இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்

சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0

டந்த இரண்டு வாரங்களாக, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள சஞ்சௌலியில் (Sanjauli) ஒரு மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதமானவை என்று கூறி அப்பகுதிகளை இடிக்க இந்துத்துவ அமைப்புகள் கோரி வருகின்றன.

செப்டம்பர் 11 அன்று, மசூதிக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறிய பின்னர், போலீசார் இந்துத்துவக் கும்பல் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்; தடியடி நடத்தினர்.

பா.ஜ.க-வும் இந்துத்துவ அமைப்புகளும் உள்ளூர் நகர்ப்புற திட்டமிடல் விவகாரத்தை இந்து முனைவாக்கத்திற்கான கருவியாக எவ்வாறு மாற்றுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஆக்கிரமிப்பின் அடையாளமாக மசூதியை உருவகப்படுத்தி, அதைச் சுற்றி வெறுப்பு அரசியலைக் கட்டமைப்பதன் மூலம், இந்துத்துவ கும்பல் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்கிறது.

சிம்லாவில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் மோசமான நகர்ப்புற திட்டமிடல் போன்ற பிரச்சினைகள் புதியவை அல்ல. அடுத்தடுத்து வந்த மாநில அரசாங்கங்கள் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல், தேர்தல் ஆதாயத்திற்காகச் சட்டவிரோத கட்டுமானங்கள் எழுப்பப்படுவதைக் கண்டுகொள்ளவில்லை.

அதன் காரணமாக, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் பெருகியுள்ளன. மாநிலம் முழுவதும் 25,000 சட்டவிரோத கட்டமைப்புகள் இருப்பதாகச் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி சிம்லாவில் உள்ளன.

பா.ஜ.க ஆட்சியிலிருந்த 2022 ஆம் ஆண்டு வரை, சிம்லா திட்டமிடல் பகுதியில் புதிய கட்டுமானங்களைத் தடை செய்தல் மற்றும் கட்டிட உயரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 2017 ஆம் ஆண்டு உத்தரவுகளின் படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மட்டும் அவர்களின் கண்களுக்குச் சட்டவிரோத கட்டுமானங்கள் புலப்படுகின்றன.


படிக்க: மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்


சஞ்சௌலியில் உள்ள மசூதி குறித்த சர்ச்சையும் மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள் கட்டப்பட்டதன் பின்னணியிலிருந்து தான் எழுகிறது. இந்த மசூதி 1947 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு சில பகுதிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. சிம்லா முழுவதும் சட்டவிரோத கட்டுமானங்கள் நிரம்பியிருக்க, பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளால் இந்த மசூதி குறித்த சர்ச்சை மட்டும் திட்டமிட்டே பெரிதுபடுத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி மசூதியுடன் தொடர்புடைய ஒரு குழுவினருக்கும் உள்ளூர் வர்த்தகர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்திற்கு இந்துத்துவா குழுக்கள் விரைவாக மதச்சாயம் பூசினர். செப்டம்பர் 1 ஆம் தேதியன்று மசூதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது “ஹிமாச்சல் நே தானா ஹை, தேவபூமி கோ பச்சனா ஹை” (கடவுள்களின் நிலத்தைக் காப்பாற்ற இமாச்சலப் பிரதேசம் சபதம் எடுத்துள்ளது) போன்ற இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களைக் காவிக் குண்டர்கள் எழுப்பினர்.

செப்டம்பர் 12 அன்று, முஸ்லிம் நலக் குழு ஒன்று சிம்லா நகராட்சி ஆணையரைச் சந்தித்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டவிரோதமானது என்று கூறப்படும் மசூதியின் பகுதிகளை இடிக்க தாமாகவே முன்வந்தது. சுற்றுப்புறத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக இதைச் செய்வதாக அக்குழு கூறியது.

கூறியதோடு மட்டும் இல்லாமல், சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் இம்மசூதி குறித்த சர்ச்சையைத் தற்போது சங்கப் பரிவார கும்பல் பூதாகரமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க