கடந்த 17 ஆம் தேதி, செய்யாறு மாவட்டத்தில் மேல்மா, தேத்துறை உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதனை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கினை பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு, அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் ஏவியுள்ளது திமுக அரசு.
விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு இருப்பதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நடவடிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆனால், சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்களை சேர்ந்த ஆறு விவசாயிகள் மீதுதான் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, போராட்டத்தில் முன்னணியில் இருந்த அருள் என்பவர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படவில்லை. அதேபோல், 15 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்வதைப்பற்றியும் எந்த கருத்தையும் திமுக அரசு கூறவில்லை. சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி ஒடுக்கவே தி.மு.க. அரசு தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கிறது.
படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!
கடந்த நான்காம் தேதி, நள்ளிரவு இரண்டு மணியளவில் வீடுகளில் புகுந்தும் போராட்டக் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் போலீசு பலவந்தமாக இழுத்து சென்று கைது கைது செய்ததாக பயத்துடன் விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள். “நைட்டு 2 மணிக்கு வீட்டுக் கதவை ஒடைச்சிக்கிட்டுவந்து என்னை ரூமில பிடிச்சி தள்ளிவிட்டு என் வீட்டுக்காரரை தரதரவென இழுத்துட்டு போயிட்டாங்க” என்று கூறுகிறார் எழிலரசி.
மேலும், “திரும்பவும் 5 போலீசு வந்து உங்க வீட்டுக்காரங்க வேலூர் ஜெயில்லதான் இருக்காங்க. நாங்க அவங்கள ரிலீஸ் பண்றோம்மா; நீ கையெழுத்து போடுமா-ன்னு சொன்னாங்க. நான் கையெழுத்து போடமாட்டேன்னு சொன்னேன். அதுக்கு நீ கையெழுத்து போட்டீனாதான் உங்க வீட்டுக்காரரை ரிலீஸ் பண்ணுவோம்; இல்லைனா உங்க வீட்டை ஜப்தி பண்ணுவோம்; உன்மேலையும் கேசு போட்டு தூக்கிட்டு போவோம்ன்னு சொன்னாங்க” என்கிறார் வேதனையுடன்.
“என் வீட்டுக்காரர் மீது சாராயம் வித்தான்; விபச்சாரம் பண்ணுனானு ஏழு கேசு போட்டுருக்காங்க” என்று குமுறுகிறார் ரேணுகா.
விவசாயிகள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாத பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகளின் போராட்டமே தூண்டுதலின் பேராலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடாது என்பதற்காகவும்தான் நடத்தப்படுவதாக அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார்.
“தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்படும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், வேலு.
மேலும், “வானத்தில், கடலில் தொழிற்சாலைகளை கட்ட முடியாது. மண்ணில்தான் கட்ட முடியும்” என்று திமிரித்தனமாகவும் பேசியுள்ளார். இதற்கு முன்னரும் விவசாயிகளின் போராட்டத்தை மிகவும் கொச்சையாகவும் இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எ.வ.வேலு, “போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு போராட்டத்திற்கு வந்துவிடுகிறார்கள்” என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க : உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!
விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுபவராக அருள் இருப்பதால்தான், அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. இதன்மூலம், அரசின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை என்றால் இதுதான் நிலை என்று எடுத்துக்காட்ட நினைக்கிறது திமுக அரசு. இவ்வாறு பாதிக்கப்படுகின்ற மக்களுடன் களத்தில் இணைந்து போராடும் ஜனநாயக சக்திகளை ஒடுக்கி வருகிறது தி.மு.க. அரசு. மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் அ.தி.மு.க.விற்கு சளைத்தது அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
செய்யாறில் மட்டுமல்ல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விளைநிலங்களையும் அழித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நலத் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது தி.மு.க. அரசு. கார்ப்பரேட் சேவையாற்றுவதில் பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது தி.மு.க என்பதுதான் யதார்தம்.
கதிர்