பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன.

கிழக்கு பதிப்பக உரிமையாளரும், பா.ஜ.க ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டார். ஆதன்தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு மணிப்பூர் பிரச்சினை பற்றி அளித்த பேட்டியில் மோதலைத் தூண்டும் வகையிலும், தலைமை நீதிபதி பற்றி அவதூறாகவும் பேசியதாக கவியரசன் என்கிற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மிக விரைவாக  நீதிமன்றமும் பிணை வழங்கி விட்டது. என்ன பேசினாலும் பத்ரி சேஷாத்ரிகளுக்கு இது எளிதுதானே…

பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை வரவேற்றும், கண்டித்தும் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அம்பை, ராஜன்குறை, காலச்சுவடு கண்ணன், வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட சிலர் இந்த கைது தேவையில்லாதது, கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் அவரது இழிவான, அபத்தமான பேச்சுக்காக வழக்கு போட்டிருக்கலாம், கைது செய்தது தவறு என்கின்றனர். பத்ரியின் பேச்சு இழிவுபடுத்தும் வகையிலான மற்றும் கோமாளித்தனமான கருத்துகளே தவிர வெறுப்பூட்டும் கருத்துகள் இல்லை, எனவே கைது போன்ற நடவடிக்கை தேவையில்லை என்கின்றனர். கருத்துரிமைக்காகவும், மோடி அரசின் அடக்குமுறைகளுக்கெதிராகவும் குரலெழுப்பியவர்களை கைது செய்தது போன்றதுதான் இதுவும் என்கின்றனர். இரண்டையும் சமப்படுத்தி பேசுகின்றனர். அதாவது இவர்களின் ஜனநாயக உணர்வு என்பது பாசிசத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும், விசத்தைக் கக்கும் பாசிஸ்டுகளுக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை வைக்கிறது.


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


பத்ரி சேஷாத்ரியின் அந்த குறிப்பிட்ட பேட்டி முழுக்கவே பார்ப்பன சாதித்திமிரும், இந்துமதவெறியும்தான் வழிந்தோடுகிறது. தமிழர்கள் பொறுக்கிகள் என்பதாகட்டும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வக்கிர நகைச்சுவையோடு பேசுவதாகட்டும், பாதிக்கப்பட்ட குக்கி மக்களை இழிவுபடுத்தி அவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள், அவர்கள் மைத்திக்களைக் கொன்றார்கள் அதனால் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரமே இல்லாமல் பேசுவது, இராணுவம் பெண்களை வல்லுறவு செய்ததை ஒன்றும் பெரிய விசயமில்லை என்கிற தொனியில் பேசுவது, எதிர்க்கட்சிகளை, தலித் இயக்கங்களை, முற்போக்கு இயக்கங்களை, முற்போக்கு நபர்களை இழிவாக சித்தரித்து பேசுவதாகட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி பேசுவதாகட்டும் பத்ரியின் தடித்த வார்த்தைகளும், உடல்மொழியும் ஒரு பாசிஸ்டுக்குரியதே.  இந்த பத்ரிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நான் இப்போது அமெரிக்காவில் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அன்றே பேசியவர்…

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பல் எப்படி சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பாக இஸ்லாமியர்களைப் பற்றி வெறுப்பை விதைக்கிறதோ, அவர்கள் மீதான தாக்குதலையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகிறதோ அதே போல வெறுப்பூட்டும் வகையில்தான் பத்ரியின் பேச்சும், கருத்துகளும் உள்ளது. இங்கு எழும் கேள்வி ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பலுக்கு வழங்கப்படும் கருத்து சுதந்திரம் எங்கு போய் முடிந்துள்ளது என்பதைத்தான். நாம் இதை வடமாநிலங்கள் முழுவதிலும், தற்போது ஹரியானாவில் நடைபெறும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கலவரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பாசிஸ்டுகளின் கலவரங்களும், சிறுபான்மையினர் மீதான படுகொலைகளும் எப்படி இயல்பு நிலையாக்கப்படுகின்றதோ, அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன. ஜனநாயகம் என்ற பெயரில் பாசிசக் கருத்துகளையும், நடவடிக்கைகளையும் அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் திசையில்தான் கொண்டு செல்லும். பாசிசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமே வழிவகுக்கும். ஜனநாயகத்தின் பெயரால் பாசிசக் கருத்துகளையும் அனுமதிக்கலாம் எனும் சில அறிவாளிகளது கருத்து பாசிசத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதை நோக்கியே இட்டுச் செல்லும். பாசிசம் வெற்றியடைந்துவிட்டால் அழுது புலம்புவதையும், ஓடி ஒளிந்து கொள்வதையும் தவிர இவர்களுக்கு வேறுவழியிருக்காது. எனவே பாசிசக் கருத்துகளுக்கு சுதந்திரமளிப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது என்பதில் தெளிவுடனும், உறுதியுடனும் நிற்போம்! பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க