சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!

பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

1

னவரி 9, 2023 அன்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தீவன விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, நவம்பரில் ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது. பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹3 உயர்த்தி ₹35 ஆகவும், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹4 உயர்ந்தி ₹44 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியிருந்த விலை உயர்வோ லிட்டருக்கு ₹10.

போராட்டம் குறித்து பேசிய பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே. முகமது அலி “2019 ஆம் ஆண்டில் இருந்ததை விட கால்நடை தீவனத்தின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வெறும் ₹3 விலை உயர்வு என்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறினார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டர் ₹42 என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!


பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

“4.3 சதவிகிதம் கொழுப்பும் (fat) 8.2 சதவிகிதம் கொழுப்பற்ற பால்திண்மங்களும் (solid non-fat SNF) கொண்டிருந்தால் மட்டுமே அது தரமான பாலாக கருதப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 90 சதவிகித பால் 4 சதவிகிதம் கொழுப்பும் 8 சதவிகிதம் கொழுப்பற்ற பால்திண்மங்களும் கொண்டதாக இருப்பதால் லிட்டருக்கு ₹2 அல்லது ₹3 குறைவாகவே கிடைக்கிறது. சில பகுதிகளில் பாலின் விலை ₹24 என்ற அளவிற்கு குறைந்து விடுகிறது” என்றும் “ஈரோடு, ஆம்பூர், மதுரை போன்ற இடங்களில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள் முழு அளவில் இயங்க வேண்டும்” என்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பெருமாள் கூறினார்.

மேலும், “தனியார் நிறுவனங்கள் ஆவின் வழங்குவதை விட லிட்டருக்கு ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக வழங்குவதால், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பாலில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆவினுக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 42 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் தற்போது 34 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உற்பத்தியாகும் 75 சதவிகிதம் பால் அரசு கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி’யால் கொள்முதல் செய்யப்படுகிறது” என்று கூறினார்.

கலவை தீவனத்திற்கு (நிலக்கடலை புண்ணாக்கு, தவுடு, பருத்திக்கொட்டை இன்னும் பலவற்றை கலந்து உற்பத்தி செய்யப்படுவது) 50 சதவிகித மானியம் வழங்க வேண்டும்; மற்ற வேளாண் உற்பத்திப் பொருட்களைப் போல பாலின் விலையையும் வருடாவருடம் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பால் உற்பத்தியாளர் சங்கத்தால் முன் வைக்கப்பட்டது.


படிக்க: இரட்டிப்பாவது விவசாய வருமானமா? விவசாயிகள் சாவா?


மேலும் ஆவின் நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டிய பால் பணப்பாக்கி சுமார் ₹500 கோடியை பொங்கலுக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.

பால் விவசாயிகளுக்கு இப்படி பாலுக்கான பண பாக்கியை வழங்காமல் இழுத்தடிப்பதும், தனியார் நிறுவனங்களை விட குறைவான விலையில் பாலை கொள்முதல் செய்வதும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவினை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் ஆகும். பால் விவசாயிகளை தனியாரை நோக்கித் தள்ளுவதாகும். பால் கொள்முதலில் இருந்து படிப்படியாக விலகி, கொள்முதல் முழுவதையும் தனியார் வசம் ஒப்படைக்க அரசு கையாளும் வழிமுறைகள்தான் இவை!

பொம்மி