பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமை கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இரண்டாவது முறையாக டெல்லி சலோ போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2020-21 டெல்லி சலோ போராட்டத்தின்போதே பாசிசக் கும்பலை அடிபணிய வைத்த விவசாயிகள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருப்பது பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது.

இதன் காரணமாக போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டும் என்பதற்காக புல்டோசர்கள், முள்வேலி, ஆணி தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைத்து விவசாயிகளை தடுப்பது; கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீரங்கிகள், போராட்டக்காரர்களின் செவித்திறனை பறிக்கக்கூடிய சோனிக் (ஒலி) பீரங்கிகள், துப்பாக்கிச்சூடு மூலம் விவசாயிகளை ஒடுக்குவது உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை விவசாயிகள் மீது தொடுத்துவருகிறது பாசிச மோடி அரசு.

இத்தகைய மனிதத்தன்மையற்ற பாசிச தாக்குதல்களை தொடுத்துவரும் அதேவேளையில் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் நாடகமாடி வருகிறது. அந்தவகையில் நேற்று (15.02.2024) மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் முடிவு எட்டப்படாமல் தோல்வி அடைந்துள்ளது.


படிக்க: பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது


இந்நிலையில் முன்னரே அறிவித்ததுபோல் இன்று (16.02.2024) விவசாயிகள் நாடுதழுவிய கிராமப்புற கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) உட்பட பல விவசாய சங்கங்கள், மோடி அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடுதழுவிய வேலைநிறுத்த மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. எஸ்.கே.எம். விவசாய சங்கத்தின் அங்கமான பாரதிய கிசான் யூனியன் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவை தளமாகக் கொண்ட பாரதிய கிசான் பரிஷத் ஆகிய விவசாய சங்கங்களும் இவ்வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளன.

இதுக்குறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் அமைப்பை சேர்ந்த பவன் கட்டனா, “விவசாயிகள் நாளை (16.02.2024) பண்ணைகளில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும், கொள்முதல் செய்யவும் சந்தைகளுக்குச் செல்லவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்களும் வேலைநிறுத்தத்தில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் பல முக்கிய சாலைகளில் மறியல் போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். மேலும், பஞ்சாபில் பெரும்பாலான மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு மணி நேரம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர்களும் பெண்கள் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் அறிவித்திருந்தன. இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டு அழைப்புக்கு ஆதரவாக பல பத்திரிகையாளர்கள், செயற்பாட்டளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அக்கூட்டறிக்கையில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இந்த முக்கியமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கபட்டுள்ளது.


படிக்க: கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா


இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. மேலும் பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தப்போவதாக சொல்லும் “இந்தியா கூட்டணி”யை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்து இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது அக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை தோலுரித்துக் காட்டுகிறது. பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கு களப்போராட்டங்களே தீர்வு என்பதுதான் இந்த பத்து ஆண்டுகால பாசிச ஆட்சியில் கிடைத்துள்ள அனுபவப் படிப்பினை. எனவே எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை குறைந்தபட்சம் தேர்தலில் வீழ்த்துவதற்குக் கூட மக்களின் கோரிக்கைகளுக்காக களத்தில் இறங்கி போராட வேண்டும்.

இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாசிசக் கும்பல் நாளுக்கு நாள் உழைக்கும் மக்களை பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் சூழலில் பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழியை விவசாயிகள் நமக்கு காட்டியுள்ளனர். அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதாரவாகவும் விவசாயிகள் மீது பாசிசக் கும்பல் தொடுத்துவரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் குரல் எழுப்ப வேண்டியுள்ளது.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க