பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

கொத்தடிமைகளாக பணியாற்றிய சிறுவர்களுக்கு
விடுதலை சான்றிதழ் வழங்கிய ஒசூர் கோட்டாட்சியர்!

பசியால் ஆமணக்கு காய்களை தின்ற சிறுவர்களை
பசியின் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய முடியவில்லையே ஏன்?

செய்தி 1:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள தொட்ட அப்பனூர் கிராமத்தின் அருகே திம்மப்பா (52) என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரின் சூளையில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் கடனாக பெற்றுக் கொண்டு வருடக் குத்தகை அடிப்படையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இவர்களை அடையாளம் கண்டு ஒசூர் கோட்டாட்சியர் தேன்மொழி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ”விடுதலை சான்றிதழ்” வழங்கி அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

செய்தி 2:

கடந்த 04.07.2022 அன்று ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்திலேயே குடும்பத்துடன் தகர கொட்டகைகளை அமைத்து வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் சம்பவத்தன்று பசியின் கொடுமையால் காட்டாமணக்கு காய்களை தின்றுள்ளார்கள். இதில் 8 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளும் நம்மிடம் கேட்கும் கேள்வியும், உணர்த்தும் செய்தியும் என்ன?

திராவிட மாடல் ஆட்சியில் வெளிமாநில கூலி தொழிலாளர்களின் வீட்டுப் பிள்ளைகள் பட்டினியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை உணவுப் பொருளாக உண்ணும் ஏழ்மை நிலையில் ரேசன் பொருட்களை கூட வாங்க முடியாத உள்நாட்டு அகதிகளாக வாழ்கின்றனர்.


படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !


ஏன் எனில் மானிய விலையில் உணவுப் பொருட்களை வினியோகிக்கும் முறையை கைவிட்டு நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தை நோக்கி அரசு நகர்ந்து கொண்டு இருப்பது இந்த அவலநிலைக்கு காரணம் என உணர்த்துகிறது.

மேலும், 1990-களில் தனியார்மயம் – தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே என ரேசன் பொருட்கள் விநியோக முறையில் இரண்டாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என சமூகம் முழுவதும் இந்த நிலைக்கு வித்திட்டது அன்றைய நரசிம்மராவ் அரசு.

சமூக நலத்துறை சார்பில் மூன்று திட்டங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு வளர்ச்சி போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் 28 ஆயிரத்து 936 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 521 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் டேட் சிரப், நெய், சிவப்பு அவல், வெல்லம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதனை போன்று தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் திராவிட மாடல் ஆட்சியில் மற்றும் வல்லரசு மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகளும், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பசியின் கொடுமையை இந்தியா முழுவதும் காண முடியும்.

பொதுவான சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும் என்று அரசு நம்மை நம்ப வைக்கிறது.

இவர்களால் செங்கல் சூளையில் கொத்தடிமையான சிறுவர்களுக்கு வேண்டுமென்றால் விடுதலை சான்றிதழ் வழங்க முடியுமே தவிர உள்நாட்டு ஏழை அகதிகளான கூலி தொழிலாளிகளை பசியின் கொடுமையில் இருந்து விடுவிக்க முடியாது. ஏனெனில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த ஓர் ஆய்வில் ”ஹைநெட்வொர்த்” பணக்காரர்கள் நம்நாட்டில் உருவாகி விட்டார்கள் என கூறுகிறது.


படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !


ஒருபக்கம் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை. பசி, பட்டினிச் சாவு, உள்நாட்டு இடப்பெயர்வு என ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்த விளைவுதான் செங்கல் சூளையின் கொத்தடிமையும், பசியின் கொடுமையால் ஆமணக்கு காய்களை தின்னும் அவலநிலையும்.

இந்த அவலநிலையை உருவாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கைகளை அடியோடு வீழ்த்த வேண்டும். இதையெல்லாம் மறைத்து மக்களை பிரித்தாண்டு கார்ப்பரேட்டுகளை வாழ வைக்கும் காவி – கார்ப்பரேட் கும்பல் களத்தில் வீழ்த்தப்பட வேண்டும்.

விக்ரம் – ஒசூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க