கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

0

மீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135-இல் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. யார் முதலமைச்சர் ஆவது என்ற பிரச்சினையிலும் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டு, குதிரை பேரத்துக்கான கதவுகளும் தற்சமயம் அடைக்கப்பட்டு விட்டன. முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்றுக்கொண்டார்; மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கர்நாடகா தேர்தலில் பா.ஜ‌.க அடைந்த தோல்வி, பா.ஜ.க எதிர்ப்புணர்வு கொண்ட அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களில் “தெற்கு பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டது” (The South Rejects BJP), “பா.ஜ.க அல்லாத தென்னிந்தியா” (BJP Mukt Dakshin Bharat) போன்ற முழக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பா.ஜ‌.க-வின் தேர்தல் தோல்வி என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். ஆனால், இதை மதவெறி அரசியலின் – இஸ்லாமிய வெறுப்பு இந்து முனைவாக்க அரசியலின் – ஒட்டுமொத்த தோல்வியாகப் பார்க்க முடியுமா என்பதுதான் தற்போது எழும் கேள்வி. இதற்கான விடையை அறிந்து கொள்ள கர்நாடக தேர்தல் முடிவுகளை ஆழமாக நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.


படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


கடந்த 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஓராண்டு கழித்து “ஆப்ரேஷன் கமலா” மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது பா.ஜ‌.க. அப்போது காங்கிரஸ் கட்சி 38.04 சதவிகித வாக்குகளைப் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது; இது பா.ஜ.க பெற்ற வாக்குகளை விட 1.5 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல, மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.36 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

தற்போது முடிவடைந்த 2023 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலை விட 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்று மொத்தம் 43 சதவிகித வாக்குகளை அறுவடை செய்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 5 சதவிகித வாக்குகளை இழந்து, கடந்த தேர்தலில் தான் பெற்ற 37 தொகுதிகளை விட 18 குறைவாகப் பெற்று, மொத்தம் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 104 தொகுதிகளை விட 40 தொகுதிகள் குறைவாகவே வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமோ அதே 36 சதவிகிதத்தில் தான் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் படி பார்த்தோமேயானால், கடந்த 2018 தேர்தலில் பெற்ற 1.32 கோடி வாக்குகளை விட 8 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று, இந்த 2023 தேர்தலில் மொத்தம் 1.40 கோடி வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது.

கடந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற வாக்கு சதவிகிதங்களை ஆராய்ந்தோமேயானால், 1989-ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதத்தில் ஒரு நேர்கோட்டு வளர்ச்சியைக் காண முடியும். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் 4.14 சதவிகித வாக்குகள் பெற்றிருந்த பா.ஜ.க, 1994-ஆம் ஆண்டில் 16.99 சதவிகித வாக்குகளையும், 1999-ஆம் ஆண்டில் 20.69 சதவிகித வாக்குகளையும், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் 28.33 சதவிகித வாக்குகளையும், 2008-ஆம் ஆண்டில் 33.86 சதவிகித வாக்குகளையும், 2018 மற்றும் 2023 தேர்தல்களில் 36 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.

பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அதன் சமூக அடித்தளம் பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பதைத்தான் மேற்கண்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 1990-களின் பிற்பகுதியில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல 2023 தேர்தலில் பா.ஜ.க தோல்வியுற்றதற்கும் லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது ஒரு காரணம் தான். ஆனால், பா.ஜ.க தனது மதவெறி அரசியலால் லிங்காயத் நெருக்கடியை காங்கிரசை விட சுலபமாக கையாண்டுள்ளது.


படிக்க: கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!


1989 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜனதா கட்சியை தோற்கடித்தது; வரலாறு காணாத அளவிற்கு 178 இடங்களில் வெற்றி பெற்று, 43.76 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது காங்கிரஸ். அப்போதைய முதல்வராக இருந்த லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வீரேந்திர பாட்டீல் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜிவ் காந்தியால் நீக்கப்பட்ட பின்னர் லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது காங்கிரஸ். 1994 தேர்தலில் 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று வெறும் 34 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதேபோன்றதொரு சூழலை 2023 தேர்தலில் தற்போது பா.ஜ.க எதிர் கொண்டது. லிங்காயத்துகளின் செல்வாக்கிற்கு உரியவரான எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டிருந்தார். மற்ற லிங்காயத்து தலைவர்களான ஜெகதீஷ் ஷட்டர், லக்ஷ்மன் சவதி ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், கிட்டூர் கர்நாடகா மற்றும் கல்யாண கர்நாடகா ஆகிய லிங்காயத்துகள் பெரும்பான்மை வகிக்கும் பகுதிகளில் பா.ஜ.க வெறும் 3.5 சதவிகிதம் மற்றும் 2.6 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே இழந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்ததால் லம்பானி மற்றும் மடிகா சமுதாய மக்களின் வாக்குகளை இழந்ததும் இப்பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு ஒரு கூடுதல் காரணமாகும். லம்பானி சமுதாய மக்களின் வாக்குகள் 63 தொகுதிகளில், அதிலும் குறிப்பாக வட கர்நாடகத்தில், பா.ஜ.க-விற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட லிங்காயத்து தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் பா.ஜ.க-வில் இருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார். ஷட்டருக்கு எதிராக ஷட்டரின் முன்னாள் அபிமானியும் அதே லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருமான மகேஷ் தெங்கினகை (Mahesh Tenginkai) பா.ஜ.க களம் இறங்கியது. தெங்கினகை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லிங்காயத்துகள் பா.ஜ.க-வை விட்டு விலகவில்லை என்பதற்கு இதுவொரு கூடுதல் சான்றாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. உடுப்பியில் ஹிஜாப் விவகாரத்தை பற்றவைத்த யஷ்பால் சுவர்ணா அமோக வெற்றி பெற்றுள்ளார். திப்பு சுல்தான் ஆட்சியின்போது தலைநகரமாக இருந்த ஸ்ரீரங்கப்பட்டணாவில் திப்புவிற்கு எதிராக விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டு அங்கேயும் கடந்த 2018 தேர்தலை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளது பா.ஜ‌.க.

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான தட்சிண கன்னடா பகுதியில் உல்லால் தொகுதி தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும், பெற்ற வாக்குகள் சற்று குறைந்தாலும், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதீத அளவில் இந்துத்துவா பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட கிட்டூர் கர்நாடகாவின் விஜயபுராவிலும் பா.ஜ.க வென்றுள்ளது.


படிக்க : தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!


எனவே, இத்தேர்தலில் பாஜக தோற்றிருக்கலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலின் தோல்வியாக இதை கருத முடியாது. தேர்தல் புள்ளி விவரங்களும், இந்துத்துவ மையங்களில் பா‌.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன. முறைகேடான பா.ஜ.க ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பின் காரணமாகவே தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

மென்மையான இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சியோ மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தும் போது நெருக்கடியில் சிக்கும். அந்நெருக்கடி, பா.ஜ.க இன்னும் அதி தீவிர மதவெறி அரசியலை முன்வைத்து ஆட்சி கட்டிலில் அமர துணை புரியும். கர்நாடகத்தில் இன்னும் அதிக அளவில் இந்து முன்னவாக்க மையங்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வால் உருவாக்கப்படும். ஆகவே, காங்கிரசின் வெற்றியில் புளகாங்கிதம் அடையாமல், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு எதிராக மக்களை அமைப்பாக்கும் பணியில் முற்போக்கு – ஜனநாயக – புரட்சிகர சக்திகள் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மட்டுமே பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.


பொம்மி
செய்தி ஆதாரம்: தி நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க