கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில், “வானவில் மன்றம்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” போன்ற திட்டங்கள் புதிதாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களைப் புகுத்துவது, கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்குவது ஆகியவற்றின் ஒருபகுதியாகவே இத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

ஏழை மாணவர்களுக்கு நவீன கல்வியைக் கொண்டு சேர்க்கும் வகையில், சமூகநீதித் திட்டங்களாக இவற்றைப் பாராட்டுகின்றன தி.மு.க. ஆதரவு ஊடகங்கள்; “திராவிட மாடல் அரசின் சாதனைகள்” என்று இத்திட்டங்களைப் பாராட்டுகிறார்கள் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். “வாரிசு அரசியல்”, “சட்டம் ஒழுங்கு சரியில்லை”, “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் தி.மு.க.வைத் தாக்கிவரும் பா.ஜ.க, “தி.மு.க கல்வித்துறையில் அறிமுகப்படுத்திவரும் புதுப்புது திட்டங்களெல்லாம் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன, ஆனால் அதை மறைத்துவிட்டு தாங்கள் புதிதாக அமல்படுத்தும் திட்டங்களைப்போல நடைமுறைப்படுத்துகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறது.

கார்ப்பரேட் கொள்ளை, கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள்கூட இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றன.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, கல்வியைக் காவிமயமாக்கி வருகிறது. ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில், கேள்விக்கிடமற்ற முறையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.

’வானவில் மன்றம்’: வண்ணம்பூசிவரும் கார்ப்பரேட்மயம்!

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், கணிதம் மற்றும் அறிவியலில் புதியவற்றை அறிந்துகொள்ள எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் “வானவில் மன்றம்” உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது தமிழக அரசு. இம்மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும். அறிவியல் மற்றும் கணித பாடங்களை செய்முறைகளின் மூலம் கற்றுத்தரும் இத்திட்டம் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13,210 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 1,200 ரூபாய் வீதம் 1.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன்பே, அரசுப்பள்ளிகளுக்கு அறிமுகமான ‘ஸ்டெம்’ (STEM – science technology and engineering mathematics) திட்டம்தான் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டெம் திட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை அப்பள்ளி ஆசிரியர்களே சொல்லிக் கொடுப்பர். ‘புதிதாக’ அறிமுகப்படுத்தியுள்ள வானவில் மன்றத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்புகள், கருத்தாளர்கள்’ என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக, 710 கருத்தாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !


அரசுப் பள்ளிகளில் திறமையான அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, கார்ப்பரேட் சார்புடைய ஊழியர்களைப் பள்ளிக்குள் நுழைப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள் பலரும் எழுப்பியுள்ளனர். மேலும், கருத்தாளர்களாக வருபவர்களுடைய கல்வித்தகுதி என்ன? ஆசிரியருக்குரிய தகுதிக்கு அங்கீகரிக்கப்பட்டவர்களா? என்பது போன்ற எந்த விவரங்களையும் அரசு வெளியிடவில்லை. இதன்மூலம், எந்தக் கல்வித் தகுதியும் இல்லாதவர்களை கருத்தாளர்களாக அரசுப் பள்ளிகளில் நுழைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கான வழிவகையைத் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்த கருத்தாளர்களும் எந்த கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வருகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை. “ஆஹா குரு”, “பரிக்ஷன்”, “எய்ட் இந்தியா” மற்றும் “சுடர்” போன்ற அமைப்புகளின் அடையாளக் குறிகள் (லோகோ) தான் வானவில் மன்ற செயல்திட்ட முகப்பில் இடம்பெற்றுள்ளதாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி குற்றம் சாட்டுகிறார்.

அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களில் இக்கருத்தாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுகிறார்கள்.

மக்களைச் சுரண்டி கோடிகளைக் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள்தான் ‘லாபநோக்கமில்லாமல்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்களா?

கிராமப்புற பகுதிகளில் இயங்குகிற பல்வேறு அரசுப் பள்ளிகளில் கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதும், இதனால் மாணவர்கள் சிரமத்தை அனுபவிப்பதும் நமக்குத் தெரியும். கல்விமீது அக்கறையுள்ள தமிழக அரசு, ஆசிரியர் நியமனங்களைப் பற்றிப் பேசாமலிருப்பது, ‘இனி அறிவியலையும் கணிதத்தையும் வானவில் திட்ட வகுப்புகளிலேயே படித்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்வதா?

மொத்தத்தில், “வானவில் மன்றம்” என்பது, அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை ஒதுக்காமல், பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலமாக உள்ளூர் படித்த இளைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தப் பணியைப் போன்ற ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, இது, அரசுப் பள்ளிகளில் அயல்பணி (அவுட்சோர்ஸ்) முறையில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் முயற்சியாகும்!

நம்ம ஸ்கூல்”: ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!

தமிழகத்தில் உள்ள 37,000 அரசுப் பள்ளிகளில், பலவற்றில் கழிவறை, ஆய்வகங்கள் உள்ளிட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனை தனியார் பங்களிப்புடன் நிவர்த்தி செய்யத் தொடங்கப்பட்டத் திட்டம்தான் தமிழக அரசு அறிவித்துள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”. சமூக அக்கறைக் கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முன்மொழிதல்கள் யாவும் புதிய கல்விக் கொள்கையிலேயே உள்ளன; நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்பது அதனை அமல்படுத்தும் வடிவமே.

தனியார் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியையும் தத்தெடுக்கலாம்; நூலகம், ஆய்வகம், கழிப்பிடம், சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்; முன்னாள் மாணவர்கள் மற்றும் மக்களில் எந்த பிரிவினர் வேண்டுமானாலும் எந்தவொரு அரசுப்பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கலாம்; கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய சமூகப் பொறுப்பு நிதியை (CSR – corporate social responsibility) பள்ளிக் கூடங்களுக்கு நிதியுதவியாக அளிக்கலாம் – இவற்றின்மூலம் அரசுப் பள்ளிகளுக்கான செலவினங்கள் முழுவதையும் அரசே ஈடுசெய்ய வேண்டுமென்று எதிர்பார்க்காமல், தனியார் பங்களிப்பை அனுமதிப்பதன்மூலம் பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்தலாம் என்கிறது தமிழக அரசு.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 50 கோடி ரூபாய் வரை நன்கொடையாக வந்துள்ளதாக அரசு அறிவித்து மகிழ்ச்சிக் கொள்கிறது. நன்கொடைகளை ஒருங்கிணைப்பதற்காக “நம்ம ஸ்கூல்” என்ற பெயரில் இணையதளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள 37,000 பள்ளிக்கூடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எம்மாதிரியான தேவைகள் இருக்கின்றன என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் இன்மை, சேதமடைந்த கட்டிடங்கள், கழிப்பிட வசதியின்மை என தமிழக அரசுப்பள்ளிகளின் அவலநிலையை தொகுப்பாக அறியத்தரும் வகையில் இந்த இணையதளம் உள்ளது. இந்த அவலநிலைக்கு யார் பொறுப்பு?

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது, அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தின் ஊழல்-முறைகேடுகள், அலட்சியம் போன்றவைதான் இந்நிலைக்கான முதன்மைக் காரணங்களாகும். சரி இவற்றை ஒருபக்கம் ஒதுக்கிவிடுவோம்; இந்த தனியார் பங்களிப்புத் திட்டம், அரசின் கல்வித்துறை ஒதுக்கீடுகளுக்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்றால் இல்லை?

கொரோனா பேரிடரைச் சந்தித்தபோது, தனியார் மற்றும் தொழில்நிறுவனங்களின் பங்களிப்புகளை தனது பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கச் சொல்லித்தானே ஒன்றிய, மாநில அரசுகள் கோரின. அப்படியிருக்கையில், பள்ளிக்கட்டமைப்பை வலுப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் இத்திட்டத்தில் அரசின் பாத்திரம் கைகழுவப்பட்டு, “யார் வேண்டுமானால் பள்ளிக்கூடங்களைத் தத்தெடுத்து பராமரிக்கலாம்” என்று சொல்வதன் பொருள் என்ன?

நிவாரணப் பணி என்பது வேறு, சேவைத்துறை என்பது வேறல்லவா! பசுத்தோல் போர்த்திய புலியாக, அரசுப் பள்ளிகளை கார்ப்பரேட் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுசெல்வதற்கான சதிச்செயலே இத்திட்டம் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம்!

தமிழகத்தில் ஏற்கெனவே கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடைய நூற்றுக்கணக்கான பள்ளிகள், அங்கு பணிபுரியும் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களின் முன்முயற்சியாலே செயல்பட்டு வருகின்றன; முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள மக்களிடம் இருந்து சிறுசிறு உதவிகளைப் பெற்றும், சில இடங்களில் உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றும் இயங்கிவருகின்றன. இதையே நிறுவனமயமாக்கி கல்வித்துறையை கார்ப்பரேட்டுகளிடம் நேரடியாகவோ அல்லது பினாமிகளான என்.ஜி.ஓ.க்களிடமோ ஒப்படைத்துவிட்டு அரசானது கல்வித்துறையிலிருந்து முற்றாக கை கழுவிக் கொள்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்!

டிஜிட்டல் கார்ப்பரேட் மயமாக்கத்தின் பிடியில் பள்ளிக்கல்வி!

கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இத்திட்டம் ‘அரசு கல்வி கொடுப்பதிலிருந்து விலகும் நடவடிக்கை’ என விமர்சிக்கப்படுகிறது; இது மிகச் சரியான விமர்சனமாகும்; அதேநேரம் இத்திட்டங்கள், கார்ப்பரேட் ஆதிக்கத்தை கல்வித்துறைக்குள் நுழைப்பதற்கான சதி என்ற இன்னொரு அம்சத்தை நாம் அழுத்தமாகவும் விரிவாகவும் பேச வேண்டும்.

தமிழக அரசின் மேற்கண்ட இரு திட்டங்களும் தேசியக் கல்விக் கொள்கையுடன் தொடர்புடையவை என்பது தனியான விசயங்கள் அல்ல. அரசின் இந்நடவடிக்கைகளை கல்வித்துறையில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் தொடர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, எல்லா துறைகளிலும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றத் திட்டங்கள் எல்லாம் பள்ளிக் கல்வித்துறையில் என்.ஜி.ஓ.களின் ஆதிக்கத்தையும் அதன் வழியாக உலக வங்கியின் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்துவதாக இருந்தன.

பள்ளிகளில் சுற்றுச்சுவர், நூலகம், கழிப்பறை, ஆய்வகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அரசுப் பள்ளிகளைப் புறக்கணிப்பது, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும்போது, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது போன்றவையெல்லாம் இக்கொள்கைகளின் தொடர்ச்சியே.

என்.ஜி.ஓ.க்களின் ஆதிக்கத்தை அதிகரிப்பது, கல்வி வழங்குவதில் இருந்து அரசு ஒதுங்கிக் கொள்வது, கல்வியை தனியார்-கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றியமைப்பது என பல்வேறு கூறுகளைக் கொண்டு கல்வித் தனியார்மயத்தை ‘அடுத்தக் கட்டத்திற்கு’க் கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை 2020; கல்வியில் நேரடியாக கார்ப்பரேட் (பொதுவில் தனியார்மயமல்ல) ஆதிக்கத்தை நிறுவுவதே, இங்கு அடுத்த கட்டமாகும். இந்த கொள்கைகளைத்தான் கவர்ச்சிவாத முகமூடி அணிவித்து நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க அரசு.

000

கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படும் போக்கைப் பற்றி ஒரு சித்திரத்திற்கு (Outline) வரவேண்டுமானால், இன்றைய ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் வினியோகக் கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட பிராண்டுக்குச் சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம், தனது வணிகப் பொருளை முழுவதுமாக ஒரே தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்வதில்லை.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை பல்வேறு தனித்தனி வேலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளையும் தனித்தனி துறைகளாக்கி (தனிச்சிறப்புமயமாக்கல் – Specialization), அவற்றை அயல்பணி (அவுட்சோர்ஸிங்) மூலம் செய்துமுடிப்பதே கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட உற்பத்தி முறையாகும்.

அரசுப் பள்ளிகளை முறையாக பராமரிக்காமல் மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளுவதற்கும், கல்வித்துறையை பல துறைகளாகப் பிரித்து கார்ப்பரேட்மயமாக்குவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டும் கல்வியை வியாபாரமயமாக்கும் (Commercialization) போக்கின் இருவேறு அங்கங்களாகும்; முன்னேறிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாகும்.

000

பள்ளிக் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கத்தை கவனிப்போம். பாடப் புத்தகங்களை நவீனப்படுத்துவது என்ற பெயரில் கியூ.ஆர்.குறியீடுகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு ஃபோனைப் பயன்படுத்தத் தெரிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அதனைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான கூடுதல் விளக்கங்களை இணையத்தில் காட்சி வடிவமாகத் தெரிந்து கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்வதில் கூடுதல் விளக்கம் கிடைப்பதானாலும், காட்சியாகப் பார்க்கும்போது மாணவர்களின் மனதில் பதிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாலும், இதனை நாம் வரவேற்கிறோம்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி போன்ற பலவும் கல்வி புகட்டுவதில் அமலாகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல்மயமாகும். இப்போது, “வானவில் மன்றம்” மூலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆர்வமூட்டும் வகையில் நடத்துவது என்ற பெயரில் டிஜிட்டல் வடிவக் கல்வி பின்பற்றப்படலாம். கல்வி புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு துணையாகவும் தற்காலிகமானதாகவும் இருந்த டிஜிட்டல் வடிவக் கல்வி, தற்போது தனித்துறையாகப் பரிணமித்துவருகிறது. இதற்கு உள்ளேயே கியூ.ஆர்.குறியீடுகள், ஆன்லைன் வகுப்புகளுக்கான செயலிகள், தொலைக்காட்சி சானல்கள் என பல வடிவங்கள் உள்ளன.

பள்ளிப்பாடங்களை டிஜிட்டல் வழியில் நடத்துவதற்கு நாளை வானவில் திட்டத்தின்வழியே உள்நுழைக்கப் பட்டிருக்கும் ‘ஆஹா குரு’ (நீட், ஜே.ஈ.ஈ தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கும் கார்ப்பரேட் நிறுவனம்) போன்ற நிறுவனங்களுடன் அரசு உடன்படிக்கை செய்துகொள்ளலாம். இது ஊகமல்ல, இணையவழிக் கல்வியை ஊக்குவிப்பதை புதிய கல்விக் கொள்கையே வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவானது, கலவைமுறைக் கற்றல் (Blended Education) என்ற பெயரில் கட்டாயமாக 40 சதவிகிதம் வகுப்புகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய நிகழ்வை, இந்த இடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும். கல்வி புகட்டுவதில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்கே இந்த டிஜிட்டல் திணிப்பு!

000

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், சொற்ப இடங்களை மட்டும் ஒப்பந்த (அவுட்சோர்ஸ்) அடிப்படையில் நியமித்துவருகிறது அரசு. நாளை இந்த ஒப்பந்தப் பணிகளிலும் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்படப்போகிறது. அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியர்களை நிரப்ப வெளிமுகமைகளை (ஏஜென்சிகள்) நாடலாம் என்பது அண்மையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டு, எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்ட அரசாணை 115-ன் சாரம். தற்போது அது பின்வாங்கப்பட்டாலும் நடைமுறையில் அவை அமலாகப்போகின்றன.

கடந்த மே மாதம் “தமிழ்நாடு கல்வி பெலோஷிப்” என்ற பெயரில், பி.எட் படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கு உதவித்தொகை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தல் என்ற இரட்டை இலக்குகளை நிறைவேற்றப்போகும் மாபெரும் சமூகநீதித் திட்டம் என்று விளம்பரப் படுத்தப்பட்டது.


படிக்க: 2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!


அண்மைய செய்தி என்ன தெரியுமா? பள்ளிக் கல்வித்துறை “மதி பவுண்டேஷன்” என்ற கார்ப்பரேட் பின்னணி கொண்ட என்.ஜி.ஓ அமைப்பின் வழியாக இந்த உதவித்தொகை பெறும் தன்னார்வலர்களை நியமிக்கப் போகிறார்களாம். அவர்களுக்கான மாத உதவித்தொகை ரூபாய் 40,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அரசே நேரடியாக நியமித்த கவுரவ விரிவுரையாளர்கள், தற்காலிக ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் பிச்சைக் காசாக ரூபாய் 10,000 முதல் 15,000களை மட்டுமே வீசியெறிந்த அரசு; என்.ஜி.ஓ தன்னார்வலர்களுக்கு எடுத்த எடுப்பில் 40,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறது.

தகுதியும் திறமையும் உள்ள, ஆசிரியர் தகுத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுக்கணகாகப் பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்துவரும் அரசு, இப்போது எவ்விதம் தகுதியும் சோதனையும் இல்லாமல் சிறப்பு ஊழியர்கள் என்ற பெயரில் என்.ஜி.ஒ.க்களின் மூலம் ஆசிரியர்களை நியமிக்கிறது! அயல்பணி (அவுட்சோர்ஸ்) போன்ற இத்திட்டத்தின்மூலம் தற்போது ஒரு என்.ஜி.ஓ., மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளையடிக்கப் போகிறது; அரசு ஆசிரியர் பணி ஒழித்துக்கட்டப்படப் போகிறது.

மறுகாலனியாக்கத்தில், எங்கே சமூகநீதி?

தற்போதைய கல்விமுறையானது மனப்பாடக் கல்வியாகச் சுருங்கி வெகுகாலமாகிவிட்டது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்வதைப் போல மாணவர்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும் படித்தல்-ஒப்புவித்தல் என்பதை மட்டுமே செய்யும் இயந்திரங்களாகவும் சுயநலப் பிராணிகளாகவும் மாற்றி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில்கூட விளையாட்டு நேரம், நீதிபோதனை போன்ற நேரங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன.  பள்ளி இறுதியாண்டு தேர்வு, பொதுத்தேர்வு, உயர்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மாணவர்களை கல்வியில் இருந்து பிரித்து அவர்களை திறனற்றவர்களாக முத்திரைக் குத்தி இழிவுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையோ இவற்றை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

இச்சூழலில், அண்மைக் காலமாக ஆன்லைன் கல்விப் புகுத்தப்பட்ட பின்னர், மாணவர்கள் மத்தியில் பாலியல் சீரழிவுகள் அதிகரித்துள்ளன. பல மாணவிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்களும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் செயல்பாடுகள் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. கொரோனா ஊரடங்குக்கு பின்னர், தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். ஆனால், அதே காலகட்டத்தில் பல இலட்சம் மாணவர்கள் கல்வியிலிருந்தே வெளியேறியுள்ளனர். தற்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள், கொரோனா ஊரடங்கு காலங்களில் குடும்பப் பராமரிப்புக்காக வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

எதார்த்தம் இவ்வாறிருக்க, டிஜிட்டல்மயமாக்கம், கார்ப்பரேட்மயமாக்கம் என்பது ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து முற்றிலும் வெளியேற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளாகும்; சமுதாயத்தின் பெரும் பிரிவு மக்களை, எதிர்கால சந்ததியினரை கல்வியில்லாமல் ஒழிக்கும் இந்த நடவடிக்கைகள், மனுதர்மத்தை போதிக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நேரடியாக ஆதரிக்கவில்லை எனினும், இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துபவையே. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நிரந்தரமாக கல்வியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நவீன பார்ப்பனிய பயங்கரவாதத் தாக்குதல்களே!

திராவிட மாடலின் மெய்ப்பொருள்!

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாகப் பறிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மின்சார இணைப்புடன் ஆதாரை இணைப்பது, அரசுத் துறைகளில் அயல்பணி முறையில் ஊழியர்களை நியமிப்பது, அரசு அலுவலகங்களில் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது போன்றவை அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்குவதற்காகவே. இவை, காவி பாசிசத்திற்கும் வழிவகையாகவும் அமைகின்றன.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதை மறைமுகமாக அமல்படுத்துகிறது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை 80 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி குற்றஞ்சாட்டுகிறார். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தையும்விட, தமிழகத்தில் தீவிரமாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது ‘அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’யின் அறிக்கை. இந்நிலையில், தி.மு.க தலைமையிலான அரசு, மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கக் குழு அமைத்துள்ளதாகக் கூறுகிறது; அதன் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது தற்போதைய நடவடிக்கைகளே வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றன.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் இவற்றையெல்லாம் எதிர்ப்பதில்லை. மாறாக, வாழ்த்தி வரவேற்கின்றன. சான்றாக, “வானவில் மன்ற”த் திட்டத்தை திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “பகவத் கீதை, சோதிடம், வேத-புராண சாஸ்திரங்கள் அனைத்தும் பாடங்களாக்கப்பட்டு மாணவர்களுடைய பிஞ்சுநெஞ்சில் நஞ்சு விதைக்கப்பட்டு வருகிறது; மாற்றாக, அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற ஒரே அரசு திராவிட மாடல் அரசுதான்” என்று கூறியுள்ளார். ஆனால் கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதுதான் திராவிட மாடலா? அல்லது சமூகநீதியா?

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

தி.மு.க. அரசின் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத திட்டங்கள் ஒவ்வொன்றையும் பா.ஜ.க. கும்பலானது எதிர்க்கும்போது, கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் இத்திட்டங்களைப் பற்றி மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை. ஏனென்றால், பா.ஜ.க. கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளோடு அவை ஒத்துப்போவதுதான் காரணம்.

’வளர்ச்சி’ என்ற பெயரில் நாட்டை அம்பானி – அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, குஜராத்தி, சிந்தி சாதிப் பின்னணி வடபுலத்து கார்ப்பரேட் கும்பலுக்கு பா.ஜ.க. திறந்துவிடுகிறது எனில், தி.மு.க.வோ தமிழக, தென்னிந்திய கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடுகிறது; திராவிட மாடலுக்கு இதான் மெய்யான பொருள்!

தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க