காவிகளின் கற்பனைகளை பொடியாக்கிய, கர்நாடக உழைக்கும் மக்கள்!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அப்படியொரு எழுச்சிக்கு கர்நாடகம் பக்குவப்பட்டுவருவதையே காட்டுகிறது!

ந்து ராஷ்டிரத்தின் தென்னிந்திய நுழைவாயிலாக கர்நாடகத்தை பிடித்துவிட்டோம் என்றும் அடுத்து கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலங்களாக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகளின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளார்கள் கர்நாடக உழைக்கும் மக்கள்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று குறிப்பிட்டாலும், தேர்தல் நெருங்க நெருங்க “கர்நாடகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது”, “காங்கிரஸ் வென்றாலும் பெரும்பான்மை பெறுவது சந்தேகமே” என்று திட்டமிட்டே பாசிஸ்டுகளுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்தன மைய ஊடகங்கள்.

அனைத்து கருத்துருவாக்கங்களையும் மீறி, ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களைவிட 22 இடங்கள் கூடுதலாகப் பெற்று 135 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது காங்கிரஸ். சென்ற சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வென்ற பா.ஜ.க., அதைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியாமல் 66 தொகுதிகளுக்கு சரிந்திருக்கிறது.

இது காங்கிரஸின் தேர்தல் வெற்றி என்ற வரம்பைத் தாண்டி, நாடு முழுக்கவும் உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள், தங்களின் வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

படிக்க : கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் “தெற்கு பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டது” (The South Rejects BJP), “பா.ஜ.க அல்லாத தென்னிந்தியா” (BJPmukthsouthindia) போன்ற முழங்கங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் குஜராத், உ.பி போன்ற மாநிலமல்ல கர்நாடகா, “இது வேறு” என்று பாசிஸ்டுகளுக்கு கர்நாடக உழைக்கும் மக்கள் வகுப்பெடுத்திருப்பதுதான் இந்த தேர்தல் முடிவுகளாகும்.

கர்நாடகத்திலும் கரைசேராத மோடி அலை!

மோர்பி பால விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான பிறகும், “மோடி” என்ற பிம்பத்தை முன்னிறுத்தி குஜராத்தை பாசிஸ்டுகளால் மீண்டும் வெல்ல முடிந்தது. “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கம் எடுப்பட்டது. ஆனால், “கர்நாடகத்தில் மோடிக்கு மவுசு இல்லை; கர்நாடகா குஜராத்தும் இல்லை” என்று காட்டியிருக்கிறது இத்தேர்தல் முடிவுகள்.

காங்கிரஸ் முன்வைத்த “40 சதவிகிதம் சர்க்கார்”, “இரட்டை ஊழல் சர்க்கார்” போன்ற முழக்கங்களை எதிர்கொள்ள முடியாமல், முழுக்கமுழுக்க “மோடி” என்ற பிம்பத்தையும், “தேசியவாதம் – இந்துத்துவம்” என்ற ஆயுதங்களையும் கைக்கொண்டே பாசிச பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. பா.ஜ.க.வின் தோல்வி இந்த ஆயுதங்களெல்லாம் கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை என்பதையே அம்பலமாக்கியிருக்கிறது.

“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து – முஸ்லீம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லீம் வாக்குகூட எங்களுக்குத் தேவையில்லை” என்று வெளிப்படையாகவே அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. பா.ஜ.க.வின் இந்த தேர்தல் உத்திக்கு கை மேல் பலனாகத்தான் முடிவுகள் வெளியாகியுள்ளன.

‘பாரதப் பிரதமர்’ மோடியே பங்கேற்று பிரச்சாரம் செய்த 20 பேரணிகள், அமித்ஷா பங்கேற்ற 30 பேரணிகள், பா.ஜ.க.வின் மையத் தலைமை வழிகாட்டி நடத்தப்பட்ட 30,000 பொதுக்கூட்டங்கள் அத்தனையும் புஸ்வானம். “என்னை 92 முறை காங்கிரஸ் இழிவுபடுத்தியுள்ளது” என்றார் மோடி; 93-ஆவது முறையாக கர்நாடக மக்களும் காரித் துப்பியுள்ளார்கள்.

2014-ஆம் ஆண்டு தொடங்கி மோடி இதுவரை வளர்ச்சியின் முகமாகவே பாசிஸ்டுகளால் முன்னிறுத்தப்பட்டிருகிறார்; அமித்ஷா போன்றோர் வெளிப்படையாக முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் மோடி அவ்வாறு செய்வதில்லை. இந்த கர்நாடகத் தேர்தலில், மோடியின் பிரச்சாரங்களிலும் காவி நெடி தூக்கலாக வீசின.

“பஜ்ரங் தள் அமைப்பை தடைசெய்வோம்” என காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை விமர்சித்து, “ஆஞ்சநேயரையே அவமதித்துவிட்டார்கள், இந்த காங்கிரஸை தண்டிக்க வேண்டும்” என்றார் மோடி. மேடைக்கு மேடை “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கினார்.

உத்தரப்பிரதேசத்தில் ராமனைப் போல, கர்நாடகத்தில் (பஜ்ரங்பலி) ஆஞ்சநேயரை முன்னிறுத்தும் இந்த முழக்கம் எடுபடும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், கர்நாடக மக்களோ “தாங்கள் வணங்கும் ஆஞ்சநேயர் வேறு, ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் வேறு” என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

“தி கேரளா ஸ்டோரி” படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றார் மோடி. ஆனால், அது தென்னிந்தியா முழக்க போனியாகமலே போனது.

வெத்து வேட்டாய்ப் போன சாதிவெறி – மதவெறிக் கணக்குகள்!

முஸ்லீம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு, அதை லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகிதமாக பிரித்து வழங்கியது; எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும், எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியது – போன்ற சாதிரீதியான முனைவாக்கமும் பெரிதாக எடுபடவில்லை. லிங்காயத்துகள் மத்தியில் ஓரளவு வாக்குவங்கியைப் பெற்றாலும், ஒக்கலிகர்கள் மத்தியிலோ, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் மத்தியிலோ பா.ஜ.க போட்ட கணக்குகள் தப்பாகின.

திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகிய ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இந்து மன்னர்கள்தான் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் வழங்கப்பட்ட 2 சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து மீண்டும் முஸ்லீம்களுக்கே வழங்கிவிடுவார்கள் என்றும், பி.எஃப்.ஐ அமைப்பை மீண்டும் கொண்டுவந்துவிடுவார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர் பா.ஜ.க.வினர்.

முஸ்லீம் எதிர்ப்பையும், சாதிவெறி – இந்துமதவெறியையும் ஒருசேர தூண்டிவிட்ட இதுபோன்ற பிரச்சாரங்கள் பா.ஜ.க.வின் சிறந்த உத்திகள் என்று கணிக்கப்பட்டன. ஆனால், ஆர்.எஸ்.எஸ் வலுவாக உள்ள கடலோர கர்நாடகா (Coastal Karnataka) மாவட்டங்களைத் தவிர வேறெங்கும் இது எடுபடவில்லை.

ஒக்கலிகர்கள் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். மும்பை கர்நாடகா மாவட்டங்களில், லிங்காயத்துகளின் ஒருபகுதி வாக்குகள் காங்கிரஸூக்கு சென்றுள்ளன. பா.ஜ.க.வின் கோட்டையாகக் கருதப்படும் குடகு மாவட்டங்களில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தப்பிப் பிழைத்தது கடலோரக் கர்நாடகா மட்டும்தான்.

வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்த வாக்குகள்!

பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க.விற்கு நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், பெங்களூரு பகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. 2018-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், அங்கு அதிக தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

“40 சதவிகிதம் சர்க்கார்” என்ற பிரச்சாரம் கர்நாடகா முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், படித்த பிரிவினர் வாழும் பெங்களூரு போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதை பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. “பா.ஜ.க தனது பிரச்சாரங்களை நகர்ப்புறத்தில் வீச்சாக கொண்டுசேர்த்துள்ளது” என்ற பொதுவான காரணத்தைத் தாண்டி பெரும்பாலான கணிப்பாளர்களால் இதை விளக்க முடியவில்லை.

பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கோ, வளர்ச்சி குறித்த வாய்ச்சவடால் அரசியலுக்கோ எந்த மக்கள் பிரிவினர் பலியாகிறார்கள் என்பதை ஆராயாமல் இதற்கு விடை காண முடியாது. அதிலும் “லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் வாக்குவங்கி” என்று சாதிரீதியாக மட்டுமே பார்த்தால் நிச்சயம் பா.ஜ.க.வின் தோல்வியைப் பரிசீலிக்க முடியாது.

கர்நாடகத் தேர்தல் சாதிய – மத ரீதியான பிரச்சினைகளைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகளை எதிரொலித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்போது மட்டுமே பா.ஜ.க.வின் தோல்வியையும் காங்கிரஸின் வெற்றியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மிகப்பெரும் கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளைவிட, கர்நாடக தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாக எடைபோட்டது ஓர் சிறிய கன்னட செய்தித்தளமான “ஈ-தினா” (eedina.com)வின் கருத்துக்கணிப்பாகும்.

படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது

ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில் அது வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் 132 முதல் 140 இடங்களைப் பெறும் என்றும், பா.ஜ.க. 57 முதல் 65 இடங்களைப் பெறும் என்றும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 19-25 இடங்களுக்குள் பெறும் என்றும் கணித்திருந்தது. ஏறத்தாழ தற்போதைய முடிகளுக்கு நெருக்கமான கணிப்பாக இதுவொன்றுதான் இருக்கிறது.

“இக்கணிப்புகள் தொலைபேசி மூலம் நடத்தப்படாமல் நேருக்கு நேர் மக்களிடம் உரையாடுவதன் மூலம் பெறப்பட்டது” என்கிறார் ஈ-தினாவுக்கு வழிகாட்டியாக இருந்த யோகேந்திர யாதவ்.

மேலும், இக்கருத்துகணிப்பு மக்களின் வர்க்க நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில் நடத்தபட்டதுதான் சிறப்புக்குரிய விசயம். அனைத்து சாதிகளிலும் உள்ள மக்கள் எந்த வகையான பொருளாதார நிலையில் உள்ளவர்கள் என்பதை இக்கருத்துக்கணிப்பு மிகத்தெளிவாக பதிவுசெய்தது. அது பல முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டியது.

அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெரும்பளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் ஈ தினாவின் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்றதில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவும் ஊதியம் பெறுவோரில் குறைவானர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் 4 சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லீம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈ-தினா கருத்துக்கணிப்பின் துல்லியம், அதன் ஆய்வு எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது என்பதையே காட்டியுள்ளன. அந்த உண்மை, மதவெறியைத் தாண்டி வர்க்கப் பிரச்சினைகள்தான் தேர்தலில் எதிரொலித்துள்ளன என்பதையே காட்டுகின்றன.

தற்போது பா.ஜ.க தனது அடித்தளத்தை தக்கவைத்திருக்கும் கடலோரக் கர்நாடகத்தில்கூட நீண்டகாலமாக முஸ்லீம்களின் பொருளாதார வளர்ச்சியை, மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராகக்காட்டி நீண்டகாலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் செயல்பட்டுவந்ததன் விளைவாக பா.ஜ.க வென்றிருக்கிறது.

அதேநேரம், ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், முஸ்லீம்களுக்கு இந்து கோயில்களை கூற்றி கடைவைக்க அனுமதி மறுப்பு போன்ற விவாகரங்களில் ஏழை – எளிய மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான உணர்வே பிரதிபலித்தது என்பதை பல ஊடகங்களின் பேட்டிகளும் காட்டின.

திப்பு சுல்தானுக்கு எதிரான பிரச்சாரம், இடஒதுக்கீட்டுச் சலுகை அனைத்தையும் தாண்டி பழைய மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர்களின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு விழுந்ததற்கு காரணம், ஒக்கலிகர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள். “குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகத்தில் திணிப்பதன் மூலம் கர்நாடக பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பா.ஜ.க அழிக்கிறது” என்ற காங்கிரஸின் பிரச்சாரமே ஒக்கலிகர்களின் காங்கிரஸ் ஆதரவுக்கு அடித்தளம்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரூ.3,000-ம், பட்டயதாரிகளுக்கு ரூ.1,500-ம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக கொடுப்பது போன்ற வாக்குறுதிகள் ஏழை எளிய மக்களை காங்கிரஸின் பக்கம் வென்றெடுத்தன. (இந்த வாக்குறுதிகளெல்லாம் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் என்பவரால் திட்டமிட்ட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன என்பது முக்கியமானது)

மாறாக, வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்களுக்காக பா.ஜ.க அறிவித்த மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் (யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு); தினமும் அரை நந்தினி பால், ஐந்து கிலோ சிறுதானியம் போன்றவை ஏழை மக்களால் புளுகு மூட்டைகளாகவே அணுகப்பட்டன. மாநிலத்தில் யூனிஃபார்ம் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களின் பாதுகாப்பிற்கு பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் நகர்ப்புற வாக்களார்களை கவர்ந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

பொருளாதார அம்சங்களின்றி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்போம் என்ற வாக்குறுதி கன்னட மக்களின் இந்தி எதிர்ப்புணர்வையும், மேகேதாட்டு அணை கட்டும் வாக்குறுதி இனவெறியையும் தூண்டிவிட்டது அரசியல் ரீதியில் காங்கிரஸுக்கு வலுச்சேர்த்துள்ளது.

மேலும், “கர்நாடகத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது” என்று சோனியா காந்தி பேசிய விவாகரத்தில், “கர்நாடகம் என்ற ஒரு மாநிலத்திற்கு இறையாண்மை என்பதன் மூலம் காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறது” என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரம் பா.ஜ.க.வுக்கு எதிராகவே முடிந்துள்ளது. “ஒரே பாரதம்” என்ற காவிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு கர்நாடகம் பலியாகவில்லை என்பதன் நிரூபனங்களே இவை.

கர்நாடகத்தின் தேர்தல் வெற்றிகள், “மோடி என்ற பிம்பம், இந்துத்துவ அரசியல், இந்திய தேசியவாதம்” ஆகிய பா.ஜ.க.வின் அஸ்திரங்கள் பசுவளைய மாநிலங்களில் வேண்டுமானல் செல்லுபடியாகலாம், தென்னிந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை மட்டுமின்றி, வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் நாளுக்கு முற்றிவருவதையும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல உழைக்கும் மக்கள் புழுங்கிவருவதையும் சேர்த்தே காட்டுகின்றன.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

தேர்தலுக்காக இதுபோன்ற கவர்ச்சிவாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசினாலும், தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடாத காங்கிரஸ், நடைமுறையில் அதை அமலாக்குவது குதிரைக் கொம்பே. பேருக்காக சிலவற்றை அமலாக்கினாலும், வேறு பல துறைகளில் தீவிர மறுகாலனியாக்கத்தை அமல்படுத்தவே முற்படும். கொதித்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் அப்போது காங்கிரஸுக்கு எதிராக திரளுவதும், அதை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதும் நிச்சயம்.

இன்னொருபக்கம், தான் ஆட்சியில் இருந்ததைவிட இனிமேல்தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தும், மென்மையான இந்துத்துவப் போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸ், ‘இந்துக்களின் மனது புண்படாமல்’ அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதும் கேள்விக்குறி!

மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் இந்துத்துவ பாசிசத்தையும் வீழ்த்தும் பாதை தேர்தலுக்கு வெளியே வர்க்கப் போராட்டக்களத்திலும் மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் உள்ளது. கர்நாடக உழைக்கும் மக்களை அதை நோக்கி வழிநடத்திச் செல்ல வேண்டியது புரட்சிகர சக்திகளின் பொறுப்பாகும்.

ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்
14-05-2023