Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 509

அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !

19

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1

ம்பானி நட்டமடைந்து விட்டார் என மெல்லப் புலம்புகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ரிலையன்ஸ் ஜியோ எதிர்பார்த்தபடி லாபம் ஈட்டாததோடு கடந்த 2017, மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 22.50 ஆயிரம் கோடி நட்டத்தை சம்பாதித்துள்ளது என்கின்றன ஊடகங்கள். தொலைத் தொடர்புத் துறையின் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொள்ள வேண்டும் என்கிற அம்பானியின் கனவு மெல்லக் கலைந்து வருவதாக சில பொருளாதார ஆய்வாளர்கள் ஆருடம் கூறத் துவங்கி விட்டனர்.

எனினும் முகேஷ் அம்பானி தனது இலவசங்களை நிறுத்தவில்லை; தொடர்ந்து இலவச டேட்டாக்களை அள்ளி வீசி வருகிறார். இந்தக் காலாண்டின் துவக்கத்திலிருந்து தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதாக சொல்லிக் கொண்டாலும்,”கட்டணம்” என்ற பெயரில் சோளப் பொரியை வாங்கிக் கொண்டு யானை மந்தையையே கொடுக்கிறார் அம்பானி. ரிலையன்ஸ் நட்டமடைந்திருப்பதாக ஊடகங்கள் சொன்னாலும், ஏர்டெல் வோடஃபோன் போன்ற போட்டியாளர்களின் பீதி குறையவில்லை – ரிலையன்ஸ் ஜியோவுக்கு சற்றும் குறையாத அளவில் டேட்டாக்களை வாரி வழங்கி வருகின்றனர்.

அவர்களிடம் இருக்கிறது கொடுக்கிறார்கள்; சும்மா கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு; அம்பானியிடம் இல்லாத காசு பணமா, அவருக்கெல்லாம் லாபம் ஒரு பொருட்டா – என சிலிர்ப்பவர்களின் வியப்பு இன்னும் குறையவில்லை. அம்பானி எதற்கும் அசராமல் இலவசங்களையும் மலிவு விலை இணையத் தொடர்பையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

***

யன் ராண்டின் “பௌண்டெய்ன் ஹெட் (Fountainhead)” நாவலில் வரும் ‘இலட்சிய’ முதலாளியான கெய்ல் வைனாண்டின் இந்திய வடிவமா அம்பானி? அள்ளித் தெளிக்கப்படும் இலவசங்களின் நோக்கம் தான் என்ன?

அம்பானியின் வாயிலிருந்தே கேட்போம் :

“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே (data) இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் (intelligent data) பெட்ரோலாகும்” என்றார்.

ஓராண்டுக்குப் பின் பெரும் நட்டத்தைச் சந்தித்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மறுபுறம் இணையப் பரவலை (internet penetration) பொருத்தவரை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியுள்ளதை வியப்புடன் பார்க்கிறார்கள் முதலாளிய பொருளாதார வல்லுனர்கள். தகவல் தொடர்பைப் பொருத்தவரை வர்த்தக ரீதியில் ரிலையன்ஸ் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இணையப் பரவலில் வெற்றிகளைச் சந்தித்துள்ளது. இந்த வெற்றி உடனடியாக லாபத்தை வழங்கி விடவில்லை என்பது உண்மை தான்.

ஆனால் உடனடி லாபம் கிட்டாதெனினும், எதிர்காலத்தில் முதலாளியச் சந்தையின் ஆட்ட விதிகளைத் தீர்மானிக்கவிருப்பது இணையப் பரவலும் அதனால் குவியவிருக்கும் மின் தரவுகளும் தான். குரல் அழைப்புகள் மெல்ல மெல்ல மின் தரவுப் பொதிகளின் பரிமாற்றங்களாக மாறி வருகின்றது. மேலும் தொலைபேசி மட்டுமின்றி தொலைகாட்சிப் பெட்டி மற்றும் வீடுகளில் உள்ள மின்னணுவியல் சாதனங்கள் அனைத்தும் திறன் சாதனங்களாக (Smart Devices) மாறுவதும், அவையனைத்தும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதுமான ஒரு நிலையை நோக்கி தொழில்நுட்பங்கள் முன்னேறிச் செல்கின்றன.

இணையப் பரவலும், இணையத்தின் மூலம் இணைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மின் தரவுகள் மலையாகக் குவியும் போக்கும் அதிகரிக்கும். மின் தரவுகளைக் கட்டுப்படுத்துவதும், அதனைப் பகுப்பாய்வதன் அடிப்படையிலான தொழில் நடவடிக்கைகளுமே நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கவிருக்கின்றன என்பதை அம்பானி முன்கூட்டியே உணர்ந்துள்ளார்.

அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? அம்பானி சொல்லும் நுண்ணுணர் மின் தரவுகள் (Intelligent Data) என்பது என்ன? நான்காம் தொழிற்புரட்சிக்கும் மின் தரவுகளுக்கும் என்ன தொடர்பு?

***

ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக் காலம் அறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை உந்தித்தள்ளியது. மறுமலர்ச்சிக் காலகட்டத்தைத் தொடர்ந்து சுமார் 1780-ல் இருந்து 1840 வரையிலான காலப் பகுதியில் கைவினைப் பட்டறைகளின் இடத்தை ஒருங்கிணைந்த பெரிய ஆலைகள் பிடித்தன. நீராவியின் ஆற்றல் தொழிற்துறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் தூண்டியது. உலோகவியல், வேதியியல், இயற்பியல், இயந்திரவியல் போன்ற துறைகளில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்து வந்த ஆலைத் தொழில் உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரங்களை படைத்தளித்தன.

1870-ல் இருந்து 1915 வரையிலான காலகட்டத்தில் தொழிற்துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியும், மிகப் பெருமளவில் எஃகு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. குறிப்பாக பெரும் ஆலைகளின் பொருத்தும் வரிசை இயந்திரமயமானதும் (Mechanised Assembly line) இப்போக்கை உந்தித்தள்ளியது.  இதே காலகட்டத்தில் மின்சாரத்தின் பயன்பாடு பரவலாகி அதன் பங்குக்கு தொழிற்துறை உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில் தொலைபேசி வலைப்பின்னல் பரவலாகத் துவங்கியது. இந்தப் போக்கின் விளைவாக உலகளாவிய அளவில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஏகபோக மூலதனம் பெற்றது.

1960 மற்றும் 1970-களில் ஆய்வுக்கட்டத்தில் இருந்து, பின்னர் 1980-களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழிற்புரட்சிக்கு கட்டியம் கூறியது. இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து தொழிற்துறை அதிவேகமாக கணினிமயமாகியது. இதன் தொடர்ச்சியாக ஆலை உற்பத்தி மற்றும் சந்தை ஆகியவற்றைக் கையாள்வதில் இணையத் தொழில்நுட்பம் பெரும் பாத்திரமாற்றத் தொடங்கியது. பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளை மொய்த்துக் கொண்ட நிதிமூலதனச் சூதாடிகள், உலகின் மறுகோடிக்கு கண் சிமிட்டும் நேரத்தில் தமது மூலதனத்தை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்வதை இணையம் எளிமையாக்கிக் கொடுத்தது.

உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் மூலம் மேலிருந்து அதிகாரம் செலுத்தி, தேசிய எல்லைகளைத் தகர்த்து தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம், தகவல் தொழில்நுட்பம் வழங்கிய மேற்கண்ட சாத்தியங்களின் மூலம் தேசியத்தின் வேர்களை கீழிருந்தும் அரித்து அறுத்தது.

***

மூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாக நான்காம் தொழிற்புரட்சி  வருகின்றது. இணையத்தின் பரவலால் உற்பத்தியாகும் அபரிமிதமான மின் தரவுகளே இப்புதிய போக்கை தனித்து அடையாளம் காட்டுகின்றன. மேலும், கணினித் துறையிலும், ஆலை உற்பத்தித் துறையிலும் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் இணைய தொழில்நுட்பத்தின் மூலம் மையப்பட்ட ரீதியில் இணைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் இணையம் (Internet of Things – IOT) என அழைக்கப்படும் இப்புதிய போக்கு, மலை மலையாக மின் தரவுகளை உற்பத்தி செய்து குவிக்கின்றது.

இவ்வாறு குவியும் மின் தரவுகள் மீப்பெரும் மின் தரவுகள் (Big Data) என்று அழைக்கப்படுகின்றது. இந்த மீப்பெரும் மின் தரவுக் குவியலை பகுப்பாய்வு செய்வது சந்தையைப் ‘புரிந்து கொள்வதற்கும்’ நடப்பில் இருக்கும் தொழில்நுட்பங்களின் துல்லியத்தை அதிகரிப்பதற்கும் உதவும் என்பதை கூகுள், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் புரிந்து கொண்டன. இதே காலகட்டத்தில் உருவான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு (Big Data & Analytics) தொழில்நுட்பம், நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் முக்கியமான நிகழ்வாகும். பின்வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இக்காலகட்டத்தின் தனித்த அடையாளங்களாகும்.

ரோபோட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி பல்வேறு உற்பத்தித் தொழில்களில் தானியங்கல் (Automation) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) எனப்படும் அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழிற்கலை, அணு மற்றும் மூலக்கூறியல் விஞ்ஞானத்தில் பெரும் பாய்ச்சலான வளர்ச்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இவ்வறிவியல் ஆய்வுக் கட்டத்தில் உள்ளது.

அதே போல் ஆய்வுக் கட்டத்தில் உள்ள குவையக் கணியத் தொழில்நுட்பம் (Quantum computing) கணினிகளின் செயற்திறனை நடப்பில் உள்ளதை விடப் பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) மற்றும் உயிரித் தொழில்நுட்பமும் தற்போது ஆய்வுக் கட்டத்தில் உள்ளன.

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ள மின் தரவுகளின் குவிதல் சமீபத்திய ஆண்டுகளில் வியப்பூட்டும் அளவுகளை எட்டியுள்ளது.

***

தொன்னூறுகளின் துவக்கத்தில் உலகளாவிய இணைய வலைப்பின்னலின் மூலம் ஒவ்வொரு நொடியிலும் சுமார் 100 ஜி.பி அளவுக்கான மின் தரவுகளே உற்பத்தியாயின. இன்றோ ஒவ்வொரு நொடியும் ஐம்பதாயிரம் ஜி.பி டேட்டா உற்பத்தியாவதாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. உலகம் முழுவதும் ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளை டி.வி.டி தட்டில் எழுதி அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது நான்கு ஈஃபில் டவர்களின் உயரத்துக்கு வரும் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 2015-ல் வெளியான ஒரு கட்டுரை. இன்று அதன் அளவு ஐந்து ஈஃபில் டவர்களின் உயரத்தையும் விஞ்சக் கூடும்.

ஜி.பி கணக்குகள் கொஞ்சம் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும்; நாம் பின்வருமாறு புரிந்து கொள்வோம். அதாவது ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் மின் தரவுகளின் அளவு என்பது 53 லட்சம் கோடிப் பாடல்களின் அளவுக்கு ஈடானது. அல்லது அவை வீடியோக்களாக இருந்து அவற்றை ஓடவிட்டால், சுமார் 90 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடும். நினைவில் கொள்ளுங்கள் – இவை ஒரே ஒரு நாளில் உற்பத்தியாகும் மின் தரவுகளின் கணக்கு மட்டுமே. இந்த மொத்த மின் தரவில் 90% சதவீதம் கட்டமைவற்ற மின் தரவுகள் (Unstructured Data) என்று வகைப்படுத்தப்படுகின்றன.

கட்டமைவற்ற மின் தரவுகள் எனப்படுபவை யாவை? முகநூல், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், நிலைத்தகவல்கள் துவங்கி, நாம் குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் எதைப் பார்க்கிறோம், எதற்கு விருப்பம் தெரிவிக்கிறோம், யாரையெல்லாம் பின் தொடர்கிறோம் என்பவை உள்ளிட்டு – எப்போது எங்கே பயணிக்கிறோம் என்கிற விவரங்கள் வரை மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. இது தவிர, இணையத்தில் பொருட்கள் வாங்குவது, அல்லது இணையம் மூலம் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட நமது நடவடிக்கைகள் பற்றிய அனைத்து விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.

உதாரணமாக யூடியூபில் ஒருவர் எவ்வளவு நேரம் காணொளிகள் பார்க்க செலவிடுகிறார், எந்த மாதிரியான காணொளிகளைப் பார்க்கிறார், எந்த வரிசையில் பார்க்கிறார், எவற்றுக்கெல்லாம் விருப்பம் தெரிவிக்கிறார், எவற்றைப் பகிர்கிறார் போன்ற விவரங்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன.

இணையமே பயன்படுத்தாத, வெறும் கருப்பு வெள்ளை கைப்பேசி மட்டுமே பயன்படுத்துகின்றவராக இருந்தாலும் கூட, அந்தக் கைப்பேசி ஒவ்வொரு சில நொடிகளுக்கும் அருகில் இருக்கும் செல்பேசி கோபுரத்துடனான தனது தொடர்பை உறுதி செய்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு செல்பேசி கோபுரத்துக்கு அனுப்பப்படும் சிக்னல்களும் மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றது.

மேலும், இணையத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், சென்சார் பொருத்தப்பட்ட வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் திறன் தொலைக்காட்சிப் பெட்டி (Smart TV) உள்ளிட்ட திறன் சாதனங்கள் என இணையத்தால் இணைக்கப்பட்ட பொருட்கள் (Internet of Things) அனைத்தும் மின் தரவுகளை உற்பத்தி செய்கின்றன. சமூக வலைத்தள நடவடிக்கைகள் – படங்கள், காணொளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது, இணைய உரையாடல், யூடியூப் போன்ற தளங்களில் காணொளிகள் பார்ப்பது குறித்த விவரங்கள் போன்றவை அனைத்தும் உலகளவில் குவிந்து வரும் மின் தரவுகளுக்கான மிக முக்கியமான மூலங்களாக உள்ளன.

மேலே பட்டியலிடப்பட்ட வழிகளில் உற்பத்தியாகி பின்னர் சேமிக்கப்படும் மின் தரவுகள் அனைத்தும் “கட்டமைவற்ற மின் தரவுகள்” என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்ட கட்டமைவு ஏதுமில்லாத மின் தரவுகள். அதே நேரத்தில், கணினிகளில் நிறுவப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட மென்பொருளை இயக்கியதன் மூலமோ, மின்னஞ்சல்களின் வழியாகவோ உருவாகும் மின் தரவுகளின் உட்கட்டமைப்பு முன்தீர்மானிக்கப்பட்டது. இவை கட்டமைவான மின் தரவுகள் (Structured Data) என வகைப்படுத்தப்படுகின்றன.

***

ட்டமைவற்ற மின்தரவுகளை எதற்காக சேமிக்க வேண்டும்? சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ”அதிகமாக இருப்பதும் ஒன்றுமில்லாதிருப்பதும் வேறுவேறல்ல” என்கிற கண்ணோட்டமே இது விசயத்தில் நிலவி வந்தது. அதாவது, கைநிறைய அள்ளிய கழுதை விட்டையைப் போல், அன்றாடம் வந்து குவியும் மின் தரவுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றும், அது ஒரு சுமையாகவுமே கருதப்பட்டது.

ஏனெனில், மிகப் பெரிய அளவில் குவியும் கட்டமைவற்ற மின் தரவுகளைப் பகுப்பாய்வுக்கு (data analytics) உட்படுத்த அப்போதிருந்த தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை. அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், கட்டமைவான மின் தரவுகளைக் கையாள்வதற்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், தேவைப்படாத மின் தரவுகளைச் சேமித்து வைப்பதும் தொழில் நுட்பரீதியில் மிகவும் செலவு பிடிக்கத்தக்கதாக இருந்தது.

கட்டமைவற்ற மின் தரவுகளை பகுத்தாயும் திறன் கொண்ட தொழில்நுட்பம் சுதந்திர மென்பொருள் (Open Source) குழுக்களால் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஓப்பன் சோர்ஸ் நிறுவனமான அப்பாச்சே உருவாக்கிய ஹடூப் (Apache Hadoop) எனும் மென்பொருள் கட்டமைவற்ற மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுக்கு இருந்த தடைகளை உடைத்தது. இன்று சந்தையில் பிரபலமாக உள்ள பெரும்பாலான மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்கள், அப்பாச்சே ஹடூப்பின் செயல் அடிப்படைகளை உட்செரித்துக் கொண்டே உருவாக்கப்பட்டன. மீப்பெரும் மின் தரவுகளைப் பகுத்தாயும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு புதிய வேகத்தில் வளரத் துவங்கியது.

இனி, மீப்பெரும் மின் தரவுக் குவியலில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள கட்டமைவற்ற மின் தரவுகளில் மிக முக்கிய பங்காற்றும் சமூக வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் முறை குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் !

0

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் ஆ.மேலப்பட்டியில் சென்ற 05.09.2017- அன்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால்  உயிரிழந்த மக்கள்  அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டி கிளை ஒருங்கிணைப்பாளர்  தோழர் அ.சந்திரபோஸ் அவர்களுக்கு உசிலம்பட்டியில் கடந்த 28.09.2017 அன்று மாலை 6  மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி  தலைமையில் நடந்த இந்த நினைவஞ்சலி பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்,  மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்,  மக்கள் அதிகாரம் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன், செக்காணூரனி மக்கள் அதிகாரம் அமைப்பு  தோழர்  ஆசை,  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர் வழக்கறிஞர் பா.நடராஜன்,   பு.மா.இ.மு. தோழர் ராஜ்குமார், மற்றும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் திரு.பெருமாள்,  உசிலம்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

தோழர் குருசாமி  தனது தலைமை உரையில்  “சிறு வயதில் தன்னை அமைப்பில் இணைத்துக் கொண்டு, தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் அமைப்பை உயர்த்திப் பிடித்து  செயல்பட்டு மறைந்த தோழர் சந்தரபோஸ்,  அமைப்பு போராட்டங்கள் அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இன்றுவரை விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி  வந்தார். இந்த அரசு அனைத்து போரட்டங்களையும் ஹிட்லர் போல ஒடுக்கி வரும்  இந்த சூழ்நிலையில் தோழர் சந்திரபோஸ் அவர்விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த உறுதி ஏற்போம்!” என்று கூறினார்.

இரங்கல் உரை நிகழ்த்திய தோழர் ஆசை தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் உடன் நான் நெருக்கமாக இருந்தவன். அவர்  நினைவுகளைப் பற்றி பேச ஒரு நாள் போதாது. உசிலை பகுதியில் இவரை தெரியாதவர்கள் இல்லை. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவில் 1000 பேருக்கு மேல் உறுப்பினர் சேர்த்துள்ளார். இவருடைய முழக்கங்கள் தீப்பொறி போல இருக்கும்.  தவறு செய்யும் போது கடுமையாகக் கடிந்து கொள்வார், மாலையில் தட்டிக்கொடுத்து தவறுகளை திருத்துவார். சிறுவர்களிடம் அன்பாய் பழகுவார்.  பகத்சிங் பிறந்தநாளில் அவரது நினைவஞ்சலி கூட்டம் நடந்தது சிறப்பு.” என்று கூறினார்

58 கிராம கால்வாய் பாசன செயலாளர் ஐயா பெருமாள் தனது உரையில் “தோழர் சந்திரபோஸ் இந்த பகுதிக்கு சோசலிச டிரான்ஸ்பார்மராக செயல்பட்டு வந்தார். தோழரது ஊக்கமும் ஆக்கமும் எங்களை தொடர்ந்து போராட தூண்டும் விதமாக இருக்கும். நக்சல்பாரிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.

பு.மா.இ.மு. மதுரை தோழர் ராஜ்குமார்  தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் இறந்த செய்தி எங்கள் பகுதிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எங்களால் நம்ப முடியவில்லை. போராட்ட தருணங்கள்தான் மகிழ்ச்சி என்று மார்க்ஸ் கூறுவதுபோல் தோழர் போராட்டங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார்.  தோழரின்  அர்ப்பணிப்பு  குணங்களை நெஞ்சிலேந்துவோம்” என்று கூறினார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை வழக்கறிஞர் நடராஜன் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் 15 வயதில் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திலும், குடும்பத்தை அரசியல்படுத்துவதிலும்  முழுமையாக செயல்பட்டு வந்தவர். அவருடைய இந்த மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்

தி.மு.க. உசிலை ஒன்றிய செயலாளர் திரு இ.சுதந்தரம் தனது இரங்கல் உரையில் ”தோழர் சந்திரபோஸ் எனக்கு தோழராகவும் உறவினராகவும் நெருக்கமாக இருந்தவர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவருடைய துடிப்பான செயல்பாட்டை என்னால் மறக்க முடியாது.    நகராட்சி ஆணையாளரிடம், ’நாங்கள் முதலாளி, நீ வேலைக்காரன், பதில்சொல்’ என்று சமசரமின்றி துணிச்சலாக பேசுவார்  அவருடைய மறைவு உசிலை பகுதிக்கு பெரும் இழப்பாக உள்ளது” என்று கூறினார்.

சிவகங்கை தோழர் நாகராஜ் தனது இரங்கல் உரையில் “தோழர் சந்திரபோஸ் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக பம்பரமாக செயல்படுபவர். முல்லை பெரியாறு பிரச்சனையில் நான் இந்தப் பகுதிகளில் 3 நாள் பிரச்சாரத்தில்  இருந்தபோது நேரடியாக பார்த்து பழகிய அனுபவம் உள்ளது. வாழ்க்கை என்பது  உயிரோடு இருத்தல்,  மக்களுக்காக வாழ்தல் இந்த மக்கள் நாம் இறந்த பின்பும் நம்மைப் பற்றி பேசவேண்டும், சமூக மாற்றத்திற்காக நம்முடைய அர்ப்பணிப்பு தியாகம் இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகள் இருந்தும் பகுதி பிரச்சனையில் தன்னை    ஈடுபடுத்தி  வாழ்ந்தவர். போராட்டத் தருணங்களில் அவர் நம்முடன் எப்போதும் இருப்பார்” என்று கூறினார்.

தோழர் கதிரவன் தனது  உரையில் “போஸ் சாகவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு இந்த அரசும் ஆளும் வர்க்கமும்தான் காரணம். போஸ் ஒரு போர்வீரன் போல செயல்பட்டவர். சுகாதாரத்தைப் பற்றி பேசும் மோடி ஒரு செப்டிக் டேங்க்,  அவனை பி.ஜே.பி தூக்கி சுமந்து கொண்டிருக்கிறது முதலில் மோடியை சுத்தம் செய்யுங்கள்,  மோடியை அம்பலப்படுத்திய போஸ் காட்டிய வழியில் நடப்போம்” என்று கூறினார்.

தோழர் மோகன் தனது உரையில் தோழர் சந்திரபோஸ் தனக்காக வாழவில்லை.    நல்ல பண்புகளோடு வாழ்வது உலகத்திலேயே பெருமையானது.  பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே  சந்திரபோஸ் சிறப்பு. எப்போதும் நாட்டைப் பற்றி சிந்திப்பது அவரது பண்பு. ஒரு தோழருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்துவது நமது கடமை அந்த அடிப்படையில் நாம் இங்கு தோழர் சந்திரபோஸ் -க்கு கூட்டம் நடத்துகிறோம்.

போஸ் இறந்தவுடன் அவருக்கு இறுணி சடங்கு நடத்த வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தபோது தோழர் சந்திரபோஸ் மனைவி துணிச்சலோடு   அவருக்கு  இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் அவர் சார்ந்த அமைப்பு விதிகளின்படிதான் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அதுதான்  என் கணவரின் விருப்பம் என்று கூறும் அளவுக்கு தனது மனைவியை  அரசியல் கண்ணோட்டத்தில் வளர்த்துள்ளார் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தோழர் சாகவில்லை அவரின் நினைவுகளை நமது இதயத்தில் வைத்து தொடர்ந்து போராடுவோம், அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்” என்று கூறினார்.

வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது இரங்கல் உரையில் “புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் சென்று போராடிய   நம் தோழர் சந்திரபோஸ் இறந்து தியாகி ஆனார். அவர் தனக்கு இப்படி ஒரு  வியாதி  இருக்கிறது என்று தெரிந்திருக்கலாம், நோயை குணப்படுத்த  மருத்துவ கொள்ளைக்குப் பயந்து நோயை மறைத்திருக்கலாம்.  மக்கள் அதிகார  அமைப்பிற்கு தெரிந்திருந்தால் அவரது நோயைக் குணப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஒவ்வொரு தோழரும் அமைப்பில் வந்து செயல்பட நீண்ட காலம் தேவைப்படுகிறது. வளர்ந்த தோழரை இழக்கும் போது அது அவர் குடும்பத்திற்கு மட்டுமன்றி இந்த பகுதிக்கு மட்டுமன்றி இந்த நாட்டிற்கே மிகுந்த இழப்பாகிறது. இறந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்தை எங்கள் அமைப்பு பார்த்துக் கொள்ளும்” என்று பேசினார். அது மறைந்த தோழர் சந்திரபோஸ் அவர்களின் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

ஒவ்வொரு தோழரும் வைரம் போன்று உறுதியானவர்கள் அவர்களை  பட்டை தீட்டி  மேலும் உறுதியானவர்களாக  வளர்ப்பது நமது அமைப்பு. உசிலை பகுதியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டார் போஸ் அதை நிரப்ப இன்னொருத்தர் வருவார். இருந்தபோதிலும் தோழர் சந்திரபோஸ் நம்மை விட்டுச் சென்றதற்கு யார் காரணம்?.  இந்த அரசுதான்.   போஸ் இறப்பில் நாம் சபதம் ஏற்போம் மருத்துவ சிகிச்சை இல்லாமல் இனிமேல் ஒரு தொழிலாளி கூட சாகக்கூடாது என்று.

அரசு மருத்துவமனைகளுக்கு  நூறு பேரைத் திரட்டி  மொத்தமாகச் சென்று நவீன மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் கொண்டு வந்தால்தான்  நாங்கள் இங்கிருந்து செல்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தால்  இந்த அரசு உடனே பணியும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பார்த்து  நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், நீட் தேர்வில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம்  தமிழகத்திற்குச் சொந்தமான  அனைத்து மருத்துவ சீட்களையும் அள்ளிக்கொண்டு  நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு யாருக்கு சேவை செய்யப்போகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மூடிவிட்டு  தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் மருத்துவத்துறையை ஒப்படைக்கும் நோக்கம் தான் இந்த நீட் தேர்வு.

அனைத்து இடங்களிலும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அனைத்து தொழிலாளிகளும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் போராட்டத்தை ஒடுக்கும் யுத்திகளை மேற்கொண்டு வருகிறது. தோழர் சந்திரபோஸ் போன்ற தோழர்கள் இந்த மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் தோழர் சந்திரபோஸ் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம்.

இறுதியாக தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.

தோழர் சந்திரபோஸ்-க்கு செவ்வணக்கம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலம்பட்டி.

—————————————————————
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

லென்ஸ் – புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?

7

மூணாறு அருகே அமைதியாக வாழும் யோகன் பேச இயலாத ஏஞ்சலை திருமணம் செய்கிறான். அந்த தம்பதியினர் உறவு கொள்வதை திருட்டுத்தனமாக படம் பிடிக்கும் ஒரு “பிளம்பர்” அந்தக் காட்சி அடங்கிய பென் டிரைவை தொலைத்து விடுகிறான். அந்தப் பென் டிரைவை எடுக்கும் அரவிந்த் இணையத்தில் பதிவேற்றம் செய்கிறான்.

அந்தரங்கம் வெளியான அதிர்ச்சியில் ஏஞ்சல் தற்கொலை செய்கிறாள். யோகனோ மனைவியின் மரணத்துக்கு பழிவாங்கும் பொருட்டு பிளம்பரைக் கொல்வதோடு, அரவிந்தை பொறி வைத்து பிடிக்கிறான். கூடவே அவன் வாயாலே குற்றத்தை வரவழைத்து அனைத்தையும் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகிறான். இறுதியில் தற்கொலை செய்கிறான்.

இணையத்தை வக்கிரமாக பயன்படுத்துவோரால் பாதிக்கப்படும் ஒருவனின் பழிவாங்கல் கதை என்றாலும் தனது முதல் படத்தில் இத்தகைய அழுத்தமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்ட இயக்குநரை ஊடகங்கள் ஒருமித்த குரலில் பாராட்டுகின்றன.

ஆனால் மற்றவரது அந்தரங்கத்தை பகிரங்கமாக ரசிக்க கற்றுக் கொடுக்கும் ஊடகங்கள் பாராட்டுவதிலேயே இந்தப் படத்தின் போதாமை வெளிப்பட்டு விடுகிறது. மெரினா போராட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளை அதிகம் பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள். அந்த செய்திகளில் அதிகம் கொண்டு சேர்க்கப்படுவது எது?

முன்னணியில் இருக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் கணிசமான அளவிற்கு குற்றச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. தினத்தந்தி – தினமலர் பாணியில் கள்ளக்காதல் செய்திகளே அன்றாடம் அணிவகுக்கின்றன. அர்த்தமுள்ள விவாதங்கள், ஆழ்ந்த பார்வைகளை விட விரைவுச் செய்திகள் எனும் பிரிவையே தொலைக்காட்சி நிர்வாகங்கள் அதிகம் இறக்குகின்றன. அதில் செலிபிரிட்டி, உலகம், இயற்கை, சினிமா, குற்றம் என்று கலந்து தயாரிக்கப்படும் தொகுப்பில பார்ப்போர் பெறுவது என்ன?

பாலியல் தடுமாற்றங்களும், குற்றங்களும் கொண்ட செய்திகள் அதிவேகத்தில் மனிதர்களிடத்தில் இறங்குகின்றன. குறுஞ்செய்திகளில் பாலியல் குற்றச் செய்திகள் 20 விநாடி வந்தாலும் மனதில் தங்குகின்றன. தங்கியவை விழிப்புணர்வை ஊட்டுவதற்கு பதில் ஏக்கத்தையும், அந்த ஏக்கம் தோற்றுவிக்கும் கற்பனை பரவசத்தையும் ஒருங்கே அலைக்கழிக்கின்றன.

லென்ஸ் திரைப்படத்தில் வரும் அரவிந்த் ஒரு  ஐ.டி ஊழியராக, மனைவி, குழந்தை, லேப்டாப் சகிதம் சராசரியாகவும் கிரீன் டீ குடிப்பவனாக கொஞ்சம் அ-சராசரியாகவும் வாழ்கிறான். இரவிலோ அவனது சராசரி உலகம் முடிவுக்கு வருகிறது. மூடிய அறையில் லேப்டாப்பில் வேட்டைக்கு கிளம்புகிறான். ஃபேஸ்புக்கில் கிடைக்கும் பெண்களோடு கடலை போட்டு இறுதியில் ஸ்கைப்பில் வீடியோ சாட் செய்கிறான். அதன் உச்சமாக இடுப்பாடைகளை களைந்து சுய இன்பம் செய்வது!

நீ மட்டும் நேரில் இருந்தால்….? என்று ஒரு பெண்ணிடம் பேசும் அரவிந்த் அதை உண்மையில் செய்யுமளவு ‘தைரியம்’ உடையவன் அல்ல. அவனது நோக்கில் சொன்னால் அத்தகைய ‘வாய்ப்புகள்’ – அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லையாம்!

ஆரம்பத்தில் இந்தக் காட்சி வரும் போது பார்வையாளர்கள் அதிர்ச்சியோடு ஒரு இருண்ட உலகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த அதிர்ச்சியின் உளவியல் என்ன? மற்றவரோடு சேர்ந்து இத்தகைய அந்தரங்க அழுக்குகளை பார்ப்பது குறித்த வெட்கமா? இல்லை தன்னை நினைவுபடுத்தும் குற்ற உணர்வா? இல்லை இப்படி ஒரு குற்றம் உலகத்தை கண்ட அதிர்ச்சியா, இல்லை இவையெல்லாம் கலந்து ஏற்படுத்தும் குழப்ப நிலையா?

இருவருக்கிடையில் நடக்கும் பாலியல் உறவு என்பது அந்தரங்கமானதுதான். அந்த அந்தரங்கத்தை மற்றவர் மதிப்பதே கண்ணியமானது. ஆனால் அந்த உறவின் அங்கீகாரம் குறித்த வெளிப்படைத் தன்மையும், அந்த உறவின் சரி தவறுகளை தீர்மானிக்கின்ற ஜனநாயக உணர்வும் அந்தரங்கமானது அல்ல. பாலியல் பிரச்சினைகளின் அந்தரங்க தன்மையை மட்டும் கிளுகிளுப்புடன் பொதுவெளியில் வைக்கும் ஊடகங்கள் அதன் சமூகப் பரிமாணங்களை நிதானத்துடன் ஒருபோதும் பேசுவதில்லை.

இதன்படி லென்ஸ் படம் இப்பிரச்சினையை எப்படி அணுகுகிறது?

நிக்கி என்ற பெண் பெயரில் அரவிந்தோடு தொடர்பு கொள்ளும் யோகன் வீடியோ சாட்டிற்கு அழைக்கிறான். சல்மான்கானின் முகமூடியோடு அரவிந்தும் அரட்டையை ஆரம்பிக்கிறான். இந்த முகமறைப்பு என்பது தனது ஒழுக்கத்தை – அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.

அதே நேரம் இப்படி தற்காப்பிலேயே காலந் தள்ளினால் புளித்த ஆப்பிளை சுவைக்க முடியாது. ஏற்கனவே இப்படி பலரைப் பார்த்திருப்பவன் என்பதால் எதிரே முகமூடியோடு இருக்கும் நிக்கி கேட்டுக் கொண்டதன் பேரில் உடன் சல்மானை அகற்றி அரவிந்தாக தரிசனம் தருகிறான். எதிரில் இருப்பது மொட்டைத் தலையுடன் ஒரு ஆண் எனத் தெரிய வந்ததும் அரவிந்துக்கு ஏற்படுவது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்ல. அது ஒரு எரிச்சல்.

பாலியல் – பாலினம் சார்ந்த பிரச்சினைகளின் பொருட்டு இணையத்தில் பாலினத்தை மாற்றி உலவுவது வழமையானதுதான். ஆகவே அரவிந்த் அந்த அரட்டையை நிறுத்தி விட்டு அடுத்த வேட்டைக்கு தயாராக நினைக்கிறான். ஆனால் அவனது முந்தையை வேட்டையில் சிக்கிய பெண் கூட யோகனால் வாடகைக்கு நியமித்து அரவிந்திற்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரிய வரும் போது தான் குற்றமிழைத்தவன் என்பதை மறைக்க தானே பாதிக்கப்பட்டவனாக அவன் நியாயம் பேசுகிறான்.

தனிமனித உரிமை, அந்தரங்க விசயங்களை பொதுவில் பேசக்கூடாது, ஒரு ஆணும் பெண்ணும் முடிவு செய்து ஈடுபடும் உறவில் அது ஏற்கப்பட்டதோ இல்லை விலக்கப்பட்டதோ எதுவாயினும் மற்றவர் அதில் நியாயம் பேசுவது தவறு என்பதாக ஆரம்பிக்கிறது அரவிந்தின் தர்க்கம். பிறகு யோகனது மனைவியான ஏஞ்செலுக்கும் அதே உரிமைகள் கிடையாதா என்று யோகன் கேட்கும் போது அரவிந்தின் உலகளாவிய தர்க்கம் தன்னலத்தின் தர்க்கமாக மாறுகிறது. அரவிந்தின் மனைவியை துகிலுறிவதாக யோகன் சித்தரிக்கும் காட்சியால் அவன் முன்னர் பேசியதற்கு எதிராக தனது மனைவியை விட்டுவிடு என்று வாதங்களை மாற்றி போட்டு கெஞ்சுகிறான். நியாயங்கள் அநியாயங்களாகவும், அநீதிகள் நீதியாகவும் உருமாறுகின்றன.

இந்த முரணை இயக்குநர் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் என்றாலும் இதுவே இந்தப் பிரச்சினையின் மையமல்ல. கூடுதலாக பேசவேண்டிய தீவிரத்தை ஒதுக்கிவிட்டு பார்ப்போரை இரண்டு விதத்தில் இப்படம் அசைபோட வைக்கிறது. ஒன்று ஏஞ்சலாவுக்கு நடந்தது போல நமது அந்தரங்கம் இப்படி வெளியே வந்தால் எப்படி இருக்கும் என்ற சுய அதிர்ச்சி. இரண்டாவது, பார்ப்போரின் குற்ற நடவடிக்கைகள் பாதுகாப்பற்றது என்பதோடு அவர்களை ‘ஒழுக்கவாதத்திற்குள்’ தள்ளிவிட்டு அச்சுறுத்தும் ‘ஒழுக்க’ அதிர்ச்சி.

இணைய வக்கிரங்கள் என்றல்ல, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகள் கூட ஒரு கணத்தில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அதாவது ஒரு கொலையோ அல்லது ஒரு சிறுமி மீதான பாலியல் வன்முறையோ நமது குழந்தைகளை ஒப்பிட்டு மனம் கலக்கமடையும். ஒரு தனிநபநருக்கு சமூகரீதியான பாதுகாப்பு எந்த அளவுக்கு கிடைப்பதில்லையோ அந்த அளவுக்கு இந்தக் கலக்கம் நம்மை வாட்டும்.

பாலியல் பிரச்சினைகளில் வரும் செய்திகள் வேறு விதமான ஒப்பிடலையும் நம்மிடம் தோற்றுவிக்கும். குறிப்பாக கள்ளக்காதல் தொடர்பான செய்திகளைப் படிக்கும் போது அது ஒரு சமூக அதிர்ச்சி அளிப்பதோடு கூட ஆண்களிடம் (குறைவாக பெண்களிடமும்) மெல்லிய அளவிலான ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது. அவர்கள் கள்ளக்காதல் கொலைகளையோ குற்றங்களையோ ஆதரிக்கவில்லை. எனினும் அப்படிப்பட்ட பெண்கள்(ஆண்கள்) தமது சுற்றத்தில் இல்லையே அல்லது நாம் அவ்வளவு தைரியமற்று இருக்கிறோமே என்றெல்லாம் கொஞ்சம் இழுத்துச் செல்லும்.

ஆனால் இந்த இழுப்பு தேவைப்படாத அளவுக்கு ‘தெளிவாக’ இருப்போரும் உண்டு. இந்த இரண்டு முனைகளுக்கு இடையே அலைபாயும் மாந்தர் மனநிலையை லென்ஸ் படம் எப்படி பாதிக்கிறது?

ஏஞ்சலாவின் அந்தரங்கத்தை பொதுவெளியில் ஏற்றும் அரவிந்த் அவனது மனைவியை அப்படி காட்டும் போதுதான் கொஞ்சம் கலங்குகிறான். இப்படி ஊரில் ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி இழைக்கப்டும் போது உனது அக்கா தங்கச்சிக்கு நேர்ந்தால் நீ சும்மா இருப்பியா என்ற வழமையான கேள்வியை கேட்டிருப்போம். இந்த அணுகுமுறை குறிப்பிட்ட குற்றத்தை அதே குற்றம் உனக்கு நடந்தால் எப்படி என்று மாற்றிப் போட்டு கேட்கிறது. லென்ஸ் படத்தின் அடிநாதமான பார்வையும் இதுதான். அதன்படி பார்வையாளர்கள் ஒரு வித ‘ஒழுக்கவாத’த்திற்குள் தள்ளிவிட்டு அச்சுறுத்துவதால் என்ன பயன்?

ஒழுக்கம் வேறு, ஒழுக்கவாதம் வேறு. மனித குலத்தின் நாகரீக வளர்ச்சிக்கான அடிப்படை சமுதாயக் கூட்டுழைப்பில் கட்டப்பட்டது. சேர்ந்து போனால்தான் வேட்டையில் விலங்கு கிடைக்கும்; இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பித்து உயிர் வாழ முடியும். பின்பு சமூகத்தின் உற்பத்தி வளர வளர இந்த கூட்டு உழைப்பின் உறவுகள் நெறிமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றை சொத்துடமை சார்ந்த பொருளாதார உறவுகள் மக்களை ஒரு சமூகமாக ஒரு மீப்பெரும் மனிதனாக பயணிக்க வைக்கிறது.

விலங்கு நிலையில் இருக்கும் பாலியல் உணர்ச்சி இத்தகைய சமூக நியிதிகளினால் பண்படுவதோடு சேர்ந்து புண்படவும் ஆரம்பிக்கிறது. பண்படுவது காதல் என்றால் புண்படுவது அந்த காதலுக்கு உருவாக்கப்பட்ட பொருளியல் தடைகள். பண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக சமூக உறவும் புண்படுவதற்கு பௌதீக அடிப்படையாக விலங்கியல் உணர்ச்சியும் முரண்படுகிறது.

ஆகவே சமூகவியல் வரலாற்றில் காதல் என்பதே இன்றைக்கு அழைக்கப்படும் ‘கள்ளக் காதலில்தான்’ தோன்றியது. அதாவது விரும்பியவரை மணமுடிப்பதற்கு ஏற்படும் தடைகளே கள்ளத்தனமாக காதலிப்பதை தோற்றுவித்தது. இவ் வரலாற்றின் படி இன்றைய காதலும் கூட அன்றைய ஒழுக்கவாதத்தை மீறிப் பிறந்த ஒரு புதிய ஒழுக்கம். ஒழுக்கவாதம் என்பது நேற்றைய நியதிகளின் படி இன்றைக்கு தேவைப்படும் மாற்றத்தை அல்லது புதிய ஒழுக்கத்தை எதிர்க்கும் ஒரு சமூக அதிகாரம்.

வாய்மை எனப்படுவது ஒழுக்கமென்றாலும் பிறர் நலன் பயக்க அதை மீறலாம். ஒழுக்கம் என்றால் என்ன?  (Communist morality is that which serves this struggle and unites the working people against all exploitation, against all petty private property; for petty property puts into the hands of one person that which has been created by the labour of the whole of society. In our country the land is common property”) “புரட்சிக்கு எவையெல்லாம் நன்மை பயக்குமோ அவையெல்லாம் ஒழுக்கம்” என்றார் லெனின். தற்கொலைப் போராளியை கோட்பாட்டு ரீதியில் மறுக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி கூட தேவையையொட்டி அதை மீறலாம்.

ஆகவேதான் ஒழுக்கத்தை ஒழுக்கவாதமாக பார்ப்பதும் பரிசீலிப்பதும் ஊறு விளைவிக்கும். சில அறிஞர்கள் கருதுவது போல இத்தகைய பண்பாட்டு மாற்றங்கள் சில அசாதாரணமான தனிநபர்களின் சிந்தனையிலிருந்தோ இல்லை முசுலீம் – இந்து மதவெறியர்கள் முன்வைக்கும் புனித நூல்களிலோ உருவாகுவதில்லை. மக்களின் வாழ்க்கைப் போராட்டமே புதிய விழுமியங்களை உருவாக்குகின்றது. இவை நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டு புறத்தே நம்மை அறியாமல் உருவாகின்றன. அறியாமல் நடக்கும் இப்போராட்டத்தை அறியும் வரை அறிந்ததாக நாம் நினைக்கும் நேற்றைய ஒழுக்கங்களும், மீறலும் நம்மை நிலைகுலையவைக்கும் அறியாமையில் மீள முடியாமல் ஆழ்த்துகின்றன.

லென்ஸ் – திரைப்படம் இணையத்தில் பாலுறவு சார்ந்து சிக்கிக் கொண்டிருப்போரை பழைய வகை வில்லன் நம்பியார் போல மிரட்டுகிறது. மற்றவர் அந்தரங்கத்தை பார்க்கும் நீ அதே போல உனது அந்தரங்கத்தை மற்றவர் பார்த்தால் என்ன செய்வாய் என்று ஒரே அடியாக வீழ்த்துகிறது. இத்தகைய கிளீன் போல்டு சமாச்சாரங்கள் எவையும் ஃபோர்னோவில் தடுமாற்றத்துடன் சிக்கியிருக்கும் மனங்களை மீட்பதற்கு உதவாது.

ஏனெனில் மற்றவர் நமது அந்தரங்கத்தை பார்க்க கூடாது என்பது உடலளவில் மட்டுமே சரி. உள்ளத்தளவில் மற்றவர்களின் பார்வையில் நமது அந்தரங்கம் படாதவரை அதாவது குறிப்பிட்ட பாலுறவு குறித்து மனந்திறந்து பேசாத வரை குறிப்பிட்ட நபர் ஏன் ‘கள்ளத்தனம்’ செய்கிறான்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போவது மட்டுமல்ல, அவனை வெளிப்படையாக முரணற்ற வகையில் செயல்பட வைக்கவும் முடியாது.

சமூக வாழ்க்கையில் இணக்கமாக இருக்க வேண்டிய தேவை கட்டயாத்தில் இருப்பினும் அது இயல்பாகவும் இருக்க வேண்டும். விவாகரத்து உரிமை இருக்கும் வரைதான் மண உறவும் காதலோடு இயல்பாக நீடிக்க முடியும். இந்தக் கட்டாயம் – இயல்பு என்பது அம்மா குழந்தையை முத்தவிடுவதும், தேவை இருப்பின் ‘கண்டிப்பதும்’ போல. பாலியல் பிரச்சினைகளில் நாம் சமூக அம்மாவின் அருமையை மறந்து கண் காணாத இடத்திற்கு ஓடிப் போகிறோம். நாம் ஏன் அந்த மீப்பெரும் அம்மாவிடம் பேச மறுக்கிறோம்?

படத்தில் யோகனின் மனைவி ஏஞ்சல் ஏன் தற்கொலை செய்கிறாள்?

தனது படுக்கை அறையையே கேமரா ஊடுறுவி விட்டது என்பதறியும் அந்தப் பேதைப் பெண் பிறகு வீடு முழுக்க ஒரு எலி – கொசு கூட நுழைய முடியாதபடி சன்னல், துவாரங்கள் அனைத்தையும் மூடுகிறாள். குளிக்கும் போது மொத்த ஆடையோடு கூட காலுறையும் அணிகிறாள்.

பித்துப் பிடித்தவள் போல அவள் செய்யும் இந்த ரணமான பாதுகாப்பு எதை உணர்த்துகின்றது? எல்லா இடத்திலும் ஏதோ ஒரு கண் தனது அந்தரங்கத்தை பார்க்கிறது என அவள் பயந்து கற்பித்துக் கொள்கிறாள். கணவனோடு தனது உறவு இணையவெளிக்கு வந்த பிறகு இருட்டு அறையில் புர்கா போட்ட பிறகும் தனது உடலை ‘அக் கண்கள்’ வெறியோடு ஊடுறுவிப் பார்ப்பதாக அஞ்சுகிறாள். எனில் இங்கே எதுவும் பாதுகாப்பானது இல்லை.

ஆகவே இந்த யதார்த்தம் சுட்டும் புனைவு உலகிலிருந்து அவள் தற்கொலை மூலம் விடைபெறுகிறாள். இது சமூகத்தின் அநாகரீகத்தை அம்மணமாக்கும் ஒரு வேதனையான கலகம். அதே நேரம் சமூகத்தின் அநாகரிக மிரட்டலை எதிர் கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த “புரியா புதிர்” படத்தின் களமும் இதுதான்.

இசைக் கருவிகளை விற்கும் கடைக்கு வரும் மீராவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான் கதிர் (சேதுபதி). கண்ணியமாக காதல் வளரும் போதே சில மர்மமான துன்பங்கள் செல்பேசியின் வீடியோ செய்திகளாக தாக்க ஆரம்பிக்கின்றன. மீரா உடை மாற்றுவது, குளிப்பது அனைத்தும் ஒரு அனாமதேய எண்ணில் இருந்து வருகின்றன. கள்ள உறவுகளை வைத்திருப்பதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் இன்றைய உலகின் நாகரீகங்களாக அங்கீகரிக்கும் இரண்டு நண்பர்கள் கதிருக்கு உண்டு. அவர்களை அவன் செல்லமாக கண்டித்தாலும் அது நட்பை துண்டிக்கும் அளவுக்கு இல்லை.

காதலி மீராவின் காட்சிகள் வருவதைத் தடுக்க நினைப்பவனுக்கு போலீசு உதவும் விதத்தில் இல்லை. இடையில் அலுவலக மேலாளரது மனைவியோடு உறவு வைத்திருக்கும் படம் வெளியான அவமானத்தில் கதிரின் நண்பன் தற்கொலை செய்ய, பாரில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்படுகிறான். மீராவின் படங்களை அனுப்பி துன்புறுத்துவது யார்? என்று ரசிகர்கள் இருக்கை முனையில் ஆராயும் பொருட்டு சில பல திசை திருப்பல்களை செய்து விட்டு இறுதியில் உண்மையைச் சொல்கிறார் இயக்குநர்.

கல்லூரி ஒன்றின் கலை நிகழ்ச்சியில் கதிரைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் மீரா. அவளது தோழி மிருதுளா அந்தக் காதலை ஏற்றி விடுகிறாள். காதலை எப்படி சொல்வது என அவள் குளியல் உடையோடு அபிநயிக்கும் காட்சியை படம்பிடிக்கும் மீராவின் செல்பேசியை கதிரின் நண்பர்கள் எடுத்து காட்சியை பொதுவெளிக்கு கொண்டு வருகின்றனர். அப்போது கதிரின் கவனத்தில் மீரா என்ற பெண் இல்லை.

பிறகு மிருதுளாவை கண்டிக்கிறது கல்லூரி நிர்வாகம். அப்பாவோ ருத்ரதாண்டவம் ஆடுகிறார். யாரோ ஒரு ஆணோடு சல்லாபம் செய்கிறாள் மிருதுளா என மொத்தக் கல்லூரியும் ரசிக்கிறது. அவமானம் தாங்க முடியாமல் மிருதுளா கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறாள். இந்த வலியை உணர்த்தும் பொருட்டே மீராவும் கதிரை காதலிக்கிறாள். அவளது காட்சிகளை அவளே எடுத்து அனுப்பி  கதிரை கலங்க வைக்கிறாள்.

கடைசியில் இக்கதையினை ஒரு டைரியில் எழுதி வைத்து விட்டு அவளும் தற்கொலை செய்கிறாள். கடைசிக் காட்சியில் நான் எந்த தப்பும் செய்யவில்லையே என கதிர் கதறும் போது அவனது நண்பர்களை கதிர் கண்டிக்கவில்லையே என கூறும் மீரா, தன்னைச் சேர்ந்தவர்கள் இறக்கும் போது ஏற்படும் வலியை கதிரும் உணரவேண்டும் என காதலுடன் விடைபெறுகிறாள்.

இந்தப் படமும் லென்ஸ் படம் போல அதே கருத்தையே பிரதிபலிக்கிறது. மேலாளரின் மனைவியோடு இருக்கும் படம் வெளியான விவகாரத்தில் அது நான் இல்லை என வாதிடும் கதிரின் நண்பன், பிறகு அது தனது தனிப்பட்ட விசயம் எனவும் அதற்காக தன்னை வேலை நீக்கம் செய்ய முடியாது என்கிறான். மிருதுளா, மீராவுக்கு ஏற்பட்ட அவமான அதிர்ச்சி அவனுக்கு ஆரம்பத்தில் ஏற்படவில்லை. வேலை போன பிறகே அவன் தற்கொலை செய்கிறான்.

மற்றவரின் அந்தரங்கத்தை ரசிப்போர் தமது அல்லது தன்னைச் சேர்ந்தோரது அந்தரங்கத்தை ரசிப்பார்களா என்று படம் கேள்வி எழுப்புகிறது. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கவில்லையா என்ற அதே கேள்வி. இயக்குநர் அவர்களே, இந்த கேள்வியின் நியாயம் இறந்து நாட்கள் பலவாகிவிட்டது. இப்போது நாம் கடந்து போக வேண்டியது இந்த பிரச்சினையை ஒரு பெண் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதே!

சிதம்பரத்தில் பத்மினியின் கணவனை அடித்துக் கொன்ற போலீசு மிருகங்கள் பத்மினையையும் குதறித் தீர்த்தன. அந்த வழக்கை பொதுவெளியில் எதிர்கொண்டு அந்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கித் தந்தார் பத்மினி. இங்கே பத்மினி தைரியமாக போராடியது போலீசு – அதிகார வர்க்கத்தை எதிர்த்து மட்டுமல்ல. ஒரு பெண்ணின் உடலை வைத்து பின்னப்பட்ட புனித அடிமைத்தனத்தை உதறியதில்தான் பத்மினியின் வீரத்தைக் காண்கிறோம். இந்திய ராணுவத்தை எதிர்த்து ஆடைகளை துறந்து போராடிய மணிப்பூர் பெண்களின் அம்மணம், சீருடை தரித்து யோக்கிய வேசம் போடும் இராணுவத்தின் வக்கிரத்தை தோலுரித்துக் காட்டியது.

மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களின் போதும் போராட வந்த பெண் தோழர்களிடம் போலீசு இப்படித்தான் செயல்பட்டது. கைது செய்வதின் பேரில் அவர்களது பெண்ணுறுப்புகளை தொட்டு, தடவி, தாக்கி அச்சுறுத்தியது. அதனால் அடுத்த போராட்டத்திற்கு அப்பெண்கள் வரத் தயங்குவார்கள் என்பது போலீசின் திட்டம். ஆனால் இப்பிரச்சினையை அஞ்சாமல் அப்பெண் தோழர்கள் பேசி அதை எதிர்கொள்ள முடிவெடுத்து தொடர்ந்து போராடுகிறார்கள்.

இங்கே இரண்டு படங்களும் பெண்களின் புனிதத்திற்கு ஏற்படும் இழுக்கை வைத்தே பார்வையாளர்களிடம் மிரட்டி போதிக்கின்றன. இந்த மிரட்டலால் பெரிய பலனில்லை என்பதே நமது விமரிசனம்.

கள்ளக்காதல் காட்சிகளை இணையத்தில் கொட்டும் ஆண்களுக்கு அது அவர்களது ஆண்குறிகளது கம்பீரத்தை காட்டுவதாக நம்புவதால் பெருமையடைகிறார்கள். பெண்களுக்கோ ஊரார் மேய காத்திருக்கும் வேசிப்பட்டம் கிடைப்பதால் முடங்கிப் போகிறார்கள். இல்லையெனில் கொலை அல்லது தற்கொலை மூலம் மரித்துப் போகிறார்கள்.

பெண்களின் குளியலறை காட்சிகளை படம்பிடிக்கும் ஆண்கள் போர்னோ உலகிற்கு தமது டெக்னாலஜியின் பங்களிப்புகளாக மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் பழிவாங்குவதற்கும் செய்கிறார்கள். அக்காட்சிகள் வெளியானதும் தன்னை சமூகம் இனி ஏற்காது என முடிவெடுத்து அப்பெண்கள் உடைந்து போகிறார்கள் – தற்கொலை செய்கிறார்கள்.

காதலின் ஜனநாயகப்படுத்தலை பேசாமல் கள்ளக் காதலின் அதிர்ச்சி ஏற்படுத்தும் வன்முறைகளை பேசிப் பயனில்லை. பெண்ணின் உடல் புனிதத்தை களையாமல் நமது வீட்டுப் பெண்களுக்கு மட்டும் அது நடக்க கூடாது என்று நினைப்பதால் பயனில்லை.

ஆகவே இப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் போராடும் விதத்தை கதையாக எடுத்திருக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. இப்பிரச்சினைகளின் வலியும், விளைவும், பல்வேறு சமூகப்பரிமாணங்களோடு உணர்த்த வேண்டும் என்கிறோம். நம்பியார் துகிலுறியும் போது எம்ஜிஆர் வந்து காப்பாற்றுவதற்கு கை தட்டுவதும், அதே துகிலுறிதல் ஆப்பிள் செல்பேசியால் பொதுவெளிக்கு வரும்போது கண் கலங்குவதும் வேறு வேறு அல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஆணாதிக்கத்தின் காம நுகர்வு வெறியால் காதலை கண்டு கொள்ளவே இயலாது. உடல் புனிதத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனம் ஜனநாயகமயமான காதலுக்கு போராடவே வராது.

இவற்றை எப்படி கதையாக எடுக்க முடியும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் லென்ஸ் – புரியாத புதிர் இரண்டும் தொழில்நுட்பத்தினால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதைத் தாண்டி ‘பா’ வரிசைப் படங்களின் நிலவுடமை அடிமைத்தன உணர்ச்சிகளிலிருந்து எள்ளளவும் வேறு படவில்லை.

இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை அச்சு அசலாக நோக்கும் புதிய இயக்குநர் ஒருவர் இக்கட்டுரையின் பேசுபொருளை செரித்துக் கொண்டு அப்படி ஒரு படம் எடுப்பார் என நம்புகிறோம்.

_____________

அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !

3

அரசு இயந்திரத்தின் ஒத்தாசையுடன் சர்வவியாபகமாகும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள்!  மீளமுடியாத நெருக்கடியில் சிக்கும் தமிழக உயர்கல்வித்துறையும் வேலை வாய்ப்புச் சந்தையும் !!

“அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பேராசிரியர்கள் அனைவரையும் மற்ற அரசு கல்லூரிகளில் நிரப்பும் வரை புதிய ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு மாநில பல்கலைகழகங்களை கேட்டு கொண்டுள்ளதாக உயர்கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்ததாக” 25-9-2017 தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2017 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும் அலுவலக ஊழியர்களையும் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிநிரவல் செய்து முடிக்கும் வரை எந்த பல்கலைக்கழகமும் புதியதாக எவ்வகையான நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்துள்ளது.

முதற்கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 369 உதவிப் பேராசிரியர்கள் பல்வேறு அரசுக் கல்லூரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.  தற்போது 545 ஆசிரியர்கள் மற்றும் 2,645 அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியிடமாற்றம் செய்யப் படுகின்றனர்.

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் மட்டும் 45 அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பாலிடெக்னிக்குகளில் 211 விரிவுரையாளர்கள் மற்றும் 40 உடற்கல்வி இயக்குநர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 86 உதவிப்பேராசிரியர்கள், அரசு கலைக்கல்லூரிகளில் 208 உதவிப்பேராசிரியர்களுக்கும் மாற்றல் வழங்கப்பட்டுள்ளனர்.

உதவியாளர்கள், எழுத்தர், ஓட்டுநர், மென்பொருளாளர்கள் உட்பட்ட 2,635 அலுவலகப் பணியாளர்களை தலைமைச் செயலகம் உட்பட்ட அரசுத் துறைகளில் பணியிடமாற்றம் செய்கின்றனர்.

தற்போது உயர்நீதிமன்றத்தில் 500 ஊழியர்களும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 552 பேரும், தொழிற்கல்வி இயக்குநரகத்தில் 452 பேரும், சமூகநலத்துறை இயக்குநரகத்தில் 452 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை முதற்கட்டமாக பேராசிரியர்கள் உட்பட 3,170 ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1,031 பேராசிரியர்கள் (19 பேராசிரியர்கள், 12 இணை பேராசிரியர்கள், 844 உதவிப் பேராசிரியர்கள், 150 புரோகிராமர்கள் மற்றும் 6 உதவி நூலகர்கள்) உட்பட மொத்தம் 5755 ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுவதாக தமிழக அரசு தற்போது கண்டுபிடித்துள்ளது.

இவர்களனைவரும் அங்கிருந்து தமிழ்நாட்டு அரசின் அனைத்துப் பொதுத் துறைகளுக்கும் மாற்றப்படுவது வரை தமிழ்நாட்டில் இனி புதிய நியமனங்களோ, பதவி உயர்வுகளோ நடத்தக் கூடாது என ஒவ்வொரு துறைக்கும் சுற்றறிக்கை விடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இரண்டு கட்டமாக நூற்றுக்கணக்கான அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழியங்கும் பொறியியல் கல்லூரி கற்றல் உதவியாளர்கள் (teaching fellows) 45 பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு அரசுத் துறைகளில் குறைந்த கூலிக்கு கடினமான வேலைகளை செய்து வந்த தற்காலிக ஊழியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 37% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலுள்ளன.  இங்கு தற்காலிக விரிவுரையாளர்கள் குறைந்த கூலிக்கு (ரூ. 10,000-த்திலிருந்து ரூ. 20,000 வரை சம்பளத்தில்) பிற பணிப்பயன்களோ, பணிப்பாதுகாப்போ, கௌரவமோ இல்லாமல் மாடாக உழைக்கும் நிலைதான் இதுவரை இருந்தது.

Ph.D அல்லது NET தேர்வில் வென்றாலும் கூட TRB நியமனத்தின் போது 7.5 வருட பணிமூப்பு இருந்தால் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் வேலைக்கு தகுதியானவர் என்ற தமிழக அரசாணை நடைமுறையில் உள்ள காரணத்தால் இந்தகைய கொத்தடிமை வேலைக்கு படித்த தகுதியான இளைஞர்கள் பலரும் வேலைக்கு வருகின்றனர்.  இன்று 8 வருட பணி மூப்பு இருப்பவரைக் கூட வேலையிலிருந்து தயவு தாட்சண்யமின்றி விரட்டியடித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தைப் பற்றி

1929 –ல் அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. 50 துறைகள். 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள். 1979 – 80 ஆம் ஆண்டு தொலை தூர கல்வி தொடங்கப்பட்டது.  259 பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு, முதுகலைப் பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 89 கல்வி மையங்கள், 78 தகவல் மையங்கள்.

முறையற்ற நியமனம் மற்றும் நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை. 2012 ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வியை தமிழக அரசு முடக்கியது. (அந்த மசோதாவை 5 ஆண்டுகளுக்குப் பின் 2017 தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது).  இதை எதிர்த்து 2012 -ல் ஆசிரியர்கள், ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றனர். சிபிஎம் மற்றும் பாமக ஆகியோர் குரல் கொடுக்கின்றனர். நிர்வாகத்தை 2013 -ல் தமிழக அரசு அரசாணை மூலம் எடுத்துக் கொள்கிறது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியதிகாரி சிவ்தாஸ் மீனா

தமிழக அரசு சிவ்தாஸ் மீனாவை தனியதிகாரியாக நியமிக்கிறது.  பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட முறையற்ற நியமனம், யுஜிசி விதிகளுக்கு முரணான பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் என பல்வேறு முறைகேடுகள் பற்றிய விரிவான அறிக்கையை தமிழக உயர்கல்வித் துறையிடம் அவர் சமர்ப்பிக்கிறார்.

2015 -ல் புதிய துணை வேந்தராக மணியன் நியமனம் செய்யப்படுகிறார். பதிவாளராக ஆறுமுகம் பொறுப்பேற்கிறார். தமிழக அரசு நிதி ஒதுக்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. ஆனால் பணிப்பயன்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரூ. 200 கோடிக்கு மேல் மானியம். அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 2,300 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ. 139 கோடியில் 43% அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மட்டுமே தின்று செரிக்கிறது.  இப்பல்கலைக் கழக ஊழியர்களின் சம்பளப்பணம் மட்டும் மாதாந்திரம் ரூ. 40 கோடி என்றால் இந்த வெள்ளையானையை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டி மேய்க்கும் தமிழ்நாடு அரசின் கயமையின் தீவிரத்தைப் பாருங்கள்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 25 ஆண்டுகளிலேயே மீளமுடியாத நெருக்கடிக்குள் உயர்கல்வித்துறை சிக்கியுள்ளது. இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோன்றியுள்ள இந்நெருக்கடியை தமிழகம் முழுக்க பரவலாக்குவதற்குப் பின்னால் ஒரு மாபெரும் ஊழல் ஒளிந்துள்ளது. இதில் அதிமுக அரசாங்கம் மட்டுமன்றி அரசு இயந்திரத்தில் பழம் தின்று கொட்டைபோட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும், ஏன் சங்கத் தலைவர்களுக்கும் கூட பாரிய பங்குள்ளது.

குற்றங்கூட சாட்டப்படாமல் செத்துப்போன மாபெரும் ஊழல் குற்றவாளி எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

16,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான எம்.ஏ.எம்.ராமசாமி தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக 2012 வரை இருந்தவர். எம்.ஏ.எம்.ராமசாமி, இந்தியாவில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில், சொத்துக்களின் அடிப்படையில், 18 -வது இடத்தில் இருப்பவர். கல்வி, சிமெண்ட், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், தோட்டத் தொழில், போக்குவரத்து, கப்பல் வணிகம், கிரானைட், ஏற்றுமதி – இறக்குமதி, ஜவுளித் தொழில், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தவர்.

எம்.ஏ.எம். ராமசாமி செட்டி

சந்தையில் பிரபலமான, ‘செட்டிநாடு சிமெண்ட்’ நிறுவனம், இவருடைய தொழில் குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது அனைத்து சொத்துக்களிலும் முதன்மையானது அண்ணாமலை பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழக நிதி மட்டும் ரூ. 10, 000 கோடியை இணை வேந்தராக இருந்த ராமசாமி சுருட்டியதாகவும் அதனை அரசு மீட்க வேண்டுமென்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் சுப்ரமணியன் கூறுகிறார் (தி இந்து மே 10, 2017) என்றால் இவர் எவ்வளவு பெரிய முதலை என்று பாருங்கள். மேலும் இவர் விஜய் மல்லையாவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிநியமன முறைகேடு, நிர்வாக சீர்கேடு, நிதி சிக்கல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என்ற காரணத்தைக் கூறி அரசுடமையாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் இவ்வூழலுக்கு காரணமானவர்கள் மீது துறை சார்ந்தோ குற்றவியல் சட்டத்தின் கீழோ எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2013 வரையான காலகட்டம் ஊழல்-I  எனக் கொண்டால் 2013-ற்கு பிந்தையது ஊழல்-II.

ஊழல் – I

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், பேராசிரியர் அல்லாத இதர அலுவலர், அதிகாரி என அனைத்துப் பதவிகளும் கடந்த 25 ஆண்டுகளாக பச்சையாகவே விற்பனை செய்யப்பட்டன.

அரசு, அரசு உதவிபெறும் நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் தங்களிடம் இருக்கின்ற காலிப்பணியிடங்கள், அதற்குத் தேவையான நபர்கள், தகுதி போன்றவை குறித்து விளம்பரம் செய்யப்படும் நடைமுறை உள்ளது.  வந்திருக்கின்ற விண்ணப்பங்களில் தகுதியான நபர்களை  எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றை நடத்தி பணிக்கு அமர்த்தப்படுவர்.

அரசாங்கம், அரசாங்க உதவிபெறும் நிறுவனம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.  ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தன்னிடம் எத்தனை காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விளம்பரம் செய்ததில்லை. அங்குப் பணிக்கு அமர்த்தப்பட்ட முறையானது அரசாங்கத்தின் ஒழுங்குமுறைக்கும் தனியார் நிறுவனங்களின் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டது அல்ல.

அது தான்தோன்றித்தனமாக பணியிடங்களை விற்பனை செய்தது. ஒவ்வொரு பதவிக்கெனவும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. உதவிப் பேராசிரியர் விலை ரூ. 10 லட்சத்தில் தொடங்கி சுமார் ரூ. 50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.

அரசாங்கம், தனியார் நிறுவனம் ஆகியவற்றில் அந்தந்த வேலைக்குத் தகுதியான ஆட்களைத் தான் நியமிப்பார்கள். ஆனால் இங்கு திறமை தகுதி போன்றவை ’கிலோ எவ்வளவு ரூபாய்?’ எனக் கேட்குமளவிற்கு உள்ளது. யூஜிசியோ தமிழக அரசோ வகுத்துள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் எந்த பதவியும் நிரப்பபடவில்லை. பெரும்பாலானவர்கள் தொலைதூர முறையில் கல்விபயின்றதாக சான்றிதழ் வைத்துள்ளனர்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமோ புரோக்கர்களை உருவாக்கும் வேலையைத் தான் திறம்பட செய்தது. இது செட்டியாரின் தொழில்திறமை.

பேராசிரியர் பணிக்கு சேரவிரும்பும் ஒருவர் அங்கு ஏற்கனவே பணியிலிருக்கும் ஒருவர் மூலம்   மேற்குறிப்பிட்ட தொகையை கொடுத்து பணியில் சேர்வார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தன்னிடம் விலைகொடுத்து பதவி பெற்று பணியாற்றும் பணியாளர்களையே புரோக்கர்களாவும் நியமித்திருந்தது.

அதாவது பேராசிரியர் முதல் பியுன் வரை பாரபட்சமின்றி புரோக்கர்களாகவும் இருந்தனர். பணிநியமனம், பட்டம் அளித்தல், தேர்ச்சிபெறச் செய்தல், மாணவர் சேர்க்கை என அனைத்திற்கும் உரிய விலை நிர்ணயிக்கபட்டது. இவற்றைத் தேவையானவர்களுக்கு வாங்கிக்கொடுக்கின்ற  நபர்களுக்கு நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை புரோக்கர் கமிஷனாகக் கொடுத்துவிடும்.  இந்த வியாபாரத்தில் சிறந்த புரோக்கர்கள் முன்பணி ஆணை பெற்றிருந்தனர்.

உதாரணத்திற்கு வரலாற்றுத் துறையில் சுப்பன் என்ற நபர் தனக்கு உதவிப் பேராசிரியர் பணி வேண்டும் என்று அங்குப் பணியாற்றும் மன்னன் என்ற புரோக்கரை நாடினால் அவர் சுப்பன் பெயருக்கு பணியாணையில் நகலைத் தருவார். அப்போது அவர் அந்தப் பணிக்கான மொத்தத் தொகையில் பாதித் தொகையைக் (ரூ. 20 லட்சம்) கொடுக்க வேண்டும். மீதித் தொகையை செலுத்திய பின்னர் அந்தப் பணியின் அசல் ஆணையை மன்னன் சுப்பனிடம் கொடுப்பார்.

ஒருவேளை சுப்பனால் பணம் திரட்ட இயலாமல் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறவிரும்பினால் மன்னன் ரூ. 20 லட்சத்தில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மீதம் ரூ. 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுப்பார்.

சுப்பன் முழுத்தொகையும் வட்டிக்குக் கடன்பெற்று கொடுத்து அந்த வேலையை வாங்கிவிட்டால் வட்டியிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் ஒரு வழிமுறையைப் பின்பற்றினர். அங்குப் பணிக்குச் சேர்ந்த சுப்பனுக்கு அங்குச் செயல்படுகின்ற தேசிய வங்கியில் தனிநபர் கடன் விரைவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அந்த புரோக்கர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் துணைபுரியும்.

சுப்பன் வங்கியில் தனிநபர் கடன்பெற்று வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம். வேலையை விற்பது, அந்த விலையை தான் பெற்றுக்கொண்டு அதில் ஈடுபட்ட புரோக்கருக்கு உரிய கமிஷனை கொடுத்தல், வட்டிக்குப் பணம் திரட்டி வேலையை வாங்கும் நபருக்கு வட்டிக்காரனின் வட்டித் தொல்லையிலிருந்து நிவாரணம் செய்வதற்காக அங்குள்ள வங்கியில் தனிநபர் கடனுக்கு ஏற்பாடு செய்தல். என இது அங்கு ஒரு முறையான ஊழலாக நடந்து வந்தது.

இந்த வியாபரத்தில் சம்பாதித்தவர் செட்டியார் மட்டுமல்ல புரோக்கர்களான பேராசிரியர்களும் ஊழியர்களும் கூட கோடிகளில் சம்பாதித்தார்கள். புரோக்கர்கள் பலரும் கோடிஸ்வரர்களான கதைகள் நிறைய உண்டு. அவர்கள் சொத்துக்களை பாண்டிச்சேரி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் குவித்துள்ளனர்.

ஊழியர்களுக்கான ஊதியத்தை தொலைதூரக் கல்வி நிறுவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தனர். அங்கு வருமானம் கொட்டோ கொட்டென்று  கொட்டியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கிளைகள் இந்தியாவில் பல பாகங்களிலும் இருந்ததால் கிளை நிறுவனங்களை நடத்துகின்ற நபர்கள்  பட்டங்களைத் தேவைப்படுவோர்க்கு விற்றனர்.

தேர்வு நடத்துதல், மதிப்பிடுதல் என அனைத்துமே கண்துடைப்பு வேலை. கிளை நிறுவனங்களுக்கு தலைமை நிறுவனம் பேராசிரியர்களை தேர்வு நடத்துவதற்கு அனுப்பி வைக்கும். கிளையை நடத்தும் முகவர் அந்தப் பேராசிரியர்களுக்கு உரிய கவனிப்புகளைச் செய்வார். தேர்வில் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெறுவர்.

இதனால் அங்குப் பண மழை பொழிந்தது. இவ்வாறு வந்த பணத்தை அப்போது அரசு அங்கீகாரம் பெறாத இதர கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக மருத்துவக் கல்லூரிக்கு மடைமாற்றியது. பின்னர் அங்குக் கொட்டிய பணத்தை தொலைதூரக் கல்வி இயக்குநரகத்துக்கு மடைமாற்றியது. இவ்வாறு தேவைக்கு ஏற்ப பணம் மடைமாற்றுதல் நடைபெற்றது.

இதில் கிடைத்த லாபத்தில் நிர்வாகத்தில் இருந்த பலரும் சுருட்டிக்கொண்டனர். இதனால் அது பெரும் சீரழிவைச் சந்தித்தது. இந்தச் சீரழிவிற்குக்  காரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மட்டுமல்ல அதில் பணியாற்றியோரும் காரணம்.

செட்டியார் வேலையை விற்றார் என்றால் அது தவறு என்று தெரிந்தே வாங்கினர் பணியாளர்கள். வேலை வாங்கிய பணியாளர்கள் குற்றம் என்றும் தெரிந்தும் வேலையையும் பட்டங்களையும் விற்பதற்கு புரோக்கர்களாகச் செயல்பட்டனர்.  செட்டியார் சீரழிவைச் செய்தார் என்றால் அந்தச் சீரழிவை சமூகமயமாக்கியவர்கள் அங்கு வேலை வாங்கியவர்கள்.

உயர்கல்வித் துறையில் மட்டுமின்றி பணிநியமன முறையில் பெரும் சீழ் பிடித்த ஊழல் முறையை தொடங்கிவைத்தவர் செட்டியார் என்றால் அதற்கு நியாயவுரிமையைப் பெற்றுக் கொடுத்து சமூகத் தூண்களாகச் செயல்பட்டது அங்குப் பணியாற்றிய பேராசிரியர்களும் பணியாளர்களும் ஆவர். எந்தவிதத்திலும் வேலைவாங்கிய பணியாளர்கள் அப்பாவிகள் அல்ல அவர்கள் குற்றவாளிகள். ஒருகட்டத்தில் இணைவேந்தரான ராமசாமியும் தரகர்களும் அடித்த கொள்ளையில் நிர்வாகம் திவால் நிலைக்கு சென்றது.

2013 ஆம் ஆண்டு கணக்குப்படி கூடுதலாக தேவையின்றி நியமிக்கப்பட்டவர்கள் 5755 பேர்.  பலகலைக்கழகத்தில் ஊதியம் வழங்கவும் இதர தேவைகளுக்காகவும் வைக்கப்பட்டிருக்கும் தொகையைக் கூட செட்டியார் தலைமையிலான குற்ற கும்பல் ஆட்டையப் போட்ட போது தான் தமிழக அரசு இப்பல்கலைக்கழகத்தை எடுத்து கொள்கிறது.  இது ஊழலின் முதலாம் பாகம்.

ஊழல் – II

தமிழக அரசு சிவ்தாஸ் மீனா வழங்கிய அறிக்கையின் கீழ் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று ராமசாமியின் பல்லாயிரம் கோடி சொத்துக்கு வளர்ப்பு மகன் முத்தையா என்ற அய்யப்பன் அதிபதியாகியுள்ளான்.

வளர்ப்பு மகனுடனான குடும்ப சண்டையின் முடிவில் ஊழல் பெருச்சாலி ராமசாமி செட்டி இயற்கை மரணமடைந்தாரே தவிர, ஒரு பெட்டி கேஸ் கூட இக்குற்றவாளி மீது இந்த அரசு போடவில்லை.  மாதந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பணம், ஊழலை சமூகமயப்படுத்திய புரோக்கர்களுக்கு சம்பளமாக வாரியிறைக்கப்படுகிறது.

எம்.ஏ.எம். ராமசாமியும் அவரது வளர்ப்பு மகனும்

இவர்கள் யார் மீதும் எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு அரசுத்துறை செயலர்களும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் இவர்களை தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பணிநிரவுமாறு அரசுக்கு கடிதங்கள் எழுதுகின்றனர்.  அதன் படி தான் தொடக்கத்தில் கூறியபடி உயர்நீதிமன்றம் மட்டும் 500 -க்கு மேல் ஊழியர்களை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுத்துறைகளில் TRB, TNPSC போன்ற பல்வேறு வாரியங்கள் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் செய்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, முறையான குழு அமைத்து நேர்காணல் நடத்தி பணியில் அமர்த்தப்படும் முறைக்கு நேர்மாறாக உள்ளது.

தகுதியற்ற நபர்கள் முறையற்ற வகையில் பணிநியமனம் பெற்று ஊழல் முறைகேடுகளை சமூகமயப்படுத்திய குற்றவாளிகளான அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அரசுக் கல்லூரி, பல்கலைக் கழகம், அரசுத் துறைகள் ஆகியவற்றில் நியமிக்கின்றது இந்த அரசு.

சொற்ப ஊதியத்தில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதைத் தெரிந்தே, பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தில் காலிப்பணியிடங்கள் வரும்போது தங்கள் வாழ்வு வளமாகும். எனக் கனவுகளோடு இருந்த பலர் வாழ்க்கையிலும் இந்த அரசு மண்ணள்ளிப் போட்டுள்ளது.

இக்குற்றவாளிகள் அரசுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டதால் அங்குக் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்த பலர் வீதியில் வீசியெறியப்பட்டனர். இவர்கள் அரசுக் கல்லூரிகளிலும் அரசுத் துறைகளிலும் நிரவப்பட்டிருப்பதால் பல பத்தாண்டுகளுக்கு இளந்தலைமுறையினருக்கு அரசுவேலையே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பணியிலிருக்கும் பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பதிவியுயர்வுகளையும் சேர்த்தே காவு வாங்கியுள்ளனர். முதற்கட்டமாக பணிநிரவு செய்யப்பட்ட போது கௌரவ விரிவுரையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் சார்பாக அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் இரு நாட்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின் அவர்கள் கள்ளமௌனம் சாதிப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது.

இதில் அதிமுக அரசுக்கும், அனைத்துத் துறை உயரதிகாரிகளுக்கும் ஊழியர் சங்கத் தலைவர்களுக்கு கூட பெட்டிகள் கைமாற்றப்பட்டிருந்தால் தவிர இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை. இன்று பெரும்பான்மையான மக்களின் வரிப்பணம் ஊழல் குற்றவாளிகளுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.  இது ஊழலின் இரண்டாம் பாகம். வியாபத்தைப் போன்றதொரு மாபெரும் ஊழல் முறைகேடு இது.

ஒரு பக்கம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது இவ்வரசு. மிக சமீபத்திய உதாரணம் ஏர் இந்தியா.  100% அன்னிய நேரடி முதலீடு என்ற பேரில் உலகிலேயே அதிக ஊழியர்களையும் சொத்தையும் கொண்ட இரயில்வே துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிளாட் போட்டு விற்கிறது.

ஆனால் தனியார் நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளை நடத்தி திவாலாகும் போதோ அல்லது மீளமுடியாத கடனில் சிக்கும் போதோ அந்நிறுவனங்களை அரசுடமையாக்குகிறார்கள். அதாவது நஷ்டத்தை அரசுடமையாக்குதல் எனலாம்.

கிங்ஃபிஷெர் மல்லையாவின் பிற நிறுவனங்கள் குறிப்பாக யுனைடட் பிவரேஜஸ் இலாபத்தில் ஓடியும் கூட அரசு அச்சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்க சொல்லவில்லை. இது போலத்தான் சஹாரா நிதி முறைகேட்டிலும் நடக்கிறது.

இப்பொழுது தனியார் அனல்மின் நிலையங்களின் கடனை தேசிய சொத்தாக்கும் முடிவை புதிய நிலக்கரி இணைப்புத் திட்டத்தின் (New Coal Linkage Plan) மூலம் மத்திய அரசு எடுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் கடனைத் திருப்பி அடைக்காத போது அல்லது நிதி, நிர்வாக முறைகேடுகளால் நஷ்டமடையும் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு அவர்கள் முதலீடு செய்துள்ள பிற நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில்லை.

ஏனென்றால் அதற்கான கொள்கையோ சட்டமோ இந்நாட்டில் இல்லை என்பது மட்டுமல்ல, நஷ்டத்தை அல்லது கடனை நாட்டுடமையாக்கி மக்கள் தலையில் கட்டும் முறையைத் தான் இவ்வரசுகள் செய்கின்றன.

அண்ணாமலை விவகாரத்தில் முறைகேடு நடத்திய ராமசாமியின் ரூ. 16, 000 கோடி சொத்துக்களை அரசுடமையாக்கவில்லை. மாறாக தீர்க்கவே முடியாத நிதி நிர்வாக முறைகேட்டை நாட்டுடமையாக்கியுள்ளது. கூடுதலாக இவ்வூழல் முறைகேடுகளுக்காக அதன் இணைவேந்தர் இராமசாமி தண்டிக்கப்படாதது மட்டுமல்ல அரசனைப் போல நடத்தப்பட்டார் என்பதிலிருந்தே இவ்வரசு கட்டமைப்பே எப்படியானதொரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ராமசாமி செட்டியார் சாகும் போது அரசர் செத்தார் என்றே பத்திரிகைகள் எழுதினர். கோடி கோடியாகக் கொள்ளையடித்த இக்குற்றவாளியின் ஒரு சொத்து கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

கிண்டி ரேஸ் கோர்சில் பெரும்பகுதி இச்செட்டியாருடையது.  நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியைத் தாண்டும் இதை ரியல் எஸ்டேட் மதிப்புக்கு விற்றாலே இப்பல்கலைக்கழகத்தை நடத்த முடியும் என்ற நிலையில் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து இக்குற்றவாளித் தரகுக் கும்பலைப் போற்ற வேண்டிய அவசியமென்ன?

மேலும் இந்நாட்டில் ஒரு விவசாயிக்கோ, ஒரு தொழிலாளிக்கோ அல்லது ஒரு கௌரவ விரிவுரையாளருக்கோ இல்லாத பணிப்பாதுகாப்பை இந்த குற்றவாளி புரோக்கர்களுக்கு வழங்குகிறது இவ்வரசு. எனவே கடந்த 25 ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை உரிய விசாரணைக் கமிஷன் வைத்து முறையாக விசாரித்து இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இம்மாபெரும் ஊழலில் திரட்டப்பட்ட நிதியை செட்டிநாடு அரண்மனை பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளது. அச்சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட வேண்டும். அதற்கான சட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். அண்ணாமலை ஊழியர்களை அரசு துறையில் பணிநிரவல் செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை மிகப்பெரியதொரு வலைபின்னல் செயல்பட்டுள்ளது.

இதையும் சேர்த்தே விசாரணை செய்யப்பட வேண்டும்.  இவ்விசாரணை முடியும் வரை இப்பல்கலைக்கழக ஊழியர்களை பணிநிரவல் செய்யக்கூடாது. ஏற்கனவே பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் திருப்பியனுப்பபடவேண்டும்.  இலஞ்சம் வழங்கி வேலை வாங்கியதோடன்றி புரோக்கர்களாக செயல்பட்டு ஊழலை சமூகமயமாக்கிய ஊழியர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாதிரியான முறைகேடுகள் மீண்டும் நடக்காமலிருக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னுதாரணமாக தார்மீக மற்றும் நெறிமுறை அடிப்படையில் இத்தகைய ஊழியர்களின் வேலைகள் நிரந்தரமாகப் பறிக்கப்படவேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட வேளான் அதிகாரி முத்துக்குமாரசாமி (இடது) முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

கடந்த 25 ஆண்டுகாலமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு போக்கை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது.  தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கு பல பத்து இலட்சங்களை இலஞ்சமாகக் கொடுப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கும் போக்கு நிலவுகிறது. இதில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளிலிருந்து அரசு அதிகாரிகள் வரை கணிசமான பங்கை பெறுகின்றனர்.

‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா விவகாரம் தற்காலிகப் பணியிடங்களுக்குக் கூட வட்டச் செயலாளர் முதல் அதிகாரிகள், அமைச்சர்கள், மன்னார்குடி மாபியா வரை இலஞ்சத்தில் பங்கு கேட்கின்றனர் என்பதை வெளிக்கொணர்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பது போன்ற ஊழல்கள் இன்று சமூகமயமாகியுள்ள நிலையில், ஏற்கனவே பதவியிலிருப்பவர்களில் பலரும் இதுபோல இலஞ்சம் பெற்று வந்தவர்களாகவே உள்ளனர்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில், உயர்கல்வி நிலையங்களை புதிது புதிதாக திறந்து வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையானதை விட பல பத்து மடங்கு அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளனர்.

மறுபக்கம் இக்காலகட்டத்தில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாலும், இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வழங்க போதுமான அளவு தொழிற்துறை வளராததாலும், பெரும்பான்மையான படித்த இளைஞர்கள் அரசு வேலையை மட்டுமே உத்தரவாதமானதாகக் கருதுகின்றனர்.

இது தான் பொது உளவியலும் கூட, இதை ஒட்டியே தனிநபர்களின் வாழ்க்கையும் அமைக்கப்படுகிறது.  இதைப் புரிந்து கொண்ட புதிய தரகு வர்க்கம், அரசு வேலைக்கு இலஞ்சம் வாங்குவதன் வழி தனது பையை நிரப்பிக் கொள்வதோடு, இலஞ்ச ஊழலில் புரோக்கர் முறையை வளர்த்து தன் வர்க்கத்தை பெருக்கி இலஞ்ச இலாவண்யத்தை வியாதியைப்போல சமூகத்தில் பரப்பி ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சீரழிக்கிறார்கள்.  இது ஒரு மீளமுடியாத நெருக்கடி.  இதற்கான தீர்வு நிலவும் கட்டமைப்பு மொத்தத்தையும் மாற்றியமைப்பதன் வழி மட்டுமே சாத்தியம்

– தங்கராஜ்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

காஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !

0

மூத்த எழுத்தாளரும், தலித் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இலக்கியவாதியும், பேராசியருமான காஞ்சா அய்லய்யா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

பார்ப்பனிய வருணாசிரமக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசி எழுதி வரும் பேரா.காஞ்சா அய்லய்யா, சமாஜிக்கா சுமக்லர்லு கொமாடொல்லு (Samajika Smugglurlu Komatollu – Vysyas as Social Smugglers என்பது இதன் ஆங்கில மொழியாக்கம்) என்ற தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகத்தை செப்டம்பர் 2017 தொடக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

காஞ்சா அய்லய்யா – ”இந்து இந்தியாவிற்குப் பிறகு”

இவர் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு ஏற்கனவே 2009-ல் Post Hindu India (இந்து இந்தியாவிற்குப் பிறகு) என்ற ஆங்கிலப் புத்தகத்தின் பதிப்பில் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது. மோடியின் பொருளாதார ‘சாதனைகள்’ வேதனையாக மக்களைத் தாக்கி வரும் நேரத்தில் பண்பாட்டு தாக்குதலாக இத்தகைய விசயங்களை தேடிப்பிடித்து மதவெறி ஊட்டுகிறது பாஜக கூட்டம். இந்த மனுதர்ம ஆட்சியின்படி தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேராசிரியருக்கு எதிராக ஊளைச்சத்தம் பலமாக கேட்கின்றனது. தென்னிந்தியாவில் வைசியர்கள் எனப்படுபவர்கள் வட இந்தியாவில் பனியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வைசியர்களைத் தாக்கிவிட்டார் பேராசிரியர் என்பதே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே நடத்தும் பிரச்சாரத்தின் தலைப்பு.

பேராசிரியர் இது குறித்துக் கூறுகையில் ‘முதலில் இந்தப் புத்தகம் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது; எனவே கடத்தல் என்பதற்கு சட்டவிரோதமாகக் கடத்தல் தொழில் செய்வது என்பது பொருளாகாது. ஆரிய வைசியர்கள் தங்கள் தொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தை சமூக வளர்ச்சிகளுக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. ஆரிய வைசியர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும் பெருமளவு செல்வங்களை வைத்திருப்பதாலும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கடனுதவி செய்யும் தொழிலில் ஈடுபடுவதாலும் மேலும் தங்கள் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை வெகுவாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தான் அவர்களை சமூகக் கடத்தல்காரர்கள் என்றழைப்பதாகவும், மேலும் இவர்களும் ஒரு காலத்தில் புலால் உணவு உண்டது மட்டுமன்றி விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டார்கள்’ என்கிறார்.

காஞ்சா அய்லய்யாவிற்கு எதிராக தெலுங்கானாவில் ஆரிய வைசியர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்

இது போதாதா? உடனே வைசியர்களை இழிவுபடுத்திவிட்டார், கடத்தல் காரராக சித்தரித்து விட்டார் என்று பாஜகவும் ஆந்திர மாநிலக் கட்சிகள் பலவும் கூப்பாடு போடுகின்றன.  அவை பிறகு கொலைமிரட்டல் வரைக்கும் போய்விட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஒரு படி மேலே போய்  பேரா. காஞ்சா அய்லய்யாவை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கொக்கரித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவும் தன் பங்குக்கு இந்தப் புத்தகத்தை ஆந்திர மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

மோடியிடம் கெட்டப்பெயர் வாங்கிவிடக்கூடாதல்லவா?

இந்தப் பின்னணியில் பேராசிரியரும் அவருடைய நண்பரும் சக பேராசிரியருமான பினாவேணி ராமய்யாவும் தெலுங்கானா மாநிலத்தில் பரக்கல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிப் பிழைத்த இவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசு இவர்களைப் பாதுகாப்பாக வீடு வரை அழைத்துச் சென்றுள்ளது.

தெலுங்கானா மாநில முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாஜக-வோ தன் பங்குக்கு பேராசிரியரைப் பைத்தியம் என்றும் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி கலவரத்தைத் தூண்டப்பார்க்கிறார் என்றும் கரித்துக் கொட்டியுள்ளது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டேயிருப்பதால் தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று பேராசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேசமயம் பேராசிரியர் இவர்களுடைய மிரட்டல்களுக்குப் பயந்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார். அப்படி ஒருவேளை மாற்ற வேண்டுமானால் வைசியர்கள் தங்கள் தொழிலில் 5%  சதவீத வேலை வாய்ப்புக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மேலும் தங்கள் இலாபத்தில் குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையாக அளிக்க முன்வரும் பட்சத்தில் வேண்டுமானால் இந்தத் தலைப்பை மாற்றிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பார்ப்பன பனியா சாதிகளை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா தற்போது ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்து வருகிறது. அப்படி அவர்களது வாழ்வை ஒடுக்கிக் கொண்டே மற்றொரு புறம் வைசியர்களை பேராசிரியர் இழிவு படுத்தி விட்டார் என்று மடை மாற்றுகிறது. உண்மையில் பனியாக்கள் எனப்படுவோர் பெரு முதலாளிகளாகவும் உழைப்பே இல்லாத நிதி நடவடிக்கைகளால் வாழ்பவராக மட்டுமே அறியப்படுகிறார்கள். சிறு வணிகர்கள் தமது வைசிய அடையாளத்தை துறந்து விட்டு தமது தொழில் அடையாளத்தை வரித்துக் கொண்டால் எதிர்த்து போராடவேண்டிய குற்றவாளி மோடி அரசு என்பதை உணர்வார்கள்.

மேலும் படிக்க:
Writer Kancha Ilaiah says his car was attacked with stones in Telangana
Won’t allow Ilaiah book in AP: Naidu
BJP, TDP Back Arya Vysya Community’s Battle Against Kancha Ilaiah’s Book

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்

1

ன்புடையீர் வணக்கம் !

கடலூர் மாவட்டம் வெள்ளாறு, கூடலையாத்தூர் மணல் குவாரியை மூடு என காவாலகுடி முடிகண்ட நல்லுர், ஒட்டி மேடு, பெருந்துறை, அகரம் ஆலம்பாடி, பவழங்குடி கானூர், பேரூர் என பல கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளாற்றில் முற்றுகையிட்டு கொளுத்தும் வெயிலில் போராடினார்கள். தாகத்தில் தவித்த மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்கூட கொடுக்கவிடாமல் போலீசார் தடுத்தனர்.

குவாரியை தற்காலிகமாக மூடுகிறோம் என மாவட்ட நிர்வாகம் நயவஞ்சகமாக பேசி போராடும் மக்களை அனுப்பி விட்டு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகிறது காவல் துறை. திருமுட்டம் ஆய்வாளரோ முக்கியமானவர்களை குண்டாசில் போடுவேன் என மிரட்டுகிறார். உதவிக்கு வந்த வழக்கறிஞர்களையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

கொள்ளையடிப்பவன் “காக்கி உடையில் அதிகாரத்தில்”; மக்களுக்காக, நீராதாரத்தை காக்க போராடுபவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டுமாம், இதுதான் இன்றைய நீதி?

பர்மிட் இல்லை, ஓவர் லோடில் மணல் கொள்ளை போகிறது என பல முறை திருமுட்டம் காவல் ஆய்வாளர் பீர்பாஷாவிடமும், பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனிடமும் சொன்னதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. கூடலையாத்தூர், காவாலகுடி மக்கள் தாங்களே களத்தில் இறங்கி கடத்தல் மணல் லாரிகளை மடக்கி சிறைபிடித்து பத்திரிக்கை தொலைக்காட்சி மூலமாக ஒப்படைத்தார்கள்.

50 அடி நிலத்தடி நீர்மட் டம் இன்று 250 அடிக்குக் கீழ் செல்கிறது. வெள்ளாறு கண் முன்னே அழிவதை வேடிக்கை பார்க்க முடியுமா? நெய்வேலி சுரங்கம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பல இடங்களில் ஆழ்குழாய் போர் போடப் பட்டுள்ளது. கடலூர் ரசாயன ஆலைகளால் நீர் ஆதாரம் நஞ்சாக மாறிவருகிறது.

வெள்ளாற்றில் மணல் இல்லை என்றால் எப்படி மழை நீரை தேக்க முடியும்? நிலத்தடி நீர் குறைந்தால் கடல் நீர் உள்ளே புகும், விவசாயம் அழியும். இதை அரசு தடுக்காது. இந்த பகுதி மக்கள்தான் – விவசாயிகள்தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும், தடுக்க வேண்டும்.

சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அதிகாரிகள் மயிரளவும் மதிக்காதபோது பாதிக்கப்பட்ட மக்கள் எதற்கு மதிக்க வேண் டும்?

நமது நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைபோகுதே என்ற சமூக பற்று, மக்கள் பற்று, நாட்டுப்பற்று மக்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு துளியும் இல்லை. கூலிப்படையாக மாறிவிட்டார்கள். சட்டம் சொல்கிறது. ஆற்றில் மூன்றடி மட்டுமே மணல் அள்ள வேண்டும், ஆனால் 30 அடிஅள்ளுகிறார்கள்.

மணல் அள்ளும் இடத்தை சிமெண்ட் தூண் நட்டு, சிகப்பு கொடி கட்டி நான்கு பக்கம் எல்லைகளை வரையறுக்க வேண்டும். எந்த மணல் குவாரிகளில் எவன் செய்தான்? சர்வே 8-ல் 40 ஏக்கர் அளவில் 20,000 லோடு எடுக்க அனுமதி என்றால், நடப்பது என்ன? சுமார் ஒரு லட்சம் லோடுகள் எடுக்கிறார்கள்.

தினந்தோறும் பல ஆயிரம் லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுகிறது. இந்த மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் துணையாக உள்ளார்கள்.

கூடலையாத்துரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ-க்கு ஒரு குவாரி, எம்.பி-க்கு ஒரு குவாரி என பிரித்து கொடுத்துள்ளார் எடப்பாடி, குவாரியில் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் வசூலிக்கும் மாமூல் தொகை தினந்தோறும் உள்ளூர் போலீசுக்கு செல்கிறது. இதை எதிர்த்து கேட்டால் எலும்பு துண்டை வீசுவார்கள், மறுத்தால் பொய் வழக்கு படுகொலை, உள்ளூர் சாதி பிரச்சினையை போலீசே உருவாக்கும்.

தமிழகம், வழிபறி கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க வழித்தெரியாமல் தவிக்கிறது. மானபங்கபடுத்தும் காமுகனிடமே மனு கொடுத்து கெஞ்ச வேண்டிய துர்பாக்கிய நிலையில் இந்த அரசிடம் மக்கள் போராடுகிறார்கள்.

மகனை இழந்த தாய்மார்களும், கணவனை இழந்த விதவைகளும் வீதிக்கு வந்து சாராய கடை வேண்டாம் என கலெக்டரிடம் கையெடுத்து கும்பிட்டு மன்றாடுகிறார்கள், ஆத்திரத்தில் டாஸ்மாக் கடையை கடப்பாரை கொண்டு இடிக்கிறார்கள். சாராய வியாபாரியாக மாறியுள்ள மாவட்ட நிர்வாகம் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு போடுகிறது.

போலீசு தாய்மார்களை அடிக்கிறது. இது மக்கள் வாழும் நாடா? வளர்ச்சி, வல்லரசு என பேசுவதற்கு இந்த அரசுக்கு என்ன அருகதை இருக்கிறது? கூவத்தூரில் வழங்கிய கோடிகளும், தங்க பிஸ்கட்டுகளும், ஆர்.கே. நகரில் கரைபுரண்ட கரன்சிகளும், தற்போது குடகு மலையில் குதிரை பேரத்தில் புரளும் கோடிகளும், அனைத்தும் மனித குலத்தை தாயாக காக்கும் ஆறுகளின் ரத்தம் – சதை கொள்ளையடித்த மணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கடத்தி சம்பாதித்த கருப்புப்பணம், எந்த சட்டம், எந்த நீதிமன்றம் இவைகளை தடுத்தது?

பல நூற்றாண்டுகள் பழமையான கிரானைட் மலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சகாயம் ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் எந்த அதிகாரியும் சிறைக்கு போகவில்லை. கொள்ளைபோன கிரானைட் மலை திரும்பி வருமா? கெள்ளை போன ஆற்றுமணல் திரும்பி வருமா? கடத்தல் சிலைகளை மீட்பது போல் நாம் இயற்கையை மீட்க முடியுமா?

மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுக்கும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை எதற்கு? கொள்ளையடிக்கவா கரும்புக்கும், நெல்லுக்கும் கட்டுப்படியான விலை கொடுக்க துப்பில்லை. கரும்பு நிலுவைத்தொகை பலகோடி நிற்கிறது. சாவின் விளிம்பில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை.

மணல் கொள்ளை மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சினை, ரேசன் கடை மூடல், பெட்ரோல் விலை உயர்வு, நீட் அக்கிரமத்தால் எற்பட்ட அனிதா மரணம், தனியார்மயமாகும் அரசு மருத்துவமனை, கல்வி, குடிநீர், விஷம் போல் உயரும் விலைவாசி, படித்தவனுக்கு வேலை இல்லை – அனைத்திற்கும் இந்த அரசுதான் காரணம். மொத்தத்தில் எங்களை வாழவிடு என மக்கள் போராடுகிறார்கள்.

தீர்வுகான முடியாமல் அரசு முட்டுச்சந்தில் சிக்கி தவிப்பதுடன், மக்கள் விரோதமாக மாறி ஆளும் அருகதையை இழந்து நிற்கிறது. ஊழல் குற்றவாளி ஜெயா இறந்த நாள் முதல் சசிகலா, ஓ.பி.எஸ். எடப்பாடி, டிடிவி. மெரினா சமாதி, பாஜக என இன்று வரை தமிழக அரசியல் நிகழ்வை ஒரு நிமிடம் ஓட விட்டுப் பாருங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை. பாராளுமன்றம், சட்ட மன்றம், நீதிமன்றம் ஆகியவை கார்ப்பரேட் கம்பெனிகளின் காவல் நிலையங்களாக மாறி வருகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது.

பல்வேறு கிராம முக்கியஸ்தர்கள், அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். சேத்தியாதோப்பு பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாக நீங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது அவசியம். நீங்களும் வந்தால்தான் வெள்ளாற்றை காக்க முடியும், மணல் கொள்ளையைத் தடுக்க முடியும், ஊழல் அதிகாரிகளை தண்டிக்க முடியும்; நாளை வர இருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டல அழிவுத்திட்டத்தை நிறுத்த முடியும்.

மணல் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட ஆறுகளை மீட்பதில்தான் நமது வாழ்க்கை இருக்கிறது. வெள்ளாற்றின் விடுதலை பிற தமிழக ஆறுகளையும் விடுவிக்கும் போராட்டமாக மாறி பரவவேண்டும். அதற்கு ஒரே வழி மக்கள் அதிகாரம் தான்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97912 86994.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மின்னூல் !

0

தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம் பெரியவரைக் கொன்றது, பகுத்தறிவாளர் தபோல்கர் – எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் எதிர்த்து எழுதுபவரை கைது செய்வது, பூனாவில் ஒரு ஐ.டி துறை முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டிக் கொன்றது, சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றியது, உஸ்மானியா – ஜே.என்.யூ பல்கலைகளில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, பூனா திரைப்படக் கல்லூரியின் முதல்வராகத் திணிக்கப்பட்ட இந்துமதவெறிக் கோமாளியை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, கர்வாப்சி எனும் கட்டாய மதமாற்றம், ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை அடக்க கமிட்டிகள், தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை!

மறுகாலனியாக்கமும் பார்ப்பன பாசிசமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கும் மோடியின் வாய்ச்சவடால்கள் அம்பலமாகி நாறுவதை மறைத்துக் கொள்வதற்கும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்த மின்னூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.

காவி பயங்கரவாதம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
  • ஸ்ரீராம் சேனாவின் இந்துத்துவா ÷ ரேட் அம்பலம் !
  • பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
  • மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  • பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
  • இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
  • அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
  • பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
  • தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
  • சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
  • இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

பதினோறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !

4

(வினவு இணைய தளத்தில் வெளியான ”நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய காணொளி உரை சுருக்கமாக வெளியிடப்படுகிறது.)

ருவேளை அனிதா தற்கொலை செய்யாமல் உயிரோடு இருந்து, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்துக்கு விவாதத்துக்கு வந்திருந்தால், என்ன நடந்திருக்கும். ”1176 மார்க் வாங்கிய நீ, நீட் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்பதால், அந்த மார்க் எப்படி வாங்கினாய் என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ அன்ஃபிட்” என்று பேசி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் உட்கார வைத்துத்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துகிறார்கள். நீட் ஒரு தவிர்க்க இயலாத எதார்த்தம் என்ற கருத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள். திணிக்கப்படுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால், காவிரி முதல் இந்தி வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று அனிதாவுக்காக வாதாடுகிறவர்கள், நிர்மலா சீதாராமன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்கிறார்கள். முதல்முறையாகவா ஏமாற்றுகிறார்கள்? காவேரி பிரச்சனையில், பணமதிப்பழிப்பில், பாபர் மசூதி இடிப்பில், ஆதார் வழக்கில் எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தார்கள்.

இந்தத் தேர்வைத் திணிப்பதற்கு இவர்கள் கையாண்ட முறையே இவர்களுடைய தீய உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. மோடி அரசு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஒரு வழிமுறையை முன்வைக்குமாறு தமிழக அரசிடம் கூறியது. ஆனால், அடுத்த விசாரணையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சலுகை காட்டமுடியாது  என்று மாற்றிப் பேசியது. இதை, ஏன் என்று கூடக் கேட்கவில்லை எடப்பாடி அரசு. இவர்களெல்லாம் சேர்ந்துதான் அனிதாவை நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே இதில் நடப்பது முறைகேடு மட்டும்தான். ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அல் தாமஸ் கபீர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. அதை எதிர்த்த சீராய்வு மனுவை மோடி அரசு தீவிரமாக நடத்தியது. அல் தாமஸ் கபீரின் அமர்வில், நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர் தவே என்ற நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.

அந்த அமர்வு, முந்தைய தீர்ப்பு தவறானது என்றும் அதனைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. விசாரிக்க வேண்டும் என்றாலும், அப்படி விசாரித்து முடிக்கும் வரை முந்தைய தீர்ப்புதான் அமலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இடைக்காலமாக என்று சொல்லி நீட்டைத் திணிக்கிறது தவே தலைமையிலான அமர்வு.

இது அப்பட்டமான சட்டவிரோதம். பாபர் மசூதி விசயத்திலும் இப்படித்தான் நடந்தது. மசூதிக்குள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டிருந்தது. மசூதியை இடித்துச் சிலையை வைத்து ஒரு கொட்டகை போட்டு, அதுதான் கோயில் என்றார்கள். அதில் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.

பிறகு அந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், மசூதியில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பில் இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னவோ, அதுதான் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இழைக்கப் பட்டிருக்கிறது.

நோக்கம் கேடு, அமலாக்கம் முறைகேடு

நீட் தேர்வென்பது தவிர்க்க இயலாததென்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. நாங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்திருக்கிறோம். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் கேட்டால் எங்களால் எப்படி எழுத முடியும் என்றும் அனிதாவைப் போல, அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மதிப்பே கிடையாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த இரண்டு கேள்விகளின் நியாயத்தையும் ஏற்றுக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.சி.யும் மத்திய அரசும் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோருகிறது சி.பி.எஸ்.இ. மேற்கண்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே மதுரை நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறது உச்ச நீதிமன்றம். தடை விதித்தது மட்டுமல்ல. இனி நீட் தொடர்பாக என்னைத் தவிர யாரும் விசாரிக்கக் கூடாது என்று சட்டவிரோதமாக உத்தரவும் போடுகிறது.

நீதிமன்றத்தின் இந்த முறைகேட்டை மத்திய அரசோ, மாநில அரசோ கேள்விக்குள்ளாக்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டால், இந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ”எங்களை ஏன் விமரிசிக்கிறீர்கள், உச்ச நீதிமன்றத்தை விமரிசிக்க வேண்டியதுதானே” என்கிறார்கள் பா.ஜ.க. வினர். நாம் உச்ச நீதிமன்றத்தையும்தான் விமரிசிக்கிறோம். உடனே, உச்ச நீதிமன்றத்தையே விமரிசிக்கிறான், தேசத்துரோகி என்பார்கள்.

இவர்கள் எல்லா முறைகேடுகளையும் செய்வார்கள். அந்த முறைகேடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினால், உடனே தேசத்துரோகி  என்பார்கள். இதுதான் காஷ்மீரில் நடந்தது. குறைந்தது 10 காஷ்மீரையாவது இந்தியாவில் உருவாக்காமல் இவர்கள் ஓயப்போவதில்லை.

நீட் எதற்காக வந்தது தெரியுமா?

அனிதாவின் மரணத்தை பற்றி பேசும் போது,  இந்த நீட் என்ற தேர்வு எதற்காக வந்தது என்ற பின்புலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பெறாத,  தகுதி இல்லாத பணக்கார மாணவர்கள் லட்சம், கோடி என்று பணம் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் ஆகி விடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மருத்துவர்களின் தரம் வீழ்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு  இப்படி ஒரு தேர்வு தேவை என்று சொல்லித்தான் இது அறிமுகப் படுத்தப்பட்டது.

கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், சாக்கடையை ஒழித்திருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மெடிக்கல் சீட்டை விற்பதற்கு ஒரு தனியார் கல்லூரி இருப்பதால்தானே பணக்காரன் அதை வாங்க முடிகிறது. அதைத் தடுப்பதற்கு மருத்துவக் கல்லூரிகள் தனியாரிடம் இருக்க கூடாது என்று முடிவு எடுத்திருக்கலாமே.

தனியார்மயக் கொள்கை வந்த பிறகுதான் தனியார் மருத்துவக் கல்லூரி வந்தது. அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருப்பதால் தகுதி இல்லாதவ மருத்துவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. தரமானவர்கள் வருவதற்கான வாய்ப்பை இந்தத் தனியார் கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லி, தரம் என்ற பெயரில்தான் தனியார் மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினார்கள். ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் யோக்கியதை என்ன?

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் பாழுங்கிணற்றில் செத்துக் கிடந்தார்கள். மருத்துவராகவும் நோயாளியாகவும் மாணவர்களையே நடிக்க வைத்து, அங்கீகாரம் வாங்கியிருக்கிறது அந்த கல்லூரி நிர்வாகம். எம்.ஜி.ஆர். மருத்தவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள்.

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் கேதன் தேசாயின் அறையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் 1500 கோடி ரூபாய் பணமும் சில நூறு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. எதற்காக அந்தப் பணம் அவருக்கு கிடைத்தது? எஸ்.வி.எஸ். கல்லூரி மாதிரி இந்தியா முழுவதும் இருக்கின்ற தகுதி இல்லாத, தரம் இல்லாத, அடிப்படைக் கட்டுமானம் இல்லாத, வாத்தியார் இல்லாத, கேவலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியதில்தான் அந்தக் காசு வந்தது. அவர் மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ஆனால், என்ன நடந்தது? அவர் குஜராத் மருத்துவ கவுன்சிலின் தலைவராக, மோடி முதல்வராக இருந்த காலத்தில் 2013 – 2014 நியமிக்கப்பட்டர். பிறகு, குஜாராத் மருத்துவ கவுன்சில் அவரை அகில உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்தது.

இதுதான் இவர்களின் யோக்கியதை. இவர்கள் தரம் பற்றிப் பேசுகிறார்கள். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை கேதன் தேசாய், மோடி, கீதாலட்சுமி, விஜயபாஸ்கர் ஆகியோரை வெளியேற்றுவதிலிருந்து அல்லவா தொடங்க வேண்டும். இவர்களோ அனிதாவிற்கு மரண சீட் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறார்கள்.

மாணவன் தகுதியாக இல்லை என்பது பிரச்சனையே இல்லை. உங்களுடைய அமைப்பு,  அதிகாரிகள் – நீங்கள்தான் தரம் அற்றவர்கள். தகுதி அற்றவர்கள்.  எங்கள் பிள்ளைகளுக்குத் தகுதி இருக்கிறதா என்று பேசக்கூட அருகதை இல்லாதவர்கள் நீங்கள். பணக்காரர்களை ஒழுங்குபடுத்துகின்றேன் என்று தொடங்கிய இந்த சதித்திட்டம், ஏழை அனிதாக்களை வெளியேற்றுவதில் வந்து முடிந்து இருக்கிறது . காஸ் மானிய ஒழிப்பும் இப்படித்தான் நடக்கிறது. ஒப்பிட்டுப் பாருங்கள்.

தரமான மருத்துவம் – யாருக்கு?

மருத்துவத்தினுடைய தரத்தை உயர்த்த வேண்டும்  என்கிறார்கள். இது யாருடைய பிரச்சனை? நோயாளிகளின் பிரச்சனை. எங்களுக்கு நீட் தேர்வில் பாஸ் பண்ணிய தரமான மருத்துவர் வேண்டும் என்று நோயாளிகள் கேட்டார்களா?

அரசு மருத்துவமனைகளே இல்லை, இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இல்லை என்பதுதான் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. இருக்கிற மருத்துவமனைகளையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று கூறுகிறது மோடி அரசு. இன்சூரன்ஸ் இல்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்பது தான் இந்த அரசாங்கத்தின் கொள்கை. அப்படியானால், யாருக்காக  இவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்குகிறார்கள்?

அனிதா படித்து முடித்து டாக்டரானால், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன் உண்டு. இன்று நீட் தேர்வு எழுதி சீட் கிடைத்து இருப்பவர்களால் மக்களுக்கு என்ன பயன்? இவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு போகலாமா,  அல்லது அமெரிக்கவிற்கு விமானம் ஏறலாமா என்று பார்ப்பார்கள். இதுதான் அவர்கள் நோக்கம். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. இந்த மருத்துவ அமைப்பே அப்படி இல்லை. அதனால் தரம் என்பது வெற்றுப் பேச்சு.

தரமான மருத்துவமனை என்று சொல்லப்படுகின்ற கார்ப்ரேட் மருத்துவமனைகள் எப்படி நடக்கின்றன? ஒரு மருத்துவமனையில் உள்ள நியூராலாஜி, கார்டியாலஜி போன்ற துறைகள் தனித்தனியே ஏலம் விடப்படுகின்றன. பஸ்ஸ்டாண்டு கக்கூஸ் மாதிரி இவற்றை ஏலம் எடுக்கும் டாக்டர்கள், ஏலத்தொகையை கார்ப்பரேட் மருத்துவமனைக்குக் கட்டிவிட்டு,  அதற்கு மேல் சம்பாதிப்பதற்கு நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஏழைகளை விடுங்கள், காசு கொடுத்தும் தரமான மருத்துவம் இல்லை என்று பணக்கார்களே புலம்பவில்லையா? ஐ.சி.யு.வில் பிணத்தை வைத்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் சந்தி சிரிக்கவில்லையா?

இவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்பு, இவர்களுக்கே பயன்படாத அளவுக்கு, இவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இருப்பதால்தான் தரம் என்ற ஒன்று இன்னமும் இங்கே இருக்கிறது. சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், இந்த நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்கள். இந்த நீட் தேர்வுதான் விதியென்று ஆகி விட்டால், சமூக அக்கறை உள்ள மனிதர்கள் யாரும் மருத்துவத் துறையில் இருக்க மாட்டார்கள்.

அதனால்,  தர நிர்ணயம் என்பதை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதைப் பேசும் அருகதை உனக்கு இல்லை என்று நாம் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்லும் வழிமுறையின் மூலமாக எந்த நாடும் மருத்துவ துறையின் உச்சத்தை எட்டியது இல்லை.

அமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. அது இன்று உலக அளவில் சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடு.  அமெரிக்காவில் அறிவியல் முன்னேறி இருக்கலாம். ஆனால், அமெரிக்க ஏழைகள் கியுபாவில் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ள அலைகிறார்கள். கியூபாதான் மருத்துவத்தில் உயர்ந்து நிற்கின்றது. திறமையிலும் அதுதான் உயர்ந்து நிற்கின்றது. ஆகவே நீட் தேர்வை எதிர்க்கும் நாம் இயல்பாகவே மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

நீதிபதிகளின் தரத்துக்கு நீட் உண்டா?

மருத்துவத்தின் தரம் பற்றி நீதிமன்றம் பெரிதும் கவலைப்படுகிற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தரம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? காட்டாமணக்கை அகற்றுவது,  திரையங்கில் ஜனகணமன பாடினால் எழுந்து நிற்பது முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் முடிவு செய்யும் இவர்களுடைய தகுதி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தேர்வு இருக்கிறது. இப்போது அந்தத் தேர்வையும் நீட் மாதிரி ஒரு தேசியத் தேர்வு ஆக்குகிறார்கள். அதில் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணாம். இது ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீதிபதியாக்கும் ஏற்பாடு. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகளின் குழுவால் முடிவு செய்யப்படுகின்றர்கள்.  அவர்களுடைய  தரத்தை எங்கே விசாரிப்பது?

சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிவில், கிரிமினல் சட்டம் தெரியாது. சர்வீஸ் லா மட்டும்தான் தெரியும் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜிவ் தவான் என்ற மூத்த வழக்கறிஞர். நீதிபதிகளின் திறமை, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யார் பரிசீலிப்பது? குமாரசாமி, தத்து போன்றோர் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கெஹெரின் மகன் இலஞ்சம் கேட்டதாக அருணாசால பிரதேச முதல்வர் கலிகோ புல் தனது தற்கொலை கடித்தில் எழுதி உள்ளாராம்.

இவர்களெல்லாம் சேர்ந்து அனிதாவிற்குத் தரம் நிர்ணயிக்கிறார்களா?  ம.பி. மாநிலத்தின் வியாபம் ஊழல் ஒரு பெரிய கிரிமினல் துப்பறியும் நாவல் மாதிரி போகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் வரிசையாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த பா.ஜ.க. அரசு தரம் பற்றிப் பேசுவதா?

அனைத்திந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் என்பதால், அதைக் கண்காணிக்க  நீதிமன்றம் ஒரு கமிட்டி போட்டது. அதன் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா. மெடிகல் கவுன்சிலால் தரமற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட 26 மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் லைசன்ஸ் கொடுக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி, துணை நடிகர்களையே டாக்டராகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து அங்கீகாரம் கேட்டது. இதை ஊழல் மருத்துவ கவுன்சிலாலேயே பொறுக்க முடியாமல் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், இத்தகைய மோசடி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

நாமக்கல் கொள்ளைக்குப் பதில் நீட் கொள்ளை

மேற்கண்ட பிரச்சினைகளையெல்லாம் நீட் தேர்வு தீர்த்து விடுமா? நீட் தேர்வு தரத்தைக் கொண்டு வரவில்லை. கட்டணக் கொள்ளையைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கின்றது. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரியில் 5 லட்சம் என்பது அரசு நிர்ணயித்த கட்டணம். அதை  11 லட்சமாக ஆக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போனால், 11 லட்சம் கட்டு என்று சொல்கின்றது உச்ச நீதிமன்றம்.  நாடு முழுவதும் ஒரே தரத்தை கொண்டு வருகிறார்களாம். ஆனால், ஒரே கட்டணம் கிடையாதாம்.

தனியார் கல்லூரிகளின் கட்டணத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்பது மோடி உருவாக்கிய நிதி ஆயோக்கின் முக்கியமான பரிந்துரை. தனியார் கொள்ளைக்கு வசதி செய்து கொடுப்பதுதான் இவர்கள் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி. யில் சேருவதற்கு இட்ஜீ (IIT – JEE) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அது ஆண்டுக்கு 24.000 கோடி புரளும் தொழில். இனி ஒவ்வொரு துறைக்கும் இவர்கள் கொண்டுவரக் கூடிய நுழைவுத் தேர்வுகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் புழங்க போகின்றது.  இது புதியதொரு தனியார் கொள்ளை.

நீட்டுக்கு முன்னால் இருந்தது நாமக்கல் கறிக்கோழிப் பள்ளி. அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தயார் செய்தார்கள். இந்த நீட் பயிற்சிப் பள்ளிகளில் ஸ்டிராய்டு ஊசி போட்டு, அதைவிடக் குறுகிய காலத்தில் பயில்வான்களைத் தயார் செய்வதாக கூறுகிறார்கள். இது நாமக்கல்லைவிட மோசமானது. நுழைவு தேர்வு என்பதே அறிவியல் பூர்வமானதல்ல.  உண்மையில் அதுதான் தரத்தை அழிக்கக்கூடியது.

மணற்கொள்ளை போல இது மருத்துவக் கொள்ளை

இவர்கள் தமிழ்நாட்டை ஏன் வட்டமிடுகிறார்கள்?  தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தவிர, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி.  மோடியின் குஜராத்தில் மொத்தமே 6 அரசு மருத்துவக் கல்லூரிகள்தான்.  தமிழகம் போல அரசு மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.   சிறப்பு மருத்துவர்களை உருவாக்கும் உயர்கல்விக்கான இடங்களும் இங்கு தான் அதிகம் உள்ளன.  இவையனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம்.  மணல் கொள்ளையைப் போன்ற இந்த மருத்துவக் கொள்ளையை நடத்துவதற்கான கொல்லைப்புற வழிதான் நீட்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 35ஏ-வின்படி காஷ்மீரில் பிறக்காத யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. இந்தத் தடையை  நீக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் சொத்து வாங்க முடியவில்லை என்பது யார் பிரச்சினை?. அதானி, அம்பானிகளின் பிரச்சினை. அதுபோலத்தான் இதுவும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைக் கொள்ளை அடிக்கத்தான் இந்த ஏற்பாடு.  எல்லா நாடுகளிலும் சொத்து வாங்குவதற்காக உலகமயம், உலகத்தரம் என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். தமிழகம் போன்ற மாநிலங்களைக்  கொள்ளையிடுவதற்காக இவர்கள் தேசியம், தேசியத் தரம் பேசுகிறார்கள். இதுதான் நீட் ரகசியம்.

அனிதா ஏன் மருத்துவராக வேண்டும்?

மருத்துவர்களிடம் மக்களாகிய நாம்  எதிர்பார்ப்பது என்ன? தரமா?  ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் தரமான வைத்தியம் கிடைப்பதற்கா  நம் வரிப்பணத்தில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன?  நமக்குத் தேவை மக்களுக்குத் தொண்டாற்றும்  மருத்துவர்கள் .

”நீட்”டுக்கு முன்னால் அரியலூர் மாவட்டத்திலிருந்து 15 பேர் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள்,  நீட் வந்த பிறகு ஒருவர்கூட இல்லை என்கிறார் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கரன்.  நாம்  சேவையை அளவுகோலாக வைத்தால், அனிதாவைப் போல நூற்றுக்கணக்கானவர்களை மருத்துவர்களாக்கலாம்.  அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் இடம் என்று ஏன் சட்டம் இயற்றக் கூடாது? மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கும் டாக்டர் அமெரிக்காவுக்குப் போவதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?

தரம் வேறு, சேவை மனப்பான்மை வேறு கிடையாது. காசு, காசு என்று அலைபவன் எந்த நாட்டிலும் சிறந்த விஞ்ஞானியாக இருந்ததில்லை.அரசு மருத்துவமனைகளில் பல அரிதான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. பணத்தாகம் கொண்டவன் அரசு மருத்துவமனையில் அத்தனை அரிய முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு அறிவியல் தாகம் வேண்டும். சேவை மனப்பான்மை வேண்டும்.

நாம் ஏன் அனிதா மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறோம் ? அவள் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.  மக்களின் துன்ப துயரங்களை நெருக்கமாக அனுபவித்து அறிந்தவள். அவள் மருத்துவரானால் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வாள். இப்படிப்பட்டவர்கள் மருத்துவராகும்போதுதான் பின் தங்கிய மாவட்டங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும்.

இது மெடிக்கல் சீட் கிடைக்காத ஒரு சிறுமியின் பிரச்சினை மட்டுமல்ல.  பல கோடி மக்களின் மருத்துவம் பற்றிய பிரச்சனை. அம்மக்களை மருத்துவ  சேவையே கிடைக்காமல் வெளியேற்றுவது பற்றிய பிரச்சனை.

பணிய மறுப்போம்

அனிதாவின் தற்கொலைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த அநீதியைச் சகித்துக்கொண்டு அவளால் வாழ முடியவில்லை என்பதுதான்  அந்த அர்த்தம். சகித்துக்கொண்டு வாழ்வதற்கு சமீபத்திய உதாரணம் தேரா சச்சா சௌதா.

வல்லுறவு குற்றத்துக்காக 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம்ரகீம் சாமியாரைப் பற்றிய புகார் 2002-இலேயே வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டே பேர்தான் தைரியமாக வெளியே சொல்வதற்கு முன்வந்தார்கள், மற்ற பெண்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாகப் பாலியல் வல்லுறவை சகித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

நீட் என்பது அப்படி ஒரு வன்முறைதான்! பிற மாநில மக்கள் இதன் பரிமாணம் புரியாமல் இருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு, மாடு விற்கத்தடை, மாட்டுக்கறி உண்ணத்தடை, இந்தி திணிப்பு,  ஜி.எஸ்.டி. ஆகிய அனைத்தும்  நீட் போன்ற நடவடிக்கைகள்தான். இப்படி வன்முறை மூலம் அச்சுறுத்தி நம்மைப் பணிய வைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது.

அந்தப் பெண்களை நினைத்தபடியெல்லாம் அடக்கியாள முடியும் என்று ராம் ரகீம் எண்ணியதைப் போலத்தான் மோடி அரசும் நம்மைப் பற்றி எண்ணுகிறது. தமிழக மக்கள் அ.தி.மு.க. வினரைப் போன்ற சுயமரியாதையற்ற புழுக்கள் அல்ல என்பதைக் காட்டவேண்டும்.

குஜராத் மாடல் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அந்த குஜராத் மாடல் என்ன?  அரசுக் கல்வி, அரசு மருத்துவம் கிடையாது என்பதும், எல்லாம் தனியார்மயம் என்பதும் உனாவிலே தலித்துகளைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடித்த பார்ப்பன பாசிச வன்முறையும்தான் குஜராத் மாடல்.

அந்த குஜராத் மாடலுக்கு எதிரானதுதான்  தமிழ்நாட்டு மாடல். குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்றால், தமிழகம் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும்  சோதனைச் சாலை.

எல்லா பாளையக்காரர்களும் அடிபணிந்த பிறகும்,  பணிய மறுத்த கட்டபொம்மனை நினைவுபடுத்துகிறாள் அனிதா.  தூக்குமேடையை நோக்கி நடந்து சென்ற கட்டபொம்மனின் கண்களில் எள்ளளவும் அச்சமில்லையென்றும், இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களை இகழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தபடி அவன் நடந்து சென்றதாகவும் எழுதுகிறான்,  தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஆங்கிலேய அதிகாரி.

அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள்.  அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.

அது தூக்கு தண்டனை, இது தற்கொலை என்பது உண்மைதான். எனினும், சுயமரியாதையுள்ள இருவரும் நமக்கு விடுக்கும் செய்தியென்னவோ, ஒன்றுதான்.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !

0

28 வயதான இளம் பத்திரிக்கையாளர் சந்தனு பெளமிக், போலீசுக்கும், ஐ.பி.எஃப்.டி(IPFT – Indigenous People’s Front of Tripura) என்ற பிரிவினைவாதக் கட்சிக்கும் இடையே நடந்த மோதல் காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போது ஐ.பி.எஃப்.டி யைச் சேர்ந்தவர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

சந்தனு பெளமிக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து நடைப்பெற்ற போராட்டம்

சி.பி.எம் கட்சி ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவின் புறநகர்ப்பகுதியான மண்டாய் என்ற இடத்தில் 20.09.2017 அன்று சாலையைத் தடுத்து போராட்டம் நடத்திய ஐ.பி.எஃப்.டி கட்சியினரின் மீது போலீசு தாக்குதலைக் கட்டவிழ்த்து விட, இரு தரப்புக்கும் மோதல் தீவிரமானதை சந்தனு படம்பிடித்துக் கொண்டிருந்த போது தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பெங்களூரில் இந்துத்துவா தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கெளரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையாளர் சந்தானு பெளம்விக்-கும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 180 நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. மோடியின் அரசு 2014-ம் ஆண்டில் பதவியேற்ற பிறகு 2015-ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. மேலும் 2018-ல் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இது போன்ற கலவரங்களும், கொலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பது பாஜக-வின் மனக்கணக்கு.

1996-ல் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைக் கட்சி தடை செய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் காவல்துறையால் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அப்போது ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐ.பி.எஃப்.டி கட்சி. திரிபுரா பழங்குடியினருக்கான நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மாவட்ட அளவிலான கவுன்சில் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றது.

ஐ.பி.எஃப்.டி தனி மாநிலம் கேட்டு நடத்திய போராட்டம்

ஒரு வருடம் கழித்து ஐ.பி.எஃப்.டி, டி.என்.வி(TNV-Tripura National Volunteers) என்ற கட்சியுடன் சேர்ந்து ஐ.என்.பி.டி (INPT-Indigenous Nationalist Party of Tripura ) என்ற கட்சியாக மாறியது.

ஐ.என்.பி.டி 2003, 2008 தேர்தல்களில் மிக மோசமான தோல்வியைத் தழுவியதால் மீண்டும் கட்சி உடைந்து மறுபடியும் ஐ.பி.எஃப்.டி உருவாகியது. 2016-ல் இருந்து இது மீண்டும் பெரிய கட்சியாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலையொட்டி பெங்காலிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே உருவாக்கப்பட்ட மோதல்களில் 30 நபர்கள் பலத்த காயமடைந்தது மட்டுமன்றி 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாஜக-வின் ஆதரவோடு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஐ.பி.எஃப்.டி இந்தத் தேர்தலில் சி.பி.எம் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவாகியுள்ளது.

அப்பாவிப் பழங்குடியினரிடம் இனவெறியைத் தூண்டுவதன் மூலம் கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி-யை வெற்றிபெற வைத்து ஆட்சியில் இடம்பிடிப்பது; பின்னர் மெல்ல மெல்ல காவி வெறியைத் திணித்து இந்துத்துவ ஆட்சியை அமைப்பது என்பது தான் பாஜகவின் எளிய தந்திரம். இதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் காவிக் கும்பலுக்கு சந்தனு பௌமிக்கின் மரணமெல்லாம் ஒரு பொருட்டல்ல.

மேலும் படிக்க:
In Tripura, why the IPFT is crucial for the BJP?
Political reporter beaten to death in north-east India

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !

4

குஜராத்தில் மோடி ஆட்சியின் போது நடந்த மதவெறியாட்டத்தின் ஒரு பகுதியாக 567 மசூதிகள், தர்காக்கள், பிற இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இடிக்கப்பட்ட இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடத்தில் அவசர கதியில் சாலைகள் போடப்பட்டன; பல இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.

17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் உருது கஜல் கவிஞர் வாலி குஜராத்தியின் நினைவுச் சின்னம் மத வெறி கும்பல்களால் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் இரவோடு இரவாகத் தார் சாலை போடப்பட்டு விட்டது. ”அப்படி ஒரு தர்கா இருந்ததாக வருவாய்த்துறை பதிவே இல்லை” என்று மோடியின் குஜராத் அரசு சொல்லி விட்டது.

”இவ்வாறு இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களைச் செப்பனிட்டு, புதுப்பித்துப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு குஜராத் அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவத்தின் எதிர்வினையாக, துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் என்று குஜராத் இனப்படுகொலையையும் மசூதிகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களையும் வியாக்கியானம் செய்தது மட்டுமின்றி, இவ்வாறு ஒரு மதத்தினை ஊக்குவிப்பதற்காக மட்டும் அரசுப்பணத்தைச் செலவிடுவது மதச்சார்பின்மைக்கு விரோதமாகும் என்றும் வக்கிரமாக வாதிட்டது, குஜராத் அரசு.

”மோடி அரசு கூறுவதைப் போல, துரதிருஷ்டவசமான சம்பவங்களாகவே அவை இருந்தாலும், தனது கடமையிலிருந்து தவறியதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது” என்று கூறிய குஜராத் உயர் நீதிமன்றம், ”இடிக்கப்பட்ட மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் பற்றிய விரிவான கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகளைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து, அவற்றைச் செப்பனிட அல்லது புதுப்பிக்க ஆகும் செலவைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும்” என்று 2012 பிப்ரவரி மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது தீபக் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு தடை விதிக்க மறுத்ததுடன், ”வெள்ளம் வந்து வீடு அழிந்தால் நிவாரணம் தருகிறீர்களே, இதற்கு ஏன் தரக்கூடாது?” என்று கேட்டுத் தடை அளிக்க மறுத்து விட்டது.

அதன் பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த குஜராத் அரசு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைத்தது.

”பொதுநல வழக்கு என்பது பிரிவு 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்குத்தான் பொருந்தும். வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமைகளில் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனைக்குப் பொதுநல வழக்கின் அடிப்படையில் பிறப்பித்த உத்தரவு செல்லாது.”

”குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவது, கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து அந்த மதத்தை கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமை இல்லை.”

”மத உரிமை என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டி வாங்க முடியாது.”

”வழிபாட்டுத் தலங்களைக் கட்டித் தரும்படி அரசுக்குச் சொல்வது மத விஷயங்களுக்காக வரி வசூலிக்கப்படக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் பிரிவு 27 -க்கு விரோதமானது.”

இவை அத்துணையும் அயோக்கியத்தனமான, வக்கிரமான வாதங்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று கூறி, நாட்டை இரத்தக் களறியாக்கிய கும்பல் இப்படி வாதிடுவதற்குக் கூச்சப்படவில்லை. அதுமட்டுமல்ல, அரசு பணத்திலிருந்து அமர்நாத் யாத்திரை பாதையைச் செப்பனிட ரூ 10 கோடி, பல்வேறு முதல் அமைச்சர்கள் மாநில அரசுகள் சார்பாக திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்துவது, ராஜஸ்தானில் கோயில்களைப் புதுப்பிக்கவும், பூசாரிகளுக்குப் பயிற்சி வழங்கவும் ரூ 26 கோடி ஒதுக்கீடு, ஆந்திராவில் பூசாரிகளின் நலனுக்காக ரூ 60 கோடி ஒதுக்கீடு, ஹஜ் யாத்திரைக்குப் பணம், மானியம் என எண்ணற்ற மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசு, நீதிமன்றத்தில் இப்படிப் பேசுவது குறித்து சிறிதும் வெட்கப்படவில்லை.

மனுதாரர்களான பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்கள் சார்பிலான வழக்கறிஞர் கீழ்க்கண்டவாறு இதனை மறுத்துரைத்தார்.

”சமூகத்தின் பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆதிக்க குழு ஒன்று இடிப்பது அவர்களது நிலையை மேலும் பலவீனமாக்குவதாகும். அரசியல் சட்டத்தின் 14, 21, 25, 26 -ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைத் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது, அவை அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எனவே, மசூதிகளை இடித்தது அடிப்படை உரிமைகளை மீறுகிறது” என்றும்,

”குஜராத் மாநிலத்தில் ஒட்டு மொத்த சட்ட ஒழுங்கு தோற்றுப் போனதன் விளைவாக வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தவறிய அரசின் மீது நிவாரணத்துக்கான பொறுப்பைச் சுமத்தியது சரியானதுதான்” என்றும்,

”வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்குவது, அந்தக் குற்றச் செயலுக்கான பரிகாரமே தவிர, அரசுத் தரப்பு சொல்வது போல ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்கான செலவு இல்லை” என்றும்,

”பல நபர்களின் பொதுச் சொத்துக்கு விளைவிக்கப்பட்ட சேதத்துக்கும், தனிநபர் ஒருவரின் சொத்துக்கு இழைக்கப்பட்ட சேதத்துக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அரசு தனது அரசியல் சட்டரீதியான பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறது என்பதுதான் அடிப்படையான விஷயம்.”

தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின் தீபக் மிஸ்ரா கையாளுகின்ற முக்கியமான வழக்கு இது. 2011-இல் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த அமர்வில் இவரும் ஒரு நீதிபதி.

”சட்ட ஒழுங்கு நிலைமை தோல்வியடைந்தது, பேரழிவைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகத் தலைமையின் பங்கு சுத்தமாக இல்லாதது போன்ற விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. கோபம் கொண்ட கும்பல்களின் காரணமாக சில இடங்களில் வழிபாட்டு தலங்கள் சேதமடைந்திருக்கின்றன” என்று அலட்சியமாக இவ்வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

2002 முசுலீம் படுகொலையின்போது ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் மதவெறிக் கும்பல்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்ய மறுத்தது மோடியின் காவல் துறை.

”மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது” என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.

அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிடுவதன் மூலம், நடந்தது இசுலாமியர்கள் மீதான இந்துத்துவ கும்பல்களின் தாக்குதல் அல்ல என்பது போலவும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் என்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது.

குஜராத் போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் இந்துத்துவ சார்பு காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படவேயில்லை. தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா போன்ற சமூக ஆர்வலர்களின் விடாப்பிடியான முயற்சியின் காரணமாக, காவி கும்பலின் கொலை, பாலியல் வல்லுறவு, நாசவேலைகளில் பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றங்களை நாடி வழக்கு தொடுத்தனர். பெஸ்ட் பேக்கரி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு ஆகியவை மும்பைக்கு மாற்றப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட இந்து மதவெறியர்களும் அவர்களைப் பாதுகாப்பதில் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவர்களும் தண்டிக்கப்பட்டனர். நரோதா பாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் அமைச்சர் மாயா கோத்னானி, பஜ்ரங் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 30 பேர் தண்டிக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தை நடத்தியதிலும், காவல் துறையும் அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்படி உத்தரவிட்டதிலும் முதல்வராக இருந்த மோடியின் பொறுப்பு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஓய்த்துக் கட்டப்பட்டு, இப்போது ஜாகியா ஜாஃப்ரியின் மனு மீதான தீர்ப்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிலைமை இப்படியிருக்க, சேதப்படுத்தப்பட்ட மசூதிகளைச் சரிசெய்வதற்கான நிவாரணத்தை குஜராத் அரசே கருணைத் தொகையாக வழங்குவதாகக் கூறியிருப்பதை அங்கீகரித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

மசூதிகள் தாக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை முசுலிம்களே தம் சொந்த செலவில் திரும்பக் கட்டிவிட்டார்கள். சராசரியாக ஒரு கட்டிடத்துக்கு 85 லட்சம் செலவாகியிருக்கிறது. ஆனால், குஜராத் அரசு தருவதாகக் கூறும் கருணைத்தொகை என்ன தெரியுமா?

சேதமடைந்த, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கும் நிவாரணத்துக்கு இணையாக அதிகபட்சம் ரூ 50,000 அல்லது புதுப்பிப்பதற்கு ஆன செலவு இவற்றில் எது குறைவோ அதைக் கருணை அடிப்படையில் வழங்குவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து, இந்த சொற்பத் தொகைகூட யாருக்கும் கிடைக்காமல் போகும் வகையில் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது, குஜராத் அரசு.

”நாங்கள் ஒன்றும் கருணையோ சலுகையோ கோரவில்லை. நாங்கள் கேட்பது உரிமை” என்று  கூறினார் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வழக்கறிஞர்.

”அங்கீகாரம் இல்லாத மதக் கட்டிடங்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்படாது. பொதுப் போக்குவரத்து சாலைகளில் அல்லது அங்கீகரிக்கப்படாத இடங்களில் அமைந்துள்ள எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் உதவி வழங்கப்பட மாட்டாது”  என்றும் நிபந்தனை விதித்து, மத கட்டிடங்களை  இந்து மதவெறிக் கும்பல் திட்டமிட்ட வன்முறை மூலம் இடித்ததைச் சட்டபூர்வமாக்கி விட்டது குஜராத் அரசு. பாபர் மசூதியைக் காவி கிரிமினல் கும்பல் இடித்த பிறகு, அந்த நிலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று நீதிமன்றங்கள் வழக்கு நடத்துவதைப் போன்றது இது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு அந்த நேரத்தில் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அடுத்த நிபந்தனை.

2002 மதவெறி தாக்குதல்களில் கொலை, பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருக்கிறது மோடியின் போலீசு. இந்த நிபந்தனையின் மூலம் எந்த மசூதிக்கும், தர்காவுக்கும் நிவாரணம் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறது, குஜராத் அரசு.

”இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் நியாயமானவையாகவே உள்ளன” என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்திருக்கிறது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு.

தனது 49 பக்கத் தீர்ப்பில் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் மறுத்துரைக்கவில்லை. அதேபோல குஜராத் அரசுக்காக வாதாடிய அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவின் வாதங்களை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால், தீர்ப்பு குஜராத் அரசுக்குச் சாதகமாக வழங்கப்பட்டு விட்டது.

நீட் வழக்கின்  உத்தரவைப் போலவே இருக்கிறதல்லவா? இதற்குப் பெயர் உச்ச்ச்ச நீதிமன்றமாம்!

– அழகு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்ப்பன மதவெறிக்கெதிரான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை – மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணம் எவ்வளவு?” என நாடாளுமன்ற நிலைக்குழு கேட்ட கேள்விக்கு, ”எங்களிடம் தகவல் இல்லை” எனப் பதில் அளித்தது, ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி உள்ளிட்ட பா.ஜ.க. கும்பலோ துணிந்து பொய்களையே புள்ளிவிவரங்களாக அள்ளிவிடுகிறார்கள். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ”மூன்று இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் பொருளாதார நீரோட்டத்துக்குள் வந்துவிட்டது என நிபுணர்கள் கூறுவதாக”ச் சத்தியம் செய்தார். வேலிக்கு ஓணான் சாட்சியாம்!

அரசியல் தரகன் சோ ராமஸ்வாமி இறந்த பிறகு, அந்த இடத்திற்குத் துண்டு போட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ”3.35 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறதென்றும், அதன் மீது மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியும், அபராதமும் வசூலாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது” என்றொரு கணக்கைக் காட்டுகிறார். (துக்ளக், 13.09.2017)

இந்தக் கதைக்கெல்லாம் காட்டப்படும் ஒரே ஆதாரம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் போடப்பட்ட பணம்தான். 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 -ஆம் தேதிக்கும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில், 1.09 கோடி வங்கிக் கணக்குகளில் சராசரியாக 5.03 இலட்ச ரூபாய் போடப்பட்டிருப்பதையும், 1.48 இலட்சம் வங்கிக் கணக்குகளில் சராசரியாக 3.31 கோடி ரூபாய் போடப்பட்டிருப்பதையும் காட்டி, இந்த வங்கிக் கணக்குகளையெல்லாம் துருவி ஆராய்ந்து, துப்பு துலக்கி கருப்புப் பண பேர்வழிகளை அமுக்கிவிடுவோம் எனச் சவால்விடுகிறது, பா.ஜ.க.

இந்த விவரங்களெல்லாம் உண்மைதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால், ”இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் முழுவதையும் கருப்புப் பணம் என வகைப்படுத்த முடியாது. மேலும், ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் வங்கிக் கணக்குகளையும் கண்காணிக்கும் அளவிற்கு வருமான வரித்துறையிடம் ஆள்பலம் கிடையாது” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

வருமான வரித் துறை கருப்புப் பண பேர்வழிகளைப் புகைபோட்டு பிடிப்பது ஒருபுறமிருக்கட்டும். செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்தாவிட்டது அந்தத் துறை? வருமான வரி ரெய்டில் பணமும் கையுமாகப் பிடிபட்ட ராம மோகனராவ், இப்பொழுது சிறையில் களி திங்கவில்லை. மாறாக, மீண்டும் அரசுப் பதவியில் மோடி அரசின் ஒப்புதலோடு அமர்த்தப்பட்டிருக்கிறார்.

ராம மோகன ராவின் கூட்டாளியும் மணற் கொள்ளையனுமான சேகர் ரெட்டி பிணையில் வந்துவிட்டார். சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஓ.பி.எஸ்., நினைத்த நேரத்திலெல்லாம் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடும் சலுகை பெற்றிருப்பதோடு, மோடியின் ஆசியோடு தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வருமான வரித் துறைக்கு அலுவலகத்துக்கு விருந்தாளி போலச் சென்றுவிட்டுத் திரும்புகிறார். இந்தக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் வருமான வரித் துறையின் பாதுகாப்பில் இருக்கிறதேயொழிய, பறிமுதல் செய்யப்படவில்லை.

இதற்கெல்லாம் அப்பால், கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது, மர்மமான முறையில் கண்டெய்னரில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை நிதியமைச்சகம் என்ன செய்தது? அந்தப் பணம் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணம் என்பது ஊரே அறிந்த உண்மை. ஆனால், மோடி – அருண் ஜெட்லி – வெங்கய்யா நாயுடு கூட்டணி, அந்தப் பணத்தை ஸ்டேட் வங்கியின் பணமாகக் காட்டி, ஜெயா-சசி கும்பலைக் காப்பாற்றிவிட்டது. கருப்புப் பணத்திற்கு எதிராக சவுண்டுவிடும் மோடி கும்பலின் யோக்கியதை இதுதான்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை இப்படித்தான் – அதாவது புழக்கத்திலுள்ள கருப்புப் பணத்தில் ஒரு சதவீதத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் தோல்வியில்தான் – முடியும். தோல்வியின்றி, வேறு எந்த அதிசயத்தையும் நிகழ்த்தக்கூடிய அடிப்படை அந்நடவடிக்கைக்குக் கிடையாது என்பதே உண்மை. ஆனாலும், மோடியின் ஆதரவாளர்கள் கருப்புப் பணத்திற்கு எதிரான அவரது நல்ல நோக்கத்தைச் சந்தேகிக்கக் கூடாதென்று சப்பைக் கட்டுகிறார்கள்.

அப்படிப்பட்ட தூய்மையான நல்ல நோக்கமெல்லாம் மோடிக்கு இருந்ததும் கிடையாது, இருக்கப் போவதும் கிடையாது. அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட தனது இமேஜைத் தூக்கி நிறுத்தும் சுயநலமும், ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்கையும்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின்னே மறைந்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற, கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான் இந்தப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

-ரஹீம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !

1

விவசாயம் : வருமானம் இரட்டிப்பாகவில்லை! வரி இரட்டிப்பாகிறது!!

நாட்டின் முன்னுரிமைத் தொழிலாகக் கருதப்பட்டு, வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்த விவசாயத்தை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டுவந்து, வரி விகிதத்தையும் அதிகரித்திருக்கிறது மைய அரசு. நாடு முழுவதும் விவசாயம் நொடித்துப் போய், விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் இன்றைய நிலையில், விவசாயத் துறையில் நடந்துள்ள இம்மாற்றம், அந்த அவலத்தை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.

அனைத்து வகை உரங்களுக்கும் இதுவரை 6% (வாட்வரி 5% + கலால்வரி 1%)  ஆக  இருந்துவந்த வரி, ஜி.எஸ்.டி-யில் 12% ஆகவும், பூச்சிமருந்துகளுக்கு 12% முதல் 15% வரை இருந்த  வரி 18% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து  தெளிப்பான்களுக்கு 18% , பி.வி.சி. குழாய்களுக்கு 16%, சொட்டுநீர், தெளிப்பு நீர்க் கருவிகளுக்கு 12%, டிராக்டருக்கு 12% , அதன் உதிரி பாகங்களுக்கு 18% என ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது, ”விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டாமல் மோடி ஓயமாட்டார்” என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

இதற்கு அப்பால், ஆதார் அட்டை இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் என்ற புதிய விதியை ஜி.எஸ்.டி.க்குப்பின் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. உர விநியோகத்தை ஆதாருடன் இணைப்பது, எதிர்காலத்தில் விவசாயிகளை உரத்தைச் சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வைக்கும் சதித்தனம் கொண்டதாகும்.

இப்படியுமா நடக்கும் எனச் சந்தேகிப்பவர்கள், எரிவாயு உருளை வாங்குவதை ஆதாருடன் இணைத்த பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். 50 கிலோ யூரியா தற்போது 260 லிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது. இந்த ஆதார் இணைப்புக்குப் பிறகு, உரத்தைச் சந்தை விலைக்கு அதாவது, 1,800 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படும்.

இதற்கு அப்பால், இதுவரை விவசாயம் என்ற வரையறைக்குள் இருந்த வேளாண் துணைத் தொழில்களான பால்பண்ணை, கால்நடைகள் வளர்ப்பு, விதைப் பண்ணை, நாற்றுப் பண்ணை, மற்றும் கால்நடை இனப்பெருக்கம், ஒப்பந்த விவசாயம் ஆகியவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால், டாட்டா, பிர்லா போன்ற பெருமுதலாளிகள் ஈடுபட்டுள்ள தேயிலை எஸ்டேட்டுகள் விவசாயப் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதோடு, தேயிலைக்கு ஜி.எஸ்.டி.யிலும் முந்தைய 5% வரியைத் தொடரவும் அனுமதித்துள்ளனர்.

முன்பு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதற்கு 2% வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் 5% முதல் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, நிலத்தடி நீர் வற்றிப்போனதால் விவசாயம் செய்ய முடியாமல் போன நிலத்தில், சிறு அளவிலான ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் வைத்துப் பிழைக்கும் சிறு விவசாயிகளும் இனி ஜி.எஸ்.டி. செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்தாமல் இருக்க வேண்டுமானால், ஆண்டுக்கு 20 இலட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருப்பதாக அரசுக்குக் கணக்குக் காட்ட வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் 10 – ஆம் தேதி கொள்முதல் கணக்கும், 20-ஆம் தேதி விற்பனைக் கணக்கும், 30-ஆம் தேதி வரி செலுத்திய கணக்கும் கட்டாயம் அனுப்ப வேண்டும். இதற்கான ரசீதுகளை 6 மாதம் வரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஆடிட்டரிடம் ஓட வேண்டும்.

விவசாய விளைபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. யில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.

அச்சிடப்பட்ட பிராண்டு பெயரில் விற்பதெல்லாமே ‘மதிப்புக் கூட்டல்’ என்று வரையறை செய்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஒரு ரூபாய் கடுகு, இரண்டு ரூபாய் மிளகு, 5 ரூபாய் சீரகம் என்று கிராமத்துப் பெட்டிக் கடைகளில் விற்பவை அனைத்தும் கண்மார்க் ஊறுகாய், அமிர்தா ஸ்பைசஸ், மான் மார்க் கடலைமிட்டாய் என ஏதோவொரு பெயரில் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளில்தான் விற்கப்படுகின்றன.

இவைகளில் பெரும்பாலானவை ஒரு மாவட்ட அளவிலோ அல்லது வட்டார அளவிலோ செயல்படும் குறுந்தொழில் – குடிசைத்தொழில்கள். குடும்ப உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களில் ஊர் ஊராகக் கொண்டுசென்று பெட்டிக்கடைகளுக்கு 2-3% சதவீத இலாபத்திற்கு சப்ளை செய்து பிழைக்கின்றனர். தற்போது இவர்களையும் ஆச்சி, சக்தி மசாலா நிறுவனங்களுக்கு இணையாக வரி செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்.

ஏற்கனவே ஒரு ரூபாய்க்கு கிளினிக் பிளஸ் ஷாம்பு, 5 ரூபாய்க்கு கோல்கேட் பற்பசை எனப் பன்னாட்டுக் கம்பெனிகளின் சரக்குகள் கிராமப்புற சில்லறை வர்த்தகத்தைக் கணிசமாகக் கைப்பற்றிவிட்ட  நிலையில், அச்சந்தையில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு, குறு, குடிசைத்தொழில்களின் மீது கடைசி ஆணியை இறுக்கும் நோக்கத்தோடுதான் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி., தேசிய வேளாண் மின்னணு சந்தை, வேளாண் பொருட்கள் மற்றும் கால்நடைகள் விற்பனைக் கமிட்டி சட்டம் என மோடி அரசால் கொண்டுவரப்படும் மாற்றங்கள் அனைத்தும், பாரம்பரியமான முறையில் நடந்துவரும் வேளாண் தொழில் தொடங்கி கிராமப்புற சிறு தொழில்கள் வரையிலும் உள்ள சுயசார்பு தொழில்களை ஒழித்துவிட்டு, அச்சந்தையை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தூக்கிக் கொடுப்பதையே பின்புலமாகக் கொண்டுள்ளன.

ஆனால், இதனை மூடிமறைத்து, ஜி.எஸ்.டி.யால் கள்ளச்சந்தை ஒழியும், விலைவாசி குறையும் என்று கூவுகிறது மோடி கும்பல். கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று புளுகியதைப் போல, இதிலும் புளுகுணியாட்டம் நடக்கிறது.

இந்த உண்மை இன்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வந்துவிடும். தனியார்மயம், தாராளமயம், உ.வ.க.வில் இந்தியா இணைந்தது ஆகியவை குறித்து உருவாக்கப்பட்ட மாயைகள் தகர்ந்து, உண்மை அம்பலத்திற்கு வந்திருப்பது போல, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மாற்றங்கள் குறித்துக் கட்டப்படும் மாயைகளும் தகர்ந்து போகும்.

– மாறன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?

2

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே 11.55 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்தது, ரிசர்வ் வங்கி. அப்பொழுதே மோடியின் ”காவிய” நடவடிக்கை வரலாறு காணாத தோல்வியில் முடியப் போவது உறுதியாகிவிட்டதால், ஆளுங்கும்பலும், அவர்களது அடிவருடிகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு வாயில் வந்த நோக்கங்களையெல்லாம் கற்பித்து, அந்நடவடிக்கையை நியாயப்படுத்தும் பித்தலாட்டத்தனத்தில் இறங்கிவிட்டார்கள்.

குறிப்பாக, ஸ்டேட் பாங்கின் ஆராய்ச்சிப் பிரிவு, ”பணத்தை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி தவறு செய்திருக்கலாம்” என்றொரு சந்தேகத்தை ஊதிவிட்டது. இந்த சந்தேகம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைக் கேலிக்குள்ளாக்குவது குறித்து மோடி கும்பல் கவலை கொள்ளவில்லை. அருண் ஜெட்லி உள்ளிட்ட அதிகார வர்க்கமோ, ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறைந்து, அது டிஜிட்டல்மயமாகும்; அப்படி டிஜிட்டல்மயமாகும்போது வரி வருமானம் அதிகமாகும்” எனக் கூறி, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கப் போவதாகக் கதையளந்தார்கள்.

எவ்வளவு கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறது, கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ”வருமான வரி கட்டும் நபர்களின் எண்ணிக்கை 2017 – 18 ஆம் நிதியாண்டில் 57 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் செலுத்தும் முன்வரி 42 சதவீதமும், தானாகச் செலுத்தும் வரி 34 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த தொகை 10 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் தொழில்களுக்கு 60 இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க முடியும். குறிப்பாக, கந்து வட்டியால் வாடும் குறுந்தொழில்களுக்கு இயல்பான வட்டியில் கடன் கொடுக்க முடியும். மக்கள் குறைந்த விலையில் இனி வீடுகள் வாங்கமுடியும்” என்றெல்லாம் அளந்துவிட்டு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வியை மூடிமறைத்துவிட முயலுகிறார், குருமூர்த்தி.

இந்த நியாய வாதங்கள் அனைத்தும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கயமைத்தனம் கொண்டவையாகும். ”1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவிக்காமலேயே, இவற்றையெல்லாம் சாதித்திருக்க முடியும்” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

2015 – 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 – 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது. அவர்கள் வரி விதிக்கக்கூடிய வருமானமாகக் காட்டிய சராசரி தொகை வெறும் 2.7 இலட்சம் ரூபாய்தான். இதனால் அரசிற்குக் கூடுதலாகக் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமான வரி வெறும் 10,587 கோடி ரூபாய்தான்.

”வருமான வரி வசூல் கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது என பெருமைபட்டுக் கொள்கிறார், நிதியமைச்சர். அதற்கு முந்தைய 2015 – 16 நிதியாண்டில், செலாவணி செல்லாதாக்கப்படாமலேயே, வருமான வரித் தாக்கல் 27 சதவீதம் அதிகரித்தது அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என சேம்சைடு கோல் போட்டிருக்கிறது, தினமணி.

நவம்பர் 2016-க்கும் மே 2017-க்குமான இடைப்பட்ட மாதங்களில் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குக் காட்டப்படாத வருமானத்தின் மதிப்பு 17,526 கோடி ரூபாய். இதில் கைப்பற்றப்பட்ட தொகை 1,003 கோடி ரூபாய். பினாமி பணப் பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்ததில் அரசுக்குக் கிடைத்த வருமானம் 600 கோடி ரூபாய். மோடி அரசு கருப்புப் பணபேர்வழிகளுக்காக அறிவித்த பொது மன்னிப்புத் திட்டமான – பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தானாக முன்வந்து தெரிவிக்கப்பட்ட கணக்குக் காட்டாத வருமானம் 5,000 கோடி ரூபாய். அந்த 5,000 கோடி ரூபாய் மீது விதிக்கப்பட்ட வரி மற்றும் அபராதத்தின் கீழ் அரசுக்குக் கிடைத்த வருமானம் 2,500 கோடி ரூபாய். இதையெல்லாம் கூட்டினால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அரசுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வருமானம் 14,690 கோடி ரூபாய். (ஆதாரம்: எக்கானமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி இணைய இதழில் வெளியான டிமானிட்டைசேஷன்-போஸ்ட் ட்ரூத்ஸ் கட்டுரை)

இதுதான் வரவு கணக்கு. செலவுகளைப் பொருத்தவரை, ”புதிய நோட்டுக்களை அச்சடித்து, அவற்றை நாடெங்கும் அனுப்பிவைப்பதற்கு ஆன செலவு, வங்கிகளுக்குள் நுழைந்த பல இலட்சம் கோடி ரூபாயைக் கணக்கெடுக்க ஆன செலவு, கார்ப்பரேட் வருமான வரி மற்றும் மறைமுக வரிகளில் ஏற்பட்ட இழப்பு – இவற்றையெல்லாம் கூட்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளைக் கணக்கிட வேண்டும்” என்கிறது ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை.

இம்மூன்றில் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மட்டும் 7,965 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்தச் செலவு கடந்த ஆண்டு நோட்டு அச்சடிக்க ஆன செலவைக் காட்டிலும் 4,544 கோடி ரூபாய் அதிகம். இதற்கு அப்பால் புதிய நோட்டுகளை நாடெங்கும் அனுப்பி வைக்க ஆன செலவு, ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றியமைக்க ஆன செலவு என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால், புதிய நோட்டுக்காக ஆன செலவு ரூ.21,000 கோடி எனக் குறிப்பிடுகிறார், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பழைய நோட்டுக்களை ஒழித்துக் கட்டிய பிறகு அரசுக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் இலாபம் 16,000 கோடி ரூபாய். புதிய நோட்டுக்களை அச்சடிக்க ஆன செலவு 21,000 கோடி ரூபாய். இதுதான் மோடியின் புத்திசாலித்தனம்!

2015-16 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு வழங்கிய இலாப ஈவு 65,876 கோடி ரூபாய். ஆனால், 2016-17 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் இலாப ஈவு 30,659 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இந்த வீழ்ச்சிக்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம். குறிப்பாக, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு, வங்கிகளில் குவிந்த பணத்திற்கு வட்டியாக மட்டும் ரிசர்வ் வங்கி 18,004 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறது.

இந்த நட்டங்களெல்லாம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அரைவேக்காட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், மோடியின் துதிபாடிகளோ டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது, ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகமாகியிருக்கிறது என்ற ரீல்களை ஓட்டி, குப்புற விழுந்து கிடக்கும் மோடி அண்ட் கம்பெனியைத் தூக்கிவிட முயலுகிறார்கள்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் 10 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் குவிந்திருப்பதால் யாருக்கு என்ன இலாபம்? அதை எடுத்து, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மோடி முன்வந்தாரா? நோட்டுத் தடை அறிவிப்பால் நலிவடைந்த சிறுதொழில்களுக்கு நட்ட ஈடு தர முன்வந்தாரா? மாறாக, வங்கி சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 2017 முதல் மார்ச் 2017 முடியுவள்ள காலாண்டில் 6.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி, அதற்கு அடுத்த காலாண்டில் (ஏப்.-ஜூன் 2017) 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (ஏப்.-ஜூன் 2016) இவ்வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்திருக்கிறது. இந்த வீழ்ச்சிக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம் என்பதை 2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது.

”அரசு வெளியிட்டுள்ள இந்த வளர்ச்சிப் புள்ளிவிவரமும்கூட நம்பகத்தன்மையற்றதுதான். ஏனென்றால், இப்புள்ளி விவரங்கள் கார்ப்பரேட் தொழில்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வீழ்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளன. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமைப்புசாரா சிறு, குறு தொழில்கள் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள நசிவை இப்புள்ளிவிவரம் ஒதுக்கித் தள்ளியிருப்பதால், வளர்ச்சி வீதம் 5.7 சதவீதத்தைவிடக் குறைவாகவே இருக்கும்” என மதிப்பிடுகிறார், பேராசிரியர் அருண் குமார்.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருக்கிறது, 15 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள், விவசாய உற்பத்திக்குப் பாதிப்பில்லை என்றபோதும், விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கிறது” என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. மூலம் வரி வருமானம் கூடியிருக்கிறது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க. கும்பலை வழிப்பறி கொள்ளைக்கூட்டம் என்றுதான் கூறமுடியுமே தவிர, மக்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறுவது வெட்கக் கேடானது.

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப் பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது. இப்பொழுது மோடி அண்ட் கம்பெனியின் கவலையெல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்தப் பணத்திற்கு (15.44 இலட்சம் கோடி ரூபாய்) மேலான தொகை வங்கிகளுக்குள் வந்துவிடுமோ என்பதுதான். அதனால்தான், வங்கிக்குள் வராமல் வெளியில் இருக்கும் 16,000 கோடி ரூபாயை எடுத்துக் கொள்ளுவதில் பெரும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், வயதானவர்களிடம் தேங்கிப் போன செல்லாத நோட்டுக்களைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், அதனை எடுத்துக்கொள்ளவே முடியாது என அநியாயமாக வாதிட்டு வருகிறார்கள்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்திற்கு மேலான தொகை வங்கிகளுக்கு வந்துவிட்டால், அதனைவிட மானக்கேடு வேறு எதுவும் இந்த அரசுக்கு இருக்க முடியாது. கள்ளப் பணத்தையும் வெள்ளையாக மோடி அரசு மாற்றிக்கொடுத்திருக்கிறது என்றுதான் நாம் அந்த அசிங்கத்தைக் குறிப்பிட முடியும். கள்ளப் பணத்தையே கண்டுபிடிக்க முடியாத மோடி கும்பல், கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்து ஒழித்துக்கட்டும் என்று அப்பாவிகூட நம்ப முடியாத நிலை ஏற்படும்.

இப்படிப்பட்ட அவமான நிலையிலிருந்து தப்பிக்க, மோடி அண்ட் கம்பெனி இப்பொழுதே பொய்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, மோடியின் துதிபாடியும் சோவின் தயாரிப்புமான தினமணி வைத்தியநாத அய்யர், ”ஒரே எண்ணுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்குள் வந்திருக்கக் கூடும். இல்லையென்றால், 98.96 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்திருக்க வாய்ப்பேயில்லை. செல்லாத நோட்டுக்களை வங்கிகள் திரும்பப் பெறுவதை இன்னும் அனுமதித்தால், திரும்பி வந்த நோட்டுக்களின் எண்ணிக்கை 120 சதவீதத்தை எட்டிவிடும். எனவே, வங்கிகளில் வந்திருக்கும் நோட்டுக்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனத் தலையங்கம் தீட்டியிருக்கிறார். (தினமணி, 02.09.2017)

ஒரே எண்ணுள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வங்கிக்குள் வந்துள்ள 15 இலட்சம் கோடி ரூபாயையும் திரும்ப எண்ண வேண்டும். அய்யரின் இந்த அபார யோசனை, மறுபடியும் முதல்லா இருந்தா என்ற நகைச்சுவையை அல்லவா நினைவுபடுத்துகிறது.

– குப்பன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !

0

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு : சாதி அரசியலுக்குத் தூண்டில் !

”இந்துத்துவ பண்டாரங்களின் கமண்டல அரசியலை மண்டல் எனும் ஆயுதம் மூலம் வீழ்த்துவோம்!” – சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இவ்வாறு முழங்கின சமூக நீதிக்கட்சிகள். அப்போது அயோத்தியை மையம் கொண்டு சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த பார்ப்பனிய – பனியா இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இடைச்சாதிகளை அணிதிரட்டி நிறுத்துவதன் மூலம் முறியடித்து விடலாம் என இக்கட்சிகள் நம்பின; இன்றளவும் நம்புகின்றன.

எண்பதுகளில் உள்ளூர் அளவில் சிறுசிறு மதக் கலவரங்களை நிகழ்த்தி, வட்டார அளவில் தேர்தல் வெற்றிகளைப் பெறத் தொடங்கியிருந்த பாரதிய ஜனதா, உள்ளூர் மோதல்களை அகில இந்தியாவுக்கும் விரிவுபடுத்தி, அயோத்தி ராமனை முன்வைத்து நாடெங்கும் மக்களை மதரீதியாகப் பிளந்து, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் இந்துக்களின் ஐக்கியத்தைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டிய இந்துத்துவ கும்பல், நாடெங்கும் ஆதிக்கசாதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை ஏற்படுத்தியது.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின் மிருக பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா, முன்பு தானே எதிர்ப்பதாகக் கூறிய சாதிவாரி பிரதிநிதித்துவத்தைக் கையிலெடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் முறையைப் பரிசீலனை செய்வதற்கான கமிட்டி ஒன்றை அமைப்பதற்கு கடந்த மாதம் 23 -ஆம் தேதி மோடி தலைமையில் கூடிய அமைச்சர்கள் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்து ஒற்றுமைக்கு பதிலாகச் சாதி வேற்றுமை

இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஏற்றத்தாழ்வான முறையில் சென்றடைவதைப் பரிசீலிப்பது, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருளாதார அடிப்படையில் வகைப்படுத்துவது, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான முறைகளை உருவாக்குவது மற்றும் சாதிகளின் உட்பிரிவுகளை முறையான பிரிவுகளில் சேர்ப்பது ஆகிய மூன்று நோக்கங்களுக்காக இந்தக் கமிட்டி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி 12 வாரங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டி அமைக்கப்பட்ட அதே சமயத்தில், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை ஏற்கனவே அனுபவித்த குடும்பங்களை இனம் பிரித்துக் காட்டும் கிரீமி லேயருக்கான அளவுகோலாக இருந்த ஆண்டு வருமானம் 6 இலட்சம் என்ற வரம்பை 8 இலட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 2011 -ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதிரீதியான தரவுகள் இன்னமும் வெளியிப்படாத நிலையில், உள்ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் சாதிகளின் உட்பிரிவுகளைச் சீரமைப்பதாகவும் மோடி அரசு அறிவித்திருப்பதன் நோக்கம் என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரசின் ஊழல்களால் மக்கள் வெறுப்புற்று இருந்த சமயத்தில், தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக் கொண்ட மோடி, மக்களின் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தேர்தல் மேடைகளில் மோடியின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால், இந்து மகாசமுத்திரமே பொங்கி எழுந்து இமயமலையை மூழ்கடித்துவிடும். மக்கள் அசந்த நேரமாகப் பார்த்து தேர்தல் வெற்றியை ஜேப்படி செய்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் நம்பிக்கைகள் தகர்ந்து போய், தமக்குத் துரோகமிழைக்கப்பட்டதைக் கண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், அண்டை நாடுகளின் விரோதம்… என நீளுகிறது மோடி அரசின் தோல்விப்பட்டியல். இந்தச் சுமையோடு, இரண்டாண்டுகள் கழித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளது பாரதிய ஜனதா.

மீண்டும் வளர்ச்சி என்ற கோஷத்தை வைத்து ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள மோடி – அமித் ஷா இணை, இழிவான சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு முன் மண்டல் கமிசனை எதிர்த்தபோது இந்து ஒற்றுமை குலைக்கப்படுவதாக சங்க பரிவாரம் அலறியது. உண்மையில் இந்துத்துவாவின் ஆன்மாவே சாதி அரசியல் தான். பாரதிய ஜனதாவின் மதக் கலவர அரசியல் செயல் திட்டம் நேரடியாக பார்ப்பன, பனியா ஆதிக்க சாதி இந்துக்களுக்கே சேவை செய்தது. அக்கட்சி முன்தள்ளும் இந்துப் பண்பாடும் பார்ப்பன மற்றும் மேல்சாதிப் பண்பாடும் வேறு வேறல்ல.

புதிய சாதிய வாக்கு வங்கிகள்

இந்நிலையில் இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோத விடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது. காபினெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள குழுவுக்கென மோடி பீறாய்ந்து சொல்லியிருக்கும் மூன்று காரணங்களின் வாக்கியங்களிடையே வேறு நோக்கங்கள் மறைந்துள்ளன.

முதலாவதாக, ஏற்கனவே மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்த காங்கிரசை, அதன் உள்ளே வெற்றிகரமாக தள்ளி விட்டுள்ள பாரதிய ஜனதாவுக்கு லாலு, நிதிஷ், முலாயம், மாயாவதி உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் இன்னமும் சவாலாகவே உள்ளனர். அடுத்ததாக, பாரதிய ஜனதாவின் வாக்குவங்கிகளாக இருந்த பட்டேல், ஜாட், லிங்காயத்துகள் உள்ளிட்ட சாதியினர் பரவலாக அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் புதிய சாதிகளை இட்டு நிரப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேலும், கோமாதா, லவ் ஜிகாத் போன்ற இசுலாமிய வெறுப்பு இந்துத்துவ வெறியைத் தேசிய அளவில் நிரந்தரமாகப் பராமரித்து வருவதும் அதனடிப்படையில் தேர்தல் ஆதாயங்களைத் தொடர்ந்து பெறுவதும் சாத்தியமில்லை என்பதும் பாரதிய ஜனதா அறியாத இரகசியம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் குறுக்கே இரத்தக் கோட்டை கிழித்த அயோத்தி ராமன் விவகாரமே நொறுங்கிச் சரிந்த மசூதியின் இடிபாடுகளின் கீழ் நசுங்கிப் போனது. அயோத்தி ராமனால் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியவில்லை என்பதால்தான், கடந்த தேர்தலில் வளர்ச்சி என்கிற கோமாளித் தொப்பியோடு  மேடையேறினார் மோடி.

சாதிரீதியிலான புதிய அணி சேர்க்கை ஒன்றை உருவாக்கி, கரைந்து கொண்டிருக்கும் தனது வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வது, இதன் போக்கில் பிராந்திய அளவில் தனக்குச் சவாலாக இருக்கும் சமூக நீதிக்கட்சிகளின் ஆதரவுத் தளத்தை ஒழித்துக் கட்டுவது, தனது கார்ப்பரேட் அடிவருடித்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ கோவணத்தில் விழுந்த கிழிசலுக்குச் சாதி அரசியலைக் கொண்டு ஒட்டுப் போடுவது என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கத் திட்டமிடுகிறார் மோடி.

சர்க்கரை என்றெழுதிய காகிதத்தை நக்க போட்டாபோட்டி

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. பிற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடைநிலைச் சாதிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தற்காலிக நிவாரணமாக இடஒதுக்கீடு இருந்தாலும், பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக்கட்டப்பட்டு தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சொல்லிக் கொள்ளப்படும் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.

ஏற்கனவே வேலை வாய்ப்புகளை வழங்கும் அருகதை இழந்து, அரசுத் துறைகள் காலிப் பானையாகி விட்ட நிலையில், ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடங்களைத் தனது தேர்தல் நலன்களுக்குத் தோதான சாதிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதே பாரதிய ஜனதாவின் திட்டம். இந்தப் பிரிவினை இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே முறுகல் போக்கை ஏற்படுத்தும்.

வெறும் தாளில் எழுதப்பட்ட சர்க்கரையை நக்குவதற்குப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் மோதலைத் தூண்டி விடுவதன் மூலம், தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதே மோடியின் எதிர்காலத் தேர்தல் உத்தி.

இதை உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்து விட்டார் அமித் ஷா. சுமார் 9 சதவீத யாதவ்களையும் இசுலாமிய வாக்குகளையும் கொண்ட முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளான குர்மி, கஹார், கும்மார், நிஷாத் மற்றும் சாஜ்பர் சாதிகளைத் தனக்கு ஆதரவாக வளைத்தது பாரதிய ஜனதா.

அரியானாவில் தனது பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த ஜாட்களுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, சிறுபான்மையாக உள்ள பஞ்சாபி கட்டாரி சாதியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது. அதே போல் மகாராஷ்டிராவிலும் மராத்தாக்களுக்கு எதிராக இதர சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, பார்ப்பனரான பட்னாவிசை முதல்வராக்கியுள்ளது.

இவ்வாறு பிராந்திய அளவில் எண்ணிக்கை அடிப்படையில் செல்வாக்கோடு இருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு எதிராக இதர சாதிகளைத் தூண்டி விடுவதன் மூலம் ஏராளமான ஆதாயங்களை அறுவடை செய்ய முடியும் என பாரதிய ஜனதா கணக்குப் போடுகின்றது. முதலில் இடைநிலைச் சாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதன் மூலம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது.

அடுத்து, வட்டார அளவில் உமாபாரதி, கல்யாண் சிங் போன்ற சாதிப் பின்புலமுள்ள தலைவர்கள் செல்வாக்கு பெறாமல் தடுப்பது, மாநில அளவில் சுயமான செல்வாக்கில்லாத, திறமையற்ற பொம்மைகளைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கட்சிக்குள்ளிருந்தே தனக்கு சவால்கள் உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது எனத் திட்டமிடுகிறது மோடி – அமித் ஷா இணை.

இதன் மூலம் இடஒதுக்கீட்டை நிரந்தரத் தீர்வாகவும், அதுதான் அறுதியான சமூக நீதி என்றும், இந்துத்துவத்துக்கு எதிராக சாதிகளின் ஐக்கியத்தைக் கட்டமைப்பதைத் தமது செயல் திட்டமாகவும் கொண்டிருந்த சமூக நீதிக்கட்சிகளின் இடுப்பில் தொங்கிய துருப்பிடித்த வாளை உருவி, அவர்கள் வயிற்றிலேயே செறுகியிருக்கிறது சங்க பரிவாரம்.

பிளவுபடுத்தும் சாதி ஒன்றுபடுத்த ஒருபோதும் உதவாது

இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராக இடைநிலைச் சாதிகளிடையேயான நல்லிணக்க அரசியல் பேசி ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்துத்துவத்தின் ஆன்மாவான சாதி என்கிற நிறுவனம் எந்தச் சூழலிலும் கேடாகவே பயன்படுத்தப்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது பார்ப்பன கும்பல்.

தொழில் மற்றும் சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகத் தீண்டத்தகாதவர்கள் என்று சாதி இந்துக்களால் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் விசயத்தில் சாதி என்பது ஒரு புறவயமான உண்மையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித் உட்சாதிகள் தமக்குள் உயர்வு கற்பித்துக் கொள்வதைப் பொருத்தவரையில், அது அகவயமான மனோபாவமாகவும் இருக்கிறது. அதுதான் பிளவுக்கு அடிப்படையாக அமைகிறது.

பார்ப்பனர் தவிர்த்த சாதி இந்துக்களைப் பொருத்தவரை, சாதி என்பது அநேகமாக, உன்னைவிட நான் மேலானவன்  உன்னிடமிருந்து நான் வேறுபட்டவன் என்று கருதும் அகவயமான மனோபாவமாகவே இருக்கிறது. இவ்வாறு, தன்னுடைய சாதியை உயர்ந்ததாகக் கற்பித்துக் கொள்வதற்கும் சித்தரிப்பதற்கும் புனைவுகளே போதுமானவை. அரசு சன்மானங்களையும் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பிழைப்புவாதிகள், தனது சாதியினரின் எண்ணிக்கையையைச் சொல்வதிலும் புனைவைத் திணித்து கூட்டிச் சொல்கிறார்கள்.

இத்தகைய பிழைப்புவாதிகள் துணையோடுதான் பார்ப்பனியம் அதிகாரத்தில் நீடிக்க முடிந்திருக்கிறது. சாதி அடிப்படையிலான அடையாள அரசியல், பார்ப்பனியத்தின் காலாட்படையாகச் செயல்பட்டு, சாதியமைப்பைப் பாதுகாப்பதற்கும் பார்ப்பன பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்குமே பயன்படும்.

– சாக்கியன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்பனியத்துக்கு சேவை செய்யும் சாதி அரசியலை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, செல்லாது என அறிவிக்கப்பட்ட 15.44 இலட்சம் கோடி ரூபாயில், வெறும் 16,000 கோடி ரூபாய்தான் வங்கிக்குத் திரும்பவில்லை. இந்தத் தொகை, நாலு இலட்சம் கோடி, ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் வங்கிக்குத் திரும்பி வராது எனச் சொல்லி வந்த மோடி அரசின் கணக்கில், 1 சதவீதம்கூட இல்லை. இந்தியாவில் புழங்கும், உருவாகும் கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர் அருண் குமார், ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் என்றால், அந்நடவடிக்கை 0.01 சதவீத கருப்புப் பணத்தைக்கூட ஒழிக்கவில்லை” எனக் கூறுகிறார்.

இதுதான் மோடியின் நடவடிக்கை சாதித்திருக்கும் உண்மை. இந்த உண்மை ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் அறிக்கையின் வழியாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனும்போது மோடியும் அவரது அரசும் தமது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. கும்பலோ, பாசிஸ்டுகளுக்கே உரித்தான நாக்குமாரித்தனத்தோடு, தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டி, மக்களை மீண்டும் முட்டாளாக்க முயலுகிறார்கள்.

நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.

”வங்கிக்குள் வராத பணம் எத்துணை கோடி என்பதை வைத்துப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் வெற்றியைத் தீர்மானிப்பது தவறானது. ஏனென்றால், பணத்தைப் பறிமுதல் செய்வது இந்த நடவடிக்கையின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. கருப்புப் பணத்தையும் வங்கியில் போடும்படியான கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதே இந்த நடவடிக்கையின் வெற்றிக்கான சாட்சி” என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

”செல்லாத நோட்டுக்களில் ஒரு பகுதி வங்கிக்குள் வராது என்று அரசு ஒருபோதும் சொன்னதில்லை” என்கிறார் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி.

இந்தப் பித்தலாட்டத்தனத்தையெல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் துக்ளக் இதழில் எழுதுகிறார், தமிழ்நாட்டுப் பார்ப்பனரும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான குருமூர்த்தி. ”பல பொருளாதார நோக்கங்களை உள்ளடக்கிய நோட்டுத் தடையை சாமான்ய மக்களுக்கு எளிமையாக விளக்க, கருப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம் என மோடி கூற வேண்டிய நிலை ஏற்பட்டதாக”ச் சப்பைக்கட்டு கட்டுகிறார், அவர். (துக்ளக், 13.09.2017)

1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவதற்கும் செலுத்துவதற்கும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒன்றா, இரண்டா? மோடி அரசு அடுக்கடுக்காக விதித்த நிபந்தனைகளால் பொதுமக்கள் எரிச்சலும் ஆத்திரமும் கொண்டபோது, ”கருப்புப் பணம் வங்கிக்குள் நுழைவதைக் கிடுக்கிப்போட்டுப் பிடிக்கத்தான் இவ்வளவு நிபந்தனைகள்; இதனை மீறி யாரும் வங்கியில் கருப்புப் பணத்தை மாற்றிவிட முடியாது; ஒவ்வொரு ரூபாய்க்கும் வங்கியிடம் கணக்குச் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் சமாதானம் சொல்லி, தனது பாசிச கோமாளித்தனத்தை நியாயப்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.

இப்பொழுது தங்களது நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி 98.8 சதவீத செல்லாத நோட்டுக்கள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு அக்கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக, அதனை வெற்றி எனக் கூசாமல் கொண்டாடுகிறார்கள். இது வெற்றி என்றால், பணத்தை மாற்றுவதற்கு அடுக்கடுக்காக நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது? அந்நிபந்தனைகள் வங்கி வாசலில் நின்ற சாமானிய மக்களை அவமானப்படுத்தி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதைத் தாண்டி வேறு எதையும் புடுங்கிவிடவில்லை.

– திப்பு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி