உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.

த்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தின் விவசாயிகள் மீது பயிர் எச்சங்களை (Stubble) எரித்ததற்காக நடவடிக்கை எடுத்துள்ளது ரவுடி யோகி ஆதித்யநாத் அரசு.

உத்தரப்பிரதேசத்தில் பயிர் எச்சங்களை எரித்ததற்காக 28 விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்தும், 10 விவசாயிகளை கைது செய்தும் உள்ளனர் மகாராஜ்கஞ்ச் மாவட்ட அதிகாரிகள். 50 விவசாயிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது போலீசு. இதுவரை விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பரேலி கோட்டத்தில் மட்டும் விவசாயிகள் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அனுன்யா ஜா, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மூன்று லெக்பால்களை (lekhpal – கிராம கணக்காளர்) பணியிடை நீக்கம் செய்தும் மற்ற லெக்பால்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அனுன்யா ஜா, “பயிர் எச்சங்களை (Stubble) எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு உள்ளது. மேலும் இது தொடர்பாக அரசும் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. பசு காப்பகங்களுக்கு பயிர் எச்சங்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்துள்ளது. இருந்தாலும், பலர் சட்டத்தை மீறுவதால் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதற்கு பதிலாக அதைத் தங்கள் வயல்களின் முகடுகளிலோ அல்லது பொது இடத்திலோ சேகரித்தால், அதை கிராமத் தலைவர் மூலம் பசு காப்பகங்களுக்கு அனுப்பலாம்” என்று கூறினார். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவர்களுக்கு கள யதார்த்தம் எப்படித் தெரியும்?


படிக்க: மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!


“ஒவ்வொரு குவிண்டால் அரிசி உற்பத்திக்கும் மூன்று கிலோகிராம் பயிர் எச்சங்கள் உற்பத்தியாகிறது. எச்சங்களை அழிக்க இயந்திரத்தை வாடகைக்கு எடுப்பது செலவுகளை அதிகரிக்கிறது. இயந்திரங்களைப் பயன்படுத்தினால் ஒரு பிகாவிற்கு (0.619 ஏக்கர்) இயந்திர வாடகையாக 300 ரூபாயும் மற்றும் தொழிலாளர்களுக்கு கூலியாக 700-800 ரூபாயும் செலவழிக்க வேண்டியுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாகத் தான் அமைகிறது. விவசாயிகளுக்கு பயிர் எச்சங்களை அகற்றுவதற்கு குவிண்டாலுக்கு ரூ.100 வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவும் காணாமல் போய்விட்டது” என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

“பயிர் எச்சங்களை எரிக்காவிட்டால் விவசாயிகளுக்கு என்ன வாய்ப்பு உள்ளது? எச்சங்களை அகற்றுவதற்குப் போதுமான இயந்திரங்களை அரசு வழங்கிட வேண்டும். இல்லையெனில், விவசாயிகளுக்கு அவற்றை எரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. விவசாயிகளால் இயந்திரங்களை வாங்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்”

“எச்சங்களை எரிக்கும் விவகாரத்தில் விவசாயிகள் மீது தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். பயிர் எச்சங்களை எரிப்பதால் 8% மட்டுமே மாசு ஏற்படுகிறது. மீதமுள்ள 92% காற்று தொழில்துறையால் மாசுபடுகிறது. ஆனால் அரசாங்கம் அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்று தங்களது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

“நெல் கொள்முதலிலும், அரசு நிர்ணயித்த விலைப்படி நெல்லை வாங்காதவர்கள் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், குவிண்டால் ரூ.1,600-க்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். குவிண்டாலுக்கு ரூ.550 நஷ்டம் அடைந்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்?” என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


படிக்க: விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன்


விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் அரசு இயந்திரம்தான் பயிர் எச்சங்களை அகற்றுவதற்கு விவசாயிகளுக்கு நிதி அளிக்கவும் மறுக்கிறது. இன்னொரு படி மேலே போய், பயிர் எச்சங்களை எரிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிம்-கிசான் சமான் நிதியை (PM-Kisan Samman Nidhi) நிறுத்திவிடப் போவதாக எச்சரிக்கிறது யோகி ஆதித்தயநாத் அரசு.

பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.

விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால்தான் அதிகளவில் காற்று மாசுபாடு ஆகிறது என்று ஒரு பொதுச் சித்திரத்தை வேண்டுமென்றே கட்டமைக்கிறது ஆளும் வர்க்கம். விவசாயிகளுக்கு பயிர் எச்சங்களை அகற்ற இயந்திரம் வழங்காமலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமலும் அரசு தொடர்ந்து விவசாயிகளையே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி வருகிறது. இதுதான் இன்றைய அவலநிலை!


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க