இந்தியா போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த தரமுள்ள ஆரோக்கியமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக ஒரு புதிய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய தயாரிப்புகள் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய கவலையை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
Access to Nutrition Initiative (ATNI) வெளியிட்டுள்ள உலகளாவிய குறியீட்டின்படி, நெஸ்லே, பெப்சிகோ மற்றும் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுகாதார மதிப்பீடு அடிப்படையில் பார்க்கும்போது குறைந்த தரமுடைய பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உருவாக்கப்பட்ட இம்மதிப்பீட்டு முறையின்படி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் பொருட்கள் சராசரி மதிப்பாக 5க்கு 1.8 மட்டுமே பெறுவதாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 2.3 என்ற சராசரியைப் பெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 3.5 க்கு மேல் மதிப்பு பெற்ற தயாரிப்புகள் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
இவ்வாறு 30 நிறுவனங்களின் தயாரிப்புகளை அக்குழுவானது மதிப்பீடு செய்தது.
”உலகின் ஏழ்மையான நாடுகளில் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்ற பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது” என ATNI-இன் ஆராய்ச்சி இயக்குநர் மார்க் விஜ்னே ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கும் இடையிலான மதிப்பீட்டுப் புள்ளி விபரத்தில் உள்ள வேறுபாடு அதிர்ச்சியூட்டுவதாகக் கூறுகின்றனர்.
படிக்க: அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பூமியில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனோடு வாழ்கின்றனர். இவர்களில் 70 சதவிகித மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ், கோலா பானங்கள் போன்ற துரித உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் உலகளவில் உடல்பருமனைத் தூண்டும் காரணிகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில், ‘புட் பார்மா’ என்று பிரபலமாக அறியப்படும் ரேவந்த் ஹிமத்சிங்கா போன்ற நபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய பெரும் சுகாதார மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிறுவனங்களின் தயாரிப்புகளைக் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருவதற்காக ஹிமத்சிங்கா பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே நெஸ்லேவின் செரோலேக் வகை உணவுப் பொருட்களின் சுகாதார மீறல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
மக்களின் ஆரோக்கியமான வாழ்வைப் பற்றிய அக்கறையின்றி மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்குப் பாசிச மோடி அரசும், அரசின் உறுப்புகளும் துணை போகின்றன என்பதே உண்மை. இதனால்தான் சட்ட விதிமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு இத்தகைய நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டைச் சுதந்திரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கருப்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram