விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை

கோவையில் பிப்ரவரி 17, 19, 20 ஆகிய தேதிகளில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், அவர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்,
போராட்டத்தை நசுக்கும் ஒன்றிய பாசிச மோடி கும்பலை கண்டித்தும் போராட்டங்கள்!

பிப்ரவரி 13 அன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். தொடக்க நிலையிலேயே விவசாயிகள் மீது பல்வேறு வகையில் அடக்குமுறைகளை ஏவத் தொடங்கியது பாசிச மோடி அரசு. தடுப்பரண்கள் அமைப்பது, சாலையின் குறுக்கே பள்ளங்கள் தோண்டுவது, ஆணிகள் பதிப்பது, செவித்திறனை செயலிழக்க செய்ய அதீத ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்துவது என எதிரி நாடு மீதான போரை நடத்துவது போன்று இராணுவத்தை வைத்து அடக்குமுறையை ஏவியுள்ளது பாசிச மோடி அரசு.

அதனையெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேறிச் சென்ற விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டு, இரப்பர் குண்டுகள் கொண்டு தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல். போராட்ட களத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சிலர் பார்வையிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதனைக் கண்டித்தும், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும் சென்னை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். மதுரையில் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக சக்திகளை கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கோவையில் மக்கள் அதிகாரம் தலைமையில் 17.02.2024 அன்று ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

19.02.2024 அன்று அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அங்கு தோழர்கள் போர்குணத்துடன் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

20.02.2024 இன்று இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (IAL) சார்பாக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு போராட்டத்திலும் கோவை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ராஜன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டங்களை இன்னும் வீச்சாக மக்கள் பங்கேற்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் வீரம்செறிந்த டெல்லி சலோ 2.0 போராட்டத்தை மக்கள் எழுச்சியாக கட்டியமைப்பதே முதன்மையான பணி. இதனை நாடு தழுவிய அளவில் அனைத்து உழைக்கும் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் வீழட்டும்!


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க