தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்

"எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.

“தேர்தலின் போது மட்டும் வரும் வேட்பாளர்கள் பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை” என தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழ மூவக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களின் அடிப்படை வசதியான ரேஷன் கடை, சமுதாயக் கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம், மின் விளக்குகள், மானியத்தில் டீசல், கடலில் தூண்டில் வளைவு என அடிப்படை வசதிகளை கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திடம் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலின் மீது அதிருப்தி அடைந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, கிராம மக்கள் அனைவரையும் கூட்டி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாகும், அதனைத் தொடர்ந்து தங்களின் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை “இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்க்க வராத நீங்கள் இப்போது ஏன் பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளீர்கள்” என திருப்பி அனுப்பியுள்ளனர்.


படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்


”தேர்தலின் போது மட்டுமே எங்கள் கிராமங்களுக்கு வரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு எங்களை துளியும் கண்டுகொள்ளப் போவதில்லை, பிறகு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? வாக்களித்தும் எங்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை” என்று தங்களின் வேதனையை மீனவ மக்கள் வெளிப்படுத்தினர். “எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் திசைவழியைத் தீர்மானிக்கும் தேர்தலாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்கிறார்களோ, அதேபோல் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காத கட்சிகளையும் தேர்தலையும் மக்கள் புறக்கணிக்கவே செய்வார்கள்.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளான புதிய கல்வி கொள்கை, ஜி.எஸ்.டி., தொழிலாளர் நல சட்டம் 2022, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என அனைத்து பாசிச சட்டங்களையும் திரும்பப்பெறுவோம் என்ற வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் தர வேண்டும்.


தமிழ் பிரியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க