தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! | மீள்பதிவு | ஸ்டாலின் 146

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

டிசம்பர் 21, உலகில் வேறு எந்தத் தலைவர்களையும் விட முதலாளித்துவத்தால் மிக அதிகமாக தூற்றப்பட்டவரும், அதேபோது உலகம் முழுக்க சுரண்டப்படும் கோடிக்கணக்கான மக்களால் இன்றைக்கும் நேசிக்கப்படுபவருமான தோழர் ஸ்டாலினுடைய 146-வது பிறந்த தினம்.

லெனின் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்ட புரட்சியைக் காப்பாற்றுவது மற்றும் சோசலிசத்தைக் கட்டியமைப்பது ஆகிய மிகப்பெரிய பொறுப்புகள் லெனினுக்குப் பிறகு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவரான தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் சோவியத் யூனியனின் தலைவராக தோழர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல் உலகப்போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் நொறுங்கிக் கிடந்த நாட்டை தோழர் லெனின் உருவாக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை மீண்டும் உயிர்ப்பித்தது. அதன் பிறகு தோழர் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கம் மற்றும் உழவர் வர்க்கத்தின் துணையோடு உலகின் முதலாவது சோசலிச சமுதாயத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்.

தோழர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் சோவியத் மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டன. முதலாளித்துவ நாடுகளில் 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் உலகநாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு நேர்மாறாக சோசலிச சோவியத் யூனியன் இயந்திரத் தொழில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் தங்களது சோசலிசத் தாய்நாட்டிற்காக விருப்பப்பூர்வமாக உழைத்தனர். இன்னொரு பக்கம் கிராமப்புறங்களில் கூட்டுப்பண்ணை அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டு வறுமையும், பாதுகாப்பு இன்மையும் பரிபூரணமாக ஒழித்துக்கட்டப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடிகளால் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் உருவான பாசிசம் மிகப்பெரும் அபாயமாக உலகை அச்சுறுத்தியது. ஹிட்லரும், முசோலினியும் ஐரோப்பாவை விழுங்கிவிட்டு உலகையே விழுங்குவதற்காக களமிறங்கினர். பாசிச ஓநாய்கள் சோவியத் யூனியன் மீது பாய்ந்தன.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்


பாசிசத்தை வீழ்த்தி உலகைக் காப்பதுதான் முதற்கடமை என்ற நிலையில், அந்தப் பொறுப்பை தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் எடுத்துக் கொண்டது. சோவியத் யூனியனை ஹிட்லர் வீழ்த்தி விடுவான், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் கண்ட கனவு சுக்குநூறானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தலைமையில் இரண்டு கோடி சோவியத் மக்கள் தங்களது இன்னுயிரைக் கொடுத்து பாசிச ஹிட்லரை வீழ்த்தி உலகைக் காத்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகெங்கும் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள், சோசலிசப் புரட்சிகளுக்கு தோழர் ஸ்டாலின் செய்த உதவிகள் மகத்தானவை. உலகின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கு நேசக்கரம் நீட்டினார்.

இரண்டாம் உலகப் போரினால் நாடு மிகக் கடுமையாக சிதிலமடைந்திருந்தது. கிராமங்கள், நகரங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாஜிகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களின் துணைகொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்.

தோழர் ஸ்டாலின் காலத்தில் சோசலிசம் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டது என்பதைப் பற்றி சோவியத் யூனியன் சென்று நேரில் பார்த்து ஆய்வு செய்த அமெரிக்க எழுத்தாளர் அன்னா லூயிஸ்ட்ராங் பின்வருமாறு கூறுகிறார். “கடந்த சகாப்தத்தைத் திரும்பிப் பார்க்கும்போது மக்கள் அதனை ஸ்டாலின் சகாப்தம் என்று சொல்லக்கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டைக் கட்டமைத்தனர். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். அந்தக் காலம் முதற்கொண்டு எல்லாவற்றின் மீதும் அவர் முத்திரை பதிந்து இருந்தது.

எனது மேற்குலக நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: அது வரலாற்றின் மிகவும் செயலூக்கமுள்ள சகாப்தங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாக அது இருக்கக்கூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையையே அது மாற்றியது”.

சோசலிச பொருளாதாரத்தில் மட்டுமல்ல, விஞ்ஞானம், கலை இலக்கியம் யாவற்றின் வளர்ச்சியிலும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார், தோழர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சியை சோசலிசத்தை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பது என்ற அம்சத்துடன் இணைத்தார். இதன் மூலம் தனது ஆழமான தத்துவார்த்தப் புரிதலை நடைமுறையில் இணைத்தார்.

முதலாளித்துவச் சுரண்டலை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் கட்சிக்குள் திரிபுவாதம் தலைதூக்கிய காலத்தில் அதனை எதிர்த்து தீவிரமான தாக்குதலைத் தொடுத்தார். திரிபுவாதத்தை எதிர்த்த தோழர் ஸ்டாலினின் விடாப்பிடியான போராட்டம் என்பது உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடையாகும்.

தோழர் ஸ்டாலினுக்குப் பின்னர் வந்த ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான குருசேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் அவரை இருட்டடிப்பு செய்வதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. அவரது நினைவுச் சின்னங்களை அழித்தனர். கிரெம்ளினில் லெனின் நினைவகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை அங்கிருந்து அகற்றி வளாகத்திற்கு வெளியில் புதைத்தனர். இன்னொரு பக்கம் முதலாளித்துவம் அவரைப் பற்றி ‘கொடுங்கோலர்’, ‘சர்வாதிகாரி’ என்று அவதூறு பரப்புவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடானகோடி உழைக்கும் மக்களின் மனங்களில் இருந்து அகற்றி விடலாம், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று பகற்கனவு காண்கிறது.

இதையெல்லாம் தாண்டி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் உள்ளங்களில் தோழர் ஸ்டாலின் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் என்றைக்கும் விட இப்போது தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார். முதலாளித்துவம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி உலகெங்கும் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அழிவுப்பாதையில் இவ்வுலகைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை, பாசிச அடக்குமுறைகள், போர்கள் என உலகம் செல்வதை நாம் கண்ணுறுகிறோம்.


படிக்க : இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ


பாசிசத்தை வீழ்த்தியதிலும், சோசலிசத்தைக் கட்டமைத்ததிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு திரிபுவாதத்தை எதிர்த்த உறுதியான போராட்டத்திலும் மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பை தோழர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார். அதனால், பாட்டாளி வர்க்க ஆசான்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

உலகம் பாசிசத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நெருக்கடியான சூழலில் தடைக்கல்லாக திரிபுவாதம் உழைக்கும் மக்களைக் கவ்விக் கொண்டுள்ளது. ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவையில்லை’ என்று கூறி பாசிசத்திற்கு பாதந்தாங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க