்ற அடிப்படையாக உள்ள துறைகளில் கூட அடிப்படை பணியாளர்களை அவுட் சோர்ஸ் முறையில் நியமிக்கப்படுகின்றனர். குறைந்த ஊதியத்தில் இந்த பணி நிரந்தரம் ஆக்கப்படும் என்ற போலி வாக்குறுதிகளை நம்பி அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.