வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி

பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

வெப்பம் மிகுதியாக இருந்த மே 22 மதியம் குவாலியர் ரயில் நிலையம் அருகே ஒரு பரிதாபமான காட்சியை மக்கள் கண்டனர். மூன்று சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் ரிக்ஷாவின் அருகே நின்று சத்தமாக அழுது கொண்டிருந்தார். ரிக்ஷாவில் மிகவும் பலவீனமான ஒரு ஆண் இறந்துவிட்டதைப் போல் காட்சியளித்தார்.

ஏராளமான நபர்கள் அவர்களைச் சுற்றித் திரண்டனர். ரிக்ஷாவில் அந்த நபரின் உடலில் உயிரின் தடயங்கள் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தப் பெண் சத்தமாக அழுது கொண்டிருந்தார். அவர் அழுவதைக் கண்டு குழந்தைகளும் அழத்தொடங்கினர். விசாரணையில் இறந்தது அந்த பெண்ணின் கணவரான உத்தர பிரதேசத்தின் பண்டா (Banda) மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஓம் பிரகாஷ் (Om Prakash) என்பது தெரியவந்தது. இவர் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல நாட்களாகியும் குணமடையாத நிலையில், அந்நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் அவர் பணியிடத்தில் இறந்து விடுவதைத் தவிர்க்க அவரை சூளையை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவியான பிரேம்காலிக்கு (Premkali) உதவி செய்ய யாரும் இல்லை. ஆனால் குவாலியர் ரயில் நிலையத்தை அடைவதற்கு எப்படியாவது ரிக்ஷாவை ஏற்பாடு செய்வதில் மிகுந்த தைரியத்தையும் உறுதியையும் காட்டினார் அந்த பெண்மணி. கணவரின் உடலை தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல எந்த நிதியுதவியும் இல்லாமல் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருந்தார்.

இந்த நிலையில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் மிகுந்த இரக்கம் காட்டினார்கள். அவர்கள் அவளுக்கு ஆறுதல் கூறி, உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தனர். மேலும் பிரேம்காலிக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்தனர்.


படிக்க: முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை


சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு குறித்து எழுதிய எழுத்தாளர் பிரேம்காலி வசித்துவரும் நரைனி தொகுதியின் மொஹாத்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் வசிக்கும் குக்கிராமத்திற்குச் சென்றிருந்தார். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமம் அது. அவர்கள் முற்றிலும் நிலமற்றவர்களாகவோ அல்லது மிகச் சிறிய நிலங்களைக் கொண்டவர்களாகவோ உள்ளனர். கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த நாட்களில் கிராமவாசிகளுக்கு தினசரி கூலி வேலை கிடைத்தாலும், கடும் வெப்பமான வானிலை அவர்களை மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆக்குகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கிடைப்பது மிகவும் அரிது. இந்த நிலையில்தான், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் மொத்த தொகையை ஏற்று, பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

கடந்த அக்டோபரில் தனது கணவர் முன்பணமாக ₹5000 பெற்றுக்கொண்டு தன்னையும் தங்களது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குவாலியருக்குப் புறப்பட்டதாக பிரேம்காலி கூறுகிறார்.

தானும் தன் கணவனும் சூளையில் இரவு பகலாக உழைத்ததாக அவர் கூறுகிறார். அங்கு தங்களது வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

பல்வேறு தொழிலாளர்கள் அளித்த தகவலின்படி, 1000 செங்கற்களுக்கு ₹650 கூலி வழங்கப்படுகிறது. ஒரு தம்பதியினர் இரவும் பகலும் உழைத்தால். ஒரு நாளில் ₹1000 சம்பாதிக்க முடியும். ஆனால் உணவு, மருந்து, வருவதற்கு முன்பு பெறப்பட்ட முன்பணம் போன்றவற்றை கழித்த பின்னரே தொழிலாளர்களின் கைகளில் கூலி வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பிடித்த பின்னரும் கூட, பிரேம்காலி புறப்படும் போது கணிசமான தொகையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கணக்குகள் மைனஸ்-இல் உள்ளதென கூறி சூளையை விட்டு வெளியேறும் முன் அவரும் அவருடைய கணவரும்தான் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரது தாயாருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்திருக்கிறது. அதில் சூளை உரிமையாளர் / மேலாளருக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் அவரது மகன் திரும்ப முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரால் பணத்தைத் திரட்ட முடியவில்லை.

எனவே பிரேம்காலி இறக்குந்தருவாயில் இருந்த அவரது கணவர் மற்றும் மூன்று சிறு குழந்தைகளுடன் செங்கல் சூளையில் இருந்து பணம் எதுவும் இல்லாமல் வெளியேறினார்.


படிக்க: மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!


இதற்கு முன்னதாக பிரேம்காலியின் நெருங்கிய உறவினர் ஒருவர் செங்கல் சூளையில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓம் பிரகாஷின் சகோதரர் லவ்-குஷ், பல ஆண்டுகளாக செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நோய் அவரது வேலையுடன் தொடர்புடையது என்ற வலுவான உணர்வு பிரேம்காலிக்கு உள்ளது.

பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். செங்கல் சூளைகளுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் முழு வாழ்க்கையும் அங்கு செங்கற்கள் செய்தே முடிந்து விடுகிறது.

இதற்கிடையில் பிரேம்காலிக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் மோசமானவை. அவருக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் இல்லை ஆனால் அவர் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியுள்ளது. மூன்று குழந்தைகளும் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாக உள்ளனர். லேபர் கான்ட்ராக்டர் அவரிடம் ஒரு சிறிய தொகையை கொடுத்துள்ளார்; புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த கான்ட்ராக்டர் பணம் வழங்கினாலும் அது பிரேம்காலியின் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்காது. வித்யா தாம் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவரது குடும்பத்திற்கு சிறிய உதவிகளை செய்து வருவதாக அவர் கூறினார்.

இதே போன்றதொரு நிகழ்வில் நீபி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஒருவருக்கு உரித்தான நிலுவைத் தொகையான ₹2 லட்சத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இத்தகைய அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் துறை உடனடியாக உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும்.

[குறிப்பு: இக்கட்டுரை கவுண்டர்கரண்ட்ஸ் இணைய ஊடகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை எடுத்துரைப்பதால் வினவு வாசகர்களுக்கு இக்கட்டுரையை மொழிபெயர்த்து வழங்குகிறோம்.]


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க