உயிரைப் பறிக்கும் வெப்ப அலை – கண்டுகொள்ளாத மோடி அரசு

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற கடும் வெயிலில் வெளிப்படும் வேலைகளில் தான் பணிபுரிகின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமானவர்கள் செங்கல் சூளைகளிலும், 5.1 கோடிக்கும் அதிகமானோர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

0

ந்தியா முழுவதும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலையின் காரணமாக மக்கள் உயிரிழக்கும் அவலங்கள் குறித்தான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

மார்ச் 1 முதல் ஜூன் 18 வரை 40,211 பேர் வெப்ப பக்கவாதத்தால் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 110 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (National Centre for Disease Control) புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் 52 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பல மாநிலங்கள் தரவுகளை முறையாகப் புதுப்பிப்பது இல்லை என்று அமைச்சக அதிகாரிகளே கூறுகின்றனர். அவ்வாறெனில், உண்மையான பலி எண்ணிக்கை என்பது மிக அதிகமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சேகரித்த தரவுகளை வைத்து மட்டும் பார்த்தால் கூட, கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு வெப்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பது மிக அதிகம்.

வானிலை துறையின் வரையறையின்படி, சமவெளிகளில், ஒரு குறிப்பிட்ட வானிலை துணைப்பிரிவில் (meteorological subdivision) அதிகபட்ச வெப்பநிலை 45ºC-யை (டிகிரி செல்சியஸ்) விட அதிகமாக இருந்தாலோ அல்லது 40ºC-க்கும் அதிகமாக இருந்து இயல்பை விட குறைந்தது 4.5ºC அதிகமாக இருந்தாலோ அது வெப்ப அலை என்று கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை 30ºC-க்கு அதிகமாகவும், இயல்பை விட குறைந்தது 4.5ºC அதிகமாகவும் இருக்கும்போது அது வெப்ப அலை எனப்படுகிறது.

ஆனால், கடந்த சில வாரங்களாக 40ºC என்ற வரையறையைத் தாண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 45ºC – 50ºC என்ற அளவிலான அதீத வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக டெல்லியில் தினசரி வெப்பநிலை 50ºC என்ற அளவில் உள்ளது. குறிப்பாக ஜூன் 18 அன்று குறைந்தபட்ச வெப்பநிலையே 35.2°C என்ற அளவில் இருந்தது.


படிக்க: வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி


வழக்கமான உடல் வெப்பநிலை என்பது 36.1ºC – 37.8ºC (96.98 ºF – 100.04ºF) என்ற அளவில் இருக்கும். உடல் வெப்பநிலையை மூளையின் ஹைபோதாலமஸில் (hypothalamus) உள்ள வெப்ப ஒழுங்குமுறை மையம்  (thermo regulatory centre) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மையம் உடலின் உள்ளே உற்பத்தியாகும் வெப்பத்திற்கும் வெளிப்புற வெப்ப பரிமாற்றத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுகிறது.

உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுவதில் வியர்வை முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஈரப்பதம் அதிகமாக உள்ள பகுதிகளில், காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் வியர்வை ஆவியாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடலின் வெப்பம் தணிவதற்கு அதிக நேரம் ஆகும். இது போன்ற பகுதிகளில் வெப்ப அளவு அதிகமாக இருப்பது இன்னும் ஆபத்தானது.

40.5ºC (104.9ºF) அல்லது அதற்கும் அதிகமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதன் இறப்பு விகிதம் 40 – 64 சதவிகிதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற கடும் வெயிலில் வெளிப்படும் வேலைகளில் தான் பணிபுரிகின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமானவர்கள் செங்கல் சூளைகளிலும், 5.1 கோடிக்கும் அதிகமானோர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். பகலில் வெளிச் சூழலில் வேலை செய்ய வேண்டி இருப்பதால், வெப்ப அலைகளின் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்களாகவே இருக்கின்றனர்.


படிக்க: அதீத வெப்பம் | ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு


மழை இல்லாத காலங்களில் தான் பெரும்பாலும் கட்டிட வேலைகள் நடைபெறும். கட்டிட வேலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். வெப்பத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எந்த வசதியையும் ஒப்பந்ததாரர்கள் செய்து தருவதில்லை. இதன் காரணமாக, வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு பணிபுரியும் இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரை விடும் அவலத்திற்கு இத்தொழிலாளர்கள் ஆளாகின்றனர்.

இப்படி உயிரை விடும் தொழிலாளர்களைப் பற்றியோ அவர்களது குடும்பங்களைப் பற்றியோ அரசிற்கு எந்த அக்கறையும் இல்லை. அரசு அவர்களை மனிதர்களாகக் கூட கருதுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது தான் இந்த பாசிச மோடி அரசின் இலக்காக உள்ளது. தொழிலாளர்களோ அடித்தட்டு உழைக்கும் மக்களோ அவர்களின் கண்களுக்குத் தெரிவதே இல்லை.

தொடர்ந்து புவி வெப்பமயமாதலால், உலகம் முழுவதும் இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் உழைக்கும் மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க