ஜூலை 13, 14 ஆகிய நாட்களில், ஒசூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பாக இரண்டு நாள் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை உரிய வகையில் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அதாவது ஒன்றிய – மாநில அரசுகள் நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி ஒசூரை சுற்றியுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அசோக் லேலண்ட், டைட்டான், டிவிஎஸ், ஹோண்டா, டாட்டா குழுமங்கள் உள்ளிட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நூறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, இரும்பு பொருட்களின் கடுமையான விலையேற்றம் காரணமாகவும் கடுமையாக இந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


படிக்க : சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !


இந்த பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும், விநியோகிக்கும் பொருட்களுக்கும் பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையை தருவதால் பெருத்த நட்டம் ஏற்பட்டு மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி சிறு குறு தொழில்களே அழியும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையின் குவிமையமாக ஒசூர் விளங்குகிறது. இந்நிலைமைகளின் காரணமாக குட்டி ஜப்பான்  என்று அழைக்கப்படும் இப்பகுதியில் MSME என்று சொல்லப்படக்  கூடிய சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் அடிப்படையில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

உதிரிபாகங்கள் உற்பத்தியைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில்தான் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் மற்ற எல்லா மாநிலங்களை விட தரமான பாகங்கள், துல்லியமான தரத்தோடு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் உதிரிபாக உற்பத்திக்கு தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களையே நாடுகின்றன.  வெளிநாடுகளில் இருந்தும் ஒசூருக்கு இதற்கான ஆர்டர்கள் வருகின்றன.  இப்படிப்பட்ட தரமான, துல்லியமான உற்பத்தியை மேற்கொள்ளும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டுதான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதை மத்திய, மாநில அரசுகளோ கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தனியார்மயக் கொள்கையை தீவிரமான அமல்படுத்துவதன் மூலம் மேலும் தீவிர நெருக்கடிக்கு தள்ளுகின்றன. ஆனால் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டே  இருக்கின்றன.

கடந்த ஜூன் 27 அன்று பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் மேற்கொள்வது, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, புத்தாக்கங்கள், படைப்பு நிலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாக நினைவு கூரப்படுகிறது. அன்று அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்கும், துணை நிற்கும் என்று பேசியுள்ளார்.

இந்த வாக்குறுதிகளால் நொடிநேர மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர பயனேதும் ஏற்படப் போவதில்லை என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினையின் குறிப்பான சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் இயங்குகின்ற முறையைப் பொறுத்தவரை OEM (Original Equipment Manufacturer) எனப்படும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்கடுத்து 20 முதல் 30 கோடி வரை முதலீடு போட்டு இயங்கும் TIER 1 நிறுவனங்கள் (இவை பெரிய நிறுவனங்களின் பெரும்பான்மையான ஆர்டர்களை பெறுகின்றன), அடுத்து TIER 2 நிறுவனங்கள் (5கோடி மதிப்பிலானவை), இறுதியாக TIER 3 நிறுவனங்கள் (இந்த நிறுவனங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன, சில லட்சங்கள் முதலீட்டுத் தன்மை கொண்டவை) என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

TIER 3 நிறுவனங்களுக்கு மேற்கண்ட வரிசைக்கிரம நிறுவனங்கள் மூலமாகவே பெரும்பாலும் ஆர்டர்கள் (குறிப்பாக TIER 2 நிறுவனங்கள் மூலமே) கிடைக்கும். சில சமயங்களில் Open Order என்ற அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் நேரடியாக அணுகுகின்றன. ஆனால் இரண்டு வகையிலுமே உற்பத்தி செய்யும் செய்யும் பொருட்களுக்கு உரிய விலை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தொகையும் 90 நாட்கள் கழித்தே கொடுக்கப்படும். ஜிஎஸ்டி 28% வசூலிக்கப்படும் நிலையில் எந்த வகையிலும் மீள முடியாத நெருக்கடியை நோக்கி இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

GST யைப் பொறுத்தவரை என்ன நடந்தாலும் ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் கணக்குகளை முடித்து 10 தேதிக்குள் வரியைக் கட்டிவிட வேண்டும். அவ்வாறு கட்டவில்லையென்றால் ஒரு நாளைக்கு 50 % வீதம் அபராதம் கட்ட வேண்டும். தாமதமானால் GST கணக்கு முடக்கப்படும். மீண்டும் முதலில் இருந்து தொடங்கியாக வேண்டும். இது அதிக அளவில் செலவீனங்கள் பிடிக்கின்ற விசயம்.

GST கட்ட முடியாமல் போனால் அதைக் கட்டுவதற்கு  மென்கடன் (Soft Loan) என்ற பெயரில்  வங்கிகளில் கடன்  பெற்றுக் கொள்ளலாமாம். அதிலும் 10 ம் தேதிக்குள் கட்டவில்லையென்றால் அதற்கு வட்டி போட்டு கட்ட வேண்டும். இது நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை உருவாக்குகிறது. வருகின்ற லாபத்தில் 25% GST கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே போய்விடுகிறது என்பதுதான் நிலைமை. ஒரு பக்கம் பெரிய நிறுவனங்கள் உழைப்பை நேரடியாக சுரண்டுகின்றன. மறுபக்கம் அரசோ சதித்தனமாகவும், குயுக்தியாகவும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் மீது கொடூர சுரண்டலை நடத்துகிறது. இதற்கு மென்கடன் என்று பெயர் சூட்டிக் கொள்கிறது. வெட்கக்கேடு!

OEM, TIER 1 நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள் கூட்டணியாக இருந்து கொண்டு பெருத்த லாபத்தைப் பார்க்கின்றனர். OEM ன் 50% ஆர்டர்கள் TIER 1 லேயே முடிந்து விடும். பெருமளவில் TIER 2, TIER 3 நிறுவனங்கள்தான் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன.

ஆர்டர்கள் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டே சில வேலைகளை செய்து வருகின்றன. TIER 3 நிறுவனங்களுக்கு போட்டியாக தங்களுக்கு தோதான ஆட்களை உருவாக்கி ஜாப் ஆர்டர்களுக்கான டிமாண்டை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூலியை குறைப்பது என்ற அயோக்கியத்தனமான வழிமுறையை கடைப்பிடிக்கின்றன. வேலையில்லாப் பட்டாளத்தை உருவாக்கி எப்படி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அதைப்போல தனக்குத் தோதாக சிலரை உருவாக்கி டிமாண்டை உருவாக்குதன் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை அழிக்கும் வேலையை பெரிய நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதாவது சிறு குறு நிறுவனங்களுக்குள் உள் முரண்பாடுகளை உருவாக்குவதன் மூலமாக தங்களது அதிகப்படியான லாபத்தை பெரிய நிறுவனங்கள் உறுதி செய்து கொள்கின்றன.

10 வருடத்திற்கு முன்பிருந்த நிலையிலேயே ஜாப் ஆர்டர்களுக்கு தற்போதும் கூலி தரப்படுகிறது. MSME நிறுவனங்களைப் பொறுத்தவரை மாதம் 1 முதல் 15 தேதிக்குள் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளருக்கான ஊதியம், மின் கட்டணம், ஆயில், கருவிகளுக்கான செலவுகள், ஜிஎஸ்டி ஆகியவற்றை கட்டாயம் செட்டில் செய்தே ஆக வேண்டும். ஆனால் பெரிய நிறுவனங்களிடம் வரவேண்டிய ஜாப் ஆர்டருக்கான தொகை எப்போதும் தாமதமாகவே வரும்.

உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் விலையோ மிக அதிகமாக உள்ளது. துல்லியமான முறையில் உற்பத்தி செய்வது என்பதற்காக கணிணிமயமாக்கப்பட்ட  CNC மெஷின்களை வாங்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான இறக்குமதி வரி ஜிஎஸ்டி யுடன் சேர்த்து 35% போடப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களது செலவீனங்களைக் குறைத்து,  பெரும்பாலான நிறுவனங்களில் கணவன் – மனைவி வேலைகளில் ஈடுபட்டு கடும் உழைப்பை செலுத்துகின்றனர். தொழிலாளர்களை வைத்து வேலை செய்தால் கட்டுப்படி ஆகாது என்ற நிலை உள்ளது. இங்கு இலாபம் ஈட்டுவதல்ல பிரச்சினை, தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடு என்ற நிலைமைதான் நீடிக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடைப்பதைப் போல சாதாரணமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கியில் லோன் கிடைத்து விடுவதில்லை. ஆவணங்களை முறையாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வங்கிகளின் இழுத்தடிப்புகள் ஒருபக்கம் நடக்கின்றன. எண்ணற்ற வழிமுறைகளில் (PAN CARD மூலமாக) நிறுவனங்களின் பொருளாதாரக் கணக்குகளை கண்காணிப்பதன் மூலம்  கடனை தராமல் மறுப்பதற்கான முகாந்திரங்களை வங்கிகள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

ஒன்றிய அரசின் CIBIL SCORE என்ற கண்காணிப்பு முறையின் வாயிலாக நிறுவனங்களின் கடன் வாங்கும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இம்முறை கடனை மறுப்பதற்கான அம்சங்களை வங்கிகளுக்கு உருவாக்கித் தருகிறது என்பதே உண்மை. இந்நிலைமை பெரும்பாலான சிறு குறு தொழில் செய்வோரை கந்துவட்டி, நுண்கடன் நிறுவனங்கள் பக்கம் இயல்பாக தள்ளிவிடுகிறது. கிராமத்தில் நிலத்தை விற்று, இருக்கும் சொத்துக்களை விற்று , வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் தொடங்குபவர்கள் எப்படியாவது இலாபம் ஈட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமாகவும், பேரிடியாகவும் உள்ளது. நெருக்கடி தாளாமல் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.

வேறு வழியில்லை என்ற நிலையில்தான் ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்கப்படும் கூலியை மணிக்கு ரூ. 250 ஆக  அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஜிஎஸ்டி 18% ஆக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்துகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். இதை தற்காலிகமான தீர்வுக்கானதாக முன்வைக்கிறார்கள்.

மூலப்பொருட்கள் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் – விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் ஊதியம் அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தற்காலிகத் தீர்வுக்கான கோரிக்கையை ஜிஎஸ்டி யை முழுமையாக நீக்க வேண்டும் என்றே வைக்க வேண்டியுள்ளது.

இனி போராடாமல் வாழ முடியாது என்ற நிலைமையில்தான் ஒட்டுமொத்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் போராட்டத்தை நோக்கி இறங்குகின்றன. 1990 களுக்குப் பிறகு தனியார்மயம் உருவாக்கிய குமிழிப் பொருளாதாரத்தினூடாக,  சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பு நிறுவனங்களாக  மாற்றப்பட்டு விட்டன.

மத்திய, மாநில அரசுகளும், அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாக செயல்படுவது ஒன்றையே தனது முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டு விட்டன. அதற்கேற்ப சட்டதிட்டங்களை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பின் மிகத் தீவிரமாக  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தியதன் மூலம் இன்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அழிவின் எல்லைக்கு வந்துவிட்டன.


படிக்க : இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்


இது ஒசூரில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையில் உள்ள சில லட்சக்கணக்கானோரின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு துறைகளில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை சார்ந்து இயங்கும் 10 கோடி பேரின் பிரச்சினை. இதை அழிக்கத்தான் இன்று மோடி அரசு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.  தனியார்மயத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அழிவை நோக்கித் தள்ளுகிறது. அதானி, அம்பானி களின் தேசமாக நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தின் மூலம்தான், நாட்டு மக்களின் தேவைக்கான சுயசார்புப் பொருளாதாரமாக கட்டியமைப்பதன் மூலம்தான் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்ல தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

அதற்கு காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதே நமது முதல் கடமை. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்றிணைவோம்!

வினவு செய்தியாளர்- ஒசூர்