ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

“பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று பல்கலைக்கழகம் விளக்கம் கேட்கிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும்.

0

ஜூன் 16 அன்று, டெல்லியின் தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஏ.யூ) முன்னறிவிப்பின்றி நடந்த உதவித்தொகை குறைப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நான்கு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சக ஊழியர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழகத்தின் நலனுக்கு எதிராகவும் மாணவர்களைத் தூண்டி விட்டதாக இந்த நால்வர் மீது பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

37 ஆண்டுகாலமாக இருக்கும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) ஒரே சாதனையாகக் கருதப்படும் தெற்காசியப் பல்கலைக்கழகம், தெற்காசியப் பிராந்தியத்தில் சர்வதேச சட்டக் கல்வி பயில முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும், முதுகலை பட்டப்படிப்பிற்கு ஒவ்வொரு துறையிலும் 15 இந்திய மாணவர்கள் மற்றும் சார்க் கூட்டமைப்பின் மற்ற ஏழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், முதுகலை மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹ 5,000-தில் இருந்து ₹ 3,000-மாகக் குறைக்கப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து எஸ்.ஏ.யூ மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். உதவித்தொகையை ₹ 7,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோரினர். மேலும், பல்கலைக்கழகத்தில் சட்டரீதியாக அமைக்கப்படும் குழுக்களில், குறிப்பாகப் பாலின உணர்திறன் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குழுக்களில் போதுமான மாணவர் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பல்கலைக்கழகம் செவிசாய்க்க மறுத்ததால் போராட்டம் தொடர்ந்தது. அதே ஆண்டு அக்டோபர் 13 அன்று, பல்கலைக்கழகத்தின் தற்காலிக தலைவர் (Acting President) அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசை வளாகத்திற்குள் வரவழைத்தது பல்கலைக்கழக நிர்வாகம். தலைவர் (பிரசிடென்ட்) என்பது துணை வேந்தருக்கு நிகரான பதவியாகும்.


படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!


பல்கலைக்கழக வளாகத்தினுள் போலீசை அழைக்கும் முடிவை எதிர்த்து 13 பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் எழுதினர். மீண்டும், நவம்பர் 1 அன்று, பேராசிரியர்கள் குழு ஒன்று தற்காலிக தலைவர், தற்காலிக துணைத் தலைவர் மற்றும் தற்காலிக பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிசெய்யுமாறு வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, நவம்பர் 4 அன்று, ஐந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க (வெளியேற்றுதல் / இடைநீக்கம் செய்தல்) பல்கலைக்கழகம் முடிவு செய்தது. 15 ஆசிரிய உறுப்பினர்கள் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்து பல்கலைக்கழகம் தொடர்பான அனைவருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினர்.

இதனிடையே, நவம்பர் 5 அன்று மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். நவம்பர் 7 முதல் அது காலவரையற்ற உண்ணாவிரதமாக மாறியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பல மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களில் பலருக்கு இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் மிகவும் குறையத் தொடங்கியது. சில மாணவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

நவம்பர் 22 அன்று உண்ணாவிரதத்தின் போது, பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்த ஐந்து மாணவர்களில் ஒருவரான அம்மார் அகமது (Ammar Ahmad) மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஜனவரி 17, 2023 வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அம்மார் அகமதுவின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியினை ஏற்றுக் கொண்டது. அவர் தற்போது வரை பேச்சாற்றல் பாதிக்கப்பட்டு, சுயமாக எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

மாணவர்கள் போராட்டம் 2022 டிசம்பரில் குளிர்கால விடுமுறை தொடங்கியதாலும் பல்கலைக்கழக வளாகத்தை சாணக்கியபுரியில் இருந்து மைதான்கரிக்கு மாற்றும் பணி தொடங்கியதாலும் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ஆசிரிய உறுப்பினர்களுக்குக் காரணம் கேட்கும் குறிப்பாணைகள் (show-cause notice) வழங்கப்பட்டன. டிசம்பர் 30, 2022 தேதியிட்ட ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணையில், “பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று விளக்கம் கேட்கப்பட்டது.


படிக்க: மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!


மே 19, 2023 அன்று, இந்த போராட்டத்தில் பேராசிரியர்களின் பங்கு குறித்து விசாரிக்கப் பல்கலைக்கழகம் ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. அக்குழு அதே நாளில் 132 முதல் 246 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு பேராசிரியர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தியது. உண்மை கண்டறியும் குழுவின் முன்பாக அமர்ந்து பதிலளிக்க பேராசிரியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், ஜூன் 16 அன்று நான்கு பேராசிரியர்கள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த இடைநீக்க உத்தரவில் எந்த குற்றச்சாட்டும் குறிப்பிடப்படவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட காலக்கெடு குறித்தும் அதில் குறிப்பிடப்படவில்லை.

“நான்கு பேரை மட்டும் குறிவைத்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்காக நாங்கள் நிர்வாகத்திடம் பேச முயன்றோம்” என்று இடைநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களில் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் கூறினார்.

மற்றொரு பேராசிரியர் “இடைநீக்க கடிதத்தில் நடவடிக்கைக்கான சரியான காரணத்தைப் பல்கலைக்கழகம் வழங்கவில்லை. தவறான நடத்தை என்ன என்பதை அவர்கள் எங்களிடம் சொல்லவில்லை. (இப்பிரச்சினை குறித்து) அக்டோபரில் 13 பேர் நிர்வாகத்திற்கு எழுதினார்கள்; நவம்பரில் 15 பேர் எழுதினார்கள். ஏன் நான்கு பேர் மீதுமட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.

பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும். இருப்பினும், தெற்காசியப் பல்கலைக்கழகம் இதை ‘சட்டவிரோதமானது’ என்று கருதி அதற்கு விளக்கம் கோருகிறது. பாசிச இருளால் சூழப்பட்டு ஜனநாயக வெளிகள் விழுங்கப்படுவதையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (JNUTA), கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம், பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநிலத் தளம் – தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் என நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆசிரியா் குழுக்கள் இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க