எதிர்க்கட்சிகளே! ராகுல் காந்தி போராளிகளின் பக்கம் இருக்கிறார்! நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?

இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஜால்ரா போடுகின்ற குழப்பக்காரர்கள், ஐயோ தாக்குதல், ஐயோ பயங்கரவாதம் என்று கூவிக் கொண்டிருந்தார்களே! பாவம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

எதிர்க்கட்சிகளே! ராகுல் காந்தி போராளிகளின் பக்கம் இருக்கிறார்! நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?

சில தினங்களுக்கு முன்பு, ‘பேரரசர்’ மோடியின் அரசவைக்குள்ளே நுழைந்த சில பொடியர்கள், வண்ணப் புகைகளை தூவி “சர்வாதிகாரம் ஒழிக” என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள்! வேலையின்மை பிரச்சினையையும் மணிப்பூர் பிரச்சினையையும் அல்லவா அவர்களும் முழங்கினார்கள்?

பேரரசரும் அவர்தம் பரிவாரங்களும் நடுநடுங்கி போய் அல்லவா கிடந்தார்கள்! பல்லாயிரம் கோடிகளைக் கொட்டிக் கட்டியழுத அரசவையிலே உள்ளே பொடியர்கள் எப்படி புகுந்தார்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, நமது கட்சி உறுப்பினர்களைக் கூட பேப்பர், பேனாவை கூட எடுத்து வர அனுமதிப்பதில்லையே!

எத்தனை ஸ்கேனர் இருந்தாலும் போராட்டங்களையும் போராடுவோரையும் தடுக்க முடியுமா என்ன?

ஐயகோ! பேரரசர் தோற்றுவிட்டார், பேரரசு பாதுகாப்பில் ஊறு விளைவிந்துவிட்டது என்றல்லவா எல்லோரும் ஒப்பாரி வைப்பார்கள். இதை எப்படி சமாளிப்பது? எப்போதும் நாம் தானே ட்ரெண்டை உருவாக்குவோம், அதற்கு பின்னால் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஓடி வருவார்களே. என்ன செய்வது என்று பேரரசர் மோடி குழம்பிக் கொண்டிருந்தபோது, வாராது வந்த மாமணியாய் எதிர்க்கட்சிகள் ஒரு புது ரூட்டை எடுத்துக் கொடுத்தன.


படிக்க: நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!


பழம் நழுவி பாலில் விழ அது வாயில் விழுந்தது போல ஆகிவிட்டது பேரரசர் மோடிக்கு. தோற்றுப் போகும்போதெல்லாம் நாட்டின் பாதுகாப்பையே அடமானம் வைத்து தன்னுடைய தலையை காப்பாற்றிக் கொள்ளும் பேரரசருக்கு சொல்லவா வேண்டும்?

நாட்டின் பாதுகாப்பு மோசம் அடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட, நாட்டினைப் பாதுகாக்க வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட, இதோ நானும் நாட்டைதான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேரரசரும் அவர் பரிவாரங்களும் ஊளையிட்டன. ஆக மொத்தத்தில் மீண்டும் மோடி வென்று விட்டார்.

***

பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வண்ணப் புகை குப்பிகளை வீசியவர்கள் வேறு யாரும் அல்ல, இந்த நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க எண்ணும் ஒவ்வொருவரும் தான். புரியும்படி சொன்னால் அவர்கள் நாம்தான்.

வேலையின்மை, மணிப்பூர் பிரச்சனை, சர்வாதிகாரம் ஆகிய தலையாய பிரச்சினைகளை இந்துராஷ்டிரத்தின் மாளிகையில் முழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்.

எவ்வளவு அழகான கலை படைப்பு இது! மக்கள் மகத்தானவர்கள் என்பார்கள். மிகவும் கலைநயம் மிக்கவர்களும் அவர்கள் தான். அவர்கள்தான், விவசாயிகளின் மாபெரும் போராட்டங்களையும் ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் வரை அனைத்தையும் படைத்தார்கள்.

காங்கிரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக வந்திருந்தால் அதை வைத்து மோடி வேறொரு நாடகம் ஆடியிருப்பார் அல்லவா? அதற்காக அவர்கள் பா.ஜ.க. எம்.பி-யை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்திற்குள் இருவர், அதற்கு வெளியே மூவர், தங்களுடைய போராட்டத்தை எவ்வளவு அழகாக அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

அய்யய்யோ பாசிசம் வந்துவிட்டது, கொள்கையை தூக்கி எறியுங்கள்! தேர்தல் கட்சிகளின் கால்களில் சரணடையுங்கள், வேறு வழியே இல்லை என்று ஊளையிட்டுக் கொண்டிருப்பவர்களின் முகத்தில் சாணியை அல்லவா அவர்கள் வீசி இருக்கிறார்கள்?

இதெல்லாம் புரியாமல் தான் எதிர்க்கட்சிகள் தீவிரவாத தாக்குதல் என்று போராடிக் கொண்டிருக்கிறார்களா? ஆம் ஒருபோதும் அவர்களுக்கு புரிய போவதில்லை. சிறியதோ, பெரியதோ மக்கள் போராட்டத்திற்கு முகம் கொடுப்பதை தவிர்க்கும் எந்த ஒரு கட்சியும் புதைக்குழிக்கு போயே தீரும்!


படிக்க: நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!


காங்கிரசு கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியோ, இது ஒரு போராட்டம் என்று வர்ணிக்கிறார். எதிர்க்கட்சிகளே! இந்தியா கூட்டணி கட்சிகளே! இப்போது சொல்லுங்கள் உங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வீர்கள்?

அவர்களாவது பரவாயில்லை, இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஜால்ரா போடுகின்ற குழப்பக்காரர்கள், ஐயோ தாக்குதல், ஐயோ பயங்கரவாதம் என்று கூவிக் கொண்டிருந்தார்களே! பாவம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை வீசிய விவகாரத்தை, அமைப்பு என்ற முறையில் நாம் மட்டுமே சரியாக கணித்தோம்! இதுவே மக்கள் மீதும் மார்க்சியத்தின் மீதும் நாம் வைக்கின்ற நம்பிக்கை.

ஐந்து பேரை கைது செய்து விட்டார்கள், நாளை 5 லட்சம், 5 கோடி பேர் வருவார்கள்! இந்த நாட்டையே அம்பானி அதானிகளுக்கு ஏன் தாரை வார்த்து கொடுத்தாய் என்று பேரரசர் மோடியை கேள்வி கேட்பார்கள். அப்போதும் எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைந்துவிட்டது என்று நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லோரும் சேர்ந்து மக்களுக்காக – நமக்காக போராடியவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிட்டார்கள். இவர்களை நம்பித்தான் ஓட்டு போட்டு, பாசிசத்துக்கு மாற்று வழி சமைப்பதா என்ன?

வந்திருந்த ஐந்து பேரும் இனி வரப்போகும் லட்சம் பேரும் காங்கிரசிற்காக காத்திருக்க போவதில்லை, மக்கள் வருவதற்கான, போராடுவதற்கான சூழலை மோடி உருவாக்கி விட்டார். கலகங்களும் எழுச்சிகளும் நீங்கள் எதிர்பார்க்கின்ற வடிவமைப்புக்குள் மட்டும் நடைபெறுவதல்ல.

நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைந்துவிட்டது என்று நீங்கள் கதறிக் கொண்டிருக்கிறீர்கள்! அதற்கு முட்டுக்கொடுத்து எத்தனை யூடியூப் சேனல்களில் எத்தனை கட்டுரைகளில் அவர்களது ஆதரவாளர்கள் பேசியிருப்பார்கள், எழுதியிருப்பார்கள். உங்களின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி, இப்போது இந்தப் பக்கம் வந்துவிட்டார். ஐயோ! பாவம் நீங்கள் இன்னும் மோடியின் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்!


தோழர் மருது,
மாநில செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube