02.02.2024

நேற்று அயோத்தி !
இன்று ஞான வாபி !
தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள்!

பத்திரிகை செய்தி

ஞானவாபி மசூதியின் சுவற்றில் தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள்’ என்று கூறிக் கொண்ட பாசிஸ்டுகள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றமோ, ஞானவாபி மசூதியை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யச் சொல்லி, அந்த மசூதியே இந்து கோயிலின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதாக கூறி, ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக் கடவுளை பூசை செய்யவும் பூசை செய்வதற்கான பூசாரியை நியமிக்க உத்தரவு செய்தும் 31.01.2024 -இல் தீர்ப்பு வழங்கி உள்ளது. இஸ்லாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலாகும் இது. அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் மீது இராமர் கோயில் திறப்பு விழா என்ற வடு மறைவதற்கு முன்பே, இன்னொரு கொடூர தாக்குதல்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 – ஆனது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பு இருந்த வழிபாட்டுத் தலங்களின் நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்துகிறது (பாபர் மசூதி நீங்கலாக). அச்சட்டத்தை மீறித்தான் இன்னொரு அயோத்தி போல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் கரசேவை தொடங்குவதற்கான வழியை நீதிமன்றம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தின் வழியாகவும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் கனவான இந்துராஷ்டிரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

படிக்க : ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

அயோத்தி கோயில் திறப்பு என்பது, இனி சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படப் போவதில்லை. அதன் மூலமாக இனி தங்களுடைய ஓட்டு அறுவடையை மிகப்பெரிய அளவில் ஆர் எஸ் எஸ் – பிஜேபி யால் சாதிக்க முடியாது . அதனால் தான் மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன்மூலம் கலவரம் நடத்தி, இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்து இந்தியாவில் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஞானவாபி மசூதியில் இந்துக்களை வழிபட செய்திருக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

இதன் மூலமாக இஸ்லாமிய மக்கள் மீதான இன்னொரு மிகப்பெரிய கலவரத்துக்கு வித்திட்டு இருக்கிறது நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காகவே இந்த நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் திட்டமிட்டு மறுகட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல.

நீதிமன்றத்திடம் சென்று இனிமேல் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புவோருக்கெல்லாம் இடியாக விழுந்து இருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

படிக்க : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இனியும் இந்த அரசு கட்டமைப்பின் மூலம் நாட்டை மீட்டெடுத்து விட முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டது மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்.

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க