‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இதேநேரத்தில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கட்டமைப்பதற்காக 9,500 கோடி மதிப்புள்ள டெண்டரை அந்நாட்டு அரசிடமிருந்து பெற்றுள்ளார் அதானி.

தானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால், அதானியின் பங்குமதிப்புகள் மாபெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாம் இடமிருந்த அதானி, இத்தலையங்கம் எழுதப்படும் நேரத்தில் 15-ஆம் இடத்திற்குச் சரிந்துள்ளார். இச்சரிவு மேலும் தொடரலாம்.

எட்டாண்டுகளில் அதானி அடைந்துள்ள பகாசூர வளர்ச்சி, ஊதிப்பெருக்கப்பட்ட பலூன் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்திவிட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை. பல்வேறு மோசடிகளின்மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்குகளைச் செயற்கையாக உயர்த்திக் காட்டி, அதைவைத்து வங்கிகளிடமிருந்து பெற்ற பல கோடி ரூபாய் கடன்களை மூலதனமாகக் கொண்டு வளர்ந்ததே அதானி குழுமம் என்பதை விரிவாக விளக்குகிறது, 106 பக்கங்களைக் கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கை.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போலியாக உயர்த்திக் காட்டப்பட்ட அதானியின் பங்குமதிப்பு 100 பில்லியன் (10,000 கோடி) டாலர்கள். இதை “கார்ப்பரேட் வரலாற்றிலேயே மாபெரும் மோசடி” (The Largest Con In Corporate History) என்று அழைக்கிறது ஹிண்டன்பர்க்.

பங்குச்சந்தை விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் 75 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அதானி குழுமத்தில், அதிகபட்ச வரம்பான 75 சதவிகிதத்தையும் அதானி குடும்பமே வைத்துள்ளதோடு, மீதமுள்ள பங்குகளில் 15 சதவிகிதத்தையும் வரியில்லா சொர்க்கங்களான மொரிஷியஸ் மற்றும் கரீபியன் தீவு நாடுகளிலுள்ள பினாமி நிறுவனங்கள் மூலம் அதானி குடும்பமே வைத்துள்ளதை ஹிண்டன்பர்க் அம்பலமாக்கியுள்ளது.


படிக்க: அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி!


நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, கொள்ளையடித்த கருப்புப் பணத்தை இத்தீவுகளுக்கு கொண்டுசென்று, மீண்டும் தனது நிறுவனத்திற்கே அந்நிய முதலீடுகளாகக் கொண்டுவந்துள்ளது அதானி குடும்பம். இத்தருணத்தில், மோடி சொன்ன கருப்பு பண ஒழிப்பு நமது நினைவுக்கு வந்துசெல்கிறது.

நிதி கையாளுகை மற்றும் முக்கிய முடிவெடுக்கும் இடங்களை அதானி குடும்பத்தினரே கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் அறிக்கை, அவர்கள் அனைவரும் ஊரை அடித்து உலையில் போட்ட கிரிமினல்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

அதானியின் இளைய சகோதரன் ராஜேஷ் அதானி மீதுள்ள சுங்க வரி ஏய்ப்பு, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி குற்றச்சாட்டுகள்; அதானியின் மைத்துனர் சமீர் வோரா மீது பினாமி நிறுவனங்கள் மூலம் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததான குற்றச்சாட்டு; அதானியின் அண்ணன் வினோத் அதானி, ஹவாலா பணத்தை பினாமி நிறுவனங்களின் மூலம் அந்நிய முதலீடாகக் கொண்டுவந்த வழக்கு; கௌதம் அதானியின் மீதே, மோசடியில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி (SEBI) நடத்திய விசாரணைகள் – என பலவற்றை அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.

பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டு பல்வேறு வங்கிகளில் கழுத்து முட்ட கடன் வாங்கிவிட்ட அதானி குழுமம் (கடந்த ஆகஸ்டு நிலவரப்படி, 2.2 லட்சம் கோடி கடன்), ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான, மூன்றே நாட்களில் 5.3 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. அதானியைக் கைதூக்கிவிடுவதற்காக, மோடியின் உத்தரவுக்கு இணங்க அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதியம், எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கும் இந்த நட்டத்தில் பங்கு உண்டு.

அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியால் எல்.ஐ.சி நிறுவனம் இரண்டே நாட்களில் 16,580 கோடியை இழந்துள்ளது. அதானி குடும்பம் மஞ்சள் குளிக்க, சூறையாடப் பட்டதோ மக்கள் பணம்!


படிக்க: ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ


ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு 413 பக்கத்தில் பதிலறிக்கைக் கொடுத்துள்ள அதானி குழுமம், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது, அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள்” என்று கூறியுள்ளதோடு, “இது தேசத்தின் மீதான தாக்குதல்” என்று ஒரே போடாக போடுகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையை ‘வெளிநாட்டு சதி’ என்று தூற்றுவதன்மூலம் விவாதத்தை அதானி குழுமமும் பா.ஜ.க கும்பலும் மடைமாற்றத் துடிக்கின்றன; ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான காலகட்டத்தையும், அந்நிறுவனத்தின் பின்னணியையும் அதானியின் மோசடிகளை மறைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

“ஷார்ட் செல்லிங்” என்ற பங்குச்சந்தை ஊகபேரம் மூலம் பல கோடிக்கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டும் நிறுவனம் ஹிண்டன்பர்க். ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையும் என்று முன்கூட்டியே கணித்து, அதை தரகர்களின் மூலம் வாங்கி விற்பதால் லாபம் ஈட்டுதலே “ஷார்ட் செல்லிங்” எனப்படுகிறது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அதானி குழுமம் 20,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை விற்பதாக அறிவித்திருந்த வேளையில், 24-ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.

அதானியைப் பற்றிய அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஹிண்டன்பர்க் பல கோடி டாலர்களை லாபமாகப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘நடுநிலையாளர்கள்’ அல்லது ‘பொருளாதார அறிஞர்கள்’ என்று கூறப்படுவோரில் பலர், இந்த கோணத்திலான விவாதங்களில் பங்கேற்பதன் மூலம் மையமான பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லர் என்பது வெளிப்படையானது. ஆனால், அதன் மூலம் அந்நிறுவனத்தின் அறிக்கை “ஆதாரமற்றது”, “அவதூறானது” என்று எந்த பொருளாதார அறிஞர்களும் கூறத் துணிய முடியாது.


படிக்க: நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


டெஸ்லா, டிவிட்டர் உள்ளிட்டு இதுவரை 30 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது; அவற்றில் ஒன்றுகூட ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்டதில்லை.

நாடே அதானியின் அயோக்கியத்தனத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், இத்தருணத்தில் முக்கியமாகப் பேசவேண்டிய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. பங்குச் சந்தையில் அதானி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை செபி பலமுறை குற்றஞ்சாட்டி விசாரித்துள்ளது. இவ்வழக்குகளில், பெரும்பாலானவை, அற்பமான அபராதத் தொகையோடு முடித்துவைக்கப்பட்டு அதானி மேலும் சூதாட அனுமதிக்கப் பட்டார். சில வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கையானது, செபியின் இந்நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.

இன்னும் சில நாட்களில் அதானிக்கு முட்டுக் கொடுத்தோ அல்லது “இதுகுறித்து விசாரிக்கிறோம்” என்றோ செபியின் சார்பில் அறிக்கை வெளியாகலாம். ஆனால், அவையெல்லாம் வெறும் நாடகமே.

எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளும் அதானியின் மோசடிக்கு தெரிந்தே துணை போயிருக்கின்றன என்பதுதான் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலமாகும் விசயம். எனவே, அதானி குழுமத்தின் மோசடி என்பது, தனியொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மோசடியல்ல. இதுதான் அதானிக்கு பலம். அவரது பாக்கெட்டில், பாரதப் பிரதமர் மோடியே இருக்கிறார் எனும்போது, அவருக்கென்ன கவலை!

ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இதேநேரத்தில், இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தைக் கட்டமைப்பதற்காக 9,500 கோடி மதிப்புள்ள டெண்டரை அந்நாட்டு அரசிடமிருந்து பெற்றுள்ளார் அதானி. மக்களின் பணத்தை மொட்டையடித்து, அதானிக்கு ‘ஜாமின்’ வழங்குவதற்கு ஒரு நாட்டின் அரசே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், இஸ்ரேல் பிரதமரும் மோடியின் நண்பருமான பெஞ்சமின் இவ்வொப்பந்தத்தை அதானிக்கு அளித்துள்ளார்.

வரும் 2024-க்குள் இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் என்று கூச்சல் போடும் காவி வெறியர்கள், இந்துராஷ்டிரம் “இந்துக்களுக்கான ராஜ்ஜியம்” என்று நம்மை ஏமாற்றிவருகிறார்கள். அதானியை அம்பலப்படுத்தும் அறிக்கையை, “தேசத்தின் மீதான தாக்குதல்” என்று சித்தரிப்பதன் மூலம், இந்துராஷ்டிரம் யாருக்கான தேசம் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்கள் காவி பாசிஸ்டுகள்!


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
பிப்ரவரி 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க