Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 606

லீ குவான் யூ : சிங்கப்பூர் 7 ஸ்டார் ஓட்டல் அதிபர் மறைவு

120

ப்துல் கலாமின் கனவுகளையே மாபெரும் காவியமாக ‘கொண்டாடிய’ தேசத்தில் லீ குவானின் மறைவுக்கு மட்டும் என்ன குறைச்சல்? ‘சிங்கப்பூரின் சிற்பி’, ‘காந்தி’, ‘சிங்கம்’, ‘மூன்றாம் உலக ஏழை நாட்டை முதல் உலகமே வியக்குமளவு உருமாற்றிய லீயின் சாதனைகள்’ என ஊடகம் முதல் மோடி வரை தினுசு தினுசாக வியந்தோதுகிறார்கள்.

சிங்கப்பூரின் சர்வாதிகாரி லீ குவான் யூ
சிங்கப்பூரின் சர்வாதிகாரி லீ குவான் யூ

ஒரு தலைவரின் மறைவு குறித்த வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் மட்டுமல்ல இவை. வளர்ச்சி குறித்த ஒரு மாபெரும் மூடநம்பிக்கை மற்றும் வரலாற்றை மறைக்கும் புரட்டல்கள் இவற்றில் உறைந்திருக்கின்றன.

தோராயமாக 55 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் உலகிலேயே அதிக விகிதத்தில் கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆறு வீடுகளிலும் ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கே அறுபது இலட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருக்கும். அவை நிரந்தரச் சொத்து, வணிக முதலீடு, ஆடம்பர பொருட்கள் என்று முதலாளித்துவத்தின் அனைத்தும் தழுவிய சாதனைகளாக இருக்கும்.

இத்தகைய பட்டியலை பார்க்கும் நம்மூர் கோயிந்துகள், “பார் சிங்கப்பூரை, என்ன ஒரு வளர்ச்சி” என்று கம்மர் கட்டை மொய்த்து விட்டு நுழையும் நூற்றி எட்டு ஈக்களுக்காக வாய்களை பிளக்கிறார்கள். இப்படி ஒரு பணக்கார சாதனை சிங்கப்பூருக்கு இருக்குமென்றால் அதன் மறுபக்கம் ஒன்று இருக்க வேண்டுமென்ற பொது அறிவு கூட இக்கோயிந்துகளுக்கு கிடையாது.

ஆம், உலகிலேயே மலைக்கும் மடுவுக்குமான வருமான வேறுபாடுகள் உள்ள முன்னேறிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த இடம் ஹாங்காங்கிற்கு கீழேயும், அமெரிக்காவிற்கு மேலேயும் உள்ளது.

கூடவே, குறைவான வருமானம் பெறும் தொழிலாளிகள் அதிகம் இருந்தாலும் அதிக வருமானம் பெறும் குபேரர்கள் குறைவாக இருந்தாலும் கூட ஒட்டு மொத்தமாக தனிநபர் வருமானம், சொத்து மதிப்பு அதிகம் இருக்குமென்பது கூட வளர்ச்சி பிரியர்களுக்கு உறைப்பதில்லை.

உலகிலேயே குறைந்தபட்ச கூலி கொடுக்க வேண்டிய சட்ட பாதுகாப்பு இல்லாத நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இதன் படி ஒரு முதலாளி எப்படி வேண்டுமானாலும் ஊதியத்தை குறைத்து கொடுக்கலாம். அவனை ஏன் என்னவென்று எவரும் கேட்ட முடியாது.

சிங்கப்பூர் டிராகன்
உலகிலேயே குறைந்தபட்ச கூலி கொடுக்க வேண்டிய சட்ட பாதுகாப்பு இல்லாத நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

ஏழைகளின் நாடான் இந்தியாவில் கூட பெயரளவுக்காவது விவசாயம், தொழிற்துறையில் இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சட்டமுள்ளது. அது தொடர்பாக புகார் கொடுக்க தொழிலாளர் ஆணையம், நீதிமன்றம் கூட இங்குண்டு, அவை முதலாளிகளுக்கு ஆதரவாகவே பல சமயங்களில் செயல்படுகிறது என்றாலும்.

சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடிய துறைகளில் ஒன்று சுற்றுலா. சுற்றுலா என்றால் தீனி, விடுதி, கடை போக விபச்சாரமும் உண்டு. இருப்பினும், தற்கால சுற்றுலா மையங்களில் இவை மட்டும் போதாது. முக்கியமாக சூதாட்டம் வேண்டும். அதன்படி உலக மேட்டுக்குடியினரை ஈர்க்க 2005-ம் ஆண்டு சிங்கப்பூரில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிட்டனர். அதன்படி தற்போது இரண்டு சூதாட்ட மையங்கள் சக்கை போடு போடுகின்றன. உலக நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சுரண்டல் மற்றும் ஊழல் பணங்களைக் கொண்டு வரும் சுற்றுலா ஆசாமிகள் அதை சிங்கப்பூரின் சூதாட்டத்தில் கடாசி விட்டு திரும்புவார்கள். அதை வைத்து பொருளாதாரத்தை வளர்க்கும் சிங்கப்பூரில் இலஞ்சம் கடுகளவும் இல்லையாம்.

சுற்றுலாவைப் போல சிங்கப்பூர் முதலாளிகளுக்கு வளம் கொடுக்கும் மற்றொரு துறை மருத்துவம். மருத்துவ சுற்றுலாவிற்காக  வருடந்தோறும் 2,00,000 பயணிகள் வந்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். கிராமங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குக் கூட பேருந்து கட்டணம் இல்லாமல் தெருவோர சித்த வைத்தியரிடம் பிணி தீர்க்கும் நம் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறும் நபர்கள் யார் என்று தெரியுமா?

கடைசியாக தமிழ் நாட்டில் இருந்து சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த். இருவருக்கும் பிளாக்கில் விற்ற பணம் இருக்கும் போது சிங்கப்பூரின் வளத்திற்கு உரம் போடும் அந்த ரத்தப் பணம் யாருடையது? வருடத்திற்கு 300 கோடி அமெரிக்க டாலரை இலக்காகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் மருத்துவத்தின் ரத்தம் ஏழைநாடுகளைச் சுரண்டுவதிலிருந்தே போகிறது. அதே போல சிங்கப்பூரில் கல்வி நிலையங்களில் மூன்றாம் உலக ஆசிய நாடுகளின் அதிகார வர்க்க மற்றும் முதலாளிகளின் வாரிசுகள் படிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களாலும் சிங்கப்பூர் ஆதாயம் அடைகிறது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் தீர்மானம் வகிக்கும் ஏற்றுமதி பொருட்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% பங்கு வகிக்கிறது. அதிலும் மின்னணு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை நாடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் வீட்டில் பயன்படுத்தும் ஆடம்பர மின்னணு பொருட்களில் சிங்கப்பூரே முதலிடம் வகிக்கிறது. சவுதி ஷேக்குகள் அமெரிக்க, ஐரோப்பிய ஆடம்பர பொருட்களில் உருண்டு திளைப்பது போல, அவர்களவு சுருட்ட முடியாத மூன்றாம் உலக நாடுகளின் ‘ஷேக்குகள்’ சிங்கப்பூரோடு நிறைவடைகிறார்கள்.

ஒரு வகையில் அத்தியாவசிய தேவையோ பயன்பாடோ அற்ற இந்த நுகர்வு பொருட்கள் உண்மையில் வறட்டு கௌரவத்தை நிறைவேற்ற மட்டும் பயன்படுகிறது. அந்தக்கால இந்திய சமஸ்தான மன்னர்கள் தங்கத்தில் கழிப்பறை செய்து மலம் கழிப்பது ஒரு சான்று. அந்த வகையில் இது உண்டு கழித்திருப்போருக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் துறை என்றும் கூறலாம்.

சிங்கப்பூர்
நிதி மூலம், ரிஷி மூலம், ஊழல் மூலம் சுருட்டல் மூலம் கேட்கமாட்டார்கள், வரி மிகக் குறைவு, தொழிலாளர் சட்டம், உரிமைகள் இல்லை, குறைந்தபட்ச கூலி இல்லை, முதலாளிகளுக்கு விழுந்து சேவை செய்யும் அரசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம்…

சிங்கப்பூரை “உலகில் சுலபமாக தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்”, “உலகின் தலைசிறந்த லாஜிஸ்டிக்ஸ் மையம்” என்று உலக வங்கியே பாராட்டியிருக்கின்றது. உலக வட்டிக்காரன் ஒரு குட்டி நாட்டை பாராட்டுகிறான் என்றால் அது மக்களைப் பொறுத்தவரை நேரெதிராகத்தானே இருக்கும்? உலகின் முன்னணி நிதித்துறை மையம், உலகின் இரண்டாவது பெரிய சூதாட்ட சந்தை, உலகின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்று போன்ற சிங்கப்பூரின் சாதனை பத்திரங்களையும் உலக வங்கியின் பாராட்டையும் சேர்த்து பார்த்தால் இது தீவாய் இருக்கும் ஒரு ஏழு நட்சத்திர விடுதி என்று புரியும். கையேந்திபவன்களில் காலம் கழிக்கும் நம்மைப் போன்றோர் இந்த நட்சத்திர ஓட்டல்களை கொண்டாட முடியுமா?

அதிலும் சிலபேர் கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் வரவேற்பை மண்டபத்தின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று மெய் வருந்த கூவுகிறார்கள்.

சிங்கப்பூர் ஏன் உலகின் முன்னணி நிதித்துறை மையமாக இருக்கிறது என்று கேட்டால் கலாம் கனவு ஆசாமிகள் என்ன சொல்வார்கள்? சிங்கப்பூர் பயங்கரமாக தொழில் செய்கிறது என்று சமாளிப்பார்கள். உண்மை என்ன?

உலகிலேயே வரியில்லா சொர்க்கமென்று அழைக்கப்படும் சில நாடுகளில் சிங்கப்பூரும் வருகிறது. இங்கே தனிநபர் வருமான வரியும் குறைவு, கார்ப்பரேட் வருமான வரியும் குறைவு. இந்த இரண்டு சலுகைகளும் இருக்கும் நாடுகளில்தான் அநேக குபேரர்கள் தமது சொத்துக்களோடு குடியேறுவார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில்லறை வணிக முதலாளி பிரெட் பிளண்டி, மற்றும் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான எடார்டோ சவரின் ஆகியோர் முறையே 2013 மற்றும் 2012 வருடங்களில் தமது சொந்த சொத்து பத்துக்களுடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டனர். மொரிஷியஸ் நாடும் கூட இத்தகைய வரியில்லாத நாடுகளில் ஒன்று என்பதையும் அங்கிருந்துதான் அநேக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன என்பதையும் இங்கே இணைத்து பாருங்கள்.

நிதித்துறை இரகசிய அட்டவணை மற்றும் வரிகளுக்கான நீதி வலைப்பின்னல் போன்ற முதலாளிகளின் தொழில் மதிப்பீட்டு அட்டவணைகளில் சிங்கப்பூர் நல்ல இடத்தை வகிக்கிறது. கேட்பார் கேள்வியின்றி சுரண்டுவதில் தடையில்லாத நாடுகளே இவ்வட்டவணைகளில் இடம்பெற முடியும். இதன் பொருட்டுதான் சிங்கப்பூர் அன்னிய முதலீடு நாடி வரும் காந்தப் புலமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா முதலான இடங்களிலிருந்து இங்கு சுமார் 7,000 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்ன காரணம்?

நிதி மூலம், ரிஷி மூலம், ஊழல் மூலம், சுருட்டல் மூலம் கேட்கமாட்டார்கள்; வரி மிகக் குறைவு; தொழிலாளர் சட்டம், உரிமைகள் இல்லை; குறைந்தபட்ச கூலி இல்லை; முதலாளிகளுக்கு விழுந்து சேவை செய்யும் அரசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம்….. வேறு என்ன வேண்டும்? இதை ஏதோ சிங்கப்பூரில் லஞ்சம் இல்லாததால்தான் முதலீடு வருகிறது என்று நினைப்போர் குச்சி ஐஸ் கூட சாப்பிட தகுதி இல்லாதவர்கள் என்றே பாராட்ட முடியும்.

பொருளாதார சுதந்திர அட்டவணையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் கருத்து சுதந்திர அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதுதான் உண்மையான முதலாளித்துவம் என்பதால் நமக்கு இது அதிசயமில்லை. ஆனால், “முதலாளித்துவம் என்றாலே ஜனநாயகம்” என்று வழியும் குச்சி ஜஸ் கோயிந்துகளுக்கு புரிய வைப்பது எப்படி? சிங்கப்பூரில் அரசையோ, இல்லை ஆளும் கட்சியையோ, இல்லை லீ குவானையோ எதிர்த்து ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கூட  போட முடியாது. போட்டால் சிறை வாசம் அல்லது நாடு கடத்தப்படுவார்கள்.

சிங்கப்பூர் கார்ட்டூனிஸ்ட் கைது
சிங்கப்பூரில் அரசையோ, இல்லை ஆளும் கட்சியையோ, இல்லை லீ குவானையோ எதிர்த்து ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கூட போட முடியாது. போட்டால் சிறை வாசம் அல்லது நாடு கடத்தப்படுவார்கள்.

1965-ல் ‘சுதந்திரம்’ அடைவதற்கு முன்னர் சிங்கப்பூர் தீவு என்பது கடல் கடந்து வந்த ஆங்கிலேயர்களின் புகலிட இளைப்பாறும் தலைநகரம். முக்கியமாக இங்கிலாந்தின் கிழக்காசிய பகுதியின் கடற்படை தளம் இத்தீவில் இருந்தது. அதன் பொருட்டே சிங்கப்பூரை, கிழக்கின் “ஜிப்ரால்டர்” என்று அழைத்தார்கள். 1869-ல் சூயஸ் கால்வாய் திறந்த பிறகு ஐரோப்பா – ஆசிய வர்த்தகம் அதிகரித்த பிறகு சிங்கப்பூர் துறைமுகம் ஒரு முக்கியமான, பரபரப்பான துறைமுகமாக மாறியது.

65-ம் ஆண்டில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு மேற்கண்ட துறைமுக காரணம் மற்றும் அதற்கு முன் கண்ட முதலாளித்துவ சேவைத் தளம் காரணமாகவே சிங்கப்பூர் மேற்குலகின் கௌரவமான இடத்தை  பிடித்தது. அதாவது பெரும்பான்மை மக்களை சுரண்டி சிறுபான்மை முதலாளிகளும் அவர்களது கூட்டமும் வாழும் சீமான்களது வாழ்க்கையே சிங்கப்பூரின் சாதனை. இங்கே அந்த பெரும்பான்மை என்பது சிங்கப்பூரில் அதிகம் இல்லை என்றாலும் சுற்றி இருக்கும் நாடுகளில் இருந்து அவர்களது உழைப்பை சீமான்கள் சுரண்டி எடுத்து சிங்கப்பூரில் கொட்டுகிறார்கள்.

மற்றபடி லீ குவான் யூ எனும் மேதை சிங்கப்பூரை செங்கல் செங்கலாக கட்டினார் என்று வாய் பிளந்தால் அந்த வாய்களில் கேன்சர் இருக்கிறது என்றே பொருள்.

மலேசியா, இந்தோனேஷியா, நாடுகளில் 1950-களில் இருந்த கம்யூனிச எழுச்சியை மேற்குல உதவியோடு அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் அடக்கி ஒடுக்கின. மலேசியாவோடு இருந்த சிங்கப்பூரிலும் அத்தகைய ஒடுக்குமுறை இருந்தது. இன்றைக்குக் கொண்டாடப்படும் லீ குவான் யூ மற்றும் அவரது மக்கள் செயல் கட்சியும் கூட அத்தகைய கம்யூனிச எதிர்ப்பிலிருந்தே தமது அரசியல் வாழ்வை துவங்கியவர்கள்.

சிங்கப்பூரில் எச்சி துப்பக் கூடாது, சிரிக்க வேண்டும், டாய்லட்டில் தண்ணீர் விட வேண்டும் போன்றவற்றையெல்லாம் சட்டங்களாகவும், மீறினால் தண்டனையாகவும் போட்டு ஷங்கரின் அந்நியன் பாணியில் சுத்தத்தை கொண்டு வந்தார் லீ. தண்டனைகளில் மத்தியக் கால கொடுங்கோன்மை பிரம்படி உண்டு. கூடவே போராட்டம், கலவரம், வேலைநிறுத்தம் போன்றவற்றிற்கும் கடும் தண்டனைகள் உண்டு. மரண தண்டனையும் உண்டு. “சிங்கப்பூரின் மக்கள் தொகை விகிதத்தை ஒப்பிடும் போது அங்கே மரண தண்டனை விகிதம் அதிகம்” என்று அம்னெஷ்டி இன்டர் நேஷனல் பல முறை கூறியிருக்கிறது.

ஒரு கட்சி ஆட்சிமுறை, லீயின் மகனே இன்று பிரதமர் என்று அத்தனையும் இருந்தாலும் மேற்குல ஊடகங்களோ இல்லை ஜனநாயக காதலர்களோ வட கொரியாவை வசைபாடுவது போல சிங்கப்பூரை பாடுவதில்லை என்பதோடு போற்றி புகழ்கிறார்கள். வட கொரியா ஒரு அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடு என்று நாம் மதிப்பிடுகிறோம். எனில் சிங்கப்பூர்? இது ஒரு அக்மார்க் அப்பட்டமான முதலாளித்துவ நாடு.

சர்வாதிகாரம்
ஒரு கட்சி ஆட்சிமுறை, லீயின் மகனே இன்று பிரதமர் என்று அத்தனையும் இருந்தாலும் மேற்குல ஊடகங்களோ இல்லை ஜனநாயக காதலர்களோ வட கொரியாவை வசைபாடுவது போல சிங்கப்பூரை பாடுவதில்லை என்பதோடு போற்றி புகழ்கிறார்கள்.

2013-ம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் தொழிலாளிகள் நடத்திய கலவரம் ஒரு துவக்கம். தற்காலிக வேலைச் சீட்டு பெற்று சுமார் 15 இலட்சம் (மொத்த சிங்கப்பூர் மக்கள் தொகையில் 25%-க்கும் அதிகம்) தொழிலாளிகள் அங்கே கொத்தடிமை வேலை செய்கிறார்கள். இது போல விசா இல்லாமல் வேலை செய்வோரும் அங்கே அதிகம். அப்போதுதான் அவர்களை வரைமுறையின்றி சுரண்டலாம் என்பதால் சிங்கப்பூர் அரசு அதை கண்டும் காணாமலும் நடந்து கொள்ளும். சிலரை கைது செய்து பிரம்படி என்று செய்திகள் வந்தாலும் அது ஒரு கண்துடைப்பே.

மொத்தத்தில் தொழிலாளிகள் அங்கே குறைந்தபட்ச கூலியின்றி, குறைந்த அளவு சட்ட உரிமைகள் இன்றி சுரண்டப்படுகின்றனர். அந்த கடுமுழைப்பின் பலனை பாதிக்கும் மேல் அங்கே செலவழித்துவிட்டு மீதியை வீட்டிற்கு அனுப்புகின்றனர். அதிலும் திருட்டு விசாவில் அனுப்பிய ஏஜெண்டுக்கு சில வருட உழைப்பை அளிக்க வேண்டும். பிடிபட்டால் நாடு திரும்பி உள்நாட்டில் அகதி போல தத்தளிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் ஃபேஸ்புக் முதலாளி ஏன் செட்டிலானார், இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தும் தமிழ் தொழிலாளி ஏன் அங்கே வேலை செய்கிறார் என்பதையெல்லாம் புரிந்து கொண்டால் முதலாளித்துவம் என்றால் என்ன என்று எவருக்கும் புரியும்.

எனினும் இந்த அநீதியின் பாதையில் சிங்கப்பூர் என்றுமே ஒரு சுத்த பத்தமான ஊராக இருக்காது. அந்த நாட்டை உழைத்து உருவாக்கி செத்துப்போன தொழிலாளிகளின் வாரிசுகள் தமது உரிமைகளுக்காக களம் இறங்குவார்கள். இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கேட்கும் “முதலாளித்துவம் ஒழிக” எனும் முழக்கம் சிங்கப்பூரிலும் கேட்காதா என்ன?

அப்போது சிங்கப்பூர் இப்போது உள்ளது  போல ஒரு ‘சுத்தமான’ நாடாக இருக்காது.

–    வேல்ராசன்

அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்

1

திகார வர்க்கத்தினர் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளைப் போல இலஞ்ச – ஊழல்களில் ஈடுபடமாட்டார்கள், படித்த வர்க்கத்தினரான இவர்கள் கண்ணியமாக நடப்பார்கள்; அரசியல் தலையீடு இல்லாமல் அதிகார வர்க்கத்தினர் சுயமாக இயங்கினால் ஊழல் என்பதே இருக்காது; ஊழல் முறைகேடு என்றாலே அதற்கு முதன்மைக் காரணம் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் – என்று தூய்மையான நிர்வாகத்துக்கு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்தான் வில்லன்களாக இருப்பதைப் போல துக்ளக், தினமணி போன்ற ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இம்மோசடித் தனமான கருத்தைப் பொய்யாக்கும் வகையில் அடுத்தடுத்து நடந்துள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் – மோசடிகள் பல ஆயிரம் கோடிகளை விஞ்சிவிட்டது. இலஞ்சம் பெறுதல், அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்துதல், வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்தல் முதலான குற்றங்களின் கீழ் நாடு முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் 157 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்தது. இவற்றில் 71 வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல், பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

உ.பி அரசுப் பொறியாளர் யாதவ் சிங்
உ.பி அரசுப் பொறியாளர் யாதவ் சிங். பல நூறு கோடிகளைச் சுருட்டிய கிரிமினல் ஊழல் பெருச்சாளி.

உண்மையில், அதிகாரிகள் நடத்தும் ஊழலும் கொள்ளையும்தான் அரசியல்வாதிகளின் ஊழலைவிட மிகப் பெரியதாக இருக்கிறது. இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் செய்வதற்கும் மோசடி அம்பலமானால் அதைத் திட்டமிட்டே மூடி மறைப்பதற்கும் தப்பித்துக் கொள்ளவும் தேவையான தொழில் ரகசியங்களை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுத்துப் பயிற்றுவிப்பதே அதிகாரிகள் கூட்டம்தான். இவர்கள் வாங்கும் இலஞ்சத்தைக் கணக்கிடவும் முடியாது. இலஞ்சம்தான் அதிகார வர்க்கத்தின் இரத்தத்தின் இரத்தமாக இருக்கிறது. ஆதர்ஷ், காமன்வெல்த், அலைக்கற்றை, நிலக்கரி – என எல்லாவிதமான மெகா கொள்ளைகளிலும் அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் திருடுவதற்கு வழிசொல்லிக் கொடுத்திருப்பவர்கள் அதிகாரிகள்தான். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் – என இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் எல்லா மாஃபியாக்களிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு திருடுவதற்கும் தப்புவதற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் ரூட்டு போட்டுக் கொடுக்கிறார்கள்.

அண்மையில், உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பொறியாளர் யாதவ் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், 2 கிலோ தங்கம், கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் ஆகியனவும், அவருக்கு 20 இடங்களில் அசையாச் சொத்து உள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதை ஊடகங்கள் அதிர்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சிக் காலத்தில் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் வழி திட்டங்களில் ஏறத்தாழ ரூ. 900 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் மெதுவாகக் கசிந்து, இத்திட்டங்களுக்கான மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய யாதவ் சிங் இப்போது சிக்கிக் கொண்டுள்ளார்.

ம.பி. ஊழல் அதிகாரிகள்
ம.பி.யின் ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான டினு ஜோஷி மற்றும் அவரது கணவர் அரவிந்த் ஜோஷி; அரசுத் தேர்வாணைய ஊழலில் சிக்கி பதவி விலகியுள்ள ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்.

உ.பி. அரசுப் பொறியாளரின் ஊழல் விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே, மத்தியப் பிரதேச அரசுத் தேர்வாணையத்தில் தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்துள்ள ஊழலில் கோடிக்கணக்கில் சுருட்டியுள்ள அமித் பாண்டே என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் அவரது கணவரையும் கடந்த ஜனவரியில் ம.பி. சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது. பணி நியமனத்திற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக முன்னாள் ம.பி. அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, அவரது சிறப்புப் பணிக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி சுக்லா, ஆளுநரின் சிறப்புப் பணிக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்ராஜ் யாதவ் ஆகியோரும் கைதாகியுள்ளனர். இந்த ஊழல் மோசடியில் ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்-க்கும் தொடர்பு உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவரைப் பதவி விலகுமாறு மைய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே ம.பி.யில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பணியாற்றிய டினு ஜோஷி மற்றும் அவரது கணவர் அரவிந்த் ஜோஷி ஆகியோரது வீடுகளை 2010-ம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது ரொக்கமாக ரூ 3 கோடியும், அந்நிய கரன்சியும், சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் சிக்கின. அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ஏறத்தாழ ரூ 360 கோடிக்கு அளவுக்குச் சொத்துக்களைக் குவித்துள்ளதாக 2014-ல் லோக் ஆயுக்தா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். பலமுறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றத்துக்கு வராமல் இழுத்தடித்த அவர்கள், அண்மையில் சிறையிடப்பட்டுள்ளனர்.

போலீசு ஐ.ஜி. பிரமோத்குமார்
பாசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களின் ஒருவரான கமலவள்ளியைக் கடத்திச் சென்று ரூ 2.96 கோடி பணம் பறித்த போலீசு ஐ.ஜி. பிரமோத்குமார்

மும்பையைச் சேர்ந்த “மிட் டே” என்ற நாளேடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களின் மூலம் மகாராஷ்டிராவின் மாவட்ட அளவிலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏறத்தாழ ரூ 271.88 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக மார்ச் 2014-ல் அம்பலப்படுத்தியது. ஏழைகள், பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஒப்பந்ததாரர்கள் விழுங்கி ஏப்பம் விட்ட கதையையும் இதில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு இப்போது அரசு வெளியிட்டுள்ள ஆரம்பநிலை விசாரணை அறிக்கையில், இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக ஒப்புக்கொண்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த பாசி நிதி நிறுவனம், முதலீட்டுக்குக் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 48,000 முதலீட்டாளர்களிடம் ஏறத்தாழ ரூ 1,600 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன்ராஜ், இயக்குநர்கள் கதிரவன், கமலவள்ளி ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கடந்த 2010 ஜனவரியில் இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளி திடீரென மாயமானார். விசாரணை நடத்திய அப்போதைய திருப்பூர் மாவட்ட போலீசு சூப்பிரண்டு ஏ.அருண், அப்போதைய ஐ.ஜி. பிரமோத்குமார் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் கமலவள்ளியைக் கடத்திச் சென்று ரூ 2.96 கோடி பணம் பறித்த விவகாரம் அம்பலமானது. ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய திருப்பூர் டி.எஸ்.பி. ராஜேந்திரன், மத்திய குற்றப் பிரிவு போலீசு நிலைய ஆவாளர்களான மோகன்ராஜ், சண்முகயா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகி, அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஏறத்தாழ 80 புகார்தாரர்கள் விசாரிக்கப்பட்டு, 312 ஆவணங்கள் மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது. விசாரணையோ நத்தை வேகத்தில் இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ம.பி ஆர்ப்பாட்டம்
டினு ஜோஷி – அரவிந்த் ஜோஷி தம்பதிகளின் ஊழல்-கொள்ளைக்கு எதிராக ம.பி இளைஞர்கள் அணிதிரண்டு 2011-ல் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்களைத் தேர்வு செய்யும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி. எஸ்.சி.) மிகப் பெரிய ஊழலும் மோசடியும் நடந்த விவகாரம் கடந்த 2011-ல் அம்பலமானது. தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள், குரூப் 1 தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் – குறிப்பாக உதவி பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பணி, வி.ஏ.ஓ. பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், இதில் பல கோடிகள் சுருட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. தேர்வாணையத் தலைவரான செல்லமுத்து உள்ளிட்ட 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்தி பணி நியமன ஆணை, அரசியல் வாதிகளின் சிபாரிசுக் கடிதங்களைக் கைப்பற்றினர். ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் ஏறத்தாழ ரூ. 5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியுள்ள விவகாரமும் அம்பலமானது.

கணக்கில் வராத ரொக்கப் பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டு, தேர்வாணையத் தலைவரான செல்லமுத்து பதவி விலகிய பின்னர், தேர்வாணையம் மீண்டும் அக்குறிப்பிட்ட பணிகளுக்கான தேர்வுகளை நடத்த முன்வந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேற்கொண்டு விசாரணையைத் தொடர முடியாமல் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியுள்ளதால், விசாரணை முன்னேறாமல் முடங்கி நிற்கிறது. இதனால் சி.பி.ஐ.யின் விசாரணை தொடருமா, மோசடிகள் வெளிவருமா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடர வேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை என்று சட்ட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில முதல்வர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும் ஊழல் அதிகாரிகளைத் தப்ப வைப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமா சங்கர் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில் நடந்த பல ஊழல் விவகாரங்களில், அதிகாரிகள் மீது வழக்கு தொடர முடியாததற்கு இக்குழுவின் அனுமதி கிடைக்காததுதான் காரணம் என்று போட்டுடைத்துள்ளார்.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்போது, எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதிகார வர்க்கம் செய்யும் ஊழல்களும் மோசடிகளும் வெளியே தெரிவதில்லை. ஊழல் அதிகாரிகள் தமக்கு உரிய பங்கு கிடைக்காத ஆத்திரத்தில் போட்டுக்கொடுக்கும்போதுதான் அதிகார வர்க்கத்தினரின் ஊழல்-கொள்ளைகள் மெதுவாகக் கசிகின்றன. இருப்பினும், அதையும் முடக்கவும் மூடிமறைக்கும் தகிடுதத்தங்களில் இறங்குவதும், துறை சார்ந்த விசாரணை நடப்பதாக பூசி மெழுகுவதும், விசாரணையை இழுத்தடிப்பதும்தான் நடக்கிறது.

அரசு எனும் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் இந்த அதிகாரிகள்தான். அரசு எனும் ஆயிரங்கால் பூதத்தின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக இருப்பது அதிகார வர்க்கம்தான். ஆட்சி நடத்துவதே அவர்கள்தான். அதனால்தான் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இலஞ்ச ஊழல் – அதிகார முறைகேடுகள் மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், அரசின் வரவு-செலவுகள், கொள்கைகள் – திட்டங்களை ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்கம், கொள்ளைக்கு ஏற்ற வகையில் வகுத்து, அவற்றைச் செயல்படுத்துபவர்கள்தான் இந்த அதிகாரிகள் கூட்டம். ஆளும் கும்பலுக்குச் சேவை செய்யுும் இத்தகைய ஊழல்-மோசடி அதிகார வர்க்கத்தைக் கொண்டுள்ள அரசுக் கட்டமைவில், லோக்ஆயுக்தா போன்ற ஊழல் தடுப்பு ஏற்பாடுகளும் சட்டங்களும் போட்டாலும் அவையனைத்தும் அடுத்தடுத்து தோல்வியைத்தான் தழுவுகின்றன.

இந்நிலையில், சட்டபூர்வ கிரிமினல் கும்பலாக வளர்ந்துவிட்ட இத்தகைய ஊழல் அதிகார வர்க்கத்தை தனிநபர்களின் போராட்டங்களால் ஒழித்துவிடவோ, கடுமையான சட்டங்களால் திருத்தியமைத்துவிடவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. இத்தகைய அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறைகளின் அதிகாரத்தைப் பறிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவரவும் புரட்சிகர அமைப்பும் போர்க்குணமிக்க போராட்டங்களும் அவசியமாக உள்ளன என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.

– குமார்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி

5

றுமையின் காரணமாக தம் பிள்ளைகள் சோற்றைத் திருடித் தின்ற அவலத்தைக் கண்டோ, வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாத நெருக்கடியின் காரணமாகவோ குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள். குடும்பம் ஏழ்மையின் பிடியில் இருப்பதால், குடும்பத்தலைவனது வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படும் போது குடும்ப உறுப்பினர்களின் இருப்பும் பிரச்சினைக்குள்ளாகிறது.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
பிரவீன் மன்வருக்கு சில்பா என்கிற மனைவியும், சர்வரி – வயது 9, பரிநீதி – வயது 2 என இரண்டு பெண் குழந்தைகள்.

ஆனால் அத்தகைய பொருளாதார பிரச்சினை ஏதும் இல்லாமல் வறட்டு கௌரவத்திற்காகவும் படித்த மேதாவித்தனத்தாலும் ஒருவன் தனது குடும்பத்தை கொலை செய்ய முயன்றான் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

மத்திய பிரதேசத்தின் கஜூராகோ அருகில் உள்ள சாத்தர்பூர் எனும் ஊரில் வசிக்கும் பிரவீன் மன்வர் ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு பொதுத் துறை நிறுவனம் ஒன்றில் மாதம் சில லட்சங்களில் சம்பளம் வாங்கக் கூடியவர். இவருக்கு சில்பா என்கிற மனைவியும், சர்வரி – வயது 9, பரிநீதி – வயது 2 என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

சாமானியர்களுக்கு எளிதில் கிடைக்காத ஐ.ஐ.டி படிப்பு; ஆறிலக்கச் சம்பளம்.. அடுத்து என்ன? இன்பங்களைப் புதிது புதிதாக தேடி அனுபவிக்க வேண்டும் என்கிற நுகர்வு வெறி இவ்வர்க்கத்தின் பொதுப் பண்பு. அதுவே பாலியல் வெறியாக மாறி மன்வரை உந்தித் தள்ளுகிறது. தில்லியில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் புதிய இன்பங்களைத் தேடி அலைந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மன்வருக்கு வாயில் புண் வந்திருக்கிறது உடலும் மெலிந்திருக்கிறது.

மன்வர் தற்கொலை கதை
விபச்சார விடுதிக்கு சென்று வந்ததால் தனக்கு எய்ட்ஸ் வந்திருக்குமோ என்று பயந்தார் மன்வர்.

விபச்சார விடுதிக்கு சென்று வந்ததால் தனக்கு எய்ட்ஸ் வந்திருக்குமோ என்று பயந்த மன்வர், வாய் புண்ணும் உடல் மெலிவும் எந்த நோய்க்கான அறிகுறி என்பதை அறிந்து கொள்ள கூகுளில் தேடியிருக்கிறார். இணைய தளங்களின் அரைகுறை அலோசனைகளின்படி தனக்கு வந்த வாய்ப்புண் எய்ட்ஸ்க்கான அறிகுறி என பீதியடைந்துள்ளார்.

வீட்டில் யாருக்கும் சொல்லாமல் பக்கத்து நகரமான சாத்தர்பூரில் உள்ள ஒரு பாடாவதி இரத்தப்பரிசோதனோ நிலையத்திற்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்திருக்கிறார். சாதாரணமாக இவர்கள் உயர்தர பரிசோதனை ஆய்வு மையத்திற்குத்தான் செல்வார்கள். சாதாரண ஆய்வகத்திற்கு சென்றால் அது ஏன் தவறு என பட்டியல் போடுவார்கள். இங்கோ எய்ட்ஸ் என்பதால் வெளியே தெரியக்கூடாது என்று சிவராஜ் வைத்தியரிடம் வரும் கோயிந்துகள் பாணியில் ரகசியமாக ஏதோ ஒரு டூபாக்கூர் ஆய்வகத்திற்கு சென்றிருக்கிறார். பரிசோதனை முடிவில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாகத் தெரியவந்ததுள்ளது.

அதிர்ச்சியடைந்த மன்வர் வீட்டிற்கு வந்து எய்ட்ஸ் பற்றி மேலும் விபரங்களை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். பித்து பிடித்த அவரது மனதிற்கு, அவரது மனைவியிடமும் எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக தோன்றவே, நடந்த அனைத்தையும் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
“உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம் எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்”

இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மனைவி சில்பா கதறி அழுது சண்டை போட்டிருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவருடன் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு மனைவியிடம் எப்படியோ பேசி சமாதானப்படுத்திய மன்வர், “உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம் எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்” என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

குற்றம் செய்தவன் அதற்கு தொடர்பே இல்லாத குடும்ப உறுப்பினர்களை மரிக்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை சில்பா உயிரோடு இருந்து இந்த எய்ட்ஸ் ரகசியத்தை கூறிவிடுவார் என்ற பதட்டம் காரணமாக இருக்கலாம். மேலும் மன்வரின் சேமிப்பு, சொத்து என்பவையெல்லாம் சில்பாவுக்கும் குழந்தைகளுக்கும் போதுமானதாகவே இருக்கும் என்பதால் இங்கே பொருளாதாரம் காரணமாக இல்லை. வட இந்திய பார்ப்பனிய சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவமே இப்படி மனைவியை வற்புறுத்தி சாவதற்கு தயார் செய்ய முடியும்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
குழந்தைகளை எப்படி வலியில்லாமல் சாகடிப்பது என்று யோசித்த மன்வர் அதற்கான வழியை கூகுளில் தேடியிருக்கிறார்

தற்கொலை செய்து கொள்ளத் தயாரான போது குழந்தைகளை எப்படி வலியில்லாமல் சாகடிப்பது என்று யோசித்த மன்வர் அதற்கான வழியை கூகுளில் (மீண்டும்!) தேடியிருக்கிறார். அப்படி ஒரு வழிமுறையும் கிடைக்காததால் தானே சுயமாக சிந்தித்து ஒரு வழியை கண்டுபிடித்தார்.

அதன்படி மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான அமராவதிக்கு பிப்ரவரி 28-ம் தேதி காரில் சென்றிருக்கிறார். மூன்று நாட்கள் அமராவதியில் இருந்துவிட்டு நான்காவது நாளான மார்ச் 4-ம் தேதி ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள்.

அமராவதியிலிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த வழியில் காரை ஒரு பள்ளத்திற்குள் கொண்டு போய் வீழ்த்துவது தான் தற்கொலைத் திட்டம். அதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. ஆனால் காயம் ஏற்பட்டதே தவிர யாரும் சாகவில்லை. அனைவரும் மயக்கமடைகின்றனர்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
ஒரு தாய் என்கிற வகையில் சில்பாவால் தனது குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுவதை ஏற்கமுடியவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு மன்வருக்கு மட்டும் மயக்கம் தெளிந்து கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கிறார் யாரும் சாகவில்லை என்பது தெரிகிறது. உடனே சிறிதும் யோசிக்காமல் அடுத்த திட்டத்தை அமுல்படுத்துகிறார். பெட்ரோல் டேங்கிற்கு தீ வைத்து  தானும் காருக்குள் செல்கிறார். காரில் இருந்த மனைவியும் குழந்தைகளும் மயக்கம் தெளிந்து கதறுகின்றனர். ஆனால் ஒரு தாய் என்கிற வகையில் சில்பாவால் தனது குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுவதை ஏற்கமுடியவில்லை.

“குழந்தைகள் எந்த வகையிலும் இந்த தவறுக்கு பொறுப்பு இல்லை எனவே அவர்களை மட்டுமாவது காப்பாற்றுங்கள்” என்று கணவரிடம் கெஞ்சியிருக்கிறார்.

அதன்படி காரைவிட்டு இறங்கிய மன்வர் கொழுந்து விட்டு எரியும் தீயினுள் சென்று குழந்தையை வெளியே எடுக்க முயன்றுள்ளார். நெருப்பின் வெப்பம் அதிகரிக்கவே தயங்கி நின்று விட்டார். மீண்டும் நெருப்புக்குள் செல்லத் தயாராக இல்லை. மரண பீதியில் காரை விட்டு விலகி நின்று கொண்டு மூவரும் கொதிக்கும் நெருப்பில் கதறி, துடிதுடித்து சாவதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார். அவர்கள் கருகி சாம்பல் ஆகும் வரை அங்கேயே இருந்து விட்டு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
கார் எரிந்து கிடக்கும் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யும் சில்பா குடும்பத்தினர்.

இந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் கூறாமல் நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சில நாட்கள் சுற்றி திரிந்து விட்டு கடைசியாக தன் நண்பர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். விசயத்தை கேட்டு அதிர்ந்த நண்பர்கள் உடனடியாக போலீசில் சரணடைந்து விடுமாறு கூறியுள்ளனர். அதன்படி என் மனைவி குழந்தைகளை நான் கொன்றுவிட்டேன் என்று கூறி போலீசில் சரணடைந்துள்ளார். போலீசின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருப்பேன் என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சில்பாவின் அண்ணன் தனது தங்கையை மன்வர் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கிறான் என்று புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை ஆய்வாளர் எஸ்.கே கில், மன்வர் கூறுவது உண்மையா என்பதை அறிய அவருக்கு மீண்டும் இரத்தப்பரிசோதனை ஒன்றை செய்திருக்கிறார். பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்கிற முடிவு வந்திருக்கிறது. மன்வர் முன்பு பரிசோதனை செய்த நிலையத்தில் எய்ட்ஸைக் கண்டறிய போதுமான வசதிகள் இல்லாததாலேயே தவறான பரிசோதனை முடிவைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது விசாரணைகளில் தெரிய வருகிறது.

மன்வருக்கு எய்ட்ஸ் இல்லை என்கிற தகவல் அவரிடம் சொல்லப்பட்ட போது அதிர்ச்சியடையாமல் அமைதியாக கேட்டுக் கொண்டார் என்று டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. அப்போது உண்மையில் மன்வரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?

குற்றம் குறித்த வருத்தமா, பெருங்குற்றம் புரிந்து விட்டு வரும் படிப்பினையா, இல்லை குற்றத்தை மிஞ்சிய காரியவாதமா, எய்ட்ஸ் இல்லை என்பதால் இனி சிவப்பு விளக்கிற்கு பாதுகாப்புடன் போவது குறித்த எச்சரிக்கை உணர்வா, இல்லை சில்பாவின் அண்ணன் கூறியது போல மனைவியைக் கொன்றுவிட்டு கிடைக்கும் ஆதாயம் பறிபோய்விட்டது என்ற பதட்டமா?

இதை போலீசிடம் கூறியது என்றபடி பார்த்தால் அவர் ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பதாக தெரிகிறது. சில்பாவின் அண்ணன் கூறியபடி பார்த்தால் நாடகமென்றும் தெரிகிறது. எனினும் தவறே செய்யாத தனது மனைவி, குழந்தைகளை கொல்லும் தைரியம் குற்ற உணர்வு உள்ள ஒருவனுக்கு இருக்காது என்றே தோன்றுகிறது. இது திட்டமிட்ட வக்கிரத்தின் பால் வரும் கொலைவெறி.

அடுத்த கல்யாணத்திற்கு இந்த வழக்கும் அதன் விவரங்களும் எந்தளவுக்குத் தடையாக இருக்கும் என்ற கணக்குகள் கூட அந்தக் கண நேரத்தில் மன்வருக்கு ஓடியிருக்கலாம்.

இறந்து போன சில்பாவையும் அந்தக் குழந்தைகளையும் பற்றியுமே நமது மனம் பதைபதைக்கிறது. பாலியல் வெறிபிடித்த தன் கணவர் செய்த தவறுக்காக அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டதுடன் அவனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வந்திருக்கிறாள் சில்பா.. அவளுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளதா என்ன? மேற்குலகைப் போல் முதலாளித்துவ விழுமியங்கள் வளர்ந்த சமூகமென்றால்.. தனது கணவன் வேசிகளிடம் சென்றான் என்றுக் கேட்ட கணத்தில் அவள் தூக்கியெறிந்திருப்பாள்.

பார்ப்பனிய ஆணாதிக்க மதிப்பீடுகள் கோலோச்சும் நமது சமூகத்தில் மனைவி எனப்பட்டவள் கணவனின் செருப்பாகத் தானே மதிக்கப்படுகிறாள்? ஊர்மேயும் கணவனை தலைக்கூடையில் சுமந்தவள் தானே நம் ஊரில் பத்தினி. இப்படிப்பட்ட பத்தினிகளாக நம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது தானே ஆர்.எஸ்.எஸ் மோகன் பாகவத்திலிருந்து காஞ்சி சங்கராச்சாரி வரையிலானவர்கள் நம் பெண்களுக்கு உபதேசிக்கிறார்கள்?

மருத்துவ மாணவி நிர்பயாவைக் பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கிப் பின் கொன்ற முகேஷ் சிங் பி.பி.சி ஆவணப்படத்தில் பேசியதற்கும் மன்வரின் நடவடிக்கைகளுக்கும் ஏதும் வேறுபாடு இருக்கிறதா?

பார்ப்பனியம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் உருவாக்கி வளர்த்துள்ள இந்தக் கிரிமினல்தனம் தற்போது மறுகாலனியாக்க கலாச்சார சூழலோடு கைகோர்த்துள்ளது. உண்மையில், இவையிரண்டும் ஜாடிக்கேற்ற மூடிகள். வளர்ச்சியும் பார்ப்பன பயங்கரவாதமும் மோடியின் உருவில் ஒரே வடிவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம்.

இந்தக் கள்ளக் கூட்டின் பொருளாதார விளைவை நம் தூக்கில் தொங்கும் விவசாயிகளின் உடல்களாகவும், ராணிப்பேட்டையில் இரசாயனச் சகதியில் அமிழ்ந்த வடநாட்டுத் தொழிலாளிகளின் உடல்களிலும் , முகலிவாக்கத்தில் தகர்ந்து வீழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் கீழ் நசுங்கிச் செத்த ஆந்திரத் தொழிலாளிகளின் உடலிலுமாகக் காண்கிறோம். அதன் சமூகக் கலாச்சார விளைவை நிர்பயாவாகவும், சில்பாவாகவும் காண்கிறோம்.

– அஜிதா

மேலும் படிக்க

மார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்

1
மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாள் :  மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்

விருத்தாச்சலம்

மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து விருத்தாசலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.

சைக்கிள் பேரணி
பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து சைக்கிள் பேரணி.

மார்ச் 23, 1931  – காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நாட்டுக்காக தம்முடைய உயிரையும் கொடுத்த நாள். தனியார்மயம், தாராளாமயம், உலகமயம் கொள்கையால் நாடு மீண்டும் அடிமையாகி பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாறியுள்ளது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு நாள்
தனியார்மயம், தாராளாமயம், உலகமயம் கொள்கையால் நாடு மீண்டும் அடிமையாகி பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாறியுள்ளது.

அதை மேலும் தீவீரப்படுத்தும் “56 இஞ்ச் மார்பு” கொண்ட மோடி “திறமை”யாக மறுகாலனியாக்கத்தை வேகமாய் நடத்தி வருகிறார். இச்சூழலில் மார்ச் 23 போராளிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அவர்களின் போராட்டப்பாதையை நாம் வரித்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடைப்பிடித்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
மார்ச் 23 போராளிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடைப்பிடித்தது.

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி முன்பு, “மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்” எனும் முழக்கத்துடன் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.

இந்த அறிவிப்பைக் கண்ட க்யூ பிரிவு போலீசு பு.மா.இ.மு எங்கு கூட்டம் நடத்த இருக்கிறது என மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. முன்னணியாளர்களை கண்காணித்து வந்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
போலீசு அச்சுறுத்தலை மீறி பேரணி நடத்தப்பட்டது.

இதையெல்லாம் மீறி பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, வெளியூர் செல்லும் கல்லூரி பேருந்துகளிள் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

சைக்கிள் பேரணி சரியாக காலை 11 மணிக்கு துவங்கப்பட்டது. சைக்கிளில் பகத்சிங் படங்களை மாட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்கள் புறப்படத் தயராயினர். RSYF என எழுதி இருந்த தொப்பிகளை அனைத்து தோழர்களும் அணிந்து இருந்தார்கள்.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
சைக்கிளில் பகத்சிங் படங்களை மாட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்கள்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பதேவன் பேரணியை தொடங்கிவைத்து பேசினார். “காலனியாக்கத்துக்கு எதிராக போராடி நாட்டுக்காக தன்னுடைய உயிரையும் கொடுத்தவர் பகத்சிங். ‘வெள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும். பிச்சைகேட்பது அல்ல சுதந்திரம்’ என்பது  பகத்சிங் பாதை. அதே வழியில், மறுகாலனியாக்கத்திற்கு எதிராக இன்றைய மாணவர்கள் இளைஞர்களை அணிதிரட்டுவது தேவையாக உள்ளது” என பேசினார்.

அதைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மாணவர்களின் பேரணி தொடங்கியது. பேரணி கல்லூரியில் இருந்து ஆலடிரோடு, மார்க்கெட், ஸ்டேட் பேங்க் வழியாக பாலக்கரை, கோர்ட் வரை சென்று நிறைவடைந்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
‘வெள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும். பிச்சைகேட்பது அல்ல சுதந்திரம்’ என்பது பகத்சிங் பாதை.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் சைக்கிளை நிறுத்தி பிரசுரம் கொடுக்கப்பட்டது. “பகத்சிங் சுகதேவ், ராஜகுரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தூக்குமேடை ஏறிய நாள், இன்று. இதை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்” என பிரசுரம் கொடுத்து மக்கள் மத்தியில் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

பேரணி முடிந்தவுடன் அறைக்கூட்டம் நடைபெற்றது. அதில் விருத்தாசலம் பகுதிபு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் முருகானந்தம் பேசினார். “பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை போல நாமும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை நம் தோள்களில் சுமக்க வேண்டும். மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
97912 86994

தஞ்சை

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் “மோடி அரசின் நில கையகப்படுத்தும் சட்டம், மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேச துரோகம்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளிப்பன் கண்டன உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

சென்னை, திருச்சி

மோடியின் ஆட்சி ’தேசிய’ப் பேரழிவு என்ற தலைப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 அன்று சென்னை, திருச்சி ஆகிய இரு மையங்களில்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியில் ஆட்சி செய்து வருகின்ற மோடியின் அரசானது காங்கிரசு கட்சி கொண்டு வந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரசை விட தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை மோடி அரசின் செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர்.

  • கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்கள் செய்வது
  • பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அதிகரிப்பது
  • நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வரையறையின்றி சூறையாட அனுமதிப்பது
  • உழைக்கும் மக்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவிடப்படுகின்ற மானியத்தை வெட்டி விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி இறைப்பது
  • விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டி விட்டு அவர்களது நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு கையகப்படுத்தி தருவது
  • இவையனைத்தையும் அவசர சட்டங்கள் என்கிற ஜனநாயக விரோத வடிவத்தில் அமல்படுத்தி வருவது

போன்றவற்றை மோடி அரசின் மக்கள் விரோத – தேச விரோத செயல்பாடுகளுக்கு உதாரணமாக தெரிவிக்கலாம். மோடியின் ஆட்சி ஒரு தேசியப் பேரழிவுக்கு ஒத்ததாக இருக்கிறது என 22.2.2015 அன்று நடைபெற்ற எமது மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் மத்தியில் ஒருமாத காலத்துக்கு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 23 அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியான பகத்சிங் நினைவு நாளில் சென்னை அம்பத்தூர் தொழிற்பாட்டையிலும், திருச்சியில் சிந்தாமணி அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்துக்கு எமது மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மு.முகிலன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா, புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருச்சியில் சிந்தாமணி அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு எமது இணைப்புச் சங்கமான திருச்சி பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். எமது அமைப்பின் மாநில துணைத்தலைவர்கள் விளவை இராமசாமி மற்றும் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

திருவாரூர் சுவரொட்டி பிரச்சாரம்

rsyf-thiruvarur-poster

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

இந்துமதவெறி எதிர்ப்பு போராளி தீஸ்தா : சென்னைக் கூட்டம்

3

1990-கள் முதல் மத அடிப்படைவாதிகளுக்கு குறிப்பாக இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தீஸ்தா சேதல்வாத் கலந்து கொண்ட கூட்டம் 20-03-2015, வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது.

கூட்டம் நடந்த பின்னணி

தீஸ்தா சேதல்வாத்
தீஸ்தா சேதல்வாதின் உரையை தமிழில் மொழிபெயர்க்கும் பத்திரிகையாளர் ஞாநி.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், 2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை நடத்தி, 120 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு முதன்மை பங்காற்றியவர் தீஸ்தா. குஜராத் இனப்படுகொலையாளி மோடி பிரதமராகவும், அவரது கூட்டாளி அமித் ஷா பா.ஜ.க தலைவராகவும் ஆகியிருக்கும் நிலையில் தீஸ்தா மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டு அவரை முடக்கி விடும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர் மீதான வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் கோரும் மனு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உச்சநீதி மன்ற வழக்கு விசாரணைகளுக்கு மத்தியில், எந்த நேரமும் குஜராத் போலீசால் கைது செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு இடையே சென்னைக்கு வருகை தந்த தீஸ்தா சேதல்வாதும், அவரது கணவர் ஜாவித் ஆனந்தும் அக்கறையுள்ள குடிமக்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தினர் மத்தியில் தீஸ்தா
கூட்டத்தினர் மத்தியில் தீஸ்தா.

“உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடத்தில் முன்ஜாமீன் கொடுக்க முடியும். ஆனால், ‘தவணை முறையில் முன் ஜாமீன்’ என்று சொல்லும் அளவுக்கு தீஸ்தாவை இழுத்தடித்து வருகிறது. தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களை பெருமளவு பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பை முடக்க முயற்சிப்பதில் முன்னணியில் இருந்த மாநிலம் குஜராத். பொடா சட்டத்தை அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தியது மோடி அரசு. இத்தகைய மதவாத அரசுக்கு எதிரான இயக்கத்தை விடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனை தீஸ்தா” என்று உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் நீதியரசர் சந்துரு.

ஜாவித் ஆனந்த்
பத்திரிகையாளரும் தீ்ஸ்தாவின் சக போராளியுமான ஜாவித் ஆனந்த்

மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த காலிகள் ஜனநாயக சக்திகளையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கி வரும் நிலையில், அன்றைய கூட்டத்தில் அத்தகைய முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் திரண்டிருந்தனர். சென்ற ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் தீஸ்தா உரையாற்றும் போது திட்டமிட்டுக் கொண்டு கூட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீஸ்தாவிடம் சரியான பதிலடி வாங்கிச் சென்ற காவி பூனைகள், நேற்றைய நிகழ்ச்சிக்கு வராமல் ‘எஸ்கேப்’ ஆகியிருந்தனர்.

தீஸ்தா சேதல்வாத் கூட்டம்
நிறைந்திருந்த அரங்கம்

பத்திரிகையாளர் ஜாவித் ஆனந்த் பேசும் போது, “இந்துத்துவ பாசிசத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தீர்வில்லை” என்பதை விளக்கினார். “சையது சித்திக்கி எனும் ஊடகவியலாளர் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது முன்பாக இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு “ஜெசியா” வரி செலுத்திக் கொண்டிருப்பதாக கூறியிருப்பதையும், எம்.ஐ.எம் என்ற தீவிரவாத இஸ்லாமிய குழுவின் தலைவர் அஸாவுதீன் ஒவைசி முஸ்லிம்கள் மதச்சார்பின்மையின் கூலிகள் அல்ல என்று குறிப்பிட்டதையும் கண்டித்தார். “’இந்தியாவுக்கு மதச்சார்பின்மை; சவுதி மற்றும் ஈரானுக்கு மதவாதம்’ என்ற அவர்களின் இரட்டை நிலைப்பாடு பாசிச மதவாதிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவப் போவதில்லை” என்று கூறினார்.

குஜராத் படுகொலைகளும் ம.க.இ.க.-வின் பார்ப்பன பாசிச எதிர்ப்பும்

தீஸ்தா உரையாற்றும் போது, மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் கூட்டத்துக்கு வந்திருப்பதை குறிப்பிட்டு, 2003-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை கண்டித்து ம.க.இ.க தஞ்சையில் நடத்திய மாநாட்டில் (பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு) தான் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். அப்போது குஜராத் படுகொலைகள் தொடர்பான செய்திகளுடன் வெளியிடப்பட்டிருந்த கம்யூனலிசம் காம்பட் (தீஸ்தாவும் ஜாவித் ஆனந்தும் நடத்தும் மதவாத முறியடிப்பு என்ற பத்திரிகை) சிறப்பு இதழை ம.க.இ.க தமிழில் மொழி பெயர்த்து அதற்கு பொருத்தமான ஒரு முகப்புப் படமும் சேர்த்திருந்ததை குறிப்பிட்டார்.

மோடி கார்ட்டூன்
2002 மார்ச் மாத கம்யூனலிசம் கம்பட் இதழில் வெளியான மோடி கார்ட்டூன் (புத்தாயிரத்தாண்டின் குகை மனிதன்)

அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அகமதாபாதுக்கு வந்து நிவாரண முகாம்களை பார்வையிட்ட  போது, குஜராத் அரசின் தடைகளை மீறி பர்தா அணிந்து கொண்டு தான் முகாமில் தங்கியிருந்ததையும், ம.க.இ.க கொண்டு வந்திருந்த அந்த தமிழ் இதழை கலாமுக்கு தான் கொடுத்ததையும் குறிப்பிட்டார்.

குஜராத் மதத் தாக்குதல்கள் நடந்த பிப்ரவரி 28, மார்ச் 1, 2 தேதிகளில் நாள் ஒன்றுக்கு தனக்கு 600-லிருந்து 700 அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்று நிலைமையின் குரூரத்தை விளக்கினார். அவரது உரையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

மதக்கலவரங்களுக்கு தயாரிப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ்

மதக் கலவரங்கள் திடீரென்று நடப்பதில்லை. வன்முறைக்கான தயாரிப்புகள் மதவாத அமைப்புகளால் பல ஆண்டுகளாக செய்யப்படுகின்றன. நாம் இந்து மதவெறியர்கள் வன்முறைகளை நிகழ்த்திய பிறகு எதிர்வினைகள் ஆற்றுகிறோம். ஆனால், வன்முறைக்கான தயாரிப்புகள் செய்யப்படும் காலத்திலேயே அவற்றை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும் வேண்டும்.

மதக்கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகள் செய்யும் முன்தயாரிப்புகள் குறித்து பல நீதி விசாரணை அறிக்கைகள், மதக் கலவரங்கள் பற்றிய பத்திரிகை செய்திகள், மதக் கலவரங்கள் குறித்து செய்தி சேகரித்த சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

மத வன்முறை மட்டுமின்றி, சாதி வன்முறையும் இதே மாதிரியான நடைமுறையிலான முன்தயாரிப்புக்கு பின்பே நடத்தப்படுகிறது. வதந்திகளை பரப்புதல், வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுதல் என்று வன்முறைக்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

அகமதாப் மத பிரிவினை
2003-ல் வெளியான ஃபிரன்ட் லைன் இதழில் வெளியான புகைப்படம் (இந்து – முஸ்லீம் பகுதிகளை பிரிக்கும் இடத்தில் இருந்த கதவுக்குப் பதிலாக சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது).

விசுவ இந்து பரிசத் 1991-ம் வருடம் வெளியிட்ட ஒரு வரைபடத்தில் அகமதாபாதை ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் இந்து நகரம், முசுலீம் நகரம் என்று பிரித்திருந்தது. இந்த அறிகுறிகளை, அடையாளங்களை தொடர்ந்து கவனித்து நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும்.

இந்தியாவில் நடைபெற்ற மதக் கலவரங்கள் தொடர்பான நீதி விசாரணை அறிக்கைகள் ஆர்.எஸ்.எஸ்-ன் பெரும்பான்மை மதவாதம் வன்முறைக்கு உகந்த சூழலை தகவமைத்து கொடுத்து சிறுபான்மையினரை குறி வைக்க வசதி செய்ததை தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனினும், நமது அரசு அமைப்புகள் அவற்றிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொண்டு மதக் கலவரங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

மதவாதம் ஊடுருவியிருக்கும் அரசு அமைப்புகள்

நாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், ஆனால் ஜனநாயக அமைப்புகளை முழுமையாக வளர்க்கவில்லை. பெரும்பான்மை மதவாதம் காவல் துறை, கல்வித் துறை, நீதித்துறை என அரசின் ஒவ்வொரு அமைப்பிலும் ஊடுருவியிருக்கிறது.

இன்று குஜராத் வன்முறை தொடர்பாக 120 பேர் தண்டிக்கப்பட்டதை கொண்டாடும் நிலையில் நாம் இருக்கிறோம். 2100 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 120 பேர் தண்டிக்கப்பட்டதை ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கலாம், அல்லது மிகச் சிறிதளவான முன்னேற்றம் என்றும் கருதலாம்.

2002-ம் வருடம், குஜராத் வகுப்பு கலவரங்களை தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்த வந்திருந்த நீதியரசர் வர்மா முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய உதவும்படி என்னை அழைத்தார்.

அதன்படி, அகதிகள் முகாமில் தமக்கும் உறவினர்களுக்கும் இழைக்கப்பட்ட பாலியல் வன்முறை குறித்து வாக்குமூலங்களை அடுத்தடுத்து கேட்டோம். ஒரு சிறுவன் தனது தாயும், சகோதரியும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதை முகத்தில் எவ்வித உணர்ச்சி மாறுதலும் இல்லாமல், குழந்தைமைக்குரிய இயல்புணர்ச்சியுடன் விவரித்துக் கொண்டிருந்தான். தான் என்ன சொல்கிறோம் என்பது கூட புரியாதவனாக அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி வர்மாவின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. “நாளை இந்தச் சிறுவன் பயங்கரவாதி ஆகவில்லை என்றால், வேறு யார் ஆவார்கள்” என்று கேட்டார் நீதியரசர் வர்மா.

அவர் வெளியிட்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் அந்த வாக்குமூலங்கள் இடம்பெற்றன. நீதியரசர் வர்மாவின் அறிக்கை தான் குஜராத் படுகொலைகளுக்கு உச்சநீதிமன்ற தலையீட்டை கோருவதற்கான முக்கிய ஆவணமாக திகழ்ந்தது. குஜராத் இனப்படுகொலையின் போது மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணைய தலைவர் ஜேம்ஸ் லிண்டோ போன்றவர்கள் சிறப்பான அறிக்கையை சமர்ப்பித்தனர்.

நீதிபதிகள் வர்மா, ஆனந்த் தலைமையில் மனித உரிமை ஆணையம் 2 அடி முன் நோக்கி வைத்தது. ஆனால், தலைமை மாறும் போது மனித உரிமை ஆணையம் தனது சொந்த அறிக்கையையே கைவிட்டு 5 அடி பின்வாங்கி விடுகிறது. இன்றும் உச்சநீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையத்தின் மனு மீதான விசாரணையில் அவர்கள் கவனம் சொலுத்துவதில்லை. நாங்கள்தான் நடத்தி வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுடன் பேசிய பிறகுதான் நீதிபதி வர்மாவுக்கு உண்மையான புரிதல் கிடைத்தது. தனது இந்துத்துவா தீர்ப்பு குறித்து வருத்தப்படுவதாக அவர் பின்னர் குறிப்பிட்டார். நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

குஜராத்தில் நீதி தேடிய பயணம்

ஹரேன் பாண்டியா
குஜராத் படுகொலைகளுக்கு முன்பு முதலமைச்சர் மோடி இல்லத்தில் நடந்த கூட்டம் பற்றி  அக்கறையுள்ள குடிமக்கள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த மோடியின் அமைச்சர் ஹரேன் பாண்டியா.

குஜராத் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்திய அக்கறையுள்ள குடிமக்கள் ஆணையம் 18 நாட்கள் சுற்றித் திரிந்து, 15 இடங்களில் 18000 நேரடி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

வன்முறைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றிய தகவலை சில காவல்துறை அதிகாரிகள் என்னிடம் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், யாரும் அதைப் பற்றி அதிகாரபூர்வமாக வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. திடீரென்று 2002-ம் வருடம் மே 12-ம் தேதி மோடியின் அமைச்சர் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் ஆணையத்திற்கு வந்து வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாக கூறினார்.

நாங்கள் அனைவரும் கண்காணிப்பில் இருந்தோம். நீதிபதிகளின் கார்கள் தாக்கப்பட்டிருந்தன. எனது ஓட்டுனர்கள் 5 பேர் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று கூறி போய் விட்டிருந்தனர். இத்தகைய அச்சுறுத்தலான சூழலில், அந்த அமைச்சரிடம் “நீங்கள் உறுதியாக வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டேன்.

கடைசியில் நீதிபதிகள் சாவந்த், நீதிபதி சுரேஷ், நீதிபதி கண்ணபிரான் முன்பு அவர் வாக்குமூலம் அளித்தார். நானும் உடன் இருந்தேன். பிப்ரவரி 27-ம் தேதி நடந்த கூட்டம் பற்றிய விபரங்களை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அவரை குறுக்கு விசாரணை செய்யும்படி நீதிபதிகள் என்னை கேட்டுக் கொண்டனர். அந்த வன்முறையில் அவரும் பங்கேற்றதை பற்றி கேட்ட போது, தான் யாரையும் கொல்லவில்லை என்றும், முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கும்படி மட்டுமே கும்பலை வழிநடத்தியதாகவும், தனது பங்கை மறைக்காமல் கூறினார்.

அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் மோடி நடத்திய கூட்டத்தில் கலவரம் குறித்த திட்டம் பற்றிய குறிப்பும் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, “சாட்சியம் அளித்த அமைச்சர் ஹரேன் பாண்டியா தான்” என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாக கசிந்துவிட, மார்ச் 26, 2003-ம் வருடம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முதலமைச்சர் மோடி, ஹரேன் பாண்டியாவின் உடலுக்கு மரியாதை செலுத்த அவரது வீட்டுக்குச் சென்ற போது, பாண்டியாவின் மனைவியும், சகோதரிகளும் நேரடியாக மோடியை  குற்றம் சாட்டினர்.

இன்று வரை ஹரேன் பாண்டியாவைக் கொன்ற கொலையாளிகள் யார் என்று நமக்குத் தெரியாது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குஜராத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். முக்தி சுஃபியான் என்ற முதல் குற்றவாளி போலி மோதல் கொலை புகழ் வன்சாரா உதவியுடன் வங்கதேசம் வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்தி சூஃபியானை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நாம் எதிர்த்துக் கொண்டிருக்கும் நபர்கள் இப்படிப்பட்டவர்கள்.

நீதியை தடுத்த குஜராத் அரசு

ஜகீரா ஷேக்
ஜகீரா ஷேக்

பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் வழக்கின் போக்கில் பிறழ் சாட்சியாக மாறியதையும் நான் அவரை கடத்தி வைத்ததாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவத்சவாவின் தூண்டுதல் பொய் சாட்சியம் அளித்ததையும் குறிப்பிட்டார் தீஸ்தா. அதைத் தொடர்ந்து வழக்கை மறுவிசாரணை நடத்தக் கோரி அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, உச்சநீதிமன்றம் வழக்கை குஜராத்துக்கு வெளியில் நடத்த உத்தரவிட்டது ஆகியவற்றை குறிப்பிட்டார். இந்தியாவில், ஒரு வழக்கை மறு விசாரணை செய்யவும், மாநிலத்துக்கு வெளியில் இடம் மாற்றவும் உத்தரவிட்டது அதுதான் முதல் முறை.

“அதன் பிறகு மறு விசாரணை மும்பையில் ஆரம்பித்தது. ஆனால், ஜகீரா ஷேக் மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அவர் சாட்சியம் சொல்வதற்கு ஒரு நாள் முன்பு பரோடாவிற்கு சென்று இரண்டாவது முறை பிறழ் சாட்சியாக மாறினார். நாங்கள் அவரை கடத்தி, பொய் வாக்குமூலம் பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறினார். அதைத் தொடர்ந்து நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி ஒரு உயர்மட்ட விசாரணையை நடத்தும்படி கோரினோம்.

உச்சநீதிமன்ற பதிவாளர் பி.எம் குப்தாவின் தீவிர விசாரணையில், எங்கள் அமைப்பு எந்த தவறும் செய்யவில்லை என்று முடிவானது. எங்கள் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜாகிரா ஷேக்குக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஜகீரா ஷேக்கை தூண்டிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவஸ்தவா -அவர் ஜகீரா ஷேக்குக்கு ரூ 18 லட்சம் கொடுத்ததாக தெகல்கா விசாரணையில் தெரிய வந்தது – உச்சநீதிமன்றத்தில் சாட்சி சொல்லக் கூட மறுத்தார். ஆனால், அவருக்கு எந்த தண்டனையும் இல்லை. இப்படித்தான் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்குள் நீதியைத் தேட நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு, எங்கள் மீது குற்றம் சுமத்தி அவதூறு செய்யும் முதல் முயற்சி 2004-ல் நடந்தது. என் மீது பொய் சாட்சி சொல்ல தூண்டியது, கல்லறைகளை தோண்டியது என்று அடுத்தடுத்து 6 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன.

தீஸ்தா சேதல்வாத்
“பிப்ரவரியில் 1 வாரம் எங்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சென்னையில் நேற்று முதல் நாங்கள் பார்த்து வரும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது”

இறுதியில் பெஸ்ட் பேக்கரி வழக்கில், ஜாகீராவின் பிறழ் சாட்சியம் இருந்தாலும் 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது .மேல் முறையீட்டின் போது இன்னும் ஒரு சாட்சி பிறழ் சாட்சி ஆனது. 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

119 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிறகு மேல் விசாரணையில் அவசர அவசரமாக இந்த தண்டனைகள் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும். நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை செய்வோம்.

கார்ப்பரேட் மயமான ஊடகங்கள், காவி மயமாகும் வரலாறு.

இந்த வழக்குகள் பற்றிய தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் மிகப்பெரிய இழப்பு ஊடகங்கள். 2002-2003ல் ஊடகங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக செயல்பட்டன. இன்று அவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால், இத்தகைய வழக்குகள் பற்றிய செய்திகளுக்கு இடம் கொடுக்க முன்வருவதில்லை.

பிப்ரவரியில் குஜராத் போலீசின் பொய் வழக்கை எதிர் கொண்ட போது எங்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், சென்னையில் நேற்று முதல் நாங்கள் பார்த்து வரும் ஆதரவு எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தருகிறது.

2002 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களில் இன்றும் 517 சாட்சியங்கள் உறுதியாக உள்ளனர். அவர்களில் 220 பேர் பெண்கள், மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்து வந்தாலும் தமது நிலையில் உறுதியாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, இது வரை ஈட்டிய வெற்றிகளையும் பாதுகாக்க போராட வேண்டும்.

2 வாரங்களுக்கு முன்பு சி.பி.ஐ-ன் பூபேஷ் குப்தாவுடன் கோவிந்த் பன்சாரேவின் நினைவு கூரும் கூட்டத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தோழர் கோவிந்த் பன்சாரே, ஹரேன் பாண்டியா போலவே காலை நடைப் பயிற்சியின் போது சுடப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் போலவே பகுத்தறிவாளர் நாராயண் தாபோல்கர் கொல்லப்பட்டார்.

ஷிவாஜி கோன் ஹோத்தா
மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே, “ஷிவாஜி யாராக இருந்தார்” என்ற நூலை எழுதி ஆர்.எஸ்.எஸ்-ன் வரலாற்று திரிபுகளை கேள்விக்குள்ளாக்கினார்.

கோவிந்த் பன்சாரே “சிவாஜி யார்” என்ற புத்தகத்தை எழுதினார். அது 1.3 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. 1964-ம் ஆண்டு மராத்தியில் எழுதப்பட்ட அந்த புத்தகம் ஆங்கிலம், உருது, குஜராத்தி, ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

மதவாத அரசியல், வரலாற்றை திரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது இல்லாமல் இளம் உள்ளங்களுக்கு மதவாத நஞ்சூட்ட முடியாது.

1949 எஸ்.ஏ.டாங்கே, தாதரில் உரையாற்றும் போது, “நமது சிவாஜி, அவர்களது சிவாஜி” என்று குறிப்பிட்டார். சிவாஜி எப்படி ஒரு இந்து மன்னராக கட்டமைக்கப்பட்டார் என்று விளக்கினார்.

சிவாஜி குறித்து பல ஆவணங்கள் உள்ளன. அவர் ஒரு பார்ப்பனரோ ஷத்திரியரோ இல்லை. அவர் விவசாய, உழைக்கும் சாதியைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் இதை மறைக்கிறது.

அவுரங்கசீபுடனான அவரது போராட்டம் மத அடிப்படையிலானது அல்ல. அது நியாயமான வரிவிதிப்பை குறித்தது. அவர் அவுரங்கசீபுக்கு இசுலாமை போற்றி கடிதங்கள் எழுதியிருக்கிறார். பன்சாரே, டாங்கே போன்றவர்கள் சிவாஜியின் அமைச்சரவை, இராணுவத்தில் முஸ்லீம்கள் இருந்ததை ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.

காந்தி கொலை
“சந்தேகத்திற்கு அப்பால் – காந்தி கொலை பற்றிய பதிவுகள்”

நமது தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் வரலாறு குறித்து மக்கள் மத்தியில் பேசுவதில்லை.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அதை கண்டித்து ஒரு பேரணி நடத்தலாம் என்று கோரிய போது ‘என்ன செய்வது எமது அணிகள் காலையில் பாட்டாளிகளாக இருக்கிறார்கள்; மாலையில் சிவ சேனை தொண்டர்களாக இருக்கிறார்கள்’ என்பதே மகாராஷ்டிராவின் தொழிற்சங்க தலைவர் தத்தா சமந்தின் பதில். தொழிற்சங்கங்கள் பொருளாதாரவாதத்தை மட்டும் பின்பற்றும் போது அரசியல் அரங்கில் பெரும் வெற்றிடம் ஏற்படுகிறது. வரலாற்றை நமது மக்களுக்கு, குழந்தைகளுக்கு புகட்டுவதன் மூலமாக மட்டுமே இந்துத்துவர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியும்.

மதவாத சக்திகள் முதலில் அதிகார அமைப்புகளுக்கு வெளியில் செயல்படுகின்றனர். பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி இப்போது மனித வள அமைச்சகம் செய்வது போல அரசதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தனது 95 ஆண்டு வரலாற்றில் சிசு மந்திர், சரஸ்வதி மந்திர் மூலம் குழந்தைகளுக்கு வரலாற்றைப் பற்றிய அவர்களது கண்ணோட்டத்தையும், எதிர்காலம் பற்றிய அவர்களது திட்டங்களையும் போதித்து வந்தனர்.

இத்தகைய மதவாத, பாசிச மயமாக்கலை எதிர்கொள்வதுதான் இன்றைய சவால்” என்று கூறி தீஸ்தா தனது உரையை நிறைவு செய்தார்.

தீஸ்தாவின் உரையை பத்திரிகையாளர் ஞாநி தமிழில் உடனுக்குடன்  மொழிபெயர்த்து வழங்கினார். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டது.

காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் தொடர்பு பற்றி தீஸ்தா எழுதிய “சந்தேகத்திற்கு அப்பால் – காந்தி கொலை பற்றிய பதிவுகள்” (“Beyond Doubt-A Dossier on Gandhi’s Assassination,” by Teesta Setalvad) என்ற நூல் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

செய்தி, கூட்ட புகைப்படங்கள் : வினவு செய்தியாளர்கள்

ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !

19

த்திரப் பிரதேச மாநிலம், ஹாஷிம்புராவில் 1987-ம் ஆண்டு முசுலீம் மக்கள் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 16 பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து சனிக்கிழமை 21-03-2015 அன்று உத்திரவிட்டது. உத்திரப்பிரதேச மாநில ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீஸ் கயவாளிகள்தான் மேற்கண்ட படுகொலையைச் செய்த குற்றவாளிகள்.

மீரட் கலவரம்
1987 மீரட் கலவரத்தின் போது உத்தர பிரதேச சிறப்பு ஆயுதப் படையினர். (படம் : நன்றி frontline)

இந்த படுகொலை வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

இந்தியாவின் படுகொலைகளில் முக்கியமான ஒன்றான ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர்.

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். கால்வாயில் வீசிச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பிணங்கள் மிதந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குற்றம் எப்படி நடந்தது, யார் யாரை கொன்றார்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் இருந்தும் மனு தர்மம் வழுவாத நாட்டில் இந்து மதவெறிப் படுகொலையாளர்களை அதிலும் அவர்கள் போலீசு எனும் போது கைது செய்வது குறிப்பாக தண்டிப்பது சாத்தியமா என்ன?

இக்கொலையினைச் செய்த உ.பி மாநில ஆயுதப்படை பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களையும், பொதுவில் மனித உரிமையை நசுக்குவதற்கும் புகழ் பெற்றது. இவர்கள் செய்த குற்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பா.ஜ.க ஆட்சியில் அமராத காலத்திலேயே வட இந்தியா இப்படித்தான் இந்துமதவெறியின் செல்வாக்கில் இருந்தது. போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாகியே இருந்தது.

ஹாஷிம்புரா படுகொலைகள்
படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் கண்டறியப்பட்ட கால்வாய். (படம் : நன்றி frontline)

13 வருடங்களுக்குப் பிறகு 2000-ம் ஆண்டு மே மாதத்தில்தான் குற்றவாளிகளில் 16 பேர் சரணடைந்து சில நாட்களில் பிணையில் வெளிவந்தனர். இதற்கு முன்பே மூன்று போலிசார் இயற்கையாக மரணமடைந்து விட்டனர். காசியாபாத்தில் நடைபெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் 2002-ம் ஆண்டு, தில்லி விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்து மதவெறிக்கு ஒத்தூதுவதில் காசியபாத்திலிருந்து தில்லி மட்டும் வேறுபடுமா என்ன?

படுகொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007, மே, 24-ம் தேதி கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினர் லக்னோ சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 615 மனுக்களை தாக்கல் செய்து காவல் துறை அதிகாரியிடம் வழக்கு குறித்த நிலையைக் கேட்டனர். அப்போதுதான் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் பணியில் இருப்பதும், அவர்களது பணிக்கால இரகசிய அறிக்கையில் இக்கொலை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.

இக்குற்றவாளிகளால் சுடப்பட்டு காயமடைந்து பிழைத்துக் கொண்ட ஐந்து பேர் வழக்கின் நேரடி சாட்சிகளாக 2007-ல் சேர்க்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. வட இந்தியாவில் இந்து முசுலீம் கலவரம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்தான். அதில் இந்துக்கள் சிறு எண்ணிக்கையிலும், முசுலீம்கள் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்படுவதும் உண்மை என்றாலும் அரசு, இராணுவம் என்று வரும் தாக்குதலில் முசுலீம்கள் மட்டும்தான் கொல்லப்படுவார்கள். அந்த வகையில் இது ‘இந்து நாடாகவே’ இருக்கிறது.

விபூதி நாராயணராய்
“உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்” – காவல்துறை அதிகாரி விபூதி நாராயணராய்

பிளாட்டூன் கமாண்டர் சுரீந்தர் பால் தலைமையில் ஆயுதப்படை போலிசார் ஹாஷிம்புரா சென்று மக்களை சுற்றி வளைத்து அதில் வயதானவர்கள், குழந்தைகளை விலக்கி 65 பேர்களை மட்டும் லாரியில் அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளிகளும், நெசவாளர்களும் ஆவர். முராத் நகரின் கங்கை கால்வாயில் அவர்களை நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக தலையில் சுட்டு தண்ணீரில் தள்ளி ரசிப்பதற்கு ஒரு பெரிய இந்து ஞான மரபின் பயிற்சி வேண்டும். அப்படி சுடும் போது சாலையில் பிற வண்டிகள் வந்த நிலையில் போலீசுக் குற்றவாளிகள் அப்படியே மிச்சம் இருந்தவர்களுடன் லாரியில் ஓடி விட்டனர். இப்படித்தான் ஐந்து பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் முராத் நகர் காவல் நிலையியத்தில் புகார் பதிவு செய்தார்.

பிறகு லாரியில் இருக்கும் மக்களை ஹிண்டான் ஆற்று கால்வாய் அருகே சுட்டுக் கொன்று வீசினர். அதிலும் இருவர் சுடப்பட்டு உயிர் பிழைத்து அருகாமை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதே உ. பி மாநிலத்தின் அருகாமை பீகாரில் உள்ள பாகல்பூரில்தான் போலீசு கயவாளிகள் 1980-ம் ஆண்டில் 31 விசாரணை கைதிகளின் கண்ணில் ஆசிட் ஊற்றி பார்வையை பறித்தனர். அந்த வகையில் இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை விஞ்சுகிறார்கள்.

ஹஷிம்புரா படுகொலை குறித்து பி.யூ.சி.எல் அமைப்பு 87-ம் ஆண்டிலேயே ஒரு குழு அமைத்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இந்தியாவின் உண்மை முகத்தை அறிய வரும்புவோர் அதைப் படித்து பாருங்கள். 19 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் அரசின் அனைத்து உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்று பி.யு.சி.எல் மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டது.

படுகொலை நடந்த காலத்தில் அங்கே பணிபுரிந்த காவல் துறை அதிகாரி விபூதி நாராயண் ராய், இதை உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்று குறிப்பிடுகிறார். காசியாபாத்திலிருந்து தில்லிக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் உத்திர பிரதேச அரசு எந்த ஆர்வத்தையும் இவ்வழக்கில் காட்டவில்லை என்று 2005-ல் வெளிவந்த ஃபிரண்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது.

ஹாஷிம்புரா கொலைகள்
கொல்லப்பட்டவர்களின் படங்களுடன் நீதிக்குக் காத்திருக்கும் உறவினர்கள். (படம் : நன்றி thehindu.com)

இப்படி இருக்கும் போது குற்றம் நடந்து 27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வரும்போதே அது எப்படி இருக்கும்? தற்போது தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பின் படி, குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம். குற்றவாளிகள் சரியாக அடையாளம் காட்டப்படவில்லையாம். ஆக சந்தேகத்தில் பலனை அளித்து கொலையாளிகளை அவர் விடுதலை செய்து விட்டாராம்.

மனுவின் நீதியை மரபாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பினை கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஹஷிம்புராவின் முசுலீம் மக்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்? இனி இந்தியாவில் மதச்சிறுபான்மை மக்கள் வாழ முடியுமா, இங்கே அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்விகள் நிச்சயம் எழுந்திருக்கும்.

“இந்தப் படுகொலை நடக்கும் போது பிறந்தவன் நான். தீர்ப்பைக் கேட்டதும்தான் புரிகிறது, என்னுடைய பக்கத்து வீட்டு மாமா போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்படவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று. இதுதான் அரசியல் சாசனம் நமக்கு அளித்திருக்கும் நீதி உத்திரவாதமா?” என்கிறார் இருபதுகளின் முடிவில் இருக்கும் மெகர்பான் எனும் இளைஞர்.

இனப்படுகொலையாளி மோடி
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.

ஒரு இந்தி நாளிதழை வைத்திருக்கும் அப்துல் ஹபீஸ், ஐம்பது வயதுகளின் இறுதியில் இருப்பவர், “இங்கே முசுலீம்களுக்கு எந்த எதிர்காலமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுக்கு இங்கே நீதி இல்லை. 28 வருடங்களுக்கு பிறகு எனக்கு புரிந்தது இதுதான்” என்று கூறுகிறார். அவருடைய உறவினர் ஜமில் அகமது, படுகொலை நடந்த நாளில் போலிசால் அடித்துக் கொல்லப்பட்டார்.

“இப்போது எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? நாங்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தோமென்றும், அதிலும் கார்வாப்சி செய்து இந்துவாக மாற வேண்டும் என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு எங்களது மக்கள் 42 பேர் கொல்லப்படவில்லை என்று எங்களிடம் கூறுகிறது” என்று பொருமுகிறார் அந்த முதியவர்.

பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இனி சட்டப்படியே ஹாஷிம்புரா படுகொலையில் குற்றவாளிகள் தவறு செய்யவில்லை என்று இந்துமதவெறியர்களும், அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். ஏற்கனவே மும்பை படுகொலையில் சிவசேனாவும் தாக்கரேக்களும் குற்றம் சாட்டப்படாமேலேயே விலக்களிக்கப்பட்டனர். மோடியும் அவரது கேடிகளும் கூட அவ்வாறு காப்பாற்றப்பட்டனர். தற்போது ஹாஷிம்புராவின் போலிசுக் குற்றவாளிகள்.

இதுதான் நிலைமை என்றால் ஹாஷிம்புராவில் உறவினர்களை பறிகொடுத்த முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்று என்ன செய்வான்? அவனுக்கென்று இங்கே நீதி இல்லை, அரசு இல்லை, ஆதரிப்போர் யாருமில்லை எனும் போது அவன் குண்டை எடுக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

இந்தியா இனி இப்படியே இருக்காது என்பதற்கு ஹாஷிம்புரா ஒரு வலுவான அறிகுறி. இல்லை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.

இது தொடர்பான செய்திகள்

மருத்துவத் துறையைச் சீரழிக்கும் தனியார் மய வைரஸ் !

2

தனியார் மயம், கார்ப்பரேட் மயம் மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!

க்களுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு அரசுத் துறையும் இன்று மீளமுடியாத மாபெரும் வீழ்ச்சியிலும், சீரழிவிலும் சிக்கிக் கிடப்பதோடு, அவை மக்களுக்கு எதிரானவையாக மாறி நிற்கின்றன. இந்த இழிநிலைக்கு மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல.

ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் இன்று மருத்துவக் கட்டணம், மருந்து விலை என்ற போர்வையில் மக்களைக் கொள்ளையடிக்கும் அட்டைப் பூச்சிகளாக மாறி நிற்பதைப் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாகச் சொன்னால், இதய இரத்தநாள அடைப்பைச் சரி செய்யும் அறுவை சிகிச்சையில் மட்டும் வருடத்திற்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய மக்களிடமிருந்து மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் கூட்டணி கொள்ளையடித்து வரும் புள்ளிவிவரமொன்றை வெளியிட்டிருக்கிறது, இந்து நாளிதழ்.

அரசு மருத்துவமனைகளில்கூட இன்று காப்பீட்டு திட்ட அட்டையோடு உள்ளே செல்லவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளமுடியாது என்றவாறு அரசு மருத்துவமனைகளும் இலாப நோக்கத்தோடு இயங்கத் தொடங்கிவிட்டன. மருத்துவத் துறையின் இந்த வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.

“மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் பணமோ, இதர சலுகைகளோ எனக்கு இரண்டாம்பட்சம்தான் – இவ்வாறான பல மனித அறம், மாண்பு சார்ந்த உறுதிமொழிகளை ஏற்றுக் கையெழுத்திட்ட பின்னரே மருத்துவப் படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் இந்திய மருத்துவக் கழகத்தால் மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம். ஆனால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எத்தனை மருத்துவர்கள் இந்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கிறோம்?” – என மருத்துவத் துறை ஊழல்களை உள்ளிருந்தே அம்பலப்படுத்திய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன் தன்னுடைய “போஸ்ட்மார்ட்டம்” நூலின் முதல் அத்தியாயத்தில் கேள்வி எழுப்பியிருப்பார்.

இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
நாடெங்கிலும் உள்ள அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை மூடப் போவதாக மைய அரசு அறிவித்திருப்பதைக் கண்டித்து சென்னையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இன்றைக்கு மருத்துவர்கள் எந்த அற உணர்வும் இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல், சக மனிதன் என்ற அனுதாபம் இல்லாமல் பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கிற குற்றக் கும்பல்களாக மாறிவிட்டனர். அன்றாடம் செய்தித்தாள்களில் வெளியாகும் கீழ்க்கண்டவாறான செய்திகளே மருத்துவத் துறையின் இந்த வீழ்ச்சியை எடுத்துரைக்கின்றன.

  • நோயாளி இறந்துபோன பிறகும் அதனை உறவினர்களிடமிருந்து மறைத்து பிணத்திற்குச் ‘சிகிச்சை’ செய்து பணம் கறப்பது.
  • விவரமறியாத ஏழை நோயாளிகளிடமிருந்து சிறுநீரகம் மற்றும் பிற உடல் உறுப்புகளைத் திருடிப் பணக்கார நோயாளிகளுக்கு விற்றுக் காசு பார்ப்பது.
  • பிரசவம் ஆகும் நிலையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களை, பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் வெளியே துரத்திவிடுவது.
  • மருத்துவம் பார்க்கவரும் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, வன்புணர்ச்சியில் ஈடுபடுவது. இவற்றை ஆபாச வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு, அப்பெண்களை மிரட்டிப் பணம் பறிப்பது.
  • மருந்து கம்பெனிகளுடன் இரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நோயாளிகளைப் புதிய மருந்துகளைச் சோதனை செய்யும் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்துவது.
  • கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதைச் சட்டவிரோதமாகக் கூறிப் பணம் பெற்றுக்கொள்வதோடு, பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பதற்கு உதவி செய்வது.

10-caption-1இவற்றையெல்லாம் தாண்டி மருத்துவர்களைத் தரகர்களாக மாற்றும் திட்டத்தை அதிகாரபூர்வமாகநடத்திவருகிறது அம்பானியின் மருத்துவமனை. தங்களிடம் வரும் நோயாளிகளை அம்பானி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மருத்துவர்களுக்கு இலட்சங்களில் இலஞ்சம் – 40 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ 1 இலட்சம், 50 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ 1.5 இலட்சம் என்றவாறு – கொடுக்கப்படுகிறது.

கைமாறும் மருத்துவ சேவை

எப்போது நோயாளிகளை தேவையற்ற பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கும் தரகு முறை அறிமுகமானதோ, அப்பொழுதிலிருந்தே அதன் பின்விளைவாக இன்றைய தலைமுறை மருத்துவர்கள் பலருக்கு நோயாளிகளிடம் பேசி, அவர்கள் உடலைப் பரிசோதித்து, நோயைக் கண்டறியும் “கிளினிக்கல் எக்ஸாம்” முறையே பரிச்சயம் இல்லாமல் போவிட்டது. இன்று, மருத்துவரை விடவும் பரிசோதனைக் கருவிகளும், தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்களும் சக்தி படைத்தவை ஆகிவிட்டன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான பிணைப்பு அறுந்துவிடும் நிலையில், பெரும் முதலீடுகளுடன் மருத்துவமனைகளைத் தொடங்குபவர்கள் மருத்துவர்களை வெறும் பரிந்துரையாளர்களாகவும் தரகர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். வியாபாரிகளின் கையை நோக்கி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது.

அழுகி நாறும் மருத்துவக் கல்வி

"போஸ்ட்மார்டம்" என்ற நூலை எழுதிய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன்.
மருத்துவர்கள், தமது தொழில் நெறிகளுக்கு எதிராகப் பணம் பறிக்கும் பேய்களாகவும், தரகர்களாகவும் மாறிவிட்டிருப்பதை அம்பலப்படுத்தி “போஸ்ட்மார்டம்” என்ற நூலை எழுதிய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன்.

மருத்துவக் கல்வியின் தரம் 1990-களில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. பணக்காரக் குடும்பங்களிலிருந்து தகுதியே இல்லாத மருத்துவர்கள் உருவாவதற்கான கச்சிதமான வழிமுறைதான் இத்தனியார்மயம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் இரகசியமாகச் சேகரித்து வெளியிட்ட செய்தியின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், முதுகலைப் படிப்பிற்கான இடங்களின் விலை ரூ.1.5 கோடி முதல் 3 கோடி வரை உள்ளதாகவும் தெரிகிறது. இந்த விற்பனை காரணமாக நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் கருப்புப் பணம் புழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையில் மட்டுமின்றி, படிப்பை முடித்துப் பட்டம் பெறுவது, இந்திய மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு செய்வது என்று ஒவ்வொரு நிலையிலும் இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. ஒரு மாணவருக்குப் பதிலாக வேறொரு மாணவர் தேர்வெழுதுவது, தேர்வுக்கு முன்னரே இரகசியமாக வினாத்தாள்ள் வெளியிடப்படுவது ஆகியவை சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. இப்படி இலஞ்சத்திற்கு மேல் இலஞ்சம் கொடுத்து மருத்துவ பட்டத்தைப் பெறுபவர்கள், நோயாளிகளைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளிடம் பணயம் வைத்து, தாம் விட்ட பணத்தை வசூலிக்கிறார்கள்.

மருத்துவ சேவையின் தரத்தை நிர்ணயிப்பது எது?

இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
கோடி கோடியாய் இலஞ்சம் வாங்கிக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான அனுமதிகளை வாரி வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்

ஒருவர் மருத்துவ படிப்பைப் படிப்பதற்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள புதுப் பணக்காரக் கும்பலோ, அவ்வளவு ஏன், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் முதலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தருவதில்லை, தரப் போவதுமில்லை. நூற்றுக்கு 99.9 சதவீத மருத்துவர்களே கூட உயிரோடு இருக்கும்போதும் சரி, செய்த பிறகும் சரி தமது உடல்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த சம்மதிப்பதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளோடும், தனியார் மருத்துவக் கல்லூரிகளோடும் இணைந்திருக்கும் மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை – எளிய மக்களின் உடல்கள்தான் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் பரிசோதனைக் களமாக இருந்து வருகிறது. இப்படி எளிய மக்களின் உடல்களை அறுத்துப் பார்த்தும், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தியும் மருத்துவம் படித்துவிட்டு வருகிற மருத்துவர்கள், அதன்பின் தங்களின் ‘சேவைகளை’ யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் மருந்து எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள், மாலை நேரத்தில் தனியார் மருத்துவமனையிலோ அல்லது தனது கிளினிக்கிலோ, நோயாளிகளிடம் கருணையும் அன்பும் வழியவழிய பேசுவார். அனைத்துவிதமான பரிசோதனைகளையும் பொறுமையாகச் செய்வார். இவ்வாறு மருத்துவ சேவையின் தரம் நோயாளிகளின் பொருளாதாரத் தரத்தை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.

இலாப நோக்கில் இயங்கும் இந்திய அரசு

விவசாயிகள் விடுதலை முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்
தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

சர்வதேச மருத்துவ இதழான “லான்செட்”, “இந்திய அரசு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் நிதியை மருத்துவம்-பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளில் தொற்று நோய்களால் ஏற்படும் இழப்பு, தாய்-சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை உலகத்தரத்திற்கு ஈடாகக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கிறது. ஆனால், ஆட்சியைப் பிடித்துள்ள மோடி கும்பலோ, பொது சுகாதாரத்திற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட அற்பமான தொகையிலிருந்து மேலும் 6,000 கோடி ரூபாயை வெட்டப் போவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க இதைத் தவிர – அதாவது ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவதைத் தவிர – வேறுவழியில்லை என இரக்கமற்று அறிவித்திருக்கிறது, மோடி அரசு.

  • இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்திற்குள் இறந்துபோகும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு பத்து இலட்சமாக உள்ளது. இந்த இறப்பு விகிதம் மிகவும் வறிய ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகமாகும்.
  • உலகிலுள்ள மொத்த காசநோயாளிகளில் 20 சதம் பேர் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் இருவர் காசநோயால் இறக்கின்றனர்.
  • மாசுபட்ட குடிநீர் மற்றும் காற்றால் ஆண்டுக்கு ஒன்பது இலட்சம் பேர் மரணமடைகின்றனர்.
  • 6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான குழந்தைகளுள் 70 சதம் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 500:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டிய மக்கள்-மருத்துவர் விகிதம், 500:0.3 ஆக உள்ளது. இந்த விகிதமும் 29 சதவீத கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பதில்லை.

10-caption-2இவ்வாறு ஏற்கெனவே அதலபாதளத்தில் உள்ள இந்தியாவின் பொது சுகாதாரத்தின் நிலைமை, பொது சுகாதாரத்திற்கான நிதி வெட்டப்படுவதால் இன்னும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்படுவது உறுதி. பொது சுகாதாரத்துக்கான நிதி வெட்டப்படுவது மருத்துவ சேவை தனியார்மயமாக்கப்படுவதன் ஒரு பகுதிதான். அதன் இன்னொருபுறம் பொது மருத்துவமனைகளே காப்பீடு திட்டங்கள், சேவைக் கட்டணங்கள், கட்டண சிகிச்சை (pay wards) போன்ற வழிமுறைகளின் மூலம் தனியார்மயமாக்கப்படுகின்றன.

நோஞ்சானாக உருக்குலைந்து போன குழந்தை
ஊட்டச்சத்தான உணவின்றி, நோஞ்சானாக உருக்குலைந்து போன குழந்தை

மேலும், மருத்துவ நல ஆராய்ச்சி முதலியவற்றைத் தனியார்மயப்படுத்துவது, மருத்துவம் தொடர்பான அரசின் பொறுப்புகளை அரசு சாரா நிறுவனங்களிடமும், தனியாரிடமும், பொது-தனியார் கூட்டு என்ற முறையில் ஒப்படைப்பது என்றெல்லாம் புதுப்புது வழிகளில் மருத்துவ சேவையில் தனியார்மயம் புகுத்தப்படுகிறது. பிரசவம் மற்றும் குழந்தை நலம், நோய்க் கட்டுப்பாடு செயல்பாடுகள் ஆகியவற்றில் உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த அறக்கட்டளைகள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் முதலான மாநிலங்கள் பெரிய அளவில் இந்தப் பொது-தனியார் ஒத்துழைப்பையே நம்பியுள்ளன.

எளிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மருத்துவத்தைச் சமூகமயப்படுத்துதல் என 1978-ல் வகுக்கப்பட்ட “அல்மா ஆடா” (Alma Ata Declaration) கொள்கைக்குப் பதிலாக, உயர் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவ சேவை என்கிற கருத்தாக்கம் இன்று வலியுறுத்தப்படுகிறது. இதற்கேற்ப, அடிமாட்டு விலைக்கு நகர்ப்புற நிலங்களை வழங்குவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரிசோதனைக் கருவிகளுக்கு வரி விலக்கு அளிப்பது என்றவாறு தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு, இதற்கு ஈடாக அம்மருத்துவமனைகள் குறிப்பிட்ட சதவீத அளவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனையை எந்தவொரு தனியார் மருத்துவமனையும் கடைப்பிடிப்பதில்லை.

(தொடரும்)
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

டயானா – தெரசா : ஏகாதிபத்திய நரகத்தின் இரு தேவதைகள்

37

(1997-ம் ஆண்டு இந்தியாவில் கொல்கத்தாவை மையமாகக் கொண்டு ‘சமூக சேவை’ செய்து கொண்டிருந்த ‘அன்னை’ தெரசாவும், இங்கிலாந்தை மையமாகக் கொண்டு ‘சமூக சேவை’ செய்து கொண்டிருந்த இளவரசி டயானாவும் ஒரு வார கால இடைவெளிக்குள் தனித்தனி சம்பவங்களில் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஏகாதிபத்திய அரசுகளாலும், நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் கட்டியமைக்கப்படும் சமூக சேவை என்ற பிம்பங்கள் குறித்து 1997 அக்டோபர் மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.)

இளவரசி டயானா, 'அன்னை' தெரசா
டயானாவும், டயானாவின் ஆதர்ச கன்னியாஸ்திரீயான ‘அன்னை தெரசாவும் அடுத்தடுத்து மாண்டு போய் விட்டார்கள்

காதிபத்திய உலகின் தொண்டுள்ளம் கொண்ட கனவுக் கன்னியாகக் காட்டப்பட்ட டயானாவும், டயானாவின் ஆதர்ச கன்னியாஸ்திரீயான ‘அன்னை’ தெரசாவும் அடுத்தடுத்து மாண்டு போய் விட்டார்கள். “அவர்கள் நாம் வாழும் காலத்தின் இரு தேவதைகள்” என்று ஏகாதிபத்திய உலகம் அஞ்சலி செலுத்தி அரற்றுகிறது.

டயானா – அரண்மனை ஆடம்பர வாழ்வும் களிவெறியாட்டமும் கொண்டிருந்த இளவரசி. கணவர் வேல்ஸ் இளவரசருடன் ஏற்பட்ட மணமுறிவைத் தொடர்ந்து, பழமைவாத சலிப்பூட்டும் அரண்மனை வாழ்விலிருந்து வெளியே வந்து, ஆடம்பர விளம்பரத்துடன் சமூக நலனில் அக்கறை உள்ளவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார், டயானா.  “எய்ட்ஸ் நோயாளிகள், கண்ணி வெடிகளை அகற்றுதல் முதலானவற்றுக்காக தனது விலை மதிப்பற்ற ஆடைகளை ஏலம் விட்டு நிதி திரட்டினார்; பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்” என்று அவரது சமூகத் தொண்டுகளைப் பட்டியலிட்டு “மக்களின் இதயங்களில் வாழ்ந்த இளவரசி” என்று பத்திரிகை உலகம் பாராட்டுகிறது.

மேட்டுக்குடிப் பெண்களுக்கு ‘சமூக சேவை’ என்பதும் ஒரு பொழுது போக்கு. சினிமா நடிகைகள்கூடச் சேரிகளுக்கும், அனாதை இல்லங்குளுக்கும் சென்று சேவை செய்வதும், நகரங்களில் எக்ஸ்னோரா அமைப்புகளில் தொண்டாற்றுவதுமாக காலம் மாறிவிட்டது. உலக அழகி ஜஸ்வர்யாராய் கண்தானம் பற்றி தொலைக்காட்சி துண்டுப் படத்தில் அறிவுறுத்துவதோடு, தனது கண்களையும் தானமாகத் தருவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதே போலத்தான் டாயானாவும் ‘சமூகத் தொண்டாற்றினார்’. அரச குடும்பத்தைச் சேர்ந்த, அழகும் கவர்ச்சியும் கொண்ட செல்வச் சீமாட்டியான டயானா ‘சமூக சேவை’ செய்ததும் ,அது பிரபலமாகி, அவரது தலைக்குப் பின்னே பத்திரிகைகள் ஒர் ஒளிவட்டத்தை உருவாக்கின.

டயானா
எய்ட்ஸ், கண்ணி வெடிகளுக்கு எதிராக ‘சமூக சேவை’ செய்த டயானா இவற்றுக்குக் காரணமான ஏகாதிபத்தியவாதிகள், யுத்த வெறியர்களை எதிர்க்கவில்லை.

எய்ட்ஸ், கண்ணி வெடிகளுக்கு எதிராக ‘சமூக சேவை’ செய்த அவர், அதற்கென திட்டமோ, அமைப்போ கொண்டிருக்கவில்லை. இவற்றுக்குக் காரணமான ஏகாதிபத்தியவாதிகள், யுத்த வெறியர்களை எதிர்க்கவுமில்லை, இன்னும் சொல்லப் போனால், இத்தகைய ஏகாதிபத்திய கனதனவான்களிடமிருந்துதான் தனது ‘சமூக சேவை’க்கு நன்கொடை திரட்டினார்.

கோடீஸ்வர புதுக்காதலன் டோடியுடன் உல்லாசப் பயணம் சென்று திரும்பும் போது கார் விபத்தில் டயானா பாரீசு நகரில் பலியாகிப் போனார். பத்திரிகை புகைப்படக்காரர்கள் அவரை விடாமல் துரத்தியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அதே கிசுகிசு பத்திரிகைகள்தான் டயானாவின் ஒவ்வொரு அசைவையும் செய்தியாக வெளியிட்டு பரபரப்பூட்டி அவரைப் பிரபலப்படுத்தின. சமூகப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்களின் கீழ்த்தரமான ரசனைக்குத் தீனிபோடும் கிசுகிசு பரபரப்பு செய்திகளை வெளியிட்டு கொழுத்த லாபம் கண்ட இம்மஞ்சள் பத்திரிகைகளை அன்று யாரும் எதிர்க்கவில்லை; இன்றும் இத்தகைய பத்திரிகைகளைத் தடைசெய்யக் கோரவுமில்லை.

***

‘அன்னை’ தெரசா – அல்பேனியாவிலிருந்து சமூக சேவை செய்ய, கத்தோலிக்க திருச்சபையின் கன்னியாஸ்திரீயாக கல்கத்தாவுக்கு வந்தவர். பெரு நோயாளிகள், நிராதரவான முதியோர், அனாதைக் குழந்தைகளுக்காக ஒர் இல்லத்தைத் தொடங்கி நடத்தி, ‘தன்னலமற்ற சமூக சேவைக்காக’ நோபல் பரிசு பெற்றவர். ஏழை நாடுகளின் ஏழைகளுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்ததாகக் கூறும் இம்மூதாட்டி மரணமடைந்ததும், உலக நாடுகள் அவரது தொண்டுள்ளத்துக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகின்றன.

ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகச் செயல்பட்டவர்தான் ‘அன்னை’ தெரசா. ஏழை நாடுகளைச் சூறையாடும் ஏகாதிபத்தியங்களின் குற்றவுணர்வுகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் வடிகால்தான் ’அன்னை’ தெரசா. நிலவுகின்ற சுரண்டல் அமைப்பை பாதுகாப்பதே தெரசாவின் கொள்கை. அதற்கு ஆபத்து ஏற்படும் போது, கடைந்தெடுத்த பாசிச பிற்போக்குவாதிகளையும் ஆதரிக்க தெரசா தயங்கியதில்லை. இந்த உண்மைகளை கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானிய பத்திரிகையாளரான தாரிக் அலியும், “நரகத்தின் தேவதை” என்ற தமது தொலைக்காட்சி குறும்படத்தின் மூலம் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர். பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே இக்குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

ரொனால்ட் ரீகன்
தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவுக்கு அணிவித்தார், அன்றைய அமெரிக்க அதிபரும் போர்வெறியனுமாகிய ரீகன்

உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரியும், கொள்ளையனுமாகிய ஹெய்தி நாட்டின் அதிபர் டுவாலியரிடமிருந்து 1980-ல் தெரசா ஒர் உயரிய விருதைப் பெற்றார். “ஏழை குடிமக்கள் தங்கள் நாட்டு அதிபருடன் சகஜமாகப் பழகுவதை இங்குதான் பார்க்கிறேன்” என்று தெரசா அவனுக்குப் புகழ்மாலை சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே மக்களின் பெரும் போராட்டத்தால் உயிருக்கு அஞ்சி, கொள்ளையடித்த பணத்தோடு பிரான்சில் தஞ்சம் புகுந்தன், ‘அன்னை’ தெரசாவின் நற்சான்றிதழ் பெற்ற இச்சர்வாதிகாரி.

தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவுக்கு அணிவித்தார், அன்றைய அமெரிக்க அதிபரும் போர்வெறியனுமாகிய ரீகன். ரீகன் –புஷ்ஷின் கைகள்தான் மத்திய அமெரிக்காவிலும், ஈராக்கிலும் படுகொலைப் பயங்கரங்களை நடத்தின என்பதை தெரசா அறியாமல் இல்லை. அமெரிக்கக் கூலிப்படைகளின் பயங்கரவாதத் தாக்குதலால் கொலைக்களமாகிக் கிடந்த எல்சால்வடாருக்கு தெரசா சென்றார். குவாதிமாலாவுக்குச் சென்றார். அங்கெல்லாம் அமெரிக்காவின் முயற்சியால் ‘அமைதி’ நிலவுவதாக அறிக்கை விட்டார்.

ஏகாதிபத்தியங்களுக்கும் இராணுவ சர்வாதிகாரிகளுக்கும் மட்டுமல்ல; கத்தோலிக்க தலைமைக் குருபீடமான வாடிகனுக்கும் கூட தெரசா உண்மையான பிரதிநியாகச் செயல்பட்டார். கருத்தடை, கருச்சிதைவு, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கத்தோலிக்க மதபீடம் கொண்டிருந்த பிற்போக்குக் கொள்கைகளையே தெரசா நியாயப்படுத்தினார். வீடற்ற மக்களின் பிரதிநியாக தன்னைக் காட்டிக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து தெரசா அப்பிரச்சினையை விடுத்து, கருச்சிதைவை எதிர்க்கும் மசோதாவுக்கு ஆரதவைத் தேடி அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரிடம் தூது சென்றார். நிகரகுவாவில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி ஆட்சிக்கு எதிராக நின்ற கத்தோலிக்க மதவெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, அந்நாட்டுக்குச் சென்றார் தெரசா. சோவியத் ஒன்றியத்தில் போலி சோசலிசத்தை வீழ்த்தி, திருச்சபைகளை உயிர்ப்பிக்க வாடிகனின் தூதராக அவர் ஆர்மேனியா சென்று வந்தார். அமெரிக்க மக்களின் சேமிப்புப் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாடி, நிதிமோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையிடப்பட்ட கீட்டிங் என்பவனது விமானத்தையே தெரசா தனது வெளிநாட்டுப் பயணங்களில் அதிகம் பயன்படுத்தினார். காரணம், கீட்டிங் ஒரு கத்தோலிக்க மதவெறியன்!

தெரசா இறுதி சடங்குகள்
அரசு மரியாதைகளுடன் இறுதி சடங்குகள்

அதே சமயம், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களைப் பொருத்தவரை அவரது அணுகுமுறை வேறாக இருந்தது. ஈராண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போட்டங்கள் பெருகியபோது, போப்பாண்டவரின் பிரதிநியாக பாதிரியார் லூர்துசாமி, இது பற்றி விவாதிக்க ‘அன்னை’ தெரசாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு உடன்பட்ட தெரசா, பிறகு பின்வாங்கி இப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். தமக்கு ஆதரவாக நிற்பார் என்று தெரசா மீது நம்பிக்கை வைத்திருந்த தலித் கிறித்துவர்கள் இதனால் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தனர். சில தலித்துகள் அவரது ‘கருணை’ இல்லத்திலிருந்து வெளியேறி, தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தெரசாவுக்குக் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு அவர் ஒர் ஐந்து நட்சத்திர மருத்துவமனையை ஏழைகளுக்காக கட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவர் ஒரு போதும் முயற்சித்ததில்லை .’பாவப்பட்ட’ நோயாளிகள் ஆண்டவனுக்குப் பதிலாக விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் காரணம். அதனால்தான், இன்னும் மருந்து கண்டறியப்படாத எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அண்மைக் காலமாக கூடுதலாக அடைக்கலம் அளித்தார்.

கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.
“நரகத்தின் தேவதை” தொலைக்காட்சி குறும்படத்தின் மூலம் தெரசாவை அம்பலப்படுத்திய கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.

“நீங்கள் ஏன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு அடைக்கலம் தருகிறீர்கள்?” என்று இங்கிலாந்து வந்த தெரசாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது. “எயிட்ஸ்-க்கு மருந்தில்லை. இருப்பினும் எயிட்ஸ் நோயாளிகளை எங்களுடன் வைத்துக் கொள்கிறோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைச் செலுத்துகிறோம். அவர்கள் மிக அழகாக மரணமடைவார்கள்” என்று பதிலுரைத்தார் தெரசா .

‘அழகான’ சாவுக்கு அடைக்கலம் தருவதும். நோயாளிகளைப் பரமண்டலத்துக்கு விரைவாக அனுப்பி வைப்பதும்தான் அவரது சமூக சேவையின் நோக்கம் என்பதை இது மெய்ப்பித்துக் காட்டுகிறது. இதை, சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகையான “லான்சர்” அம்பலப்படுத்திக் காட்டியது. கழுவப்படாத ஊசிக்குழல்களும் ஊசிகளும் தெரதாவின் கருணை இல்லத்தில் பயன்படுத்தப் படுவதையும், சுகாதாரமற்ற சூழ்நிலையும், பயிற்சிபெறாத தாதிகளும் உள்ளதை அது விமர்சித்துச் சாடியது. அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆத்ம சரீர சுகம் அளிக்கும் பிரார்த்தனையே மருந்தாக உள்ளதை அது குற்றம் சாட்டியது.

இதையே, தனது வேலையை உதறிவிட்டு தெரசாவிடம் சமூகசேவை செய்த பீட்டர் டெய்லர் என்ற பிரிட்டிஷ் விமானியும் உறுதிப்படுத்துகிறார். பம்பாயிலுள்ள தெரசாவின் “ஆஷாதான்” எனும் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றிய அவர். சிறிது காலத்திலேயே வெறுப்புற்று வெளியேறி, பிரபல பிரிட்டிஷ் நாளேடான “கார்டியன்”ல் இக்கருணை இல்லங்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தித் தொடர் கட்டுரைகளை எழுதினார்.

தெரசா
சேவை செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக்கூடாது; பிராத்தனையே நமது வாழ்க்கைத் தொழில்.

இவ்வில்லங்களில் குழந்தைகள் சரிவர கவனிக்கப்படாத்தையும், குழந்தைகளைத் தாதியர்கள் அடிப்பதையும் வேதனையுடன் குறிப்பிடும் அவர், பிரார்த்தனைக்கான மணி அடித்ததும் அனைவரும் குழந்தைகளை விட்டுவிட்டு ஒடி விடுவதைக் கண்டு வெறுப்படைந்தார். “குழந்தைகளும் நோயாளிகளும் வேதனையால் துடிக்கும் போது, அவர்களைத் தவிக்கவிட்டு பிராத்தனை செய்வதை என்னால் சகிக்க முடியவில்லை. ‘இங்கு, சேவை செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக்கூடாது; பிராத்தனையே நமது வாழ்க்கைத் தொழில்” என்று அன்னை தெரசாவே என்னிடம் கூறியபோது நான் மனமுடைந்து போனேன்” என்கிறார் அவர்.

***

தொழுநோயாளிகளுக்கு கருணையும் உதவியும்; தொழுநோய் பிடித்த சுரண்டல் சமூகத்துக்கும் கருணையும் உதவியும்

சாவு வியாபாரிகளிடமும் சர்வாதிகாரிகளிடமும் நன்கொடை வசூல்; கொள்ளையர்களிடம் வசூலித்த பணத்தில், பறிகொடுத்த மக்களுக்கு பிரார்த்தனை, நல்லொழுக்க போதனை என்று ‘சமூகத் தொண்டாற்றிய’ தெரசாவின் மறுபக்கத்தை வசதியாக மறைத்துவிட்டு, “தொண்டு செய்து பழுத்தபழம்” என்று பத்திரிகைகள் துதிபாடுகின்றன. வறுமை நிறைந்த சமுதாயத்தில் தொண்டு செய்யும் மனமும், பொதுவாழ்வுப் பணியும் தான் மனித வாழ்வின் அடையாளங்கள் என்பதை டயானா, தெரசாவின் மரணங்கள் மெய்ப்பித்துள்ளதாக ஈரவணக்கம் செலுத்துகின்றன.

தெரசா - ஜெயலலிதா
இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது

அடிப்படை மாற்றங்கள் ஏற்படாத ஏழ்மை நிறைந்த இந்திய சமூதாயத்தில் புண்ணுக்குப் புனுகு தடவும் தெரசாக்கள் ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். குமுறிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிரியை இனங் காண்பதற்குள், இவர்கள் வடிகாலாகச் செயல்பட்டு சீற்றத்தைத் தணிக்கிறார்கள். எனவேதான் சுரண்டும் வர்க்கங்களும் அவர்களின் அரசும் இவர்களைப் போற்றி ஆராதிக்கின்றன.

மனித உறவுகளை முதலாளித்துவம் வெறும் பண உறவாக மாற்றிவிட்ட பிறகு. அரசுகள் சமூகப் பொறுப்பற்று, மேலும் மேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போன பிறகு, அன்பு –சகோதரத்துவம் – பாசத்திற்காக சமுதாயம் ஏங்கித் தவிக்கிறது. பற்றுக்கோடாக தெரசாக்களைக் காணும் போது சமுதாயம் தெய்வமாக வழிபடுகிறது. தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ள இயலாத விவசாயிகள் நிறைந்த பின்தங்கிய இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி. ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது.

வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழித்துக் கட்டப்பட்ட சமுதாயத்தில், வறுமைப் புண்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளை ஒழித்துக்கட்டும் ஆரோக்கியமான சமுதாயத்தில் தெரசாக்கள் தேவையில்லாமல் போய்விடுவார்கள். எனவேதான் “ஏழ்மை என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த வரம்; ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டால் எங்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்: என்று தெரசா மரணத்துக்குப் பிறகு, அவரது சமூக சேவை அமைப்புக்குப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா வெளிப்படையாகவே கூறுகிறார்,

நாளும் அவதாரமெடுக்கும் கருணா மூர்த்திகளுக்கு ஏழ்மைதான் மூலதனம். அது ஒழிக்கப்படும்போது இத்தகைய தேவதைகளுக்கு புனுகு தடவும் தெரசாக்களைவிட, புண்ணைத் தோற்றுவிக்கும் கிருமிகளை ஒழித்துக் கட்டும் சமுதாய மருத்துவர்கள் தான் உண்மையான சமூக சேவர்கள் என்பது மெய்யாகும்.

அதனால்தான், அன்று ரஷியாவின் “கருணைமிகு பேரரசரான பீட்டர் சிறுதுளி என்றால், புரட்சியாளர் லெனின் பெரு வெள்ளம்” என்று சக்கரவர்த்தி பீட்டரின் வாழ்க்கையை நாவலாக எழுதிய அலெக்சி டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார்.

புரட்சியாளர் லெனின்
புரட்சியாளர் லெனின் ஒரு பெருவெள்ளம்

இந்தியாவிலும் அத்தகைய புரட்சி வெள்ளம் பெருகும்; அதன் சீற்றத்தில் ‘தேவதைகள்’ அடித்துச் செல்லப்படுவார்கள!

– குமார்

புதிய ஜனநாயகம், அக்டோபர் 1997

மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ?

0

மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ! யாருக்கு கேடுகாலம்!!

“நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்று உடுக்கையடித்தார், மோடி. தனது இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு வளர்ச்சி, முன்னேற்றம் பேசினார். நாட்டு மக்களும் அதை நம்பி பெருவாரியாக வாக்களித்து அவரைப் பிரதமர் ஆக்கினார்கள்.

அதன் பிறகு, “நல்ல காலம் பொறந்து விட்டது, நல்ல காலம் பொறந்து விட்டது” என்ற குரல்கள் தொடங்கி, இப்போது அவை ஓங்கி ஒலிக்கின்றன. வாக்களித்த மக்களிடமிருந்து அல்ல. இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து. “இந்தியாவை இந்து நாடாக மாற்றியே தீருவோம்; இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம்; இராமர் கோவில் கட்டுவோம், கோட்சேவுக்குக் கோவில் கட்டுவோம், சிலை வைப்போம்; கிறித்துவர்களையும் இசுலாமியர்களையும் தாய் மதத்துக்குத் திரும்பச் செய்வோம்; அவர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவோம்; அவர்களின் அடையாளங்களை அழிப்போம்; சமஸ்கிருதத்தைத் திணிப்போம்; இந்துப் பெண்கள் 4 குழந்தைகள், இல்லை, இல்லை 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்; காதலர் தினங்களில் கட்டாயத் தாலி கட்டவைப்போம்…” என்று பெருங்கூச்சல்போட்டு, அவர்களுக்கு நல்ல காலம் பொறந்து விட்டதைக் கொண்டாடுகிறார்கள்.

டி.ஜி. வன்சாரா
குஜராத் போலி என்கவுண்டர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத மிருகம் டி.ஜி. வன்சாரா மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டதும், சிறைச்சாலை முன்பாக தாரை – தப்பட்டை முழங்க சங்க பரிவாரங்கள் அளித்த வரவேற்பு.

இதற்கெல்லாம் மோடி என்ன பதில் சொல்லுகிறார் என்று கேட்டு எதிர்க் கட்சிகள் இறைஞ்சுகின்றன. “இவை கண்டு மோடி மவுனம் காக்கக் கூடாது, இந்துத்துவ வாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், கண்டிக்க வேண்டும்” என்று ஊடகங்கள் கெஞ்சுகின்றன. அதற்கு ஆதரவாக ஒபாமாவை ‘அழைக்கிறார்கள்’. இவற்றுக்கெல்லாம் மவுனசாட்சியாக இருக்கும் மோடி சத்தம் போடாமல் வேறு சில வேலைகளைச் செய்கிறார். ‘நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது’ என்று யாருக்குச் சொன்னார் என்பதைச் செயலில் காட்டுகிறார்.

மாயா கோத்னானி
நரோடா பாட்டியா வழக்கில் 26 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குஜராத்தின் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானி.

2002 கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு இசுலாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட மதவெறிப் படுகொலைகளை நிகழ்த்திய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மோடியின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்நானியைப் பிணையில் விடுதலை செய்துவிட்டார். மோடி – அமித் ஷா கும்பலின் உத்திரவின் பேரில் இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவியையும் மேலும் மூன்று இசுலாமியர்களையும் பிடித்துப் போலி என்கவுண்டர்களை நடத்தியதற்காகவும், சொராபுதீனையும் அவரது மனைவி கவுசர் பீயையும் கொன்று விட்டு அதற்குச் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியையும் போலி என்கவுண்டர் செய்ததற்காகவும் சி.பி.ஐ.யின் விசாரணைக் கைதியாக இருந்த குஜராத் கிரிமினல் போலீசு அதிகாரிகளை விடுதலை செய்து, பதவியமர்த்தியுள்ளது; கூடவே சிலருக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் வழங்கியுள்ளது. இந்தப் போலி என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து வரும் மும்பை சி.பி.ஐ. நீதிமன்றம், மும்பையை விட்டு வெளியே போகக்கூடாது எனத் தடுத்து வைத்திருக்கும் கிரிமினல் போலீசு அதிகாரி ராஜ்குமார் பாண்டியனுக்காக மும்பையிலேயே பதவியொன்றை உருவாக்கியது. இந்த வழக்குகளை விசாரித்து வரும் போலீசு அதிகாரிகளுக்கு மேலான சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இன்னொரு கிரிமினல் போலீசு அதிகாரி பி.பி. பாண்டேவை நியமித்துள்ளது. கிராமப்புற சுகாதார செயல் அதிகாரியாக இன்னொரு கிரிமினல் போலீசு அதிகாரி விபுல் அகர்வாலை நியமித்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

இவர்களில், குஜராத் போலி என்கவுண்டர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட மனித மிருகம் டி.ஜி. வன்சாரா, மோடியின் விசுவாச வேட்டை நாயாக விளங்கியவர். தாரை – தப்பட்டை முழங்க, சங்கப் பரிவாரங்கள் திரண்டு சிறை முன்பு வரவேற்கப்பட்ட டி.ஜி. வன்சாரா பத்திரிக்கையாளரிடம் பெருமைபொங்கக் கூவினார்: “(குஜராத்) என்கவுண்டர் போலீசுக்காரர்களுக்கு நல்ல காலம் மீண்டும் வந்துவிட்டது!” தொடர்ந்து தமது எல்லாக் கிரிமினல் குற்றங்களையும் தேச நலனுக்காகச் செய்தவைகளென நியாயப்படுத்தினார். என்கவுண்டர்கள் எல்லாம் உண்மையானவை, தன் மீதான வழக்குகளும், விசாரணைகளும்தான் போலியானவை; அந்தப் பயங்கரவாதிகளைக் கொல்லாமலிருந்தால் இன்னொரு காஷ்மீர் உருவாகியிருக்கும்” என்று மோடியின் குரலை எதிரொலித்தார்.

கிரிமினல் போலீசு அதிகாரிகள்
பிணையில் விடுவிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டுள்ள குஜராத்தின் கிரிமினல் போலீசு அதிகாரிகளான பி.பி. பாண்டே, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் விபுல் அகர்வால்; மோடி-அமித் ஷா கும்பலின் உத்தரவின் பேரில் குஜராத்தில் பல என்கவுண்டர்களை நடத்திய அரசு பயங்கரவாதிகள்.

ஆனால், இதே வன்சாரா தான் 2013 மார்ச்சில் குஜராத் அரசுக்குப் பதவி விலகல் கடிதம் ஒன்றை எழுதி, அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், “மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கத்தில் போலீசு அமைச்சராக இருந்த அமித் ஷாவின் உத்திரவின் பேரில், அதன் விசுவாச படையினராகத்தான் எல்லா என்கவுண்டர்களையும் செய்தோம். அவரது நிர்வாகக் குளறுபடிகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளையும் குஜராத் அரசாங்கம் காப்பாற்றும் என்று நம்பியிருந்தோம். இப்போதைய போக்கில் சாவின் பிடியில்தான் நாங்கள் தள்ளப்படுவோம். எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நான்கு போலி என்கவுண்டர் கொலைகளும் குஜராத் அரசாங்கத்தின் கொள்கைப்படி மேலிடத்தில் இருந்து நேரடி உத்திரவு, வழிகாட்டுதல், கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டவைதாம். அதனால் காந்தி நகருக்குப் பதிலாக இந்த அரசாங்கம் நவமும்பையில் உள்ள தளோஜா மத்திய சிறையிலோ, அகமதாபாத்திலுள்ள சபர்மதி மத்திய சிறையிலோ இருக்க வேண்டும்” என்று ஆத்திரத்தைக் கொட்டினார்.

இந்திய ‘தேசத்தை’ பாதுகாப்பதற்காக, தான் போராடி வருவதாகவும் அதனால் தனது உயிருக்கு இசுலாமியப் பயங்கரவாதிகளால் ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பதாகவும் தொடர்ந்து நாடகமாடி போலி என்கவுண்டர் செய்வித்த மோடி-அமித் ஷா கும்பல், மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்க எத்தனித்துத் கொண்டிருந்த வேளையில் எட்டாண்டுகளாகச் சிறைப்பட்டிருக்கும் தம்மைக் கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் வெடித்த வன்சாரா வெளிப்படுத்திய உண்மைகள், இவை. இப்போதும் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை.

தீஸ்தா சேதல்வாத்
குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்கைத் தொடர்ந்து நடத்திய ‘குற்றத்துக்காக’ மோடி அரசால் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு கிரிமினல் குற்றவாளியாக்கப்பட்டுள்ள தீஸ்தா சேதல்வாத்

மிகச் சரியாகச் சொல்லுவதானால், இப்போது தனது எதிராளிகளைச் சிறையில் தள்ளி வதைக்க எத்தனிக்கும் அதேவேளையில், மோடி அவரது அரசியல் குற்றக் கூட்டாளிகளின் உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்களில் சிக்கிக் கொண்டுள்ளார். வளர்ச்சி – முன்னேற்றம் என்ற முக்காடு போட்டு இந்துத்துவாவை ஒளித்து வைத்துக்கொண்டு, தனது ஆட்சி அதிகாரத்துக்குப் பாதிப்பு வராமல் காத்துக்கொள்ளும் மோடியின் தந்திரத்துக்கு இடையூறாக, அவர் ஆட்சியைக் கைப்பற்றவும் அதைத் தக்கவைத்துக் கொள்ளவும் முட்டுக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவா கும்பலின் உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில். இசுலாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கும் நாயகனாக மோடியைச் சுற்றி ஒளிவட்டம் போடுவதற்காக போலி என்கவுண்டர்களை அரங்கேற்றிய போலீசு கிரிமினல்கள் அந்த ஊழியத்துக்கான விலையைக் கேட்டு செய்வது, இன்னொரு உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்.

2002 கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து தான் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அமைத்த பார்ப்பன சிறப்பு விசாரணைக் குழுவைச் சரிகட்டி மோடி தப்பித்துக் கொண்டார். ஆனால், மேற்கண்ட உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்களுக்குப் பணிந்து மோடி-அமித் ஷா கும்பல் செய்யும் ஏற்பாடாகத்தான் இந்த ‘நல்லகாலம் பிறந்துள்ளது’.

குஜராத்தில் போலி என்கவுண்டர்களைத் திட்டமிட்டு நிகழ்த்திய கிரிமினல் பயங்கரவாதப் போலீசு – இந்துத்துவா பாசிசக் கூட்டுக் கொலைகாரர்களுக்குத்தான் நல்லகாலம் பிறந்து விட்டது. அதனால்தான் மோடி – அமித் ஷா குற்றக்கும்பல் ஆட்சிக்கு வந்ததும் எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஒவ்வொருவராக வெளிவருவதும் சலுகைகளோடு அதிகாரத்தில் அமர்த்தப்படுவதும் அரங்கேறுகிறது. 2002 குஜராத் படுகொலைகளை நிகழ்த்திய அந்த கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு மிகச்சிறிய அளவுக்குக்கூட எதிர்ப்புக் காட்டி அம்பலப்படுத்தும் நேர்மையான சில போலீசு அதிகாரிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கெட்ட காலம் தொடங்கிவிட்டது.

"கிரீன் பீஸ்" நிறுவனத்தின் பிரச்சாரகர் பிரியா பிள்ளை.
ம.பி.யில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கார்ப்பரேன் மின் நிறுவனங்களை எதிர்த்த ‘குற்றத்துக்காக’, மோடி அரசால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள “கிரீன் பீஸ்” நிறுவனத்தின் பிரச்சாரகர் பிரியா பிள்ளை.

மோடி – அமித் ஷா கும்பல் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே சிறீகுமார், ராகுல் சர்மா, சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தியும், பொய் வழக்குகள் போட்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் அப்பாவி இசுலாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இசான் ஜாஃப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திய வழக்கை விடாமல் நடத்தியவர், அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் பொறுப்பாளரான தீஸ்தா செதல்வாட். அவரும் அவரது கணவர் ஜாவத் ஆனந்தும் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதாகக் கூறி நன்கொடை வசூலித்து, கையாடல் செய்துவிட்டதாக பொய்வழக்குப் போட்டுள்ளது, மோடி- அமித் ஷா கும்பல். அதைக் கிரிமினல் குற்றச்சாட்டாக்கி அவ்விருவரையும் கைது செய்து சிறையிலடைக்கவும் எத்தனிக்கிறது.
முந்தைய காங்கிரசு ஆட்சியில் சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் 155 தொழிற்சாலைத் திட்டங்களுக்கு மோடி- அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததும் அவசர அவசரமாக அனுமதி வழங்கியது. அத்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டிவந்த “கிரீன் பீஸ்” என்ற சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொண்டு நிறுவனத்தின் மீது அக்கும்பல் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலுள்ள மஹான் நிலக்கரி சுரங்கத்தில் இண்டால்கோ மற்றும், எஸ்ஸார் ஆகிய இரண்டு கார்ப்பரேட் தரகு மின்உற்பத்தி நிறுவனங்கள் பழங்குடி மக்களின் வனவுரிமைகளை மீறி அவர்களை வெளியேற்றுகின்றன. அதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட “கிரீன்பீஸ்” நிறுவனத்தின் மூத்த பிரச்சாரகர் பிரியா பிள்ளையைத் தேடப்படும் நபராக அறிவித்துத் தடுத்துவைத்துள்ளது, மோடி- அமித் ஷா கும்பல்.

இதிலிருந்து தெரிகிறதா அண்டப் புளுகன் மோடி, “நல்ல காலம் பொறக்குது!” என்று சொன்னது, யாருக்கென்று!

-ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

புதிய தலைமுறை மீது தாக்குதல் : சுரணையூட்டும் புரட்சிகர அமைப்புகள் !

11

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிய இந்து மத வெறி பாசிஸ்டுகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்புக்களின் பிரச்சாரம் –ஆர்ப்பாட்டம்!

ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன்
படம் : நன்றி நக்கீரன்

லகப் பெண்கள் நாளையொட்டி, “தாலி பெண்களை பெருமைப்படுத்துகின்றதா ? சிறுமைப்படுத்துகின்றதா?” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விளம்பரப்படுத்தியது. உடனே இந்து’ மனம் புண்பட்டதாகக் கூறி இந்து முன்னணி, பா.ஜ.க கிரிமினல்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினர்.

இந்தக் கட்டம் வரை, “தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பச்சமுத்து உடையாரும் பா.ஜ.க.வும் ஒரே மொள்ளமாறி கூட்டணியில் தானே உள்ளனர். இந்தக் கட்டத்துக்கு மேல் இப்பிரச்சினை போகுமா” என்று பலர் யோசித்துக் கொண்டு இருந்தனர்; புதியதலைமுறை அலுவலகத்துக்கு பெயருக்கு என்று போலீசு பாதுகாப்பு போடப்பட்டது; இந்து முன்னணி, பா.ஜ.க ரவுடிகளைப் பொறுத்த வரை ‘நண்பனாவது வெங்காயமாவது’, மாற்றுக்கருத்து என்று வந்தால் காந்திக்கே கல்லறை கட்டிய பரம்பரை அல்லவா? சும்மா இருப்பார்களா? கலியுகத்தில் கல்கி பகவானாக கிளம்பினார்கள்.

இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்து கொண்டு இருந்த புதிய தலைமுறை செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் தாக்கி கேமராக்களை உடைத்தனர்.

மத்தியில் இருப்பது மோடியின் ஆட்சி, மாநிலத்தில் இருப்பது மாமியின் ஆட்சி, டோட்டல் எல்லாம் இந்துத்துவாவின் கண்ட்ரோல்.

ஜெயம் பாண்டியன்.
“நான்தான் குண்டு வீசினேன்” – இந்துத்துவ பயங்கரவாதி ஜெயம் பாண்டியன்.

இந்நிலையில், மாற்றுக்கருத்து என்றாலே மர்டர் செய்யும் வானரங்கள் அடுத்தபடிக்கு சென்றன. தாலி பற்றிய நிகழ்ச்சியை பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் ஊடகவியலாளரை அந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் வாசலிலேயே அடித்து துவைத்தனர்.

சாலையில் வருவோரையெல்லாம் தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போலீசு, இரவு வேலை முடித்து தாமதமாக வீடு திரும்பும் தொழிலாளர்களை பொய் வழக்கில் கைது செய்யும் போலீசு, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்குவது முதல் கல்லூரிக்குள் சென்று விடுவதுவரை, அவர்களை திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் ‘எவ்வித வன்முறையும் நடக்கக்கூடாது’ என்று கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசு என்ன செய்து கொண்டு இருந்தது?

அத்தொலைக்காட்சிக்கு பாதுகாப்பாக அலுவலகத்தின் வாசலில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது; ஊடகவியலாளர்களை தாக்கிய பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பாதுகாப்பாக உடன் இருந்தது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை இந்து மத வெறியர்கள் கொன்று குவித்த போது என்ன போலீசு செய்ததோ, அதையே இங்கேயும் செய்தது.

இந்துத்துவ பயங்கரவாதிகள்
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தில் குண்டு வீசிய இந்துத்துவ பயங்கரவாதிகள். (படம் : நன்றி தினமணி)

அடுத்த சில நாட்கள் கழித்து டிபன் பாக்ஸில் குண்டு வந்து விழுந்தது புதிய தலைமுறை அலுவலகத்துக்குள். காலை குண்டு வீசுகிறார்கள். மதியம், “நான் தான் குண்டு வீசினேன்” என்று இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பின் தலைவன் ஜெயம் பாண்டியன் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைகின்றான். அங்கேயே திமிராக “இப்போ போட்டது பட்டாசுதான், அடுத்தமுறை வெடிகுண்டே போடுவேன்” பேட்டி கொடுக்கின்றான்.

தமது தொழிலுக்கு அவமானம், கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவேன் என்று உதார் கூட விடவில்லை பச்சமுத்து. தமது ஊழியர்களை தாக்கியவர்கள் பற்றி வாயே திறக்காமல் இருந்தார்.

பார்ப்பன கொடுங்கோன்மைக்கு எதிராக சித்தர்கள் வாழ்ந்த மண்ணில், பார்ப்பனியத்தை வேரறுக்கக் கற்றுத் தந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில் இந்த பார்ப்பன இந்துமதவெறி நச்சுப்பாம்புகளை அனுமதிக்க முடியுமா? இந்து மதவெறி சக்திகளை வீதியில் ஓட விட்டு அடிக்க வேண்டாமா?

ஊடகவியலாளர்கள்
ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக பரபரப்பாக செய்தி கொண்டு வா என்று ஊடகவியலாளர்களின் உழைப்பை சுரண்டும் ஊடக முதலாளிகள் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. (படம் : நன்றி தி இந்து)

“பெரியாரின் வாரிசுகள் நாங்கள்”, “அம்பேத்கரின் வாரிசுகள் நாங்கள்” என்று வாய் கிழிய பேசும் யாரும் களத்திற்கு வரவில்லை. பதவி சுகத்துக்காக இந்த பார்ப்பனக் கூட்டத்தை தமிழகத்தில் நுழையவிட்ட கட்சிகள் எல்லாம் வெட்கமே இல்லாமல் அறிக்கைக்கு மேல் எதையும் விடவில்லை.

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை ஒரு பிரச்சினையாகக் கூட மற்றப் பத்திரிக்கைகள் / ஊடகங்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

தங்களின் ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரபப்பாக செய்தி கொண்டு வா என்று அவர்களின் உழைப்பை சுரண்டும் ஊடக முதலாளிகள், இப்போது தங்கள் மூலதனத்தை காக்க வேண்டும் என்பதில் எப்போதும் போல அமைதியாக இருந்தார்கள்.

ஊடகத்துறை ஊழியர்கள் தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் உயிரையும் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு சங்கமாக அணிதிரள வேண்டும்” என்பதை வலியுறுத்தி சென்னை முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர்களுக்கு எப்போதும் போலீசு பாதுகாப்பு தரமுடியாது. உழைக்கும் மக்களே அவர்களை காப்பவர்கள். எனவே உழைக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள், பேருந்துகள், ரயில்கள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்று இந்த பார்ப்பன இந்து மத வெறி நச்சுப் பாம்புகளை அடித்து விரட்ட வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினோம். அனைத்து ஊடக நிறுவனங்களிலும் பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

புதிய தலைமுறை தொலைக்காட்சி வாசலில் நின்று பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த போது, பிரசுரங்களை வாங்கிய ஊழியர்கள் படித்து விட்டு அலுவலத்திற்குள்ளும் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்திலேயே “இங்கே கொடுக்காதீர்கள், அங்கே போங்கள்” என்று செக்யூரிட்டிகள் சொல்ல ஆரம்பித்தனர்.

“என்ன பிரச்சினைன்னு தெரியாம அங்க போ, இங்க போன்னு ஏன் சொல்லறீங்க ” என்றோம்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, மேல இருந்து ஆர்டர் வருது, ப்ளீஸ் இங்க நிக்காதீங்க” என்றார்கள்.

அதற்குள் பிரசுரங்களை கொடுத்து முடித்திருந்தோம். கிளம்பும் போது போலீசு வந்தது.

“ஏப்பா, இங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் பிரச்சினையாச்சு, நீங்க ஏன் பிரச்சினை பண்ணறீங்க” என்றார் ஒரு எஸ்.ஐ.

“நாங்க எங்க சார் பிரச்சினை செய்யறோம்? அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் செய்யறோம் , நோட்டீசு கொடுக்குறோம். அன்னைக்கு போலீசு பாதுகாப்போட வந்து இந்து முன்னணி காரனுங்க அடிச்சுட்டுப் போறான், பாவம் உங்களால என்ன செய்ய முடிஞ்சது?”

“தம்பி , நான் தான் அன்னைக்கு அடிச்ச 6 பேரையும் அரெஸ்ட் செய்தேன். கமிஷ்னர்கிட்ட ரிவார்ட் வாங்குனேன். அந்த ஜெயம் பாண்டியன் மேல ஏற்கனவே ரெண்டு கேசு இருக்கு, அதுல ஒண்ணு கொலை முயற்சி வழக்கு. அந்த ஜெயம் பாண்டியன் ரெண்டு வால்வோ பஸ் வச்சிருக்கான், ரெண்டு பொண்டாட்டி. ஒன்னு கோயம்புத்துர்ல இருக்கு. இன்னொன்னு அய்யங்காரு, புருசன் செத்துட்டான், ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டான், பப்ளிசிட்டிக்காக பண்ணி மாட்டிகிட்டான்”

“சார், ரெண்டாவது சம்சாரத்துக்கு தாலி கட்டிட்டானா ?”

“அதெல்லாம் தாலி கட்டிட்டான். எனக்கு எல்லாமே தெரியும்” என்றார் இன்னொரு போலீசு.

கிரிமினலைப் பற்றி போலீசுக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தப் பிரச்சார இயக்கத்தின் இறுதியாக 19-03.2015 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாலையின் புறங்களில் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, 11 மணிக்கு முழக்கங்கள் முழங்கப்பட்டன.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாதென்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஊழியர்கள் மீது பார்ப்பன பயங்கரவாதிகள் குண்டு வீசி கொலை வெறியாட்டம் ! – கண்டன ஆர்ப்பாட்டம்

தாலிபற்றிய நிகழ்ச்சியை
ஒளிபரப்பக்கூடாதென்று
புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
ஊழியர்கள் மீது
இந்து முன்னணி – பிஜேபி
காலிகள் தாக்குதல்
இந்து இளைஞர் சேனா என்ற
பார்ப்பன பயங்கரவாதிகள்
குண்டு வீசி கொலை வெறியாட்டம் !

பார்ப்பன பாசிச அமைப்புகளை துடைத்தெறிவோம்
பார்ப்பன பாசிச அமைப்புக்களை தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம் !

விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !
கருத்து சுதந்திரத்தின் எதிரிகள்
ஜனநாயகத்தின் விரோதிகள்
பாசிச இட்லரின் வாரிசுகளான
இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்
வி.எச்.பி – பிஜேபி
பார்ப்பன பயங்கரவாதக் கூட்டத்தை
தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்போம்!

பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளுக்கு
சவால் விட்டு எழுந்து நிற்கும்
தமிழகத்தின் பகுத்தறிவை
சுயமரியாதை தமிழுணர்வை
ஒழித்துக்கட்ட துடித்து வரும்
பார்ப்பன பாசிச அமைப்புக்களை
தமிழகத்திலிருந்து துடைத்தெறிவோம் !

இது பெரியார் பிறந்த மண்ணடா!
பார்ப்பன எதிர்ப்பு கோட்டையடா!
பார்ப்பன ஜெயா ஆட்சியில்
தமிழகத்தை குஜராத்தாக்கி
கொலைவெறியாட்டம் போட நினைக்கும்
பார்ப்பன மத வெறியர்களை
இந்த சட்டம் போலீசு தண்டிக்காது
இந்த அரசமைப்பு முறைக்குள்
தீர்வு தேட முடியாது

உழைக்கும் மக்களே ! ஜனநாய சக்திகளே !
மாணவர்களே ! தொழிலாளர்களே
ஓரணியில் திரண்டு நிற்போம் !
அதிகாரத்தைக் கையில் எடுப்போம் !
முள்ளை முள்ளால் எடுப்பது போல
பார்ப்பன பாசிஸ்டுகளை
தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டுவோம் !

ஊடகத்துறை ஊழியர்களே
உயிரையும் தன்மானத்தையும்
கருத்துரிமையையும் பாதுகாக்க
புரட்சிகர சங்கமாக அணி திரள வாருங்கள்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற பு.மா.இ.மு.வின் சென்னை மாநகர இணைச் செயலர் தோழர் மருது “புதிய தலைமுறையின் மீதான தாக்குதல் கருத்துரிமையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகள் ஜனநாயகத்திற்கே விரோதமானவர்கள்அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறினார்.

கண்டன உரையாற்றிய ம.க.இ.கவின் மாநிலப் பொருளாளர் தோழர். வெங்கடேசன், “புதிய தலைமுறையின் மீது தாக்குதல் நடத்திய ஜெயம் பாண்டியன் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளின் நுனி தான், அவர்களின் அடியோ பரவிக்கிடக்கின்றது. இன்று மோடியின் ஆட்சியில் தமிழகத்தையும் குஜராத்தாக்க முயன்று வருகின்றார்கள்.

இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் தடை செய்யப்பட்டதும் பெருமாள் முருகன் தாக்கப்பட்டதும் புதிய தலைமுறை அலுவலகம் தாக்கப்பட்டதும் ஏதோ தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இந்து மதவெறி சக்திகள் மீண்டும் தலைத்தூக்க எத்தனிக்கின்றன. அவற்றை ஒழிக்காமல் தீர்வு இல்லை” என்பதைப் பதிவு செய்தார்.

அடுத்ததாகப் பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட இணைச் செயலர் தோழர் முகிலன் “இந்த இந்து மதவெறி சக்திகள்தான் தனியார்மயத்திற்காக இந்த நாட்டையே கூறு போடுகின்றன. நாடு முழுவதும் சாதி மதக்கலவரங்களை திட்டமிட்டு ஏற்படுத்தி உழைக்கும் மக்களை கொன்று குவிக்கின்றன. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தான் தங்களின் சுய நலனுக்காக இவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்கள். திராவிடக் கட்சிகளால் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்க முடியாது. யாராலும் வெல்லமுடியாத நபர் என்று சொல்லப்பட்ட ஆரிய இனவெறியன் பாசிச இட்லரை வேரறுத்தது தோழர் ஸ்டாலினின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்படிப்பட்ட புரட்சிகர அமைப்புக்களின் கீழே உழைக்கும் மக்கள் அனைவரும் அணிதிரள்வதன் மூலமாகத்தான் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு சாவு மணி அடிக்கவும் முடியும்.” என்று உரையாற்றினார்.

பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

கடும் வெயிலில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடி தமிழகத்திலிருந்தே துடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதாக இருந்தது.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675

பா.ஜ.க.விற்கு ஆள் பிடிக்கும் கார்ப்பரேட் கல்வி நிறுவனம் !

5

டெல்லியில் உள்ள ரயன் இண்டர்நேஷனல் என்கிற பள்ளி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாரதிய ஜனதா கட்சியில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது பத்து பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கென்று தனி டோல்ஃப்ரீ எண்ணை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த அறிவுறுத்தலை பெற்றோர்களுக்கும் வாட்ஸப் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். நிர்வாகத்தால் பணிக்கப்பட்ட இந்த வேலையை செய்யாத சில ஆசிரியர்களின் சம்பளத்தையும் பிடித்து வைத்திருக்கிறது நிர்வாகம்.

ரயன் இன்டர்நேஷனல் பள்ளி
பா.ஜ.க.-வுக்கு ஆள் பிடிக்கும் ரயன் இன்டர்நேஷனல் பள்ளி

ரயன் இண்டர்நேஷனல் என்கிற இந்த கல்விக்குழுமம் தனது முதல் பள்ளியை 1976-ம் ஆண்டு மும்பையில் துவங்கியது. அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது பெரிய கார்ப்பரேட் கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. மும்பையில் 27 இடங்களிலும் டெல்லியில் 10 இடங்களிலும், மகாராஷ்ட்ராவின் பிற நகரங்களிலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானாவிலும், தென்னிந்தியாவில் பெங்களூர், பாண்டிச்சேரியிலும், வெளிநாடுகளில் ஷார்ஜா, அபுதாபியிலும் இந்த கார்ப்பரேட் கல்வி நிறுவனம் பள்ளிகளை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் அதானி போல இந்த பள்ளியும் தனது தொழில் நிமித்தம் பா.ஜ.க.வோடு நெருங்கி அதன் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த பள்ளி நடத்திய பல நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்ற புகைப்படத்தை பெருமையாக இப்பள்ளி இணையதள முகப்பிலேயே வெளியிட்டிருக்கிறார்கள். ஆக இது ஒரு பா.ஜ.க ஆதரவு பள்ளிக்கூடம் என்பதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை. ஆனால் இப்பள்ளி தன்னை ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்றும் கூறிக்கொள்கிறது. இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவது ஒரு கிறித்தவ குடும்பம்.

பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பவர் அகஸ்டின் பின்டோ, நிர்வாக இயக்குனராக இருப்பவர் அவருடைய மனைவி கிரேஸ் பின்டோ, சி.இ.ஒவாக இருப்பவர் இவர்களுடைய மகன் ரயன் பின்டோ. இதே புதுதில்லியில் கிறித்தவ தேவாலயங்கள் இந்துமதவெறியர்களால் தாக்கப்படும் போது ‘உண்மையான கிறித்தவர்கள்’ இப்படி இந்துமதவெறியர்களை ஆதரிப்பார்களா என்று ஒரு கேள்வி தோன்றுகிறதா?

ரயன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரேஸ் பின்டோ
ரயன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரேஸ் பின்டோ – கார்ப்பரேட்டுகளுக்கு மதத்தை விட பணம்தான் முக்கியம்.

கார்ப்பரேட்டுகளுக்கு மதத்தை விட பணம் தான் முக்கியமானது. மேலும் பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்? இல்லை கிறித்தவ மதத்தை மறைமுகமான அரச மதமாக பாவிக்கின்ற அமெரிக்க அரசு கூட தனது வல்லரசு நலனுக்காக மோடியுடன் கூடிக் குலவுவதில்லையா?

கட்சிக்கு ஆட்களை சேர்த்து விட்டால் பா.ஜ.க அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறலாம், பா.ஜ.க அரசும் சிறுபான்மை நிறுவனத்திற்கு செய்த உதவியை வைத்து விளம்பரம் செய்யலாம் என்று பரஸ்பரம் ஆதாயங்கள் இக்கூட்டணியில் உள்ளன. இதனாலேயே இப்பள்ளி நிர்வாகம் இந்த வேலையை செய்திருக்கிறது.

பொதுவில் ஆளும் வர்க்கமும், அரசும், ஊடகங்களும், அறிவாளிகளும் கல்வியில் அரசியலை கலக்கக்கூடாது, மணவர்கள் சங்கமாக சேரக்கூடாது, போராடக்கூடாது என்கிறார்கள். ஆனால் கல்வி பயில வேண்டிய மாணவர்களை இப்பள்ளி நிர்வாகம் கட்டாயமாக கட்சியில் சேரச்சொல்லி வற்புறுத்திருப்பதை அவர்கள் எதிர்ப்பதில்லை.

ஒரு மாணவனுக்கு சமூக அறிவை ஊட்டுவதற்கு தான் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் அதை எப்போதும் செய்வதில்லை. இவை பள்ளிக்கூடங்களே அல்ல காசுக்கேற்ப கல்வியை விற்கும் கார்ப்பரேட் கம்பெனிகள். ரயன் போன்ற தனியார் பள்ளிகள் அனைத்தும் அவ்வாறு தான் செயல்படுகின்றன. இவர்களுக்கு மாணவர்களின் எதிர்காலத்தை பற்றியோ, அவர்களை எந்த கட்சியில் சேர்த்துவிட்டால் என்ன ஆகும் என்ற கவலையோ இல்லை. ஆளும் கட்சியில் மாணவர்களை சேர்த்துவிட்டால் கம்பெனிக்கு லாபமும், சலுகையும் கிடைக்கும் என்பதால் இதை செய்திருக்கிறார்கள். இதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

அப்படியானால் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசியலும் சங்கமும் தேவை இல்லையா என்றால் தேவை தான். மாணவர்கள் தமது தேவைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க அரசியலும் சங்கமும் தேவை தான். ஆனால் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும், பார்ப்பன பாசிச கட்சியான பா.ஜ.கவும் மாணவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு எதை கற்றுக் கொடுக்கப்போகின்றன. மணவர்களை அவர்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் தனித்தனி குழுக்களாகவும், ரவுடிகளாகவும் தான் ஓட்டுக் கட்சிகள் வளர்த்து விடுகின்றன. பாசிச பா.ஜ.கவோ பிற ஓட்டுக்கட்சிகளை விட ஆபத்தானது, அது மாணவர்களை ரவுடிகளாக மட்டுமின்றி மதவெறி பாசிஸ்டுகளாகவே மாற்றிவிடும்.

இது தொடர்பான செய்தி

 

மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

18

தேசத்துரோகி! இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளை, அவர்களது வாழ்வாதாரமான விளைநிலத்தை, பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் மோடியை வேறெப்படி அழைப்பது?

தேச துரோகி மோடி
விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி, இந்த தேசத்துக்கு இழைக்கப்படும் துரோகமன்றி வேறென்ன?

பனியா, மார்வாரி தரகு முதலாளிகளின் எச்சில் காசில் பதவியைக் கைப்பற்றிய மோடி, மே 26-ம் தேதியன்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன், இந்த நிலப்பறி சட்டத்தை இயற்றுவதற்கான வேலைகளைத்தான் தொடங்கியிருக்கிறார். காங்கிரசு கூட்டணி அரசால் 2013-இல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டத்தை (Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 – LAAR) திருத்துவதற்காக, மாநில வருவாய்த்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ஜூன் 27 அன்றே கூட்டியிருக்கிறது மோடி அரசு. பின்னர் டிசம்பர் 2014 – இல் இதற்கான அவசரச் சட்டம். தற்போது கடும் எதிர்ப்புக்கிடையிலும் அதை நாடாளுமன்றத்தில் நிரந்தர சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது மோடி அரசு. இந்தச் சட்டத்தின் தேவை என்ன?

கிராமப்புறத்திலோ, நகர்ப்புறத்திலோ சிறுதொழில் ஒன்றை நடத்த விரும்பும் தொழில்முனைவர் தனக்குத் தேவையான நிலத்தை தனது சொந்த முயற்சியில்தான் வாங்கிக்கொள்கிறார். விற்க விருப்பமில்லாத ஒரு விவசாயியின் நிலத்தை அவர் கட்டாயப்படுத்தி அபகரித்தால் அது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை. சாலைகள், துறைமுகங்கள், மருத்துவமனைகள் போன்ற சமூகத்தின் பொதுத் தேவைகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும்போது, விற்க விருப்பமில்லாதவராயினும் பொதுநன்மை கருதி விற்க வேண்டியிருக்கிறது. சாலைகள் முதல் பொதுத்துறை ஆலைகள் வரையிலானவற்றுக்கு முன்னர் இப்படித்தான் நிலம் கையகப்படுத்தப்பட்டது – அதுவும் ஒரு காலனிய காலச் சட்டத்தின் கீழ். அச்சட்டப்படி பொதுநலனுக்காக நிலம் இழந்த பலர் இன்னமும் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தமிழகம் - நிலம் கைப்பற்றல்.
சென்னைக்கு அருகில் கும்மிடிபூண்டி வட்டத்தில் அமைந்துள்ள கண்ணன் கோட்டை கிராமத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பயிர்களை அழித்து, நிலங்களை கையகப்படுத்தியது தமிழக அரசு.

ஆனால், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய கடந்த 15, 20 ஆண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே பொதுநலன் என்று சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களை காலனியச் சட்டத்தின் கீழ் பிடுங்கி அவர்களுக்கு வழங்கத்தொடங்கியது அரசு. மத்திய – மாநில அரசுகள் நடத்திய இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக, நாடெங்கும் மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினர். தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறிக்கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொண்ட அம்பானி, அதானி, டாடா போன்ற தரகு முதலாளிகள், அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பதும் வேறு பல முறைகேடுகளும் மறுக்கவியலாதபடி அம்பலமாகின. இதன் விளைவாக வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணி அரசு புதியதொரு சட்டத்தை (LAAR – 2013) இயற்ற வேண்டியிருந்தது.

இச்சட்டத்தின்படி, ஒரு பகுதியில் தனியார் முதலாளிகள் நிலம் வாங்கு வதாக இருந்தால் நில உடைமையாளர்களில் 80% பேர் விற்கத் தயாராக இருக்கவேண்டும். அரசுத்துறை-தனியார்துறை கூட்டுத் திட்டங்களாக இருந்தால் 70% பேரின் சம்மதம் வேண்டும். அப்பகுதி உள்ளூராட்சி மற்றும் கிராமசபையின் ஒப்புதலைப் பெறவேண்டும். கிராமப்புற நிலங்களுக்கு சந்தை விலையைப் போல 4 மடங்கும், நகர்ப்புற நிலங்களுக்குச் சந்தை விலையைப் போல 2 மடங்கும் ஈட்டுத்தொகை தரப்படவேண்டும்.

கோண்டு இன மக்கள்
மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த நகலை எரிக்கும் நியம்கிரி பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள்.

குறிப்பிட்ட பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதனால் அப்பகுதியில், விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்பு (social impact assessment) மதிப்பிடப்பட்டு அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அப்பகுதியில் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும் (environmental impact assessment) என்பதும், விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு எவ்வளவு, அந்த இடத்தில் தொடங்கப்படும் தொழிலால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்பு எவ்வளவு என்பதும் மதிப்பிடப்பட வேண்டும். ஒரு போகத்துக்கு மேல் விளையும் நிலத்தை, (மிகவும் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர) கையகப்படுத்தக் கூடாது. பயன்பாட்டுக்கு 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவில்லையானால், உடைமையாளர் வசமே நிலத்தைத் திருப்பித் தரவேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்.

நெடுஞ்சாலை, ரயில்பாதை, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், அவற்றுக்கு மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் அச்சட்டம் விதிவிலக்களிக்கிறது.

மக்கள் சொத்தை ஆக்கிரமித்துத் தின்றே ருசி கண்டுவிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இச்சட்டப்படி நிலம் வாங்குவது கட்டுப்படியாகவில்லையாம். இச்சட்டத்தின் கீழ் நிலம் வாங்கக்கூடாது என்று கட்டுப்பாடாக இருந்த முதலாளிகள், ‘செயல்படாத’ மன்மோகன்சிங்கை இறக்கி விட்டு, அந்த இடத்தில் ‘செயல்படும்’ ரவுடியை அமர்த்தினார்கள். உடனே செயல்பட்டு விட்டது மோடி அரசு.

தற்போது மோடி கொண்டுவந்திருக்கும் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரசு அரசு அளித்திருந்த விதிவிலக்குகளை “சற்றே” அதிகரிப்பதாக சொல்லிக் கொண்டு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்து, அதன் மூலம் “விதி” என்ற ஒன்றே இல்லாமல் செய்து விட்டது.

ஜந்தர் மந்தர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மோடியின் சட்டப்படி, அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காக நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தாலும், உடைமையாளராகிய விவசாயியின் ஒப்புதலை அரசு கேட்கவே தேவையில்லை. அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பரிசீலிக்கத் தேவையில்லை. 3 போகம் விளையும் நிலமானாலும் அதனைக் கையகப்படுத்துவதற்குத் தடையில்லை. கையகப்படுத்திய நிலத்தை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாவிட்டாலும் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை.

“தனியார்” என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று 2013 சட்டம் வரையறுத்திருந்தது. மோடியின் சட்டப்படி தனியார் என்பது நபராகவோ, தன்னார்வ நிறுவனமாகவோ கூட இருக்கலாம். அது மட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளையும் கூட “பொதுத் தேவை” என்று வரையறுத்து, அவர்களுக்கு விளைநிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்கிறது.

நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்த சட்டத்தை அமலாக்கும் அதிகாரம் பெற்ற மத்திய, மாநில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாத பட்சத்தில் அதை எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது.

– இவைதான் மோடி கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் சரத்துகள். இதனை “சட்டம்” என்ற பெயரால் அழைப்பதே அயோக்கியத்தனமானது. மன்னர்களும் இளவரசர்களும் தம் கண்ணில் படும் அழகிய பெண்களை அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொல்லி, இதற்காகவே நியமித்து வைத்திருக்கும் தனிப்படைக்கு ஆணையிடுவார்களாம். அப்படி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிலத்தைக் கைப்பற்றித் தரும் தனிப்படைதான் மோடி அரசு.

2013 சட்டம் விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக, பல இலட்சம் கோடி முதலீடு தேங்கி நிற்கிறதாம். இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் தொழில்துறை வளர்ந்து கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பு கிடைக்குமாம். இதனை எதிர்ப்பவர்கள் கார்ப்பரேட்டுகள், உள் கட்டுமானம் ஆகிய சொற்களையே கெட்ட வார்த்தைகள் ஆக்குகிறார்கள் என்று சீறுகிறார், அமைச்சர் அருண் ஜெட்லி.

ஜெட்லி கூறுவது கலப்படமற்ற பொய். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நாடெங்கும் ஒதுக்கப்பட்ட பெரும்பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக்கப்பட்டு விட்டன. மும்பை தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் மட்டும் 2.5 இலட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநில அரசிடமும் குவிந்திருக்கும் பல இலட்சம் ஏக்கர் நிலத்தில் தொழில் தொடங்க ஆளில்லை. சி.பொ.ம. என்ற பெயரில் மகாராட்டிராவில் 2006-ஆம் ஆண்டிலேயே 1250 ஹெக்டேரை வளைத்துப் போட்டு, அதில் தொழில் தொடங்காத முகேஷ் அம்பானி, அங்கே மேலும் 35,000 ஹெக்டேர் கேட்கிறார். டில்லி, மும்பை தொழில் தாழ்வாரம் என்ற பெயரில் 10 இலட்சம் ஏக்கர் நிலத்தை வளைப்பதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. நொய்டா பகுதியில் நிலம் கையகப்படுத்தியபோது விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டர் நிலத்துக்குத் தரப்பட்ட விலை ரூ.820. பின்னர் அது கைமாற்றி விற்கப்பட்ட விலையோ ச.மீட்டருக்கு 35,000 ரூபாய். ஆறு வழிச்சாலை, கிராமப்புற வீடுகட்டும் திட்டம், அடிக்கட்டுமானங்களை நிறுவுதல் என்ற பல பெயரில் தரகு முதலாளிகளுக்கு நிலத்தையும் கொடுத்து, தொழில் வாப்பையும் அரசுதான் ஏற்படுத்திக் கொடுக்கிறதேயன்றி, முதலாளிகள் சொந்தமாக எதையும் செய்யவில்லை.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் இச்சட்டத்தை ஆதரித்து வாதாடும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த சேஷாத்திரி சாரி, “மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15% கூட பங்களிக்க முடியாத விவசாயத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்? வறுமையை எப்படி ஒழிக்க முடியும்” என்று பார்ப்பனக் கொழுப்பு வழியப் பேசுகிறார்.

இடுபொருள் விலையை அதிகரித்து, கொள்முதல் விலையைக் குறைத்து, பாசன வசதியை அழித்து எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கி விவசாயியை வறுமையில் தள்ளிவிட்டு, பிறகு அவர்களையே குற்றம் சாட்டுகிறார்கள் இந்தக் கிரிமினல்கள். 50% க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து சோறு போட்டு வரும் விவசாயம் அழிந்தால், இந்த நாடே உணவுப் பாதுகாப்பை இழந்து கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கவேண்டி வரும். விவசாயிகள் நாடோடிகளாக, நகர்ப்புறங்களில் அலைந்து மடிய வேண்டிவரும்.

தனியார்மய-தாராளமயக் கொள்கையின் கீழ் இவர்கள் முன்வைக்கும் வளர்ச்சியென்பது வேலைவாய்ப்பை வழங்காத வளர்ச்சி. அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளின் காலை நக்கும் வளர்ச்சி. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என்பது வேலைவாய்ப்பை பெருக்குவதுமில்லை, வறுமையை ஒழிப்பதுமில்லை. ஆற்றுமணலையும், தாது மணலையும், கிரானைட்டையும் கொள்ளையடித்து விற்பதுகூட மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூட்டத்தான் செய்கிறது. நிலக்கொள்ளையும் அத்தகையதுதான். இங்கிலாந்தில் விபச்சாரம் மற்றும் போதை மருந்து வியாபாரத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரள்வதால், அதையும் மொ.உ.உற்பத்தியில் (0.7 சதவீதம்) சேர்த்துக் கொண்டு விட்டது பிரிட்டிஷ் அரசு. மொ.உ.உற்பத்தியை உயர்த்த மோடி முன்வைக்கும் பாதையும் அத்தகையதுதான்.

நிலப்பறி சட்டத்தின் காரணமாக, டில்லி சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் தோற்றபோதிலும், பிற மாநிலத் தேர்தல்களிலும் மக்களின் இந்தக் கோபம் பிரதிபலிக்கும் என்று தெரிந்திருந்த போதிலும், தனது கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையிலும், அம்பானி, அதானிகளின் ஆசையை நிறைவேற்றித் தருவது எப்படி என்ற கோணத்தில்தான் தனது வியூகங்களை வகுத்து வருகிறது மோடி அரசு.

குஜராத் இனப்படுகொலையின்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோடி வெளிப்படுத்திய வன்மத்தைக் கண்டோம். இந்நாட்டின் விவசாயிகள் மீதும் உழைக்கும் வர்க்கத்தின் மீதும் பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொண்டிருக்கும் துவேசத்தையும் வெறுப்பையும் இச்சட்டத்தில் காண்கிறோம். இது விவசாயிகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் இன அழிப்புக்கு நிகரானதொரு தாக்குதல். விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
_______________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015 தலையங்கம்
_______________________________________

ஐ.டி ஊழியர்களை ஏமாற்றும் அப்ரைசல் மோசடி

0

அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம் !

அன்பார்ந்த ஐ.டி. துறை நண்பர்களே !

டி.சி.எஸ், ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தகுதியில்லாதவர்கள் என்று ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் நாம் இந்த ஆண்டுக்கான அப்ரைசலை எதிர்நோக்கியுள்ளோம்.

“நல்ல ரேட்டிங்கையும், ஊதிய உயர்வையும், பணி உயர்வையும் பெற்று விடலாம்’ என்று நம்மில் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முந்தைய ஆண்டுகளின் அப்ரைசல்கள் நமக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருந்தாலும், இம்முறை நல்ல ரேட்டிங் (பேண்ட்) கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது.

Performance Management: "Jump!"அனைவருக்கும் நல்ல ரேட்டிங் கிடைப்பது சாத்தியமே இல்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் நம் சக பணியாளர்களை முந்திவிட வேண்டுமென நாம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலர் “அப்ரைசல் Bell Curve”-ல் ஏமாற்றப்பட உள்ளோம்.

நம் சம்பள உயர்வை மட்டுமில்லாமல் வேலையையும் பதம் பார்க்கக் காத்திருக்கும் இந்த அப்ரைசல் முறையை முதலில் ஆராய்வோம்.

திறமைகளை வளர்த்துக் கொண்டு கடுமையாக உழைத்தால் அப்ரைசலில் நல்ல ரேட்டிங் கிடைத்துவிடும் என்று ஆரம்பநிலை ஊழியர்களாக இருக்கும் போது நம்பினோம். அது பொய்த்துப் போன போது “அப்ரைசல் சிஸ்டம் சரியானதுதான்; நமக்கு வாய்த்த மேலாளர்தான் சரியில்லை” என்றும், “நேர்மையான மேலாளர் வாய்த்துவிட்டால் நல்ல ரேட்டிங் கிடைத்துவிடும்” என்றும் கருதுகின்றோம்.

இந்த நம்பிக்கை சரியானதா ?

அப்ரைசல் என்பது ‘செல்ப் எவேல்யுவேஷன்’ (Self Evaluation)-ல் துவங்கி ரேட்டிங்கில் முடிவதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரேட்டிங் முடிவு செய்யப்பட்ட பின்னர்தான் அப்ரைசலே துவங்குகிறது. நிறுவனத்தின் இலாப இலக்கை அடைய எத்தனை பேருக்கு என்னென்ன ரேட்டிங் தரப்பட வேண்டும், யார்யாரை வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்பதை நிர்வாகம் முதலிலேயே முடிவு செய்து விடுகிறது. இதை நியாயப்படுத்தி, நம் தலையில் கட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு சடங்குதான் அப்ரைசல்.

assasinationப்ராஜெக்டில் பில்லிங் இல்லாமல் இருந்ததற்கும், ப்ராஜெக்ட் வராமல் பெஞ்சில் இருந்ததற்கும் நாமா காரணம்? ஆயினும், இதையே காரணம் காட்டி ரேட்டிங்கில் கை வைக்கின்றார்களே, இது எவ்வளவு பெரிய மோசடி!

இதேபோல், ரேட்டிங்கை எவ்வாறு பேண்டாக (கிரேடு) மாற்றுகின்றனர் என்பதை எந்த நிறுவனமாவது ஊழியர்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருக்கிறதா? ஏன் அது மூடு மந்திரமாகவே உள்ளது?

அப்ரைசல் இலக்கினைப் பற்றி எழுதப்படும் மேலாளரின் விமர்சனங்களில் பெரும்பான்மையானவை பூடகமானவையே (Generic). அவற்றை அளவிட இயலாது (Not Measurable). உதாரணமாக, “உங்கள் கம்யூனிகேசன் பலவீனமாக உள்ளது” என்று எழுதப்படும் விமர்சனத்தை எந்த அளவுகோலால் அளக்க முடியும்?

உங்கள் ப்ராஜெக்டில் 10 பேர் இருப்பதாகக் கொள்வோம். பத்து பேரும் குறித்த இலக்கினை சம்மாக முடித்திருந்தால் அனைவருக்குமே “ஏ” கிரேடுதானே தரப்பட வேண்டும்? ஆனால் மேலாளர் விரும்பினாலும், அப்ரைசல் முறை இதனை அனுமதிக்கிறதா? இல்லை. “Bell Curve” என்ற பெயரில் சிலரை சிறப்பானவர்கள் என்றும் பலரை சுமார், மோசம் என்று வகைப்படுத்துகிறதே, அது மோசடி இல்லையா?

'I guess our Performance Appraisal system is a little bit 'Old School'.'ஆக, தற்போதைய அப்ரைசல் முறையே அறிவியல்பூர்வமற்றது, மோசடியானது அல்லவா? தொழில்நுட்பப் புலிகளான ஐ.டி. நிறுவனங்கள் அறிவுக்குப் புறம்பான இம்முறையினை ஏன் பின்பற்றுகின்றன?

ஊழியர்களைத் தனித்தனித் தீவுகளாக பிரித்து, அவர்களை அடிமைச் சிந்தனையில் மூழ்கடித்து வைத்திருப்பதுதான் இந்நிறுவனங்களுக்குச் சாதகமானது – அதற்காகத்தான் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். இதனால்தான் நமக்குத் தரப்படும் ரேட்டிங்கைப் பற்றி மற்றவர்களிடம் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கின்றனர்.

ஒவ்வொருவரின் செயல்திறனையும் தனித்தனியாக மதிப்பிடுவதாகச் சொல்லப்படும் இம்முறை,

  • எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் சுயநலமிக்கவர்களாக நம்மை மாற்றி வைத்திருக்கின்றது.
  • “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோட்பாட்டை ஒழித்துவிட்டு “அதீத அடிமைகளுக்கு அதிக சம்பளம்” என்கிற அடிமைத்தனத்தை நம்மிடம் வளர்க்கிறது.
  • 10 முதல் 12 மணிநேரம் வேலை வாங்கப்படுவதை அடிமைத்தனம் என்று உணராத நிலையில் வைத்திருக்கிறது.
  • “நாம்” என்பதை மறக்கச் செய்து “நான்” என்பதை மட்டும் பேசச் செய்கிறது.
  • சங்கமாக நாம் ஒன்றுபடுவதைத் தடுக்கிறது; சட்டப்பூர்வ உரிமைகளைப் பறிக்கின்றது.
  • இறுதியில் நாம் அநியாயமாக வேலைநீக்கம் செய்யப்படும்போது ஆதரவற்ற கையறுநிலையில் நிறுத்திவைக்கிறது.

4-carrot-motivationடி.சி.எஸ், ஐ.பி.எம் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் நமது சக ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டும், ஒன்று சேர்ந்து போராட முடியாமல் நாம் உள்ளதற்குக் காரணம், இந்த பிரித்தாளும் சூழ்ச்சிதான். தன்னை மட்டும் காத்தருளும்படி மேனேஜரை வேண்டிக்கொண்டு நம்மை நாமே மேலும் மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த அடிமைத்தனத்திற்கு இதுவே காரணம்.

நம்மைப் பிரித்து வைத்திருக்கும் இந்நிறுவனங்களோ நாஸ்காம், ஃபிக்கி என்ற சங்கங்களில் ஒன்று சேர்ந்து கொண்டு நமது வேலையுரிமையைப் பிடுங்குகின்றன. நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நாம் சங்கமாகத் திரண்டாக வேண்டும். அதற்கு நம்மைப் பிளவுபடுத்தும் அப்ரைசல் முறையை ஒழிக்கப் போராடுவதே முதல் கடமையாகும்.

அப்ரைசலை ஒழித்துவிடக் கோருவதென்றால் “வேலையே செய்யாமல் ஊதியம் பெறுதல்” என்பதல்ல; “சம வேலைக்கு சம ஊதியம்” என்பதே அதன் பொருள்!

  • ஐ.டி. நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!
  • ஐ.டி. துறை ஊழியர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
  • லே-ஆஃப் எனும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம்!

appraisal-Tamilபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு.

தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

(கார்ட்டூன்கள் – இணையத்திலிருந்து)

WORKERS OF THE WORLD, UNITE!

Scrap performance appraisal !

Dear IT friends,

We would be confronting this year’s appraisal cycle in the backdrop of massive layoffs by IT giants such as TCS and IBM.

DilbertPerformanceReviewAfter slogging day-and-night for one whole year, we expect pay-hike and promotion as righteous rewards for our efforts. Although we have been facing disappointments during the past appraisals, we are ever-more-hopeful of hitting a good rating (band) this time.

It is common knowledge that not everyone can get a good rating. But we keep running to overtake our fellow team-members and end-up in shock when manager bends our lives to fit a pre-determined bell-curve.

In the current scenario, appraisal will not be used merely to determine our salary hike or promotion; it might well be used to decide whether we continue to have a job or not. It is high time that we question this very system of appraisal.

Many of us think that the appraisal system is fair and the problem is only with the manager. We console ourselves by blaming the manager for prejudice and internal office politics. Some attribute reasons such as race, language, religion or caste for rating problems. According to this point of view, if we have a good manager, we are sure to get a good rating!

How rational is this belief ?

We were told that appraisal begins with self-evaluation and ends in rating. But the fact is that our rating is decided much prior to the start of the appraisal cycle. “Who should be given what rating”, “How many people should be sent home” – all these are decided by the management based on the profit target it aims to achieve. Performance review is simply a procedure where boss comes up with a story to justify the pre-decided pay; language and tone of appraisals are adjusted to be consistent with numbers.

dilbert-tranformational-changeWhose fault is it that we are in bench without a project? That we are not billable? Is it not the management’s responsibility to secure projects and get employees assigned? But, they cite these very reasons to give low rating to employees.

No one understands the mystery behind the process of converting a rating to a band. It is a top-secret formula kept confidential within a limited circle. Who knows how to measure a generic remark such as “Your communication is weak”?

Assume that if everyone in a particular team achieves the target by performing equally well, is it possible for all of them to get an “A” band? Even if the manager wishes to do so, will the appraisal system allow it? The answer is “No”. Manager has to make bell-curve and award good rating to one or two and average or bad rating to all others. What a humbug!

appraisalThe appraisal system as a whole is unscientific and farcical! Why do the tech wizards and solution providers to the world are resorting to such an irrational approach?

It is the same age-old ‘divide-and-rule’ technique. They want to keep us divide and promote slave-mentality among us. This explains why they insist that we should not discuss our rating with others.

A system touted as accurate measure of an individual’s performance, renders everyone selfish and self-centred. The principle of awarding equal pay for equal work is mocked at. Instead, you are asked to bend more and more even to get what is due. Many of us do not even realise that working for 10 to 12 hours, without asking for our rightful Over Time pay, is slavery. We forget to think “We”, instead think “I” all the time. This is the perfect recipe for making us give-up our fundamental and legal rights of forming a Union to fight for our rights.

performance_appraisal_cartoon_bigAs a result, we stand divided and meekly submit ourselves to massive lay-offs by TCSes and IBMs of the IT world. They expect us to debase and demean ourselves before the management to save our job.

These very companies, who preach employees against collective action, have formed a number of unions for amongst themselves like NASSCOM, FICCI, ASSOCHAM etc. They use their association to blackmail employees into submission. In order to have dignity at work and to ensure a secured life, the only option left in front of us is to get together as IT employees and form a Union for ourselves.

We must demand abolition of appraisal system which divides us. This demand does not imply “pay without work”, it means “equal pay for equal work”.

Job security and abolition of this unjust appraisal system are two sides of the coin.

  • Let us build unity among employees and face our employers as equals.
  • Let us challenge the corporate terrorism called Layoff.

appraisal-English

New Democratic Labour Front
IT Employees Wing

Telephone : 9003198576
Email : combatlayoff@gmail.com

(Cartoons – from the www)

கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !

2

கருங்காலி சங்கமான TNAA-ஐ ஒழித்துக்கட்டுவோம்! வழக்குரைஞர்களின் ஒற்றுமையை காப்போம்!

அன்பார்ந்த வழக்குரைஞர்களே,

வணக்கம்.

வழக்குரைஞர் பிரபாகரன் துவங்கிய தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு (TNAA) தமிழ்நாடு பார்கவுன்சில் சட்டவிரோதமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இது வழக்குரைஞர்களின் நலன்களை மட்டுமல்ல, சமூகத்தையே கடுமையாக பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான வழக்குரைஞர்கள் கொதித்துப்போய், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இப்படி ஒரு சங்கம் துவங்கியதால் வரும் ஆபத்தான பின்விளைவுகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) தோன்றியதன் பின்னணி

வழக்கறிஞர் போராட்டம்
அப்சல் குரு தூக்குக்கு எதிராக வழக்கறிஞர் போராட்டம் – மதுரையில் (கோப்புப் படம்)

19-ம் நூற்றாண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தின் பொழுது, வெள்ளையர்களாலும், அவர்களின் அடிவருடி மேட்டுக்குடியினராலும் எல்லாத் துறைகளும் நிரம்பி வழிந்த காலம் அது! படிப்பதற்கு உரிமை இல்லாத, தீண்டாமை பற்றியெரிந்த பின்புலத்தில், கல்விகற்று எழுந்த முதல்தலைமுறை வழக்குரைஞர்கள் தங்கள் தொழிற்பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கியது தான் MHAA.

நீதிமன்றம் – வழக்குரைஞர் தொழில் என குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், MHAA சங்கம் 125 ஆண்டுகளாக பல்வேறு சமூக போராட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் துவங்கி, சமீபத்திய ஈழ ஆதரவு போராட்டங்கள் வரை அனைத்தும் இதற்கான வரலாற்று சான்றுகள்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய வழக்குரைஞர் சங்கமாக, ஒற்றுமையோடு இருப்பதும், சமூக அக்கறையோடு செயல்படுவதும் ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எப்பொழுதும் கண்ணை உருத்துகின்றன. இதன் பின்னணியில் தான், TNAAவிற்கு அங்கீகாரம் தந்த பின்னணியை பார்க்கவேண்டும்.

TNAA உருவான பின்னணி

வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க-வின் சாதிவெறி அரசியலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

2004-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன்ரெட்டி தனது ஆண்டைத்தனத்தை காட்டும்விதமாக, “நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கையை நீட்டி பேசக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது” என்பது போன்ற 25 அடிமை விதிகளை பிறப்பித்தார். MHAA-வின் அப்போதைய சங்கத்தலைவராக இருந்த பிரபாகரன் யோக்கியமானவராக இருந்திருந்தால், வழக்குரைஞர்களைத் திரட்டி போராடி இதை முறியடித்திருக்கவேண்டும்.
மாறாக, சுயமரியாதைகொண்ட வழக்குரைஞர்கள் “பொதுக்குழுவை கூட்டுங்கள்” என போராடியபொழுது போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தனது அடியாட்களைக் கொண்டு வன்முறையை ஏவி, வழக்குரைஞர் சமூகத்திற்கு துரோகமிழைத்தார், அவர்.

களத்தில் நின்ற வழக்குரைஞர்கள் திருப்பி அடித்ததில், பிரபாகரனும், அவரது அடியாட்களும் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என தலைதெறிக்க ஓடினார்கள். தற்காலிக தலைமையை தேர்ந்தெடுத்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் பெற்றார்கள், வழக்குரைஞர்கள். அன்றிலிருந்து பிரபாகரன் சங்கத்தலைவராக இருந்தாலும் பயத்தில் MHAA அலுவலகம் பக்கம் வருவதேயில்லை. அருகில் உள்ள மரத்தடியில்தான் தனக்கு விசுவாசமான ஆட்களைக் கொண்டு தொடர்ந்து கூட்டம் நடத்தியதால், ”மரத்தடி பிராபகரன்” என்று அழைக்கப்பட்டார்.

சென்னை - காவல்துறை, வழக்குரைஞர்கள்
2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்த சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தியது குறித்து வினவில் வெளியான படம்.

நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு விசுவாசமாக செயல்பட்டதற்கு கைமாறாக பல பெரிய வழக்குகளில் வழக்குரைஞர் ஆணையராக (Advocate Commissioner) நியமிக்கப்பட்டு, நேரடியாகவும், செட்டிங் செய்து மறைமுகமாகவும் நிறைய கல்லா கட்டினார். இதற்கு பிறகு வழக்குரைஞர்களால் ’எட்டப்பன்’ என ‘அன்போடு’ அழைக்கப்பட்டார்.

2007 வரை MHAA – சங்கத் தேர்தலில் நின்று தொடர்ந்து தோல்வியுற்ற பிரபாகரன், இனி ஜெயிக்கமுடியாது என உணர்ந்து, 2008-ல் TNAA என்ற சங்கத்தை தனியாக உருவாக்கினார்.
சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல பிராபாகரன்!

நீதிமன்ற நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு சங்க பிரதிநிதிகளை அழைப்பது போல, தனது சங்கத்தையும் அழைக்கவேண்டும் என பிரபாகரன் கோரியதை 29-04-2009 அன்று அனைத்து நீதிபதிகளின் முழுஅமர்வு நிராகரித்தது. இதற்கு பிறகு தான், TNAA-விற்கு 2715 சதுர அடியிலான தனிக்கட்டிடத்தை மூன்று நீதிபதி கொண்ட குழு இரகசியமாக ஒதுக்கியது.

உயர்நீதி மன்றம்
காவல்துறையிடம் அடிவாங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிபதிகளைப் பற்றி வினவில் வெளியான கேலிச்சித்திரம்

தமிழ்நாடு பார்கவுன்சில் அனுமதி பெற்றுவிடவேண்டும் என்ற முயற்சியில், பார்கவுன்சில் உறுப்பினர்களில் 25 பேரில் 23 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள். (21-10-2010)

இதற்கு இடைப்பட்ட காலத்தில், பிரபாகரன் பார்கவுன்சில் தேர்தலில் வழக்கமான சித்து விளையாட்டுகளினால் ஜெயித்து உறுப்பினராகி, அதையே தேசிய அளவில் விரிவுபடுத்தி அகில இந்திய பார்கவுன்சிலிலும் உறுப்பினரானார். இந்த வாய்ப்பையும், தனது செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது விசுவாசிகள் பார்கவுன்சிலில் இருந்த தைரியத்தில், மீண்டும் முயற்சி செய்த பொழுது 06-07-2013-ல் 23 பேரில் 13 பேர் எதிராக வாக்களித்து அங்கீகாரம் தர மறுத்தார்கள்.

இப்படி பலமுறை நிராகரிக்கப்பட்டும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல், MHAA உள்ளிட்ட எந்த சங்கத்திடமும் கருத்தும் கேட்காமல், 08-03-2015-ல் நடந்த தமிழ்நாடு பார்கவுன்சில் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இறுதியில் ஒரு செட்டப்போடு திணிக்கப்பட்டு, வேல்முருகன் எதிர்த்து வாக்களித்தும், K.K.S. ஜெயராமன், யுவராஜ் என இரண்டு உறுப்பினர்கள் வாய்மொழியாக எதிர்த்தாலும் மற்ற அனைவரும் வாக்களித்து TNAA-விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் கூத்து!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமைக்காக நடந்த வழக்குரைஞர்களின் போராட்டம் (கோப்புப் படம்)

பார்கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல் நடந்த பொழுது, வாக்காளர்களான வழக்குரைஞர்களுக்கு நட்சத்திரவிடுதியில் சரக்கு விருந்து, சுற்றுலா, ரொக்கப்பணம், கவர்ச்சிகரமான பொருட்கள் என பல லட்சங்கள் வாரியிறைக்கப்பட்டு, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் போலவே அத்தனை சீரழிவுகளும் பச்சையாக வெளிப்பட்டன. அந்த சமயத்தில் நமது மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC) அமைப்பு சார்பில் “குவார்ட்டர் சரக்கும், கோழிபிரியாணியும் வழக்குரைஞர்கள் உரிமையை பாதுகாக்காது” என சுவரொட்டியும், பிரசுரமும் தயாரித்து, சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் ஒட்டினோம், விநியோகித்தோம்.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பல வகைகளிலும் கவனித்தும், சரிகட்டியும் தான் TNAA-விற்கு இப்பொழுது அங்கீகாரம் வாங்கியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே, சமூகத்தின் போக்கில் ஜனநாயக விழுமியங்கள் அரிதாகி வரும் காலக்கட்டத்தில் TNAA உருவாக்கும் ஊழல் பண்பாடு விஷவிதை போன்றது. இதை கருவிலேயே அழிப்பது தான் சமூகத்திற்கு நல்லது!

அரசின் உறுப்புகளில் ஒன்றான நீதிமன்றமும், விதிமாறாமல், வர்க்கசார்புடனேயே எப்பொழுதும் நடந்துகொள்கிறது. சட்டக்கல்லூரியில் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் அரசு மிக கவனமாக நடந்துகொள்கிறது. இந்தச் சூழலை பிரபாகரன் போன்ற வகைமாதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்களுக்கென்று அடியாட்படையை கட்டியமைத்து கொள்கிறார்கள்.

நீதிபதிகள் நியமன விசயத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காமல், கொலீஜியமுறையில் (அரசியல், சாதி, வாரிசு அடிப்படையில்) தேர்ந்தெடுத்து, மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத, ஜனநாயகத்தின் வாசனை கூட அறிந்திராத அரசு சார்பாக மட்டுமே சிந்திக்கக் கூடிய பல நீதிபதிகள் பதவிக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகளுக்கு கூஜா தூக்க எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும், செல்வாக்கும், அடியாட்படையும் கொண்ட பிரபாகரன் போன்ற புரோக்கர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள். பிரபாகரன் கடந்த வந்த பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் இதை புரிந்துகொள்ளமுடியும்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சுபாஷன்ரெட்டி விசயத்தில் தோற்றுப்போன பிரபாகரன் சில ஆண்டுகளுக்குள் தனக்கு கீழே ஒரு ”சாம்ராஜ்யத்தை” உருவாக்கியது இந்தப் பின்னணியில்தான்!

இந்த விஷசூழலில் பாதிக்கப்படுவது புரோக்கர் வழக்குரைஞரின் ’உதவியும், கருணையும்’ இல்லாமல் சாதாரணமாக தொழில் நடத்தும் பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் தான்! இந்த பாதிப்பு வழக்குரைஞர்களோடு நின்றுவிடுவதில்லை. வழக்காடிகளாக வரும் பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கிறது.

இந்தப் பின்னணியில், புரோக்கர் வழக்குரைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நமது ஒன்றிணைந்த சங்கமான MHAA-வில் சில குறைகள் இருந்தாலும், இந்தப் போராட்டத்தை துவக்கமாகக் கொண்டு தொடர்ந்து போராடி, குறைபாடுகளை சரிசெய்துவிடலாம். ஆனால், TNAA என்ற கருங்காலி சங்கத்தை இயங்க அனுமதித்தோம் என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஈழப்படுகொலைகளை கண்டித்து, தமிழக போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழக வழக்குரைஞர்களை ஒடுக்குவதற்காக, 2009 பிப்ரவரி 19 ல் தாக்குதல் தொடுப்பதற்கு அரசிற்கு ஏவல்நாயான காவல்துறை தேவைப்பட்டது. இனி வருங்காலத்தில் கருங்காலி சங்கமே அந்த வேலையை செய்யும். ஆளும் வர்க்கமும், அரசும், ஊழல் நீதிபதிகளும் தாம் நினைத்ததை எல்லாம் கருங்காலி சங்கத்தைக் கொண்டே கச்சிதமாக செய்துமுடிப்பார்கள்!

இப்பொழுது போராட தவறினால், வழக்குரைஞர்களின் ஒற்றுமை குலையும்! துரோகங்கள் நம்மை சூழும்! நமது உரிமைகள் பறிபோகும்! எனவே, உறுதியாய் நின்று, கருங்காலி சங்கத்தை ஒழித்துக்கட்ட இறுதிவரை போராடுவோம்!

வழக்குரைஞர் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.
தொடர்புக்கு : 9094666320