நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளான நவம்பர் 25ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தீரமிக்க போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் உறுதித்தன்மையைக் கண்டு அச்சம் கொண்ட மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

இருப்பினும் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான சட்டத்தை இன்னும் இயற்றவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாசிச பா.ஜ.க அரசு. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இளம் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். எனினும் போராட்டத்தை விடாத விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு, கிநோரி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கி கடந்த 10 மாதங்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


படிக்க: பஞ்சாப் விவசாயிகளை வஞ்சிக்கும் ஆம் ஆத்மி அரசு


இதனிடையே விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து, அந்த குழு சார்பில் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் டெல்லி சென்று போராட்டத்தைத் தொடருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 25ஆம் தேதி முதல் விவசாய சங்கத் தலைவர் ஜகஜித் சிங் தாலேவால் தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் ஓயாது என்பதை விவசாயிகள் தங்களது செயல்பாடு மூலம் பாசிச மோடி அரசுக்கு உணர்த்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் அனைவரும் துணைநிற்க வேண்டும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க