மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி வீடுகளை இடித்த பாசிச பா.ஜ.க அரசு!

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

த்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் மாட்டு இறைச்சியை விற்பனை செய்ததற்காக 11 பேர் மேல் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்த ம.பி. போலீசு, அரசு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அவர்களது வீடுகளை புல்டோசரை வைத்து இடித்து தள்ளியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் மாண்ட்லாவில் உள்ள பைன்வாஹி, நைன்பூர் என்ற பகுதியில் மாட்டு இறைச்சியை விற்பனை செய்வதாக வந்த தகவலின் பெயரில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 11 பேரும் முஸ்லீம்கள்.

இதுகுறித்து மண்ட்லா போலீசு கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டு முற்றத்தில் 150 பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த 11 பேரின் வீடுகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்களது குளிர்சாதனப் பெட்டியில் மாட்டு இறைச்சியும், விலங்குகளின் கொழுப்பு, கால்நடைகளின் தோல் மற்றும் எலும்புகள் ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்” என்று கூறினார். 11 பேர்  வீட்டில் இருந்தது மாட்டிறைச்சிதான் என்பதை உள்ளூர் அரசாங்க கால்நடை மருத்துவர் உறுதி செய்துள்ளதாகவும், இரண்டாம் நிலை டி.என்.ஏ. பகுப்பாய்விற்காக மாதிரிகளை (இறைச்சியை) ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மாவட்ட போலீசு கூறியுள்ளது.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 11 பேரது வீடுகளும் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என்று கூறி, தங்களுக்கே உரித்தான பாசிச திமிரில், எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புல்டோசரை கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது பாசிச ம.பி. அரசு.

பாசிச மோடி அரசு ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல், காவி குண்டர் படை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லீம்களை அடித்து கொன்று வருகிறது. குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் விஸ்வ இந்து பரிஷத்  குண்டர் படை மாட்டு இறைச்சியை விற்பவர்கள் மீதும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் தனது மதவெறி தாக்குதலை நடத்தி வருகிறது.


படிக்க: பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!


ஜூன் 7-ம் தேதி சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் பசுக்களை கடத்தி சென்றதாகக் கூறி பசு குண்டர்களால் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். அவர்களது எலும்புகள் முறிக்கப்பட்டு பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசி கொல்லப்பட்டனர். இதேபோல், ஜூன் 15 ஆம் தேதி, தெலுங்கானாவில் உள்ள மேடக்கில் மாட்டிறைச்சி விற்பனை கடைகள் மீது பா.ஜ.க-வின் இளைஞர் அமைப்பு பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. 2022-இல் மட்டும் 1.3 மில்லியன் மெட்ரிக் டன் மாட்டு இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பசு வதைத்தல் கூடாது என்று கூறும் பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடுகளை கூறு போட்டு ஏற்றுமதி செய்துவருகிறது. அதேவேளையில் உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் கைவிடப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன். ஆக, இந்துத்துவ காவி குண்டர்களுக்கு பசு பாதுகாப்பு என்பது குறித்தெல்லாம் எந்த கவலை இல்லை. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் சிறுபான்மையினரையும் ஒடுக்கி அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குவதே நோக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்து தள்ளுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து, அடிப்படை உரிமைகளற்றவர்களாக விரட்டியடிப்பதே காவிக்குண்டர் படையின் இந்துராஷ்டிரத் திட்டம்.

முஸ்லீம்கள் சிறுபான்மையினர்கள் மீதான இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இதைவிடவும் மோசமாக நடக்கக்கூடும். மதவெறியை மக்கள் மனதில் புகுத்தி தனக்கு ஏதுவான இந்துராஸ்டிரத்தை அமைப்பதற்கு இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்து மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும். இதற்கெதிரான மக்கள் போராட்டத்தினை கட்டியமைக்க வேண்டும்.


துருவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க