ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பற்ற வைத்த நெருப்பு இன்றுவரை மணிப்பூரில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஹரியானாவிலும் மதகலவரங்களை அரங்கேற்றி இருக்கின்றனர் காவி கும்பல்கள். நூஹ் மாவட்டத்தில் தற்சமயம் எரிக்கப்பட்ட கார்களும், சூறையாடப்பட்ட கடைகளும் தீக்கிரையாக்கப்பட்ட மசூதிகளும் தான் எஞ்சி இருக்கின்றன. இதுவரை கலவரத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு போலீசு படையினரும் அடங்குவர்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட மதக்கலவரம்!
ஆர்.எஸ்.எஸ்-இன் சங்கபரிவாரத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தின் மேவாத் பகுதியில் பிரஜ்மண்டல் ஜலபிஷேக யாத்திரையை ஜூலை 31 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாத்திரை நல்ஹட் சிவன் கோவிலில் இருந்து ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோவிலையும் அதன்பிறகு புன்ஹானா கிருஷ்ணர் கோவிலையும் அடைந்து ஊர்வலம் நிறைவடையும்.
இந்த மத ஊர்வலம் திட்டமிட்டே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான நூஹ் நகரின் வழியாக செல்கிறது. இப்பகுதியை அடைந்த பிறகு காவிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக, “மோனு மானேசர் ஜிந்தாபாத்”, “ஹிந்து மத துரோகிகளை சுட்டுக்கொள்வோம்” என்று முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர். இந்த மோனு மானேசர் என்பவன் தன்னைப் ‘பசு பாதுகாவலர்’ என்று கூறிக்கொண்டு முஸ்லீம்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துபவன். இதனையடுத்து, மோனு மானேசரின் மீது ஆத்திரத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல் வீசினர். இதன்பிறகு இருதரப்பினருக்கிடையில் மோதல் வெடித்துள்ளது.
இதில் காவிக் குண்டர்கள் வாள், தடிகள் மற்றும் குறிப்பாக துப்பாக்கிகளோடு ஊர்வலத்தில் பங்கேற்று இருக்கின்றனர். காவிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீசு படையினர் கொல்லப்பட்டனர். இதுநாள் வரையில் தடிகளை பயன்படுத்தி வந்த காவிகள் இன்று துப்பாக்கிகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதன் பொருள் என்ன? இதன் பொருள் காவிகள் துப்பாக்கிகளால் தான் இனி வரும் ஊர்வலத்தை நடத்துவார்கள் என்பதே. காவிகளின் பலத்தையும் அபாயத்தையும் நாம் இனிமேலும் புரிந்து கொள்ள தவறினால் நமக்கு எஞ்சியிருப்பது மரணம் மட்டுமே.
படிக்க: ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்
நூஹ் மாவட்டத்தை தொடர்ந்து குருகிராம் சோஹ்னா போன்ற பிற பகுதிகளுக்கும் வன்முறை வெடித்தது. குருகிராமில் தான் 22 வயதான இமாம் முகமது சாத் காவி குண்டர்களால் கொல்லப்பட்டார். நூஹ் மாவட்டத்தில் ஊர்வலத்திற்கு முன்பிருந்தே பதற்றமான சூழல் நிலவியது. இந்த பதற்றமான சூழலுக்கு காரணம் மோனு மானேசர்.
யார் இந்த மோனு மானேசர்?
மோனு மானேசர் தன்னை பசு பதுகாவலன் (கெள ரக்சக்) என்று கூறிக்கொள்கிறான். ஹரியானா அரசின் ‘பசு பாதுகாப்பு’ பணிக்குழுவின் உறுப்பினராக இருக்கிறான். பஜ்ரங் தள் அமைப்பின் பசு பாதுகாவலர் பிரிவின் தலைவன். இந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களை (நசீர் மற்றும் ஜுனைத்) உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளி. ஆனால், இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், இவனுக்கு ஆளும் பா.ஜ.க.வின் ஆதரவு உள்ளது. இவன் மத்திய அமைச்சர்களுடனும் (அமித்ஷா, அனுராக் தாக்குர்) உயர் அதிகாரிகளுடனும் எளிதாக புகைப்படம் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிடுகிறான்.
நசீர் மற்றும் ஜுனைத் கொலை வழக்கில் ராஜஸ்தான் போலீஸ் இவனை தேடி சென்ற போது, ஹரியானா போலீஸ் ராஜஸ்தான் போலீஸிற்கு ஒத்துழைக்காமல் ராஜஸ்தான் போலீஸ் மீதே குற்றப் பத்திரிகையை பதிவு செய்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதிலிருந்தே அவனது செல்வாக்கும் அவன் கைது செய்யப்படாததற்கான காரணமும் விளங்கிவிடும்.
மோனு மானேசர் யூடியூப் சேனலும் முகநூல் பக்கமும் வைத்திருக்கிறான். இந்த பக்கத்தில் இவனும் இவனது கூட்டாளிகளும் பசு கடத்தல்காரர்கள் என ‘சந்தேகிக்கபடுபவர்களை’ (முஸ்லிம்களை) வாகனத்தில் விரட்டி சென்று அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். அடித்து உதைக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இவனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடுவான். இதற்காகவே இவனை இரண்டு லட்சம் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.
படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!
ஜுலை 4, 2021 அன்று ஹரியானாவில் நடைபெற்ற ஹிந்து மகாபஞ்சாயத்தில், “சகோதரர்களே நாம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். எனக்கு லவ் ஜிகாத் செய்கிறவர்களது பட்டியலை கொடுங்க. நானும், என் நண்பர்களும் அவர்களை உதைப்போம். நாங்க போலீசுக்கு பயப்படறவங்க இல்லை. ஏன்னா எங்க பெரிய அண்ணன் அங்க உட்கார்ந்திருக்காரு. அவர் பேர் தேவையில்லை. ஆனா, அவரு எங்க பின்னணியில் இருக்கிறார். எவன் லவ் ஜிகாத் பண்றவன்? எவன் நம்ம பொண்ணுங்களை கிண்டல் பண்றவன் சொல்லுங்க பின்னி எடுத்துவிடுவோம். நாங்க இதுல சமரசமே செய்ய மாட்டோம். நம்ம மதத்தின் மேல கைய வைக்கிறவன் மேல நமக்கு சமரசமே இல்லை. ஒரே வழி உதைக்கிறது தான். பேசுவது பயனளிக்காது. அவங்க உதைபட வேண்டியவர்கள். ஜெய் ஸ்ரீ ராம்!” என்று தனது வெறுப்பு பேச்சை பேசியிருக்கிறான். இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பாஜக அரசு. மேலும் இவன் குறிப்பிடும் பெரிய அண்ணன் அமித்ஷா என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
இதே காவி குண்டன் தான் ஊர்வலத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்டுள்ளான். அதில், “பிரஜ்மண்டல் யாத்திரை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா சகோதரர்களும் இதில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். நானும் கலந்து கொள்வேன்” என்று அழைப்பு விடுத்திருக்கிறான். இந்த வீடியோ வெளி வந்ததிலிருந்து இஸ்லாமிய சமூகத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தின் தொடக்கப்புள்ளி இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரமும் ஆத்திரமூட்டும் வீடியோக்களும் தான்.
பாதிக்கப்பட்டவர்களையே பலிகடாவாக்கும் பாஜக அரசு!
“குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல” கலவரத்தை நடத்த விட்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்று கதையளந்து கொண்டிருக்கிறது மோகன்லால் கட்டார் அரசு. பா.ஜ.க.வின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதால, “மத யாத்திரையில் எத்தனை பேர் பங்கெடுக்கப்பார்கள் என்று முன்பே சொல்லவில்லை. சரியான தகவல் இல்லாததால் நிலைமை கட்டுபடுத்த முடியாததாக மாறியது” என்று கதையளக்கிறார். இந்த கலவரம் நடக்க வேண்டுமென்று பா.ஜ.க.வே விரும்பியிருக்கிறது என்பது தான் உண்மை.
ஏனென்றால், இந்து மத ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? இதனை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உளவுத்துறை குருடாகி விட்டதா? மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை? வீடியோ வெளிவந்த பிறகு பதற்றத்தை தடுப்பதற்கு ஏன் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று இதுபோன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்
அரசே கலவரத்தை வேடிக்கை பார்த்துவிட்டு 144 தடை உத்தரவு, இணைய முடக்கம், துணை ராணுவப் படைகளை அனுப்புவது என்று கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே நடவடிக்கை எடுத்து வருகிறது மோகன்லால் கட்டார் அரசு. ஹரியானா அரசாங்கம் மோதல் நடந்த இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள மாவட்டத்தின் டாரு நகரில் 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளை இடித்திருக்கிறது. ஆகஸ்ட்-6ம் தேதி கல்வீசிய கட்டிடத்தை இடித்திருக்கிறது. ஆனால் இதுவரை துப்பாக்கிகளை உபயோகித்த காவிக் குண்டர்களது வீடுகள் இடிக்கவில்லை; இடிக்கப்படவும் மாட்டாது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ் – பாஜக இதுபோன்ற கலவரங்களை திட்டமிட்டு நடத்தும். இது அவர்களுக்கு தேர்தலில் பயனளித்தாலும் தேர்தலுக்காக மட்டுமே கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தாது. நாஜி ஜெர்மனியில் யூதர்கள் எவ்வாறு கொடுமை செய்யப்பட்டார்களோ அதுபோன்றே இந்துராஷ்ட்ரத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் வதைக்கப்படுவார்கள். இந்த காவி பூதத்தை உழைக்கும் மக்கள் சேர்ந்து விரட்டுவதை தவிர வேறு வழியில்லை.
ஹைதர்