29.09.2023

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்போம்!

மீண்டும் மாபெரும் மக்கள் திரள் இயக்கத்தை கட்டி எழுப்புவோம் !

தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக மற்றும்
கன்னட இனவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம் !

பத்திரிகை செய்தி

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவெறியின் காரணமாக கர்நாடகாவில் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் புகுந்த கன்னட இன வெறியர்கள், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். கன்னட இனவெறியர்கள் செய்த தவறுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பகிரங்க மன்னிப்பு கூறியுள்ளார் . ஒரு நடிகர் என்ற முறையில் அவரிடம் இருக்கக்கூடிய நேர்மையில் குறைந்தபட்சம் கூட ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கோ கர்நாடகத்தில் உள்ள ஏனைய தேசிய கட்சிகளுக்கோ இல்லை.

தமிழ்நாட்டில் ஒன்று பேசுவதும் கர்நாடகாவில் இன்னொன்று பேசுவதுமாக செயல்படும் தேசிய கட்சிகளின் சந்தர்ப்பவாதம் கண்டிக்கத்தக்கது. தேச, மத, இனவெறிக்கு எதிராக எது சரியோ எது நியாயமோ அதை பேச முடியுமா? முடியாதா? அதை விட்டுவிட்டு ஓட்டு பொறுக்குவதற்காகவும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும் ஆர் எஸ் எஸ் – பாஜக திட்டமிட்டு உருவாக்கியுள்ள தற்போதைய இன வெறிச் சூழலை கண்டிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் கர்நாடகத்தில் தயாராக இல்லை. ஏனென்றால் அனைவரும் இனவெறியை தூண்டிவிட்டு குளிர்காயும் சக்திகளே.


படிக்க: காவிரி நீருக்கான போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்!


தமிழ்நாட்டு ஊடகங்களில் திட்டமிட்டு காவிரி பிரச்சினை மிகப் பெரிய அளவில் விவாத பொருளாக்காமல் தவிர்க்கப்பட்டு உப்புச்சப்பு இல்லாத விவாதங்களே நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றன. வலைக்காட்சிகளோ திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் ,காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று அமைதியாக இருக்கின்றன. கன்னட இனவெறியர்கள் செய்வதை விட இது தமிழினத்திற்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

மிகப்பெரிய தேர்தல் கட்சி என்று கூறிக் கொள்ளும் யாரும் காவிரி உரிமைக்காகவும் கர்நாடகாவில் நடைபெறும் திட்டமிட்ட இனவெறி சம்பவங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக சிறு சிறு அமைப்புகளும் இயக்கங்களும் மட்டுமே இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பதும் அறிக்கைகளையும் விடுகின்றன. மதவெறி பாசிசம் தவறு என்றால் ஒரு மாநிலத்தின் உரிமையை மறுக்கும் இந்த இனவெறி தவறல்லவா? ஒரு தேசிய இனத்தின் இன உரிமையை ஒரு மாநில மக்களின் நதிநீர் மீதான முற்றுரிமையை மறுக்கும் கர்நாடக இன வெறியர்களிடம் பணிந்து செல்ல முடியுமா?

காவிரி ஒழுங்காற்று ஆணையம், உச்ச நீதிமன்றம் என யார் உத்தரவிட்டாலும் கட்டுப்பட மாட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள் இன வெறியர்கள் .காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடக வாழ் தமிழர்கள் பலியாடாக்கப்படுவது போல இப்போதும் பலியாடாக்கப்படுகிறார்கள்.இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.


படிக்க: கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!


கர்நாடகாவில் திட்டமிட்டு இனவெறி கிளப்பப்பட்டு கலவரச் சூழல் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில், ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கன்னட இன வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் ஒன்றிய அரசு இருக்கும் என்றால், தமிழ்நாட்டின் நதி நீர் மீதான உரிமையை கர்நாடக அரசும் ஒன்றிய அரசும் மறுக்கும் என்றால் ஒரு மாநிலமாக தமிழ்த் தேசிய இனம் வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது?

ஒரு தேசிய இனத்தின் உரிமையை மற்றொரு தேசிய இனம் அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் சேர்ந்து வாழ்வதில் எவ்வித பயனும் இல்லை என்ற உண்மையை கர்நாடகாவில் இன வெறியைத் தூண்டி வரும் கும்பலுக்கு உணர்த்த வேண்டும். அப்படி இல்லாத வரை மழை பெய்யாத காலங்களில் எல்லாம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் ஒருபோதும் வரப்போவதில்லை. மழை அதிகமாக பெய்யும் போது தமிழ்நாட்டை வடிகாலாக வைத்துக்கொண்டு உரிய காவிரி நீரைத் தராத இந்த அடாவடி செயல்பாடு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

காவிரி நதிநீர் ஆணையத்திற்காக கோ பேக் மோடி இயக்கம் தொடங்கியதைப் போல மீண்டும் ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் தொடங்கப்பட வேண்டும். அந்தப் போராட்டம் காவிரி நதிநீருக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டின் தேசிய சுயநிர்ணய உரிமைகளைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க