ஐம்பது நாட்களாக தொடரும் ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசின் நிலப்பறிப்புக்கெதிராக 50 நாட்களாக தொடரும்
ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சி மன்றங்கள், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் 3034 ஏக்கரில் சிப்காட் – V அமைப்பதற்கான அறிவிப்பை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சிப்காட் – V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. இந்நிலமானது ஓசூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. முப்போகம் விளையும் இந்நிலங்களை  கையகப்படுத்துவதற்கு நேரடியாக அரசு முயற்சி செய்து வருகிறது.

GMR நிறுவனம் வசம் உள்ள 2000 ஏக்கரும் ஏற்கனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியதுதான். மொத்தமாக வாங்கிய 2500 ஏக்கரில் 500 ஏக்கரை டாடா நிறுவனத்துக்கு விற்று GMR நிறுவனம் கொள்ளை லாபம் அடித்துள்ளதாகவும். அவ்வாறு விற்கப்பட்ட நிலங்கள் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் கிடப்பதாகவும், அந்நிலங்களை வேளாண்மைப் பயன்பாட்டுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஆண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசின் அறிவிப்பு வந்தவுடன் அதைக் கண்டித்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,  இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் உத்தனப்பள்ளியில் ஜனவரி 5 ம் தேதி முதல் 50 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


படிக்க: அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு


விவசாயிகள் கொடுக்க மறுக்கும் 1000 ஏக்கர் நிலப்பகுதி என்பது முப்போகம் விளையக்கூடிய செழிப்பான பகுதியாகும்.  நேரடியாக 800 குடும்பங்களுக்கு மேல் இப்பகுதியில் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியைச் சுற்றி 20,000 மக்கள் வசித்து வருகின்றனர். 10,000 தென்னை மரங்கள், மாமரங்கள், இதர பழவகை மரங்கள் உள்ளன. 15 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கான நீர்வழித்தடங்கள், ஏற்றுமதிக்கான பூக்கள், காய்கறிகள் விளைவிக்கும் 50 பசுமைக் குடில்கள், 25 கோழிப்பண்ணைகள், 500 க்கும் மேற்பட்ட கிணறுகள், ஆழ்துறை கிணறுகள் உள்ளன.

நெல், சிறுதானியங்கள், பீன்ஸ், கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் கொய் மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. தென்னிந்தியா முழுவதும் இங்கு விளையும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

GMR ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் உத்தனப்பள்ளி, நாகமங்கலத்தைச் சுற்றியுள்ள 2500 ஏக்கர் வரையிலான நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக(SEZ) 15 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளிடம் இருந்து குறைவான விலையில் பறிக்கப்பட்டவையாகும். அப்போதைக்கு விவசாயிகளுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி, வறட்சியின் காரணமாக விற்றுள்ளனர்.

ஏற்கனவே நான்கு சிப்காட்கள் (சிப்காட் I, II, III, IV) அமைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை எந்தவிதமான பயன்பாட்டுக்கும் கொண்டுவராமல் அரசின் சிப்காட் நிறுவனமே பயன்பாடு இல்லாமல் தன்வசம் வைத்துள்ளது. மேலும் தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களுக்கு இடையில் பேவநத்தம் பகுதியில் 2600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. அப்படி இருக்கும்போது முப்போகம் விளையும் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள 1000 ஏக்கர் பட்டா நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.


படிக்க: சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !


முப்போகம் விளையும் இந்நிலத்தையும் விட்டுவிட்டால் அகதிகளாகத்தான்  செல்ல நேரிடும் என்று தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு அரசாங்கமே ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக  குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் இன்னொரு துயரம் என்னவெனில் கோயம்புத்தூர் – பெங்களூரு அதிவிரைவுச் சாலைக்காகவும் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்துள்ளனர். சந்தை விலையை விட நூறு மடங்கு குறைவான நட்ட ஈடு மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் அரசு அதிகாரிகளோ போராடும் விவசாயிகளிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிக்கொண்டே நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம் இப்பகுதியின் (வேப்பனப்பள்ளி தொகுதி) அதிமுக எம்.எல்.ஏ வான கே.பி.முனுசாமி 50 நாட்களாக தொடர்போராட்டம் நடந்து கொண்டிருக்கிற நிலையிலும்  இதுவரை மக்கள் போராட்டத்தைப் பற்றி என்ன ஏது என்று கூட கேட்கவில்லை, நேரில் வந்து பார்க்கவில்லை என்று விவசாயிகள்  கூறினர். சட்டமன்றத்தில் எங்களது வாழ்வாதாரப் பிரச்சினையை முன்வைத்துப் பேசாமல் ரேசன் கடையில் சர்க்கரைக்கு பாக்கெட் போட்டுத் தருவதைப் பற்றி கே.பி.முனுசாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ வைக் காணவில்லை என்று போஸ்டர் அடிக்கப் போகிறோம் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு விவசாயிகள் போராட்டங்கள் ஏற்படுத்திய  நிர்ப்பந்தத்தில் இருந்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலுக்கட்டாயமாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்தார். மேலும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வின் ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் உறுதி கொடுத்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.  ஆனால் இது போன்ற வாக்குறுதிகளை நம்புவதற்கு விவசாயிகள் தயாரில்லை. கடந்த கால அனுபவங்களில் இருந்து விழிப்புணர்வோடு இருக்கின்றனர்.


படிக்க: பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!


பணத்தை வைத்துக் கொண்டு எத்தனை நாள் சாப்பிட முடியும்? நிலம் இருந்தால்  விவசாயம் செய்து பல தலைமுறை வாழ முடியும் என்று யதார்த்தமாக கேட்கின்றனர் விவசாயிகள்.

காவிரி டெல்டாவில் மீத்தேன்,ஹைட்ரோகார்பன் திட்டங்கள், எட்டுவழிச்சாலை, திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் அமையவுள்ள சிப்காட், பரந்தூர் விமானநிலையம், ஆகியவற்றிற்காக அரசு கையகப்படுத்த துடிக்கும் அனைத்தும் செழிப்பான வேளாண் நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சம் கோடி (1 டிரில்லியன்) பொருளாதாரமாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவதே எங்கள் லட்சியம் என்று மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்த சில மாதங்களில் அறிவித்தார். இதனுடைய ஒரு பகுதியாகத்தான் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் செயல்பாடுகளை பார்க்க வேண்டியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் கொள்ளையடிக்கவே இந்த லட்சியங்கள் பயன்படுகின்றன என்பதே உண்மை.

எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயக் கொள்கைப்படிதான் ஆட்சி செய்வார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் நலனில் இருந்தே செயல்பட முடியும், அது விவசாயிகளுக்கு எதிராகத்தான் முடியும் என்பதற்கான உதாரணமாகத்தான் திமுக அரசின் செயல்பாடுகளும் உள்ளன.

பல்லாண்டுகளாக வியர்வை சிந்தி நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி பகுதி விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சுயசார்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதுதான் வளர்ச்சி என்று அரசு சொல்கிறதென்றால், 75 ஆண்டுகால சுதந்திரம் என்பதற்கு என்ன பொருள்? இது யாருக்கான சுதந்திரம்?

தொடர்ச்சியான, இடைவிடாத போராட்டங்களின் மூலமாகவே மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டுக் கொள்ள முடியும், மீட்டுக் கொள்கிறார்கள் என்பதே கண்கூடான உண்மை. டெல்லி விவசாயிகள் போராட்டங்கள் உட்பட இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஆகையால் போராடும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளிப்பது உணவு உண்ணும் அனைவரின் கடமை.

தோழர். பரசுராமன்,
மாவட்டச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க