சில மீட்டர்களுக்கு மேல் நம்மால் எதையும் பார்க்கமுடியாது என்ற அளவிற்கு மழை கொட்டிக் தீர்க்கிறது. அந்த கனமழையிலிருந்து பாதுகாப்பாக ஒதுக்க ஒரு நிழற்குடை கூட அங்கே இல்லை. கையில் யாரிடமும் குடையில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் மழையில் நனைந்துகொண்டு நிற்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மின்னல் தாக்கலாம் என்ற மிக ஆபத்தான முறையில் மரத்தடியில் நிற்கிறார்கள். இந்த அவல நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம், விருதுநகர் மாவட்டத்தின் சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் நடந்தது.
இந்த பள்ளியில் சுற்றுப்புற 10 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். சிவலிங்கபுரம் கிராமத்தின் சாலையில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சாலையில் இருந்து பள்ளிக்கு செல்ல ஒழுங்கான சாலை வசதியும் இல்லை. மாணவர்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக நிற்க, வெயில் காலத்தில் இளைப்பாற நிழற்குடையும் இல்லை. அதனால் சாலையோரத்தில் ஒரு நிழற்குடை அமைத்துத்தரச் சொல்லி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்த பழைய நிழற்குடையை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லி ஏழாண்டுகளுக்கு முன்னால் இடித்துவிட்டார்கள். ஆனால் புதிய நிழற்குடையை கட்ட அருகில் உள்ள நிலத்தின் பட்டாதாரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்கச் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நீதிமன்றம் என அனைவரின் கதவுகளையும் தட்டிவிட்டார்கள், ஊர் மக்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கடைக்கோடி கிராமங்களில் தங்களது புத்தகப்பைகளில் கனவுகளை சுமந்துத் திரியும் மாணவர்களின் அவலநிலை புரிவதில்லை.
படிக்க: முனகுவது கூட இனி தேசத்துரோகம்!
2012-ஆம் ஆண்டு தாம்பரம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே விழுந்து 7 வயது சிறுமி ஒருவர் இறந்தார். இந்த விபத்திற்கு பிறகுதான் உயர்நீதிமன்றம் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த உரிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால், அது சம்பந்தமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் இந்த ஆண்டு (2023) செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஒரு உயிர் போனால்தான் இந்த அதிகார வர்க்கத்திற்கு உரைக்குமா? ஒரு குறிப்பிட்ட விசயத்தில் அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு முறையும் எளிய மக்களின் உயிர்கள் பலிகொடுக்கப்படவேண்டுமா?
ஒவ்வொரு அதிகாரியும் ஒருவரை மாற்றி ஒருவரை கைகாட்டுகிறார்கள். “அரசு அலுவலகங்களில் ஒரு கோப்பு ஒரு மேசையில் இருந்து மற்றொரு மேசைக்கு செல்லவே நீண்ட காலமாகும்” என்ற சொல்லாடல் இந்திய அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடாத்தனத்தை (Red Tapism) சரியாகவே எடுத்துக்காட்டுகிறது.
கிராமப்புற மாணவர்களின் கல்வி என்பது பள்ளிக்கூடத்தின் உள்கட்டமைப்பையும், ஆசிரியர்களின் திறனையும் மட்டுமே சார்ந்திருக்கவில்லை. கூடுதலாக, வெவ்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள், அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றையும் சார்ந்து தான் இருக்கிறது. பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை, மாணவர்கள் நிற்பதற்கு பேருந்து நிழற்குடை இல்லை, நல்ல சாலை வசதி இல்லை என்பது போன்ற பிரச்சினைகள் கிராமப்புறங்களில் பொதுவான ஒன்றுதான் என்ற அலட்சியப்போக்கு இங்கே நிறைய நபர்களுக்கு உண்டு. ஆனால், எளிய மக்களின் ஒரு சிறு கோரிக்கையும் அவர்களின் மிக அடிப்படையான அவசியமான தேவைகளை பிரதிபலிக்கிறது என்பதை இந்த அதிகாரிகள் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில், இந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களுக்கு முற்றிலும் அந்நியமானவர்கள்.
படிக்க: தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!
ஒரு சிறு நிழற்குடைக்காக கோரிக்கை மனுக்களோடு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து இந்த அதிகார வர்க்கம் தங்களுக்கு எத்தனை அந்நியமானது என்பதை புரிந்துகொள்கிறார்கள். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குறுதிகளும் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் சப்பைக்கட்டுகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருப்பதை புரிந்துகொள்கிறார்கள். இத்தனை மனுக்களுக்கு பிறகும் அலைச்சலுக்கு பிறகும் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு நிழற்குடை வரதாதது ஏன் என்ற மிகவும் எளிய கேள்வியை அந்த கிராமப்புற மக்கள் கேட்கிறார்கள்.
இந்திய ஆட்சியதிகாரம் மறந்தும்கூட ஜனநாயக இல்லாத ஒன்றாக இருக்கிறது என்பதுதான் இதற்கான பதில். ஜனநாயகம் என்பது தேர்தலுக்கு ஒருமுறை ஓட்டுப் போடுவது அல்ல. ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஒழுங்கமைத்துக் கொள்வதும், ஆட்சி செய்து கொள்வதும் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தின் மிக அடிப்படையான தேவைகளையும், சமூக முன்னேற்றத்திற்கான தேவைகளையும் அந்த மக்களே திட்டமிட்டுக்கொள்வதும், அதனை நிறைவேற்றிக்கொள்ளும் அதிகாரம் உடையதாக இருப்பதும் தான் ஜனநாயகம்.
ஒரு குறிப்பிட்ட பகுதியின் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட், டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம், பரந்தூர் விமான நிலையம் போன்ற தங்களுக்கு வேண்டாத நாசகர திட்டங்களை நிராகரிக்கவும் அதிகாரம் படைத்ததாக இருக்கவேண்டும். இந்த வேர்மட்ட ஜனநாயகம் இல்லாத வரையில் ஒரு சிறிய நிழற்குடைக்காவும் சாலை வசதிக்காவும் வருடக்கணக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதை எந்நாளும் மாற்ற முடியாது.
சீனிச்சாமி