ந்திய அரசு மருத்துவ கட்டமைப்பு பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளதைச் சமீப காலமாக வரும் செய்திகள் உணர்த்துகின்றன. உதாரணமாக மருத்துவர்கள் பற்றாக்குறை, 36 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்க்கும் நிலை, மருந்துகள் பற்றாக்குறை, வேலையாட்கள் மற்றும் உதவியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், அரசு மருத்துவமனைகளில் சரியான கவனிப்பு இல்லாதது போன்ற பல சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் இந்திய மருத்துவ கட்டமைப்பின் உயரிய நிலையில் உள்ள டெல்லி அரசு எய்ம்ஸ் மருத்துவமனையில் நோய் கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்காக மட்டுமே ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை நிலவுவது அம்பலமாகியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஜெய்தீப் என்ற நபர் வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு பதிவு செய்யும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


படிக்க: பெருகி வரும் நீரிழிவு நோய்: உழைக்கும் மக்களைக் கைவிடும் அரசு மருத்துவமனைகள்


நவம்பர் 9 ஆம் தேதி பதிவு செய்த அவருக்கு 2027 செப்டம்பர் 7ஆம் தேதி தான் எடுக்க முடியும்; அந்த அளவுக்கு இதில் நோயாளிகள் காத்திருப்பதாகத் தகவல் கூறப்பட்டது.

இதைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஏறக்குறைய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளில் 18,000 முதல் 25,000 ரூபாய் வரை செலவாகக் கூடிய நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக 2,500 முதல் 3000 வரை ஆகும் என்பதால் தான் இங்கு வந்தேன்.

ரூபாய் 5,000 செலவு செய்ய முடியாத ஒரு பொருளாதார சூழலில் உள்ளதால் சிகிச்சையைக் கைவிட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

இது ஏதோ ஜெய்தீப்பின் நிலை மட்டுமல்ல; ஏறக்குறைய இந்திய முழுவதும் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலை இதுதான்.

டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 1956 இல் கட்டப்பட்ட இந்தியாவின் உயர் அதிநவீன சிகிச்சைப் பிரிவாகும். இதுவரை இந்தியாவில் மொத்தம் 26 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

NIRF ஆல் அளிக்கப்படும் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் ஒரு நாளைக்கு 15,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.

உள்நோயாளி பிரிவு, அவசர சிகிச்சை என்று ஒரு நாளைக்கு 30,000 பேர் வரை சிகிச்சை பெறும் மிகப் பிரமாண்டமான மருத்துவமனைதான் டெல்லி எய்ம்ஸ்.

இந்த 30,000 பேரில் சில ஆயிரம் பேர் இந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் உடனடியாக எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும், நெருக்கடிக்கும் தள்ளப்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கும் சூழலில், இங்கு 3 எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் மட்டும்தான் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவும் கூட அங்குள்ள மருத்துவர்களின் அழுத்தத்தின் காரணமாக 2022 ல் தான் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இரண்டு எம்ஆர்ஐ மிஷின்கள் அங்கு நிறுவப்பட்டுள்ளன.

அப்படி 24 மணி நேரமும் செயல்பட்டாலும் கூட ஒரு இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 20 பேர் மட்டும் தான் ஸ்கேன் எடுக்க முடியும்.


படிக்க: மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல்! சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் வெளிப்பாடு!


இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி தங்களுக்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஜெய்தீப் போல சிகிச்சை கை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே இந்த செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

மாநிலத்தில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி இல்லாத சூழல் இருப்பதால்தான் இவ்வளவு பெரிய மக்கள் தொகை எய்ம்ஸ்-ஐ நோக்கி வர வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்படுகிறது.

ஆனால் எய்ம்ஸ்-இன் நிலைமையோ ஒரு நாளைக்கு 50 பேர் பார்ப்பதே சிக்கலாக உள்ளதால், இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் 18000 முதல் 25000 ரூபாய் வரை கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

இப்படி சிகிச்சைக்காக நாள் கணக்கில் காத்துக் கிடக்கும் நோயாளிகளுக்காகப் பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் அசோக் அகர்வால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தில், நோயாளிகள் இப்படி சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்துக் கிடப்பது அடிப்படை மருத்துவ உரிமைக்கு எதிரானது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எழுப்பி உள்ளார்.

தேசிய அரசியலில் எப்போதுமே எய்ம்ஸ் மருத்துவமனை முக்கியத்துவம் பெற்று வருகிறது. மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார்.

கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது. உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது தான் இங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது.

இந்திய அரசு பட்ஜெட்டில் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதி அதைத் தீர்மானிக்கிறது. இந்திய அரசின் மருத்துவத்துறை சார்ந்த கொள்கை முடிவு அந்த நிதியைத் தீர்மானிக்கிறது.

இந்திய அரசின் கொள்கையோ மருத்துவத்தை கார்ப்பரேட்மயம் ஆக்குவதை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இதை முறியடிக்காமல் எய்ம்ஸ்கள் எத்தனை வந்தாலும் உழைக்கும் மக்களுக்கான நவீன சிகிச்சை கிடைப்பது என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கப் போகிறது.

எனவே, அரசின் கார்ப்பரேட்மயக் கொள்கைக்கு எதிராக மக்களைத் திரட்டாமல் மக்களுக்கான மருத்துவத்தைக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்பதைத் தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


நிலா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க