நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய மக்கள் – தப்பி ஓடிய எம்.பி.க்கள்!

ஆரம்பத்தில் தலைநகர் நைரோபியில் வெடித்த மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0

கென்யா நாட்டில் மக்கள் விரோத வரி சீர்திருத்தங்களுக்கு எதிராக நேற்று (ஜூன் 25) நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 31 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த மே மாதம் “நிதி மசோதா 2024” எனப்படும் இந்த மக்கள் விரோத வரி மசோதா கென்ய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதே, வரிகளை அதிகரிப்பதற்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வரி மசோதா நேற்று (ஜூன் 25) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே, இதற்கு எதிராக கென்ய மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

ஆரம்பத்தில் தலைநகர் நைரோபியில் வெடித்த மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட போது, ரொட்டிக்கு 16 சதவிகிதமும், சமையல் எண்ணெய்க்கு 25 சதவிகிதமும் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த வரிவிதிப்பைக் கைவிடுவதாக அரசாங்கம் கூறிவிட்டது.

கழிவுகளுக்கு பங்களிக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது சுற்றுச்சூழல் வரி விதிக்கப் போவதாகக் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சானிட்டரி பேட்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே சானிட்டரி பேட்களை வாங்க முடியாத பல சிறுமிகள் மாதவிடாய் காலத்தில் பெரும்பாலும் பள்ளிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வரி விதிப்பானது இந்த நிலைமையை மேலும் மோசமடைய வைக்கும்.

மக்களின் கடுமையான எதிர்ப்பால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே இந்த சுற்றுச்சூழல்வரி விதிக்கப்படும் என்று அரசாங்கம் கூறி பின்வாங்கிவிட்டது.

சில முடிவுகளில் அரசாங்கம் பின்வாங்கியிருந்தாலும், வரிகளை உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. வரி உயர்விற்கான மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தடைகளைத் தகர்த்துக் கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். மக்களுக்கு பயந்த எம்.பி.க்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்புடன் தப்பி ஓடிவிட்டனர்.

கென்யாவில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மக்கள் எழுச்சியை நமக்கு நினைவுபடுத்துகிறது. அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துவிட மாட்டார்கள் என்று ஆளும் வர்க்கத்திற்கு இந்நிகழ்வு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

 


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க