ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!

பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

டந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த தொடர் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். போராட்டம் தீவிரமாவதை உணர்ந்த அரசு அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள், துறைசார்ந்த அமைச்சர் நேரில் வந்து வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கான பணி நிரந்தர ஆணையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராடினர். அதன் விளைவாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களை சந்தித்தார்.

வழக்கம்போல ”10 நாட்களில் உங்கள் பிரச்சினைகள் முடித்து வைக்கப்படும்” என்று கூறியதோடு துறைசார்ந்த நடவடிக்கையையும் உடனே மேற்கொள்வதாக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி தற்காலிகமாக ஆசிரியர்களின் போராட்டத்தை திரும்பப்பெற வைத்தார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ”நாங்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோம். எங்களுக்குரிய அரசுப்பணியை வழங்காததோடு மீண்டும் எங்களுக்கு ஒரு போட்டி தேர்வு வைத்து அதில் தேர்ச்சிபெற்றால்தான் அரசுப்பணி என்பது எந்த வகையில் சரியாகும். நாங்கள் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதியபோது இதுபோன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. அதன்பின் 2018 ஆம் ஆண்டுதான் ஆசிரியர் தகுதி தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த மாற்றங்கள், 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு எப்படி பொருந்தும்”.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


மேலும், “இந்த பிரச்சினையை இதற்கு முந்தைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அப்போதைய எதிர்கட்சி தலைவரும் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், அவருடைய தேர்தல் வாக்குறுதி 177-ல் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு தேவையற்றது என்றும் அவர்களுக்கான அரசுப்பணியை வழங்க திமுக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறியிருந்தார்” என்று அந்த ஆசிரியர் கூறினார்.

”2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-இல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு 2013-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற பலவிதமான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை” என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.


படிக்க: “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?


இப்படி தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தங்களுடைய தற்காலிக பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல வழிகளில் அன்றாடம் போராடி வருகின்றனர். அப்படி போராடும்பட்சத்தில் நூறு இருநூறு பேரை மட்டும் அவ்வப்போது பணிக்கமர்த்தி போராட்டத்தை தணிய வைக்கிறது அரசாங்கம்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான். பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.


சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க